ஸ்டெர்லைட்டை மூடு : சென்னையில் துவங்கியது மாணவர் போராட்டம் !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடும் மக்களை போலீசும் மாவட்ட நிர்வாகமும் அச்சுறுத்துவதைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் கோரியும் தூத்துக்குடி மாணவர் கூட்டமைப்பு சென்னையில் உண்ணாவிரதம்.

தூத்துக்குடி மாணவர் கூட்டமைப்பு சென்னையில் உண்ணாவிரதம் அறிவிப்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வகையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றக் கோரியும் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பினர் இன்று (20-12-2018) காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 11 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை நசுக்காதே!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று!

இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்
நாள் : 20.12.18 நேரம் : காலை 11 மணி

அனைவரும் வந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம் !

இவண்,
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு – தூத்துக்குடி
தொடர்புக்கு : 94988 55443

****

தூத்துக்குடி மாணவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 1 நிமிடம் கூட அவர்களை போராட்டக்களத்தில் நிற்க விடாமல் வந்த உடனேயே அவர்களை வலுக்கட்டாயமாக அராஜகமாக போலீசு கைது செய்தது.

****

அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு – தூத்துக்குடி

பத்திரிகைச் செய்தி                        தேதி:19.12.2018

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை நசுக்காதே !
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்று !

அன்புடையீர் வணக்கம்,

ஸ்டெர்லைட் ஆலையை  மூன்று வாரத்திற்குள் மீண்டும் திறக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்திரவிட்டுள்ளது. 13 பேர் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு எந்தவிதமான விசாரணையும் இல்லை. கொலை வழக்கு கூட பதியப்படவில்லை. ஆனால் ஆலையைத் திறக்க உத்தரவிடப்படுகிறது. இது திட்டமிட்ட சதி.

உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்போகிறோம் என்று நடித்துக் கொண்டு, இன்னொருபக்கம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடும் தூத்துக்குடி மக்களை கைது செய்கிறது. கருப்புக்கொடி ஏற்றி அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவிக்கக் கூட தடைவிதிக்கப்படுகிறது. கருப்புத்துணி வாங்கி வந்த இளைஞர்களை கைது செய்து மிரட்டுகிறது போலீசு. போராட்ட முன்னணியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பலருக்கு  107 என்ற குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவில் சம்மன் அனுப்பி ஆறுமாதம் தடுப்புக்காவலில் வைப்போம் என மிரட்டுகிறார்கள். தீவிரவாதிகளைப்போல் எந்த நேரமும் மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.  கிராமங்களில் நூற்றுக்கணக்கான போலீசாரை குவித்து மக்களை பீதியூட்டுகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட போலீசு வேதாந்தாவின் கூலிப்படையாக செயல்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் மூலப்பொருள்களை உருக்குவதால் ஆர்சானிக், காரியம் போன்ற ஆபத்தான நச்சுக்கள் கழிவுகளாகவும், காற்றிலும் பரவுகிறது. அதனால் தான் நிலத்தடி நீர் குடிக்க தகுதியற்றதாக மாறுகிறது. சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. ஆர்சனிக், காரியத்தால் நிச்சயமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.இப்படிப்பட்ட  கொடுமைகளை  20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தூத்துக்குடி அனுபவித்து வருகிறோம்.

இந்த கடும் பாதிப்புகளை உணர்ந்து  போராடி  ஸ்டெர்லைட் ஆலையை மே மாதம் மூடிய பிறகு தூத்துக்குடியில் காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது என ஆய்வறிக்கை சொல்கிறது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல் ஓய்வு பெற்ற சில மணி நேரங்களில் பா.ஜ.க. மோடி அரசால் தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைவராக பதவி நியமனம் செய்யப்பட்டார். இவர் கார்ப்பரேட் ஆள். அதனால்தான் தூத்துக்குடி அழிந்தாலும் கவலையில்லை என ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார். இதை ஏற்க முடியாது. தூத்துக்குடி மக்கள் நாங்கள் ஸ்டெர்லை ஆலையை வேண்டாம் என்கிறோம். தமிழக மக்களும், அனைத்துக்கட்சிகளும் சொல்கிறார்கள்.

எனவே, தமிழக அரசு சட்டமன்றத்தில் தாமிர உருக்கு ஆலைக்கு தமிழகத்தில் இனி அனுமதி இல்லை என கொள்கை முடிவெடுத்து, சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

படிக்க:
ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில் !

நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை, அடிப்படை உரிமை. எனவே தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்பப்பெற வேண்டும். ஜனநாயக வழியிலான போராட்டங்களை தமிழக அரசு தடுக்கக் கூடாது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள அனைத்துக்கல்லூரி மாணவர்களும் ஒரு கூட்டமைப்பாக இணைந்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இதற்கு ஆதரவாக தமிழக மாணவர்களும், மாணவர் அமைப்புகளும், கட்சிகள், இயக்கங்களும் குரல்கொடுக்க வேண்டும் என கோருகிறோம்.

தங்கள்,
சந்தோஷ்
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு,
தூத்துக்குடி.
தொடர்புக்கு: 94988 55443

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க