உங்கள் தலைமுறைக்கும் சேர்த்து தான் எங்கள் குரல் ஒலிக்கிறது

மது மக்கள் கூட்டமைப்பு கடந்த 17-12-18 அன்று மாலை தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது. ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை கண்டித்து 19-12-18ம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்பதென்றும்,  21-12-18ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதென்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி காவல் துறையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அனைத்து கிராமங்கள் மாநகர பல பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் பொதுமக்கள் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக மாணவர்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. காவல்துறை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்னும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்வதால் இன்று  21-12-18 (வெள்ளி) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அடுத்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும்.

மாநகர பல பகுதிகளில் பொதுமக்கள் கட்டியிருந்த கருப்பு கொடி காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளதை கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கிறது. அமைதியான அறவழியில் எதிர்ப்பு காட்டுவதை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். உங்கள் தலைமுறைக்கும் சேர்த்து தான் எங்கள் குரல் ஒலிக்கிறது.

பொதுமக்கள் உங்கள் வீட்டு முன்பு கருப்பு கொடி கட்டலாம். இதற்கு சட்டப்படி தடையில்லை. ஸ்டெர்லைட் இயங்க உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கும் வரை கொடியை அகற்ற வேண்டாம். கருப்பு கொடி கட்டாத பகுதிகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டுங்கள். இறந்தவர்கள் – உடல் ஊனமானவர்கள் – சிறை சென்றவர்களின் கனவு, இலட்சியத்தை நிறைவேற்றுங்கள்.

தகவல்:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு
(அனைத்து கிராமங்கள் – மாநகர பகுதிகள் ஒருங்கிணைந்தது)
தொடர்புக்கு: 9443584049, 8608723357, 9629373089, 9444969704

***

சென்னை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கூடாதென்று, தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் 15 -க்கும் மேற்பட்டோர்  டிச – 20 அன்று காலை  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகில் உண்ணா நிலைப் போராட்டத்தை நடத்தினர்.  ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அடிமை அரசின் காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அடாவடியாக கைது செய்துள்ளது.

ஸ்டெர்லைட்டின் கார்ப்பரேட் பலம் அரசின் போலீசு கையில் வைத்துக்கொண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி சுற்றுவட்டார மக்களை கைது செய்து மிரட்டி வருகிறது.

தனது கல்வி, வேலைகளை விட்டு தூத்துக்குடி மாணவர்கள் சென்னை மக்களை – மாணவர்களை நம்பி இப்போராட்டக்களத்தில் தம் மக்களின் உயிரைக்காக்க தம் உயிரை பணயம் வைத்து இறங்கியுள்ளனர். அவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
அம்மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றக்கோரியும் சென்னைப் பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்தில் டிச-20 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல்:
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்,
சென்னை பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: 97101 96787

***

ஸ்டெர்லைட்டை மூடு : குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள்
வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

***

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பெண் தோழரிடம் அத்துமீறி நடந்துகொண்ட
மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி சரவணன் மீது நடவடிக்கை எடு!

‘’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனி சட்டம் இயற்று.’’ என்ற தலைப்பின் கீழ் கடந்த (17/12/2018) திங்கள் அன்று விழுப்புரம் மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி சரவணன் அவர்கள் பேனர், தட்டிகளை பிடுங்கி எறிந்தும், மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் அவர்களை சட்டை காலரை பிடித்து இழுத்தும் வேனில் தள்ளினார். அப்போது பதறிபோய் அவர் பின்னே சென்ற பெண் தோழரை கழுத்தைப் பிடித்துத் தள்ளியும், முதுகில் கை வைத்தும் வேனில் ஏற்றினார். மேலும் இதனை கண்டித்து முழக்கமிட்ட தோழர்களை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் ஆபாசமாகத் திட்டியும், உங்களை வீட்லயே வந்து உதைக்காமல் விடமாட்டேன் என்று அடாவடியாக நடந்து கொண்டார்.

ஒருவரை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களையும், உத்திரவுகளையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது. குறிப்பாக, பெண்களைக் கைது செய்யும் போது, அவர்களை ஆண் போலிசார் கைது செய்யக் கூடாது, பெண் போலிசு தான் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட எந்த ஒரு விதியையும் கடைபிடிக்காமல், முற்றிலும் உச்சநீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்கள், உத்திரவுகளை மதிக்காமல் டி.எஸ்.பி சட்டத்திற்குப் புறம்பாக அடாவடியாக கைது செய்துள்ளார்.

எனவே, எந்த ஒரு சட்டவழிமுறைகளைக் கடைபிடிக்காமலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மதிக்காமல் அடாவடியாகவும், அசிங்கமான வார்த்தைகளால் திட்டியும், கடுமையான முறையில் கைது செய்து சட்டத்தை மீறும் வகையில் நடந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பி திரு. சரவணன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு 19/12/2018 தோழர் மோகன்ராஜ் தலைமையில் எஸ்.பி அவர்களிடம் மனுகொடுக்க சென்றோம், அங்கு அவர் இல்லாத காரணத்தால் ஏ.எஸ்.பி இடம் மனு கொடுத்தபோது, அவர் படித்து பார்த்துவிட்டு நான் எஸ்.பி இடம் மனுவை கொடுத்து விடுகிறேன் என்றார்.

பிறகு டி.ஜி.பி., இடம் மனு கொடுத்தோம், அவர் எனக்கு இந்த சம்பவம் பற்றி  எதுவும் தெரியாது. எனவே போட்டோ அல்லது வீடியோ ஆதாரம் கொடுங்கள் என்று கேட்டார். அவரிடம் செய்திகளில் வெளியான வீடியோவை காண்பித்தோம், பிறகு ஆர்ப்பாட்ட வீடியோ பதிவான சி.டி.யையும்  கொடுத்தோம். அவர் துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

படிக்க:
ஸ்டெர்லைட் சதியின் பின்னணி என்ன ? மக்கள் அதிகாரம் ராஜு | கேள்வி பதில் நேரலை | இரவு 7 மணி
ஸ்டெர்லைட் : டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது | மக்கள் அதிகாரம்

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதும், தூத்துக்குடி மக்கள் சிலரை பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து பணிய வைப்பதும், பணியாத மக்களை போலிசை வைத்து மிரட்டுவதும் தொடந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களே குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் போராடும் மக்களுக்கு ஆதரவாக பேசினால், பிரச்சாரம் செய்தல், ஆர்ப்பாட்டம் நடத்தினால் உடனடியாக கைது செய்து ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சொந்த அடியாள் படையாகவே நடந்துகொள்கின்றது போலீசு.

தகவல்:
மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம்.
தொடர்புக்கு: 94865 97801

***

‘’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனி சட்டம் இயற்று.’’  என்ற கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டி ஒட்டியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மூன்று தோழர்களை கைது செய்திருக்கின்றனர் தூத்துக்குடி போலீசார்.

தொகுப்பு: வினவு செய்திப் பிரிவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க