யிர் காப்பீட்டை உரிய நேரத்தில் வழங்குவதுதான் புதிய “பிரதான் மந்திரி பீமா யோஜனா” பயிர் காப்பீடு திட்டத்தின் சிறப்பம்சம் என்று ஜனவரி 2016-ம் ஆண்டில் அதை தொடங்கி வைத்த மோடி அரசு குறிப்பிட்டது.

ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ’தி வயர்’ இணையதளத்தால் பெறப்பட்ட தகவலின்படி கடந்த இரண்டு பயிர் பருவ காலங்களில் (2016-17 மற்றும் 2017-18) கொடுக்கப்பட வேண்டிய சுமார் ரூ.2,879 கோடி காப்பீட்டுத் தொகை, விவசாயிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதை அம்பலப்படுத்தியது. விவசாயிகள் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்திடமிருந்து அக்டோபர் 10-ம் தேதியில் இத்தகவல் கிடைத்தது.

மராட்டிய விவசாயிகள் நடத்திய பேரணி

2017-18-ம் ஆண்டு ரபி பருவத்திற்கான பெரும்பான்மையான காப்பீட்டுத்தொகை கோரிக்கைகள் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு இனிமேல்தான் அங்கீகரிக்கப்பட உள்ளதாக, அமைச்சகம் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது. 2017-ம் ஆண்டின் காரிஃப் பருவத்தைப் பற்றியே அதன் தரவுகளில் அதிகம் இருந்தன. 2017-18-ம் ஆண்டு ரபி பருவத்தைப் பற்றி வெறுமனே ஒரு விழுக்காடு மட்டுமே இருப்பதை தரவுகள் காட்டுகின்றன.

2016-17-ம் ஆண்டைப் பொருத்தவரை 546 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படாமலேயே இருக்கிறது. ஆனால் காப்பீடு திட்ட விதிமுறைகள் படி அறுவடை நடந்து 2 மாதத்திற்குள்ளாகவே கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். 2016-17 ஆண்டிற்கான அறுவடை 2017 மே மாதத்திலேயே முடிந்திருக்கும்.

அதே போல, 2017-18-ம் ஆண்டைப் பொறுத்தவரை 2,282 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது. அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட 2017-18 ஆண்டு தரவுகள் பெரும்பாலும் காரிஃப் பருவத்தைப் பற்றியே குறிப்பிடுகின்றன. இந்த பருவத்தைப் பொறுத்தவரை அறுவடையானது மிக சீக்கிரமாக 2017, டிசம்பரிலேயே முடிந்திருக்கும்.

படிக்க:
♦ பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
♦ பயிர்க் காப்பீடு : விவசாயிக்கு சுண்ணாம்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வெண்ணெய் !

எனவே அறுவடை நடந்த பிறகும் ஒன்பது மாதங்களுக்கு மேலாக 2,282 கோடி ரூபாய் காப்பீடுத் தொகை இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக தெரியவரும் அதே நேரத்தில், காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் அறுவடைக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குள் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது முரண்பாடாக இருக்கிறது.

2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளில் விவசாயிகள் கேட்ட மொத்த காப்பீடுத்தொகை ரூ.34,441 ரூபாயாகும். அதில் காப்பீடு நிறுவனங்கள் திருப்பி தந்தது ரூ. 31,612 கோடி. தராமல் ஏப்பம் விட்டது. ரூ.2,829 கோடி ஆகும்.

ரிலையன்ஸ் பொது காப்பீடு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட், எஸ்.பி.ஐ பொது காப்பீடு நிறுவனம், இந்திய விவசாய காப்பீடு நிறுவனம் (Agriculture Insurance Company (AIC) of India), புதிய இந்தியா உத்திரவாத நிறுவனம் (New India Assurance company) ஆகியவைதான் இந்தியாவில் பயிர் காப்பீடு தொழிலில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் ஆகும்.

பொதுத்துறை நிறுவனமான இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்திடம்தான் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பெரும்பாலான பாக்கித்தொகை உள்ளது. விவசாயிகள் கோரிய 1,061 கோடி ரூபாயை இனிமேல்தான் இந்நிறுவனம் கொடுக்க வேண்டும். அதில் 2016-17-ம் ஆண்டின் 154 கோடி ரூபாயும் 2016-17-ம் ஆண்டிற்கான 907 கோடி ரூபாயும் காரிஃப் பருவத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டியது.

2018-ம் நிதியாண்டில், பயிர் காப்பீடு வியாபாரத்தில், இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.703 கோடியாக இருந்தது. எச்.டி.எப்.சி வங்கி தொடர்ந்து விவசாயிகளுக்கு ரூ.300 கோடியை பாக்கி வைத்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ ரூ.260 கோடியை தராமல் இருக்கிறது. இந்நிலுவைத்தொகையில் பெரும்பங்கு மராட்டியம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது.

படிக்க:
♦ 750 கிலோ வெங்காயத்திற்கு கிடைத்த ரூ 1064 – ஐ மோடிக்கு அனுப்பிய விவசாயி !
♦ அயோத்தி வேண்டாம் : கடனை தள்ளுபடி செய் ! டெல்லியில் விவசாயிகளின் போர்க்குரல்

உண்மையில் 2016-17 பருவத்தில் தரப்படாமலிருந்த ரூ. 546 கோடியில் கர்நாடகத்திற்கு தரப்பட வேண்டியது ரூ.256 கோடி. அந்த ஆண்டில் கர்நாடகா கடுமையான வறட்சியை சந்தித்தது. அதன் 176 வட்டங்களில் 160 வட்டங்கள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டன.

2017-18 பருவத்தை பொறுத்தவரை, 2018-அக்டோபர் வரைக்கும் இமாச்சல பிரதேசத்திற்கு 92% காப்பீடு தொகை வழங்கப்படாமல் இருந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கொடுக்கப்பட வேண்டிய ரூ.144 கோடியில் ரூ.124 கோடி (86%) தரப்படாமல் இருந்தது.

கட்டுக்கதைகள் அள்ளிவிட துள்ளி வருகிறார் திருவாளர் 56 இன்ச் மார்பாளர், மோடி

செப்டம்பர் மாதம் இந்த பிரச்சினையை தீர்க்க மைய அரசு முயன்றது. காப்பீடு திட்டத்திற்கான புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி அறுவடைக்கு பிறகு இரண்டு மாதங்களுக்குள் காப்பீட்டு தொகையை நிறுவனங்கள் வழங்காவிட்டால் விவசாயிகளுக்கு 12 விழுக்காடு வட்டியை சேர்த்து வழங்க வேண்டும் என்பது அதில் முதன்மையான விதியாக சேர்க்கப்பட்டது. மேலும் மானிய காப்பீடு தொகையை செலுத்துவதற்கு காலந்தாழ்த்தும் மாநில அரசுகள் அதே 12 விழுக்காடு வட்டியை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் மைய அரசு கூறியது.

இந்த புதிய விதிமுறைகள் மாற்றத்தை எதுவும் செய்து விடவில்லை என்று வாதிடுகிறார் மேற்கு உ.பியில் செயல்பட்டு வரும் பாரதீய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த குல்தீப் தியாகி. “இது ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. நிறுவனங்கள் அனைத்தும் முன்பு செயற்பட்டதை போலதான் இப்போதும் செயல்படுகின்றன” என்று அவர் கூறினார். சென்ற செப்டம்பரில் வடமேற்கு இந்தியா கண்ட கடுமையான மழையை சுட்டிக்காட்டுகிறார் அவர். “அங்கு மிகப்பெரிய அளவிலான பயிர் சேதம் ஏற்பட்டது. வலுவான கரும்பு பயிர் கூட அதில் சேதமடைந்தது” என்றார்.

“ஆனால் விவசாயிகளின் இழப்பை ஈடு செய்ய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாவட்ட அலுவலகங்களுக்கும் நாங்கள் சென்றோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்கிறார் தியாகி.

ஆட்சிக்கு வந்ததுமே விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் திட்டத்தை முன்வைத்த மோடி, விவசாய காப்பீடு  விரைவில் கிடைக்க புதிய திட்டம் அறிவிக்கிறார் என்றால் அது வெறும் ஜூம்லாவாக இருப்பதை விட வேறு என்னவாக இருக்க முடியும்?

***

தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க