ந்திய சமையல் வகைகளில் வெங்காயம் இல்லாமல் எதுவுமில்லை. சாம்பார், கூட்டு, பொறியல், சட்னி, ஆம்லேட், கறிக் குழம்பு, மீன் குழம்பு, வடை வகைகள் என வெங்காயமே எங்கும் இருக்கிறது. மற்ற பச்சைக் காய்கள் விலை உயர்வாக இருக்கும் நிலையில் மக்கள் பெயருக்கு காய்களைப் போட்டுவிட்டு, வெங்காயங்களை அதிகம் சேர்ப்பர்.

சென்னையில் இன்றைய டிசம்பர் மாத நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை ரூ. 20 ஆக இருக்கிறது. தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் ஏறக்குறைய இதை ஒட்டியே இருக்கும். தமிழகத்தில் வெங்காயம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ 10 கிடைத்தால் அதிகம். இதே விலை மராட்டிய விவசாயிகளுக்கு எவ்வளவு தெரியுமா?

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் சாத் ஒரு வெங்காய விவசாயி. மத்திய வேளாண் துறை அமைச்சகத்தால் சிறந்த விவசாயி என தெரிவு செய்யப்பட்டு, கடந்த 2010-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது அவரைச் சந்தித்த விவசாயிகளில் இவரும் ஒருவர்.

♦ படிக்க: வெங்காயம்: நமக்கு ஆம்லேட் போடும் உரிமை கூட இல்லை !

ஆனால், இந்த சிறந்த விவசாயியின் இன்றைய நிலை என்ன? கடந்த நான்கு மாதங்களாக அரும்பாடுபட்டு வெங்காயத்தை உற்பத்தி செய்தார் சஞ்சய் சாத்.  ஆனால், இந்த உழைப்பு சந்தைக்கு தெரியாது அல்லவா? மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காய விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. 750 கிலோ வெங்காயத்தை எடுத்துக் கொண்டு சஞ்சய் தத் அருகாமையில் இருக்கும் நிபாத் வெங்காய மண்டிக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கே ஒரு கிலோ வெங்காயத்திற்கு 1.40 மட்டுமே, அதாவது நூற்றி நாற்பது காசுகள் மட்டுமே தரமுடியுமென்றனர். ஆரம்பத்தில் இந்த விலை ஒரு ரூபாயாக இருந்தது. சஞ்சய் பேரம் பேசி அதை 1.40 ஆக மாற்றினார்.

அவரது நான்கு மாத உழைப்பிற்கு கிடைத்த தொகை ரூ. 1,064 மட்டுமே. கண்ணீருடன் அத்தொகையைப் பெற்ற சஞ்சய் அதை அப்படியே பிரதமரின் தேசியப் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி விட்டார்.  அதை தபால் துறையின் மணி ஆர்டர் முறையில் அனுப்புவதற்கு கூடுதலாக ரூ. 54 செலவழித்தார்.

தனது நிலத்தில் விவசாயி சஞ்சய். படம் நன்றி: Indian Express

தான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை எனும் சஞ்சய், ‘’இந்த அரசு விவசாயிகள் மீது காட்டும் அலட்சியம் கோபத்தை ஏற்படுத்துகிறது’’ என்கிறார். மகாராஷ்டிராவில் இருக்கும் நாசிக் மாவட்டம்தான் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் 50% அளவை வைத்திருக்கிறது.

தொலைத்தொடர்பில் வானிலை அறிக்கைகளை குரல் பதிவாகப் பெற்று அதன் மூலம் தனது வெங்காய உற்பத்தியை அதிகரித்தவர் சஞ்சய். இந்த அனுபவத்தை அவர் உள்ளூர் வானொலி நிலையங்களிலும் பகிர்ந்திருக்கிறார். அப்படித்தான் ஓபாமாவை அவர் சந்திப்பதற்கு தெரிவு செய்யப்பட்டார். அந்த சந்திப்பு ஒபாமா விளம்பரத்திற்கு பயன்பட்டதே அன்றி சஞ்சயின் பாடுகளை மாற்றிவிடவில்லை.

படிக்க:
உருளை விவசாயிகளை வீதியில் வீசிய பாஜக அரசு !
விலை வீழ்ச்சி : துவரம் பருப்பு துயரம் பருப்பானது !

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வெங்காய உற்பத்தி சரியும் போது மட்டுமே வெங்காயத்தின் விலை உயர்கிறது. நாசிக்கில் வெங்காய உற்பத்தி சரிந்தால் கர்நாடகாவில் உயரும். கர்நாடகாவில் சரிந்தால் நாசிக்கில் உயரும். இவ்விரண்டு இடங்களைப் பொறுத்து தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் வெங்காய விலை இருக்கும். ஆக, வயலில் பாடுபட்டு உழைக்கும் விவசாயி தனது விளைச்சல் எப்படி இருக்குமென்பதை கற்பனை  செய்யலாமே அன்றி அதன் விலையை அல்ல. அது பங்குச் சந்தை போல மாயமந்திரம் நிறைந்த ஒன்று.

வட இந்தியாவில் வெங்காயத்தின் விலை சில தேர்தல் முடிவுகளைக் கூட மாற்றியமைத்திருக்கிறது. 2010-ம் ஆண்டில் வட இந்தியாவில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 80 ரூபாயிற்கும் அதிகமாக உயர்ந்தது. மக்கள் கோபம் அதிகமானதால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தார். அந்த விலை உயர்விற்கு அரசின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தது பாரதிய ஜனதாக் கட்சி. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் இன்று ஆளும் கட்சியாக இருப்பதால் என்ன சொல்வார்கள்? வெங்காயம் எதிர்பாராதவிதமாக அதிகம் விளைந்திருப்பதால் விலை வீழ்ச்சியடைந்து விட்டது, ஆவண செய்வோம் என்பார்களா?

2014-ம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு அது செய்தோம், இது செய்தோம் என்று பொய்யுரைப்பதிலும், விளம்பரம் செய்வதிலும் குறைவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தை ஆள்வதும் இவர்கள்தான். மும்பையிலும், இம்மாதம் தில்லியிலும் இலட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முற்றுகையிட்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். ம.பி.-யில் போராடிய விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தில்லியில் போராடிய தமிழக விவசாயிகள் அரசால் அலட்சியம் செய்யப்பட்டனர்.

இன்றைக்கிருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியை வைத்து இந்தியாவின் வெங்காயத் தேவை என்ன, அது எங்கெங்கே விளைகிறது, அதை எப்படி முழு நாட்டிற்கும் கிரமமாக பிரித்துக் கொடுப்பது என்று மையத் திட்டமிட்டு, அதன்படி விவசாயிகளை உற்பத்தி செய்வதிலும் திட்டத்தோடு அணுகும் போது இந்த விலை உயர்வு, வீழ்ச்சி எனும் சந்தை ஒடுக்குமுறையை வீழ்த்தலாமே? மல்லையாவிற்கும், நீரவ் மோடிக்கும் தீயாய் வேலை பார்க்கும் மோடி அரசு ஒரு நாசிக்கின் விவசாயி படும் துன்பத்தை ஏறெடுத்தும் பார்க்காது.

வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும். அரசுகளுக்கும் அப்படி கண்ணீர் வரும்படி விவசாயிகள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.