privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்விலை வீழ்ச்சி : துவரம் பருப்பு துயரம் பருப்பானது !

விலை வீழ்ச்சி : துவரம் பருப்பு துயரம் பருப்பானது !

-

கோதுமை, துவரம் பருப்பு, உருளைக்கிழங்கு, வெந்தயம், பூண்டு, மிளகாய் – என விளைந்த எந்தவொரு பயிருக்கும் அவற்றின் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் விலைகூட சந்தையில் கிடைக்காததால், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, அசாம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருத்த நட்டமடைந்து தெருவில் நிற்கிறார்கள்.

தமது பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காத அநியாயத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கிறார்கள். தனது தந்தையால் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைமையை எதிர்கொள்ள முடியாமல், ஒரு ஏழைக் குடியானவனின் மகன் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனான். இப்படி, இந்த விலை வீழ்ச்சி இன்னும் எத்துணை விவசாயக் குடிகளின் உயிரை மாய்க்கக் காத்திருக்கிறதோ, தெரியவில்லை.

மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சௌரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகள்.

நட்டமடைந்த விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டுப் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை உதாசீனப்படுத்தி, ஒடுக்கிவிட முயன்ற அரசுகள் தோற்றுப் போய், ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளன. ஆனாலும், இக்கடன் தள்ளுபடியை, நிதி நெருக்கடிக்கு இடையே பெரிய மனதோடு பண்ணும் தர்மம் போலக் காட்டி வருகிறது, பா.ஜ.க. மேலும், இந்த விலை வீழ்ச்சிக்கும் தமது அரசிற்கும் சம்பந்தம் இல்லாதது போலவும், விவசாயிகள் புத்தியின்றியும் பேராசைப்பட்டும் அதிக அளவில் விளைவித்து மாட்டிக் கொண்டது போலவும் சித்தரிக்கிறது, அக்கட்சி.

கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வீணான சலுகை அல்ல. விவசாயிகளை நட்டத்திற்குள் தள்ளிவிட்ட மைய, மாநில அரசுகள், அவர்களுக்கு அளிக்க வேண்டிய நியாயமான நட்ட ஈடுதான் இந்தக் கடன் தள்ளுபடி. இரண்டாவதாக, விவசாயிகள் தமது சுயநலத்திற்காக அதிக விளைச்சலைச் சந்தைக்குக் கொண்டுவரவில்லை. சமூகத்தின் தேவையை நிறைவு செய்வதற்காகவே அவர்கள் தமது சொந்த உழைப்பையும் மூலதனத்தையும் கொண்டு உற்பத்தியை அதிகரித்திருக்கிறார்கள். குறிப்பாக, “உற்பத்தியை அதிகரியுங்கள், அதனை இலாபம் தரத்தக்க விலையில் நாங்கள் கொள்முதல் செய்துகொள்வோம்” என மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி ஏமாந்து போனவர்கள் அவர்கள்.

மகாராஷ்டிரா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் 2014 மற்றும் 2015 ஆகிய இரு ஆண்டுகளிலும் கடும் வறட்சியைச் சந்தித்தன. இதனால், தண்ணீர் அதிகம் தேவைப்படும் கரும்பு, பருத்தி ஆகிய பணப் பயிர்களுக்குப் பதிலாக, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டிய தேவை உருவானது. இச்சூழ்நிலையில்தான், “ஒவ்வொரு துளி நீருக்கும் அதிகப் பயிர்” (Per drop, More crop) என்ற முழக்கத்தை முன்வைத்த மத்திய மற்றும் மாநில அரசுகள், தண்ணீரும் இடுபொருட்களும் குறைவாகத் தேவைப்படும் பருப்பு உற்பத்திக்கு மாறும்படி விவசாயிகளை நெட்டித் தள்ளின. விளைந்த பருப்பை நான்கு மடங்கு விலையில் கொள்முதல் செய்வதாகவும் விவசாயிகளுக்கு ஆசை ஊட்டின.

இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் 12 இலட்சம் ஹெக்டேரில் நடந்துவந்த துவரம் பருப்பு சாகுபடி, 2016-17 ஆம் ஆண்டில் 15 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்தது. சாகுபடி பரப்பு மட்டுமின்றி, நல்ல மழைப் பொழிவின் காரணமாக துவரம் பருப்பு உற்பத்தியும் 4.44 இலட்சம் டன்னிலிருந்து 23.5 இலட்சம் டன்னாக அதிகரித்தது. மத்திய, மாநில பா.ஜ.க. அரசுகள் இந்த அதிகரித்த உற்பத்தியை உரிய விலை கொடுத்துக் கொள்முதல் செய்ய மறுத்து, விவசாயிகளுக்குத் துரோகமிழைத்தன.

வறட்சி நிலவிய 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில், ஒரு குவிண்டால் துவரம் பருப்பு 10,000 ரூபாய் அளவிற்கு விலை போனது. இந்த முறை விவசாயிகள் அந்தளவிற்கு விலை கோரவில்லை. “தமது உற்பத்திச் செலவையும் (ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,000) இலாபத்தையும் ஈடுகட்டக்கூடிய அளவில் 7,000 ரூபாய் ஆதார விலையாக நிர்ணயிக்க வேண்டும்; கொள்முதல் நிலையங்களை மே மாத இறுதிவரை நடத்த வேண்டுமென்றும்” கோரினார்கள். ஆனால், மைய அரசோ அதனை மறுத்து, இரண்டாயிரம் ரூபாய் குறைவாக ரூ.5,050-ஐ ஆதார விலையாக நிர்ணயித்தது. விவசாயிகள் திரும்பத்திரும்ப வேண்டுகோள் விடுத்ததையெல்லாம் அலட்சியப்படுத்தி, கொள்முதல் நிலையங்களை ஏப்ரல் மாத இறுதியிலேயே இழுத்து மூடியது.

விளைந்த மிளகாயை நட்டத்திற்கு விற்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநில விவசாயிகள்.

இன்னொருபுறமோ, இந்தக் குறைந்த ஆதார விலையில்கூட விளைந்த துவரையைக் கொள்முதல் செய்ய அரசு நிறுவனங்கள் முன்வரவில்லை; மகாராஷ்டிராவில் 23.5 இலட்சம் டன் துவரம் பருப்பு விளைந்து சந்தைக்கு வந்த நிலையில், வெறும் 4 இலட்சம் டன் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்பட்டது. மீதமுள்ள பருப்பைத் தனியாரிடம்தான் விற்றாக வேண்டும் என்ற நிலையில், வெளிச்சந்தையில் ஆதார விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, மியான்மர், மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி தீர்வை எதுவுமின்றித் துவரம் பருப்பு இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதையோ, இறக்குமதித் தீர்வையை அதிகரிப்பதையோ மத்திய பா.ஜ.க. அரசு விரும்பவேயில்லை. இந்தப் பாரதூரமான நிலையில், மகாராஷ்டிர மாநில விவசாயிகள் மட்டுமல்ல, மத்தியப் பிரதேச மாநில விவசாயிகளுக்கும் வந்த விலைக்குத் துவரம் பருப்பை விற்றுவிடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

மைய அரசு கொள்முதல் நிலையங்களை மூடிவிட்ட நிலையில், ஒரு குவிண்டால் ரூ.3,000 என்ற விலையில் துவரம் பருப்பைத் தனியார் வர்த்தகச் சூதாடிகளிடம் விவசாயிகள் விற்கத் தொடங்கினர். இந்த  நிலையில், விவசாயிகளிடமிருந்து துவரம் பருப்பை ஆதார விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்காக 1,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. அரசு அறிவித்தது. விவசாயிகளுக்குச் சாதகமானது போலத் தெரியும் இந்த அறிவிப்பு, உண்மையில் தனியார் வர்த்தகச் சூதாடிகளுக்குத்தான் பயன்பட்டது. துவரம் பருப்பு இறக்குமதியாளர்களும், ரூ.3,000 என்ற விலையில் துவரம் பருப்பை வாங்கிய மண்டி வியாபாரிகளும் ரூ.5,050 என்ற விலையில் துவரம் பருப்பை அரசிடம் விற்று, இரட்டை இலாபம் அடைந்தனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகப் பீற்றிவரும் பா.ஜ.க. அரசு, வர்த்தகச் சூதாடிகளின் இலாபத்தை இரட்டிப்பாக்கி, தானொரு பனியா அரசுதான் என்பதை உறுதிப்படுத்தியது.

மகாராஷ்டிராவில் துவரம் பருப்பு, மத்தியப் பிரதேசத்தில் வெங்காயம், ஆந்திரா-தெலுங்கானாவில் மிளகாய், அசாம், பஞ்சாப் மற்றும் அரியானாவில் உருளைக்கிழங்கு – விவசாயிகளைத் துயரத்திலும் நட்டத்திலும் தள்ளிவிட்ட பணப்பயிர் பட்டியல் இது.

ராஜஸ்தானிலுள்ள கோடா மாவட்டத்தை இந்தியாவின் பூண்டு களஞ்சியம் என்று குறிப்பிடலாம். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பூண்டு ரூ.8,000 என்று விலைபோன நிலையில், இந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,000 என விலை நிர்ணயம் செய்யக் கோரினார்கள், அம்மாநில விவசாயிகள். ஆனால், அரசோ ரூ.3,200-க்கு மேல் ஒரு தம்பிடிகூடக் கூட்டித்தர மறுத்துவிட்டது. 10 இலட்சம் டன் என்ற அளவில் பூண்டு அபரிதமாக விளைந்திருந்த நிலையில், அரசோ வெறும் 10,000 டன் மட்டுமே கொள்முதல் செய்தது. இதனால் அடிமாட்டு விலையில் சந்தையில் விற்க மனமின்றி, பூண்டை மூட்டை மூட்டையாகக் கட்டிப்போட்டுவிட்டு, விலை ஏறாதா எனக் காத்துக் கிடக்கிறார்கள், விவசாயிகள். பூண்டின் விலை ஏறுமோ, ஏறாதோ, விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டி ஏறுவது நிற்கப் போவதில்லை.

கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 எனச் சந்தையில் விற்ற நிலையில், இந்த ஆண்டு விவசாயிகளுக்குக் கிடைத்த விலை வெறும் மூன்று ரூபாய். வெங்காயத்தைப் பறித்து சந்தைக்குக் கொண்டுவரும் கூலிக்குக்கூட இந்த விலை கட்டுப்படியாகாத நிலையில், வெங்காயத்தைத் தெருவில் கொட்டினார்கள் விவசாயிகள். மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் வெடித்த பின்னணி இதுதான்.

வெங்காயம், சோயாபீன்ஸ், துவரம் பருப்பு ஆகிய பயிர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையை நிர்ணயிக்கக் கோரி ம.பி. மாநில விவசாயிகள் உள்ளூர் அளவில் போராடிக் கொண்டிருந்த வேளையில், அம்மாநில முதல்வர் சௌஹான், ஆர்.எஸ்.எஸ்.-இன் விவசாய அமைப்பான பாரதீய கிசான் சங்கத்தோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு, ஒரு கிலோ வெங்காயத்தை எட்டு ரூபாய் விலையில் கொள்முதல் செய்ய 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக அறிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கு அருகிலுள்ள பாண்டாவில் போலீசை கற்களை வீசித் தாக்கும் விவசாயிகள் (இடது). மந்த்சௌர் மாவட்டம், பிப்லியா சந்தை பகுதியில் போர்க்களமான நெடுஞ்சாலை.

இந்த விலை குறைவு என்பது ஒருபுறமிருக்க, இந்த விலையை அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டதாக சௌஹான் அறிவித்தது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது. முதல்வர் சௌஹானின் இந்த சுயதம்பட்ட அறிவிப்பையடுத்துதான், மந்த்சௌர் நகரில் விவசாயிகள் கலகத்தில் இறங்கி, போலீசாரோடும் மண்டி வியாபாரிகளோடும் மோதி, துப்பாக்கிச் சூட்டிற்கு ஆறு விவசாயிகளைப் பறிகொடுத்தனர்.

ம.பி. மாநில விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அரியானா மாநில விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

எந்தவொரு உற்பத்தியாளனும் தனது உற்பத்திப் பொருளை நட்டத்தில் விற்க முன்வருவதில்லை. ஆனால், விவசாயிகள் தமது விளைபொருட்களை நட்டத்தில் விற்கும்படியான புதைகுழிக்குள் அரசாலேயே தள்ளிவிடப்படுகிறார்கள். விவசாயிகளைக் கொள்ளையடிப்பதன் வழியாகத்தான் உணவுப் பொருள் விலையை இந்த அரசு கட்டுக்குள் வைத்து வருகிறது. இன்னொருபுறத்திலோ, விவசாயிகளைக் கொள்ளையிடுவதன் வழியாக ஆலை முதலாளிகளையும் வர்த்தகச் சூதாடிகளையும் கொழுக்க வைக்கிறது.

இந்த உண்மையை விவசாயிகள் புரிந்துகொண்டுவிட்டனர். அதனால்தான் தமது விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை அவர்கள் கோருகிறார்கள். அந்த உரிமையைப் பெறுவதற்கும் செயல்படுத்துவதற்கும், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கைகளில் உள்ள அரசியல் அதிகாரத்தைப் பறிமுதல் செய்யும் புரட்சிகரப் போராட்டங்களைத் தொடங்குவதுதான் முதல்படியாகும்.

-செல்வம்

-புதிய ஜனநாயகம் – ஜூலை 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி