அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 4

ரசியல் பொருளாதார வரலாற்றின் முக்கியமான மூன்று நூற்றாண்டுகளைப் பற்றிய அறிமுக உரையை முந்தைய பாகம் வரை பார்த்தோம். இனி நூலின் முதல் அத்தியாயம் எளிமையாக துவங்குகிறது. பண்டைய காலத்தில் பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லையா ? மனிதன் முதல் கோடாரியையும், வில் ஆயுதங்களையும் உருவாக்கிய நாள் தொட்டே அங்கு பொருளாதாரம் (பரிவர்த்தனை) தொடங்கினாலும் இது இன்றைய பொருளாதாரப் புரிதலில் வருமா என்பதை ஆசிரியர் விளக்குகிறார். ஆதிகாலத்தில் பொருளாதாரம் பற்றிய கருத்தை கருவடிவில் பேசிய முதல் நிபுணர் யார் ? படியுங்கள்.

இந்தப் பகுதியில் இருந்து வாசகர்களுக்கு வீட்டுப் பாடத்திற்கான கேள்விகளைத் தருகிறோம். பதில்களை மறுமொழியில் குறிப்பிடுங்கள். தெரிந்தவர்கள் அந்த பதில்கள் சரியா என்று விவாதியுங்கள். நன்றி
-வினவு

*****

அத்தியாயம் ஒன்று – தோற்றுவாய்கள்
அ.அனிக்கின்

பூர்வீக மனிதன் முதல் கோடரியையும் வில்லையும் செய்தபொழுது அது பொருளாதாரம் அல்ல; அதைத் தொழில் நுணுக்கம் என்றே சொல்ல வேண்டும்.

பிறகு ஒரு வேடர் குழு சில கோடரிகளையும் வில் ஆயுதங்களையும் கொண்டு ஒரு மானைக் கொன்றது. மான் இறைச்சியை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்; அநேகமாக, சமமாகத்தான் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாக எடுத்துக் கொண்டிருந்தால், மற்றவர்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது, உயிரோடிருந்திருக்க முடியாது. அந்தக் குழுமத்தின் வாழ்க்கை மேலும் பன்முகப்பட்டதாக வளர்ச்சியடைந்தது.

Political-economy-Stone-age-1ஒரு கைவினைஞன் தோன்றுகிறான்; அவன் வேடர்களுடைய உபயோகத்துக்கென்று நல்ல ஆயுதங்களைத் தயாரிக்கிறான். ஆனால் அவன் வேட்டையில் சேருவது கிடையாது. வேட்டையாடியவர்களும் மீன் பிடித்தவர்களும் இறைச்சி, மீன்களைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது தங்களோடு சேர்த்து அந்தக் கைவினைஞனுக்கும் ஒரு பாகத்தை ஒதுக்குகிறார்கள். பிறகு ஒரு கட்டத்தில் உழைப்பினால் ஏற்பட்ட பண்டங்களைக் குழுமங்களுக்கு இடையிலும் ஒரு குழுமத்துக்கு உள்ளேயும் பரிவர்த்தனை செய்வது ஆரம்பமானது.

இவை அனைத்தும் பூர்விகமாகவும் வளர்ச்சியில்லாமலும் இருந்த போதிலும் இவையே பொருளாதாரமாகும். ஏனென்றால் இவை பொருள்களோடு – வில், கோடரி அல்லது இறைச்சி – மக்கள் கொண்டிருந்த உறவுகள் சம்பந்தப்பட்டவை, மட்டுமல்ல; அவர்கள் சமூகத்தில் ஒருவரோடொருவர் கொண்டிருந்த உறவுகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தன. அதிலும் அவை பொதுவகையிலான உறவுகள் அல்ல; மக்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களின் உற்பத்தி, விநியோகத்தோடு சம்பந்தப்பட்ட பொருளாயத உறவுகள். மார்க்ஸ் இந்த உறவுகளை உற்பத்தி உறவுகள் என்று குறிப்பிட்டார்.

பொருள்வகைப் பண்டங்களின் சமூக உற்பத்தியும் பரிவர்த்தனையும், விநியோகமும், நுகர்வும், அந்த அடிப்படையில் ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமுமே பொருளாதாரம் ஆகும். இந்தக் கருத்தின்படி பார்த்தால், பொருளாதாரம் மனித சமூகத்தைப் போலவே மிகப் பழமையானது.

பூர்விகக் குழுமத்தின் பொருளாதாரம் மிகவும் எளிமையாகவே இருந்தது. ஏனென்றால் மக்கள் உபயோகித்த கருவிகளும் மிகவும் எளிமையாக இருந்தன; அவர்களுடைய தொழில் திறனும் சுருங்கியதாகவே, குறைவானதாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு சமூகத்தின் உற்பத்தி உறவுகளையும் அதன் பொருளாதாரத்தையும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களையும் நிர்ணயிக்கின்ற உற்பத்தி சக்திகள் பற்றாக்குறையாகவே வளர்ச்சியடைந்திருந்தன.

முதல் பொருளாதார நிபுணர் யார் ?

நெருப்பு எரிவது ஏன், இடி இடிப்பது ஏன் என்று ஆச்சரியப்பட ஆரம்பித்த முதல் மனிதன் யார்? ஒருவேளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது நடைபெற்றிருக்க வேண்டும். பூர்விக சமூகத்தின் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தவர்கள் யார்? அன்று அது அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் சமூகமாக, முதல் வர்க்க சமூகமாகப் படிப்படியாக மாறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தச் சிந்தனைகள் ஒரு விஞ்ஞானம் அல்ல – இயற்கையையும் சமூகத்தையும் பற்றி முறைப்படி தொகுக்கப்பட்ட மனித அறிவு அல்ல; அது விஞ்ஞானமாகவும் இருக்க முடியாது.

political-economy_Ancient_Civilizationsஅடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் முதிர்ந்த சமூகத்தின் காலம் ஏற்படும் வரை விஞ்ஞானம் தோன்றவில்லை. அந்த சமூகம் அதிகமான வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாலாயிரம் அல்லது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து ஆகிய பண்டைக்கால அரசுகளில் வாழ்ந்த மக்கள் கணிதம் அல்லது மருத்துவத் துறையில் கொண்டிருந்த அறிவு சில சமயங்களில் நம்மை வியப்பில் மூழ்க வைக்கின்றது. பண்டைக் கால அறிவின் எச்சங்களாக நமக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த மாதிரிகள் பண்டைக் கால கிரேக்க, ரோமானிய மக்களுக்குச் சொந்தமானவை.

பதினேழாம் நூற்றாண்டில் அரசியல் பொருளாதாரம் என்ற பெயரோடு விஞ்ஞானத்தில் ஒரு புதிய துறை ஏற்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே பொருளாதார வாழ்க்கையின் அம்சங்களைப் பற்றி உய்த்துணர்வதற்குத் திட்டவட்டமான முயற்சி ஆரம்பமாயிற்று. இந்த விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்த பல பொருளாதார நிகழ்வுகள் முன்பே பண்டைக்கால எகிப்தியர்களுக்கு அல்லது கிரேக்கர் களுக்குத் தெரிந்தவையே. இவை பரிவர்த்தனை, பணம், விலை, வர்த்தகம், லாபம், வட்டி ஆகியவையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அந்தக் காலத்திலிருந்த உற்பத்தி உறவுகளின் முக்கியமான கூறுகளைப் பற்றி -அடிமை முறை பற்றி – சிந்திக்கத் தொடங்கினார்கள்.

முதலில் பொருளாதாரச் சிந்தனை என்பது சமூகத்தைப் பற்றிய சிந்தனையின் மற்ற வடிவங்களிலிருந்து தனியானதாக இருக்கவில்லை; எனவே அது முதலில் எப்பொழுது தோன்றியது என்று துல்லியமாகக் கூற முடியாது. பொருளாதார வரலாற்றுப் புத்தகங்களை எழுதியவர்கள் வெவ்வேறு முனைகளிலிருந்து எழுதத் தொடங்குவதும் ஆச்சரியமானதல்ல; சில வரலாறுகள் பண்டைக்கால கிரேக்கர்களிடமிருந்து தொடங்குகின்றன; மற்றவை பண்டைக்கால எகிப்திய கோரைப் புற்சுவடிகள், ஹாம்முராபியின் விதிகளின் ஆப்பு வடிவமுள்ள கல்லெழுத்துக்களிலிருந்து, இந்துக்களின் வேத நூல்களிலிருந்து தொடங்குகின்றன.

hammurabi
அரசர் ஹம்முராபி மற்றும் கல்மேல் எழுத்தாக அவரது காலத்தில் இயற்றப்பட்ட விதிகள்.

கிறிஸ்துவுக்கு முந்திய இரண்டாவது மற்றும் முதலாவது ஆயிரம் ஆண்டுகளில் பாலஸ்தீனத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வசித்த மக்களின் பொருளாதார வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களும் பொருளாதார நுண்காட்சிகளும் பைபிள் நூலில் காணப்படுகின்றன.

அமெரிக்க வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜே. பேல் தமது புத்தகத்தில் பைபிளுக்கு மட்டும் ஒரு பெரிய அத்தியாயம் எழுதியிருப்பதற்கும் அந்தக் காலத்தைப் பற்றிய மற்ற எல்லா ஆதாரங்களையும் புறக்கணித்திருப்பதற்கும் அறிவுத்துறை ஆராய்ச்சிக்குச் சம்பந்தமில்லாத வேறு சூழ்நிலைகளே காரணம் என்று அறிவது அவசியம். அதாவது பைபிள் கிறிஸ்தவ மதத்தின் புனிதமான நூல்; பெரும்பான்மையான அமெரிக்க மாணவர்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே அதைத் தெரிந்திருப்பார்கள். எனவே நவீன வாழ்க்கையின் இந்த அம்சத்துக்கு ஏற்றவாறு ஆராய்ச்சி வளைந்து கொடுக்கிறது.

ஹோமரின் கவிதைகளில் பண்டைக்கால கிரேக்க சமூகத்தின் – பூர்விக சமூகத்தின் தேய்வு முற்றிய நிலையிலும் அடிமை உடைமைச் சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் – மிகச் சிறப்பான இலக்கிய வர்ணனையைப் பார்க்கிறோம்.

படிக்க:
♦ எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
♦ பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

மனிதகுலப் பண்பாட்டின் இந்த நினைவுச் சின்னங்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏஜியன், அயோனியன் கடலோரங்களில் வசித்த மக்களின் வாழ்க்கை மற்றும் தத்துவஞானக் கலைக்களஞ்சியமாக இருக்கின்றன. டிராய் முற்றுகை, ஒடிசியஸின் பயணங்களைப் பற்றிய சுவை மிகுந்த கதையில் பலவிதமான பொருளாதார நுண்காட்சிகள் திறமையாகப் பின்னப்பட்டிருக்கின்றன. ஒடிசியஸ் பயணம் அடிமை உழைப்பின் குறைந்த உற்பத்தித் திறனுக்கு ஆதாரத்தைக் கொண்டிருக்கிறது:

ஆண்டை அகன்றால் அடிமை உழைப்பதில்லை
கலகம் நடந்தால் மானுடம் இருப்பதில்லை
ஜூபிடர் அன்றே விதித்தார்; என்றைக்கு
மனிதன் அடிமை ஆனானோ அன்றைக்கே
அவன் பலத்தில் பாதி மறைந்தது.(1)

ஹாம்முராபியின் விதிகள், பைபிள் மற்றும் ஹோமர் எழுதிய காவியத்தை பண்டைக்கால மக்களின் பொருளாதார வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைக் கூறும் ஆதார நூல்களாக வரலாற்றாசிரியரும் பொருளாதார நிபுணரும் கருதலாம். இரண்டாவதாகத்தான் அவற்றைப் பொருளாதாரச் சிந்தனையின் மாதிரிகளாகக் கருத முடியும். ஏனென்றால் பொருளாதாரச் சிந்தனை என்பது செய்முறை, தத்துவம், சூக்குமப்படுத்தல் ஆகியவற்றை பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டு வருவதை ஓரளவுக்கு முன்னூகிக்கிறது.

political-economy_Homer
பண்டைய கிரேக்கத்தின் சமூதாய நிலைமையை தன் கவியில் பிரதிபலித்த ஹோமர்.

பிரபலமான முதலாளித்துவ அறிஞரான ஜோஸப் ஏ. ஷும் பீட்டர்  (அவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்; தன் வாழ்க்கையின் இரண்டாவது பாதியை அமெரிக்காவில் கழித்தவர்) தன து புத்தகத்தைப் பொருளாதார ஆராய்ச்சியின் வரலாறு என்று குறிப்பிட்டார்; மூலச்சிறப்புடைய கிரேக்க சிந்தனையாளர்களிடமிருந்து அதைத் தொடங்கினார்.

செனபோன்ட், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரது புத்தகங்கள் கிரேக்க சமுதாயத்தின் பொருளாதார அமைப்பைப் பற்றிய தத்துவ விளக்கத்துக்கான முதல் முயற்சிகளைக் கொண்டிருக்கின்றன என்பது உண்மையே. குறைவான எண்ணிக்கையிலிருந்த கிரேக்கர்களின் சிறப்பான நாகரிகத்தோடு நமது நவீன நாகரிகம் எவ்வளவு அதிகமான இழைகளினால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் சில சமயங்களில் மறந்துவிடுகிறோம். நமது விஞ்ஞானமும் கலையும் மொழியும் பண்டைக்கால கிரேக்க நாகரிகத்தின் கூறுகள் பலவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

கிரேக்கர்களின் பொருளாதாரச் சிந்தனையைப் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “கிரேக்கர்கள் எப்பொழுதாவதுதான் இந்தத் துறையினுள் நுழைந்தனர் என்றாலும் மற்ற எல்லாத் துறைகளிலும் காட்டிய அதே மேதாவிலாசத்தையும் தற்சிந்தனையையும் இந்தத் துறையிலும் காட்டினர். எனவே வரலாற்று ரீதியில் அவர்களுடைய கருத்துக்கள் நவீன விஞ்ஞானத்தின் கொள்கை ரீதியான தொடக்க நிலைகளாக இருக்கின்றன.” (2)

political-economy-Joseph A Schumpeter
முதலாளித்துவ அறிஞரான ஜோஸப் ஏ. ஷும் பீட்டர்

பொருளாதாரம் (வீடு, குடியிருப்பு என்பவற்றைக் குறிப்பிடுகின்ற வார்த்தையும் விதி, சட்டம் என்பவற்றைக் குறிக்கும் வார்த்தையும் சேர்ந்து பொருளாதாரத்தைக் குறிக்கும் வார்த்தை உருவாகியது) என்ற வார்த்தை செனபோன்ட் எழுதிய ஒரு சிறப்பான நூலின் தலைப்புப் பெயராகும். அதில் அவர் குடும்பம், பண்ணை ஆகியவற்றை நிர்வாகம் செய்யத் தேவையான புத்திசாலித்தனமான விதிகளை ஆராய்கிறார். அந்த வார்த்தை ‘குடும்ப நிர்வாகம் பற்றிய விஞ்ஞானம்’ என்ற பொருளைப் பல நூற்றாண்டுகள் வரை கொண்டிருந்தது.

குடும்ப நிர்வாகம் என்று சொல்லும் பொழுது நாம் தருகின்ற குறுகிய அர்த்தத்தை கிரேக்கர்கள் அதற்குக் கொடுக்கவில்லை என்பது உண்மையே. ஏனென்றால் ஒரு பணக்கார கிரேக்கரின் பண்ணை என்பது அடிமைகளை உடைமையாகக் கொண்ட மொத்தப் பொருளாதாரமாக, பண்டைக்கால உலகத்தின் நுண் மாதிரியாக இருந்தது.!

அரிஸ்டாட்டில் “பொருளாதாரம்” என்ற சொல்லை இதே பொருளில்தான் பயன்படுத்துகிறார். தம் காலத்திய சமூகத்தின் அடிப்படையான பொருளாதார நிகழ்வுகளையும் விதிகளையும் அவர்தான் முதன் முதலாக ஆராய்ந்தார். இந்த விஞ்ஞானத்தின் வரலாற்றில் முதல் பொருளாதார நிபுணர் என்று சொல்லப்படுகின்ற தகுதி அவருக்கே உண்டு.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : முதல் தொடக்கம்: அரிஸ்டாட்டில் 

அடிக்குறிப்பு:
(1) The Odyssey of Homer, London, 1806, p.256.
(2) பி.எங்கெல்ஸ், டூரிங்குக்குமறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1979, பக்கம் 394 (இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியின் பத்தாம் அத்தியாய்த்தை மார்க்ஸ் எழுதினார்).

வாசகர்களுக்கான வீட்டுப் பாடங்கள் – கேள்விகள்:
(பதில்களை மறுமொழியில் தருக)

1. பண்டப் பரிவர்த்தனை என்றால் என்ன? பணப் பரிவர்த்தனைக்கும் பண்ட பரிவர்த்தனைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

2. மக்களிடையே உள்ள இரத்த உறவிற்கும் மார்க்ஸ் குறிப்பிடும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

3. பண்டங்களின் உற்பத்தி, பரிவர்த்தனை, விநியோகம், நுகர்வு – சான்றுடன் விளக்குக!

4. சிறு குறிப்பு வரைக: சுமேரிய நாகரீகம், பாபிலோனிய நாகரீகம், எகிப்து நாகரீகம்.

5. முதலில் பொருளாதாரச் சிந்தனை என்பது சமூகத்தின் மற்ற சிந்தனை வடிவங்களில் இருந்து தனியாக இருக்கவில்லை. என்?

6. வரலாற்றுக் குறிப்பு தருக: ஹாம்முராபியின் விதிகள், ஹோமர், டிராய் முற்றுகை, ஒடிசியஸ் பயணங்கள்

7. பைபிளில் காணப்படும் பொருளாதார வாழ்க்கை பற்றிய செய்திகள் – சான்று தருக!

8. அறிமுகக் குறிப்பு தருக: ஜோஸப் ஏ. ஷூம் பீட்டர், செனபோன்ட், பிளாட்டோ, அரிஸ்டாட்டில்

9. பொருளாதாரம் என்ற வார்த்தை எப்போது யாரால் என்னவென்று உருவாக்கப்பட்டது?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ