கேள்வி: அறிவியலின் உச்சம் மனித வாழ்வை எளிமைப்படுத்துவதா? அல்லது
மனித இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதா?

– கலிமுல்லா முஸ்தாக்

ன்புள்ள கலிமுல்லா,

வினவு கேள்வி பதில் அறிவியல் மட்டுமல்ல ஆன்மீகம் சார்ந்த மதங்களும் கூட யாரின் பிடியில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அது மக்களுக்கானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ரோமானிய அடிமைகளை விடுவிக்க போராடினார் ஏசுநாதர். அவரது சீடர்கள் தோற்றுவித்து பின்னர் நிறுவனமயமாகிய கிறித்தவ மதம் இன்று ஏகாதிபத்திய நாட்டு அரசாங்களின் ஆன்மீகத் துறையாக செயல்படுகிறது.

முகமது நபிகள் அவர் காலத்திய அரேபிய நாடோடி பழங்குடி இன மக்களை நெறிப்படுத்தி சீர்படுத்தி வாழ வைப்பதற்கு முயன்றார். அவரது சீடர்களால் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் நிறுவனமயமான முஸ்லீம் மதம் இன்று அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு சவுதி ஷேக்குகளின் கையில் இருக்கிறது.

Religionமதம் என்ற முறையில் முன்னேறிய நாடுகளில் இருக்கும் கிறித்தவர்களும் மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் கிறித்தவர்களும் ஒன்றல்ல. இதே நாடுகளில் இருக்கும் ஏழை முஸ்லிம்களும் அரபுலகில் வசிக்கும் பில்லியனர் சவுதி ஷேக்குகளும் முஸ்லீம் என்பதால் ஒரே பிரிவினர் அல்ல. புத்த மதத்தை தீவிரமாக பின்பற்றும் ராஜபக்ஷேவையும் புத்தரையும் இன்று ஒப்பிட முடியுமா என்ன?

போலவே அறிவியலும் இன்று ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் சிக்கி இருக்கிறது. நவீன மருத்துவத்தில் கண்டுபிடிக்கப்படும் ஒரு மருந்தின் விலை வர்த்தக நோக்கிலேயே தீர்மானிக்கப்படுகிறது. சிப்ராபிளாக்சசின் எனும் டைபாய்டுக்கான மருந்து அறிமுகமான ஆரம்ப காலத்தில் அதன் உயர் விலையால் வாங்க முடியாமல் மரித்துப் போன ஒருவரின் கதையை மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் எழுதியிருந்தார்.

படிக்க:
கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?
♦ ஆண்டவனை அச்சுறுத்தும் புதிய தனிமங்கள் – அறிவியல் கட்டுரை

மக்களுக்காக மலிவான முறையில் கொடுக்கப்படும் மருந்துகள் கூட காப்புரிமையின் பெயரால் தடை செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து ஆப்ரிக்க நாடுகளுக்கு அப்படி மலிவாக ஏற்றுமதி செய்யப்பட்ட எய்ட்ஸ் மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. துவக்கத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக எந்த அறிவியலாளரும் காப்புரிமை கோரவில்லை. அப்படி ஒரு சிந்தனை கூட அவர்களின் சூழலில் இல்லை. அறிவியல் கண்டுபிடிப்பு என்பதை முழு மனித வரலாற்றின் கூட்டுணர்ச்சி என்பதை அவர்கள் தமது வாழ்விலும், இலட்சியத்திலும் பற்றி நின்றார்கள். டார்வினோ, கலிலீயோவோ, கெப்ளரோ, புரூணோவோ அத்தகைய அறிவியலாளகர்கள். இன்றைய இணைய காலத்தில் கூட “ஓபன் சோர்ஸ்” எனும் கட்டற்ற மென்பொருள் துறையில் பல கணினி வல்லுனர்கள் காப்புரிமையை எதிர்த்து செயல்படுகிறார்கள்.

அதிநவீன ராணுவ தளவாடங்கள், அதிநவீன ரோபோ எந்திரங்களுக்கு செலவு செய்யப்படும் காசில் இந்தியா போன்ற ஒரு நாட்டின் ஆரம்பக் கல்வி முழுவதின் செலவையே ஏற்றுக் கொள்ள முடியும். அதிக சத்துள்ள கெட்டுப் போகும் தக்காளியை விட அதிக சத்தில்லாத கெட்டுப் போகாத தக்காளி அதிக இலாபம் தருமென்றால் நமது முதலாளிகள் சத்து தக்காளியை தடை செய்து விடுவார்கள்.

Science and Technologyஇன்றைய முதலாளித்துவ நெருக்கடி காரணமாக பொது மக்கள் மட்டுமல்ல, அறிவியாளர்கள் சிலரும் கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் காட்டு தர்பாரை எதிர்த்து வருகிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் நமக்கு சில பல அறிவியல் உண்மைகள் அறியக் கிடைக்கின்றன. இன்னொரு புறம் ஸ்டெர்லைட்டின் நன்மை என்ன அது எந்த சூழலியல் கேடுகளையும் தரவில்லை என்று பேசக்கூடிய அறிவியலாளர்களையும் இதே அறிவியல் உலகம் கொண்டிருக்கிறது.

அறிவியில் மட்டுமல்ல அதன் உடன் பிறப்பான கலைத்துறைக்கும் இதே விதி பொருந்தும். சினிமா என்றால் அது மிகப்பெரும் நிறுவனங்களின் கையிலும், இசை என்றால் அது மிகப்பெரும் கார்ப்பரேட்டுகளின் பிடியிலும், புத்தக வெளியீடு என்றால் அதுவும் பிரம்மாண்டமான வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் கையிலும் இருக்கின்றன. தமிழகத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட சிறு முதலீட்டுப் படங்கள் வரலாமேலேயே வந்தும் திரையரங்கு கிடைக்காமல் மக்களின் பார்வைக்கு வராமலேயே சென்றிருக்கின்றன. ஆக நம்மை உற்சாகப்படுத்தும் கலையும் கூட மக்கள் பிடியில் இல்லை.

இன்றைக்கு அறிவியல் ஆராய்ச்சிகள், அதன் பலன்கள் மிகப்பெரும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றன. அதில் ஈடுபடும் அறிவியலாளர்களின் அறிவியல் முனைப்பை நாம் மதிக்கின்றோம். அதே நேரம் அரசியல் ரீதியில் ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படும் போதுதான் அறிவியல் மக்களுக்கானதாக மாற்றப்படும். சோசலிசம் இருந்த காலத்தில் சோவியத் யூனியன் செய்த அறிவியல் சாதனைகளும், இன்றும் கூட கியூபாவின் மருத்துவ சாதனைகளும் முழு உலகால் பேசப்படுகின்றன. அறிவியல் இன்றி மனித வாழ்வின் முன்னேற்றம் ஒருபோதும் நிகழாது. அந்த அறிவியலை முதலாளித்துவ வர்த்தகத்தின் பிடியல் இருந்து மீட்க, அரசியல் அரங்கில் போராடுவது ஒன்றே வழி.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க