ள்ளுவண்டி
தள்ளும் பெண்ணின்
பித்த வெடிப்பு
கால்பட்டு
கிழக்கு சிவக்கிறது.

விசை கொண்டு
தள்ளு வண்டியை
நகர்த்தும் வேகத்தில்
சூரியன் நகர்கிறது.

வண்டியை
ஏற்றத்தில்
உந்தித் தள்ளி,

இறக்கத்தில்
இழுத்துப் பிடித்து,

பள்ளிப் பிள்ளைகள்
சைக்கிள்கள்
பைக்குகளின் சீண்டல்கள்
படாமல்… விலகி
பக்குவமாய்
கட்டுக்குள் நிறுத்தும்
பெண்ணின்
தொண்டைக்குழி தசையில்
வியர்வை உருளும்.

தள்ளுவண்டி
நிறுத்துமிடத்தை
குனிந்து நிமிர்ந்து கூட்ட
சில
பார்வை குப்பைகள்
படுத்தும்.

உடலையே
சமைத்துப்போடுவது போல் களமாட வேண்டும்

பார்சல் பேப்பர்
பார்சல் கவர்
குடம்
தண்ணீர் கேன்.. என
வந்து சேரும்
இருசக்கர வாகனத்தில்
அவள்
கணவனைத் தவிர
அனைத்தும்
வசதியாய் அமர்ந்திருக்கும்.

எரிக்கும் சிகரெட்டெ
எரிபொருள்.
சேர்ந்து இருமும்
சைக்கிளின் மேல் மாமனார்.
அந்த
தள்ளுவண்டி வியாபாரத்தை
தாங்கிப் பிடிக்கும்
துருபிடித்த சக்கரத்தில்
அவர்
விலா எலும்பும் அடக்கம்.

கை கழுவி
உறக்கம் தொலைத்த
விழிகளால் தீ மூட்டி
ஓங்கி… தோசைக்கல்லில்
உயிர் தண்ணீர் தெளிக்க
அங்கே
ஒட்டு மொத்த குடும்பத்தின்
ஆவி
பறக்கும்.

வாழ்வின்
சுமை கொள்ளா
வாகனமாய்
தள்ளு வண்டி
காட்சி தரும்.

பள்ளிக்குப் போனாளோ…
பத்திரமாய் வருவாளோ..
பிள்ளையை நினைக்கையில்
மணக்கும் இட்டிலியோடு
அவள் மனதும் வேகும்.
அடுத்த ஈடு ஊத்துவதில்
தோசையை புரட்டுவதில்
சட்டினி.. சாம்பார் – என
குரல்கள் நெருக்குவதில்
நினைவுகள் தொலையும்
தன் பசி மறக்கும்.

குடும்பமே பணியாற்றும் தள்ளு வண்டிக் கடை

குறிப்பிட்ட நேரத்திற்குள்
மொத்த உடலின் சத்தும்
பிழியப்படும்.
தசைகளின்
அசைவுகளில்
ஆட்டம் கண்டு
தள்ளுவண்டி
உயிர் உறையும்.

உடலையே
சமைத்துப்போடுவது போல்
களமாட வேண்டும்.

பசியின் வேகத்திற்கு
பரிமாற வேண்டும்
மனித எந்திரமாய்
உருமாற வேண்டும்.

நாலு இட்லி.. ரெண்டுவடை
பொங்கல் ஒண்ணு…
பூரி ஒண்ணு
ரெண்டு கல்தோசை
ஒரு வடகறி….
வித விதமாய் வரும்
கட்டளைக்கு
காது முளைக்க வேண்டும்
விடுபடாமல்
வேகமாய் பார்சல் கட்ட
விரல்களின் நகக் கண்
விழிக்க வேண்டும்.

கழன்டு விடும்
மணிக் கட்டு.
கூட்டத்தின் கோபத்திற்கு
வாட்டம் காட்டாமல்
குவிந்து விரியும்
நெற்றிப் பொட்டு.

நிலைகுத்தி
நின்ற இடத்தில்
உடல் வளைந்து
பொருள் எடுக்க
வலி பிடுங்கும்
தொடை நரம்பு.

கைவிடப்பட்ட
முதியவர்கள்
பசித்ததை
சொல்லத் தெரியாமல்
பார்த்து நிற்கும்
மனநோயாளிகள்
இவர்க்கும்
சுரக்கும்
தள்ளுவண்டிக் கடையின்
பாசப் பரிமாற்றம்.
பாக்கி வைக்கும்
பழக்கமில்லா முகங்களுக்கும்
தள்ளுவண்டி
இடம் கொடுக்கும்.

முதுமையில் வளைந்த
தந்தையின் கை நரம்புகள்
சட்னி, சாம்பார்
பொட்டலம் கட்ட தடுமாறும்.

பார்த்து.. பார்த்து.. என
பார்வையில்
முடிச்சு போட்ட படியே
பையன்,

பல விதமாய்
உண்டவர் கணக்கை
ஒன்று விடாமல்
ஒரு விதமாய்
கூட்டிச் சொல்லும் அழகு
வலியின் பிரசவம்.

படிக்க :
♦ மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை !
முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு

குறைய குறைய
வெங்காயம் நறுக்கி
வேக வேகமாய்
வடையைத் தட்டி
இடையிடையே
இட்லியை ஊற்றி
சூடான சிற்றுண்டிக்குள்

உழைப்பின் சூட்டில்
ரத்தம் கொதிக்கும்
உடல் வலி கலந்து
வடகறி மணக்கும்.

எடுத்து வைக்கும்
எண்ணமின்றி
உனக்கும் எனக்கும்
கொடுத்த பிறகு
மிச்சம் மீதிகள்
அவர்
இரைப்பை நினைக்கும்.

ஐயாவுக்கு.. அண்ணனுக்கு
என
மாமூல் கேட்க
கடுப்பில்.. அடுப்பில்
எண்ணைய் குமுறும் !
உழைப்பின் துடிப்பை
உறியும் முகம் பார்த்து
காகம் துப்பும்
தெரு நாய் திட்டும் !

பத்து பாத்திரம்
கழுவி முடிக்கையில்
பெத்த பிள்ளையின்
முகம் அது தெரியும்
பிள்ளை சாப்பிட்டதோ
என்ற கவலையில்
பெத்த வயிறு விரியும்.

தள்ளி தள்ளிப் பார்த்தாலும்
வாழ்வின் ஏக்கம் நகரவில்லை
இன்னும்
எதைத் தள்ளிப் பார்த்தால்
வாழ்க்கை கிடைக்கும்
தெரியவில்லை?

துரை.சண்முகம்

துரை. சண்முகம்  

3 மறுமொழிகள்

 1. பாயம்மா

  தங்கியிருக்கும் பகுதியில் கையந்திபவன்கள் வரிசைக் கட்டி இருந்தாலும், பாயம்மாவின் கடை விசேஷமானது. தோசை, இட்லி, பொங்கல், வடை என எது சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். வடைகறி ரெம்பவே ஸ்பெசல். வடைகறி, சாம்பார் என எல்லாவற்றையும் நாமே எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதை பயன்படுத்திக்கொண்டு, வடைகறியை மொக்குகிறவர்கள் நிறைய. 9.30 மணிக்கு மேலே போனால், வடைகறி கிடைக்காது. ஒரு இட்லி 5 ரூ. தோசை ரூ. 10. விலையும் குறைவு. எப்பொழுதும் கடை பிஸியாக இருக்கும்.

  ஒரே ஒரு பிரச்சனை. பாயம்மா தினமும் கடை போடமாட்டார். அவருடைய கணவர் ஒரு ஆஸ்துமா நோயாளி. கூடுதலாக குடியும் சேர, பாயம்மாவிற்கு கடையில் உதவி செய்யவே ரெம்பவும் திணறிப்போவார். கொஞ்ச காலம் அவர்களின் பையன் உதவியாய் இருந்தான். பிறகு, அவன் வேறு வேலைக்கு போய்விட்டான். பாயம்மாவும் ரெம்ப ஆரோக்கியமானவர் இல்லை. அதனால் தொடர்ந்து கடை போடுவது என்பது சிரமம் என்பதால் விட்டு விட்டு போடுவார். வீட்டில் சமைக்க முடியாத சில நாட்களில் நேரே பாயம்மா கடைக்கு போய்விட்டு, அவர் கடை போடவில்லை என்றால் தான் வேறு கடைக்கு நகருவேன்.

  கடந்த ஒன்றரை மாதங்களாக விட்டு விட்டு போய் பார்த்த பொழுது, பாயம்மா கடையே போடவில்லை. இன்று போயிருந்தேன். ஒரு பீட் காவல் அதிகாரி எதையோ வாங்கிகொண்டு ‘மிடுக்காக’ நகர்ந்தார்.

  “என்னாச்சு பாயம்மா? கடையே போடவில்லை” என்று விசாரித்தேன்.

  “பாய்க்கு உடம்புக்கு முடியாமல், மருத்துவமனையில் சேர்த்து, இப்பொழுது உடல்நலம் தேறி வீட்டில் இருக்கிறார். வாங்குன கடன் கழுத்தை நெறிக்குதுன்னு கடை போடலாம்னு வந்தேன். கடை திறந்த இரண்டாவது நாளே இவங்க வந்துட்டாங்க! மாசம் 300 ரூ. கொடுக்கனும்னு சொல்றாங்க! நானும் எவ்வளவோ குடும்ப கஷ்டத்தை சொல்லி, கடந்த ஒன்றரை மாதமா கடை போடலைன்னு சொன்னா கூட கேட்கமாட்டேங்கிறாங்க! இப்படி தெரு ஓரத்தில கடை போடுறது தப்பாம். ஒரு தடவை தப்பு பண்ணினாலும், தப்பு! தப்பு தானாம்! (என்னா ஒரு பீட் தத்துவம்). நாள் முழுக்க கூட கடையை போடு! எங்களுக்கு மாசம் 300ரூ கொடுத்தா போதும்னு சொல்றாங்க!”

  “முன்னாடி மெயின் ரோட்டில கடை போட்டிருந்தோம். அதையும் மிரட்டி சந்துக்குள்ள தான் விற்கனும்னு சொல்லிட்டாங்க! அதுலயே விக்கிறது பாதியா குறைஞ்சு போச்சு! இப்ப நான் ஒண்டி ஆளா வந்து கடை போட வேண்டியிருக்கு! தொடர்ச்சியாக கடை போட முடியாததினால், தொடர்ந்து வர்றவங்க வரமாட்டேன்கிறாங்க! அதனால், மாவு ரெம்ப தேங்குது! டேஸ்டா இருக்குதுன்னு தான் நம்ம கடைக்கு வர்றாங்க! அதனால், மத்தவங்க மாதிரி ரேசன் பருப்பையோ, பால்வாடி பருப்பையோ வாங்கி போடாம, தரமான பொருட்களைத்தான் போடுறேன். முன்னைக்கு இப்ப பலசரக்கு சாமான் இரண்டு மடங்கு விலை ஆகி, செலவு ஏகத்துக்கு ஏறிடுச்சு! இட்லி, தோசைக்கு போய் என்னத்த விலை ஏத்துறதுன்னு மனசே வரல்லை” என தனது துயரங்களை சொல்லிக்கொண்டே போனார்.

  சென்னை நகரத்தில் பெருகிவரும் குற்றங்களை குறைப்பதற்காகவும், மக்களுக்கும் காவல் துறைக்குமான ’இடைவெளியை’ குறைக்கிறதுக்கு தான் இவர்கள் என்று பீட் ஆபிசர்களை அறிமுகப்படுத்தும் பொழுது ரெம்ப கெத்தா சொன்னாங்க!

  நூத்துக்கணக்கான பைக்குகளை வாங்கி கொடுத்து, மாதத்திற்கு 25 லிட்டர் பெட்ரோலும் மக்களோடு வரிப்பணத்துல வாங்கிக்கொடுத்தா, இந்த ஆபிசர்கள் எல்லாம் கொடுத்த பைக்குகளை வைச்சுகிட்டு, கலக்சன ஜோரா பார்த்து, கல்லா கட்டுதுக! ‘இடைவெளியை’ குறைக்கிறதுன்னா என்னான்னு இப்பத்தானே புரியுது!

  – குருத்து

  – வினவு தளத்தில் 10/12/2014 அன்று வெளியானது!

Leave a Reply to Pugazh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க