காவலர்கள் என தமிழில் எழுத நினைத்தாலும் போலீசு என்று சொல்வது போல வராது. தமிழத் திரையுலகில் போலீசின் வீர பராக்கிரமங்களை துதிபாடி படங்கள் பல வந்துள்ளன. இன்னொருபுறம் தூத்துக்குடி மஞ்சள் சட்டை போலீசு சுடுவதும் மக்களிடையே வெறுப்புக்குரிய காட்சியாக பதிந்திருக்கிறது.

கடந்த 24.11.2018 அன்று சென்னை போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கமாக ரோந்துப் பணி வண்டி போலீசார் ஏதாவது ஒரு கையேந்தி பவனில் நின்று பொட்டலங்களை வாங்கிச் செல்வர். அது இலவசமா, மாமூலா என்பது இரகசியமல்ல. பிறகு உலா முடிந்த பிறகு அதிகாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் தூங்குவர். வண்டிக்குள் ஒரு வாட்டர் கேன் இருக்கும். ஆங்காங்கே கிடைத்த பரிசுப் பொதிகளும் இருக்கும். இடையிடையே வாக்கி டாக்கியில் அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும்.

படிக்க:
♦ அனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் ? | துரை சண்முகம் | காணொளி
♦ முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

அன்றைய தினம் அறிவிப்போடு ஒரு கவிதை வந்தது. என்ன கல்லுக்குள் ஈரம் என்கிறீர்களா? கவிதை படித்தவர் சென்னை உயர்நீதிமன்ற காவல் ஆய்வாளர் கணேசன். கவிதை என்ன?

முறுக்கு மீசை – கவிஞர் இன்ஸ்பெக்டர் கணேசன்

‘‘குடும்ப வாழ்வில் இனிமையை துறப்பாய்,
குழந்தைகளின் மழலை மொழி மறந்துபோகும்,
மனையாளையும் துறந்து வாடுவாய்,
பாசம் கொண்ட உற்றார் உறவினர்களையும் மறப்பாய்,
பண்பான காவல் பணியின் கடமையை செய்தால்
பலன் தானாக வருமடா.
முறுக்கு மீசையும், மிடுக்கு நடையும்
காவலனுக்கு மட்டுமே சிறப்படா.
நீ உடுக்கும் உடையும், உறவாடும் முறையும்
மக்களிடத்தில் உன் மாண்பை சொல்லும்.
மகராசன் நீ என்று மக்கள் உள்ளம் உன்னை போற்றும்.
செய்வதை திருந்த செய்யடா.
உன் நல்ல செயலால் உன் வாழ்வும் உயரும் என்பது மெய்யடா,
மக்களை காக்கும் காவலா, நீ மட்டுமே கடமை வீரனடா”

இந்தக் கவிதை நேரத்தைக் கேட்ட பலர் பாராட்டி வருகின்றனராம். அவர்களின் போலீசு அதிகாரிகளும் சமூகவலைத்தள அன்பர்களும் உண்டு.

பழைய காலத்து எம்ஜிஆர் பாடல் போல நீதிபோதனைகளை சொல்லும் இந்தப் பாடல் உண்மையில் எந்தக் காலத்திற்குரியதும் அல்ல. இருப்பினும் அந்தக் காலம் என்று வைத்துக் கொண்டாலும் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்ன?

ஜெயந்தி மற்றும் பார்த்திபன்

கோயம்பேடு காவல் நிலையத்தின் தலைமைக் காவலராக இருப்பவர்  பார்த்திபன். சூளைமேட்டில் இருக்கும் ஜெயந்தி எனும் விலைமாதுவுடன் பார்த்திபனுக்கு தொடர்பு ஏற்பட்டு அது தொழில் கூட்டணியாகவும் வளர்கிறது. கோயம்பேடு வட்டாரங்களில் ஜெயந்திக்கு மற்ற போலீசால் தொல்லை வராமலும், வாடிக்கையாளர்களை பிடிக்கவும், அந்த வாடிக்கையாளர்களை ஜெயந்தி ஏமாற்றி பணம் பறிப்பதற்கு போலீசாக உதவியும் செய்து வந்தார் பார்த்திபன்.

இந்த தொழில் கூட்டணி குறித்த அதிருப்தி கோயம்பேடு போலீசு நிலையத்திலேயே எழுந்திருக்கிறது. என்றாலும் இரு முறை எச்சரிக்கையோடு விட்டுவிட்டார்கள். என்ன இருந்தாலும் முறுக்கு மீசை போலீசை, கடமை குன்றா காவலரை விட்டுக் கொடுக்க முடியாதில்லையா?

கடந்த 25-ம் தேதி அன்று நள்ளிரவில் பெண் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தன் வீட்டில் புகுந்து திருட முயன்ற ஒரு மர்மநபரை பிடித்து வைத்திருப்பதாக கூறினார். ரோந்து காவலர்கள் சென்று விசாரித்த போது அந்த பெண் ஜெயந்தி, பிடித்து வைக்கப்பட்டவர் விபச்சாரத்திற்கு வந்தவர். அவரிடம் காவலர் பார்த்திபன் பணம் பறித்துச் சென்றிருக்கிறார். பிறகு வேறு வழியில்லாமல் பார்த்திபன் லீலை வெளியே வந்தது. பிறகு அந்தப் பெண் மற்றும் பார்த்திபன் மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள். ஆனாலும் தலைமைக் காவலர் என்பதால் பார்த்திபன் தனது கடமை உணர்ச்சியுடன் தலைமறைவாகிவிட்டார். தலையே மறைந்து போனதால் அவர் போலீசு அதிகாரிகளால் இடைநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.

படிக்க:
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை
♦ கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

சென்னை என்.எஸ்.கே நகரில் அந்தப் பெண்ணுக்கு வாடகை வீடு எடுத்து வரும் வாடிக்கையாளர்களை மிரட்டி ரெய்டு போர்வையில் பணம் வசூலித்து இந்த தொழில் வெகுகாலம் நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வரும் அப்பாவி பெண்களையும் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பார்த்திபன் மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் ஒரு தலைமைக் காவலர் மறைவாக செய்திருப்பார் என நம்ப முடியுமா?

திருவேற்காட்டைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது புகாரை போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரித்தார் என தீக்குளித்திருக்கிறார். போதையில் அவர் இருந்ததாக கூறும் போலீசு அவரை சமாதானம் செய்து காப்பாற்றி அனுப்பி வைத்திருக்கிறது. இதே திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ரேணுகா எனும் பெண் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கிறார். போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கிறார்கள் என்பதற்காகத்தான் இந்தத் தீக்குளிப்பு மரணம்.

துப்புரவு பணியாளர் பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் போலீசு

அதே திருவேற்காடு போலீசு நிலையத்தில் இரு வீட்டுக்காரர்களது பிரச்சினைக்காக ராஜ்குமார் என்பவரை கைது செய்து துணியைக் கழட்டி அடித்திருக்கிறார்கள். அதைக் கண்டித்து அவரது உறவினர்கள் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போராடியிருக்கிறார்கள்.

இப்படி வரும் செய்திகளை எப்படி மடை மாற்றுவது?

பழவந்தாங்கல் போலீசு நிலையத்தின் காவலர்கள் அப்பகுதியில் துப்புரவு பணியாற்றும் அனுசியா எனும் பெண்மணிக்கு கேக் வாங்கி, சேலை பரிசளித்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்கள். உடனே உயர் போலீசு அதிகாரிகள் பாராட்டியிருப்பதாக ஊடகங்கள் அனைத்தும் படத்தோடு செய்தி வெளியிட்டிருக்கின்றன.

போலீசு நடத்தும் வன்முறைச் செய்திகள் புதிதல்ல. போலீசு நிலையம் முன்பு தீக்குளித்த அவலங்களும் இதற்கு முன் நிறைய நடந்திருக்கின்றன. இவையெல்லாம் மக்களுக்கு கடந்து செல்லும் செய்திகளாக ஊடகங்களால் தரப்படுகின்றன. ஆனால் கவிதையோ பிறந்தநாள் கேக்கோ ஒரு தலைப்புச் செய்திக்குரிய முக்கியத்துவத்துடன் வலிந்து வெளியிடப்படுகின்றன.

போலீசு செய்யும் குற்றங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்பதால் அவர்களது குற்றங்கள் அதிகரிக்கின்றன. இல்லையெனில் தலைமறைவான பார்த்திபன் இந்நேரம் பிடிபடாமல் இருந்திருக்க முடியுமா?

இப்போது நள்ளிரவில் அந்தப் போலீசு வாசித்த வாக்கி டாக்கி கவிதை குறித்து என்ன சொல்கிறீர்கள்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க