’கள்ள உறவு’ சரி என உச்சநீதிமன்றம் சொல்லி விட்டதா?

சே.வாஞ்சிநாதன்
ஜோசப் ஷைன் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்து உச்சநீதிமன்றம் செப்-28,2018-ல் வழங்கிய தீர்ப்பு சமூகத்தில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் இத்தீர்ப்பை மிகத் தவறான முறையில் விவாதப்படுத்தின. கள்ள உறவு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது, இனி யாரும், யாருடனும் இருக்கலாம்; இதனால் குடும்ப அமைப்பே சிதைவுறும் என்ற வகையில் ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதில் வருந்தத்தக்க உண்மை என்னவெனில் விமர்சித்த பலரும் தீர்ப்பைப் படிக்கவில்லை; அதன் சாரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. உண்மையில் சட்டமும், தீர்ப்பும் சொல்வதென்ன?

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497:

திருமணமான ஒரு பெண்ணுடன் அப்பெண்ணின் கணவர் அனுமதியின்றி அப்பெண் திருமணம் ஆனவர் எனத் தெரிந்தும் வேறொரு ஆண் உடலுறவு வைத்துக் கொண்டால் அது குற்றம். குற்றத்தைத் தூண்டியதாக அப்பெண்ணைத் தண்டிக்க முடியாது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 198 :

முறை பிறழ்ந்த உறவுக் குற்றம் குறித்து குற்றச் செயலில் ஈடுபட்ட பெண்ணின் கணவன் மற்றும் குற்றம் நடந்த சமயத்தில் அப்பெண் யார் பாதுகாப்பில் இருந்தாரோ அவர் புகார் தரமுடியும்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 198 ஆகிய இரண்டும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, பெண்களுக்கு எதிரான பாகுபாடு கொண்டது, பெண்களின் சமத்துவத்தை, கண்ணியத்தை மீறுவதாக உள்ளது என ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு..

இ.த.ச. பிரிவு 497 – குறித்த சமூகத்தின் புரிதல் என்ன?

திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ள கணவன் – மனைவி ஆகிய இருவருக்கும் தடை உள்ளது, ஒருவனுக்கு – ஒருத்தி என்பதை யார் மீறினாலும் குற்றம் என்று இ.த.ச. பிரிவு 497 சொல்கிறது என்பதே பொதுப் புரிதல். ஆனால் சட்டம் அவ்வாறு சொல்லவில்லை.

திருமணமான ஆணின் திருமணத்திற்கு வெளியிலான உறவை பிரிவு 497 தடுக்கிறதா?

இல்லை! திருமணமான ஒரு ஆண் வயது வந்த – திருமணமாகாத ஒரு பெண்ணுடனோ, ஒரு விதவையுடனோ, மணவிலக்குப் பெற்ற ஒரு பெண்ணுடனோ, ஒரு விலைமாதுடனோ, உடலுறவு வைத்துக் கொள்வது இ.த.ச. 497-ன்படி குற்றமல்ல. இன்னொருவர் மனைவியுடன் உறவு வைப்பது மட்டுமே குற்றம். சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவர் சம்மதித்தால் அதுவும் குற்றமல்ல. எனவே திருமணமான ஆணின் திருமணத்திற்கு வெளியிலான எல்லா முறை பிறழ்ந்த உறவையும் இ.த.ச. 497 தடுக்கவில்லை.

அதேசமயம் மேற்படி பிரிவு 497 – திருமணமான ஒரு பெண் தனது கணவனின் அனுமதியின்றி ஒரு திருமணம் ஆகாத – வயது வந்த இளைஞனுடனோ, மனைவியை இழந்த ஒரு ஆணுடனோ, மணவிலக்கு பெற்ற ஒரு ஆணுடனோ உடலுறவு வைத்துக் கொள்வது குற்றம் என்கிறது. இக்குற்றத்திற்கு முறைகேடான உறவில் ஈடுபட்ட ஆணைத் தண்டிக்க முடியும். எனவே இ.த.ச. 497 ஆணுக்குச் சார்பாக, பாகுபாட்டுடன் உள்ளது என்கிறது உச்சநீதிமன்றம்.

முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்து யார் புகார் அளிக்க முடியும்?

குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 198-ன் படி முறைபிறழ்ந்த உறவு வைத்துக் கொண்ட பெண்ணின் கணவன் புகார் கொடுக்கலாம் அல்லது அப்பெண் வேறு ஒருவரின் பாதுகாப்பில் இருக்கும் போது உறவு வைத்துக் கொண்டால் அப்பெண் அச்சமயத்தில் யார் பாதுகாப்பில் இருந்தாரோ அவர் புகார் கொடுக்கலாம். இதில் மிக முக்கியமாக ஒரு திருமணமான ஆண் முறைபிறழ்ந்த உறவுக் குற்றத்தில் ஈடுபட்டால் அவரின் மனைவி புகார் எதுவும் கொடுக்க முடியாது.

ஒரு எளிய உதாரணத்துடன் இதை விளக்கலாம். ராஜா என்கிற ஆணும் நர்மதா என்கிற பெண்ணும் கணவன் மனைவி. ரஞ்சித் என்கிற ஆணும் சர்மிளா என்கிற பெண்ணும் கணவன் மனைவி என்று வைத்துக் கொள்வோம். இதில் ராஜா என்கிற ஆண், சர்மிளா என்பவர் இன்னொருவர் மனைவி என்று தெரிந்தே உறவு கொண்டால் அது குற்றம். இக்குற்றச் செயலால் தான் பாதிக்கப்பட்டதாக ரஞ்சித் என்கிற ஆண்தான் புகார் தர முடியும். ஆனால், ராஜா என்கிற ஆண் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்தால் அது குற்றமல்ல. மிக முக்கியமாக, இப்பிரச்சனையில் நேரடியாக பாதிக்கப்படும் நர்மதா என்கிற மனைவி தவறு செய்யும் தன் கணவன் ராஜா மீது புகார் தர முடியாது. எனவே பிரிவு 198-ம் ஆணாதிக்கச் சார்பாக உள்ளது என்கிறது உச்சநீதிமன்றம்.

சட்டத்தின் ஒரு சார்பான பார்வைக்குக் காரணமாக உச்சநீதிமன்றம் சொல்வதென்ன?

திருமணமான ஒரு பெண் கணவனின் சொத்து. அச்சொத்தை அக்கணவன் அனுமதியின்றி யார் கவர்ந்தாலும் அது குற்றம். அந்தப் பெண் வேறு ஒருவர் பாதுகாப்பில் இருக்கும் போது அப்பெண் அவர்கள் பாதுகாப்பில் உள்ள ஒரு சொத்து. அப்பொழுது அப்பெண்ணை யாரேனும் கவர்ந்தால் அச்சொத்தை அந்நேரத்தில் பாதுகாத்தவர் புகார் அளிக்கலாம். குறிப்பாகச் சொத்தின் உரிமையாளரும், அல்லது உரிமையாளர் யார் பொறுப்பில் விட்டிருந்தாரோ அவரும் புகார் தர முடியும். இது பெண்களைச் சொத்தாகக் கருதும் ஆணாதிக்க சமூகத்தின் தொடர்ச்சி என்கிறது உச்சநீதிமன்றம்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 378 அசையும் சொத்தை ஒருவர் திருடுவது குறித்துப் பேசுகிறது. பிரிவு 497- னை இதனோடு பொருத்திப் பார்த்தால், திருட்டு என்பது ஒருவரின் அசையும் பொருளை அவரின் அனுமதியின்றி, உள்நோக்கத்துடன் கவர்வது. அனுமதி இருந்தால் குற்றமல்ல. பிரிவு 497-ன்படி கணவன் அனுமதி கொடுத்தால், அவரின் மனைவியுடன் யாரும் உறவு வைத்துக் கொள்ளலாம். அனுமதி இல்லாவிட்டால் குற்றம். இங்கே மனைவி கணவனின் சொத்தாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். ஒரு பொருளுக்கு இருக்கும் மதிப்புதான் ஒரு பெண்ணுக்கு தரப்படுகிறது. எனவே கணவனின் சொத்தாக மனைவியைப் பாதுகாப்பதே சட்டப் பிரிவு 497.

பிரிவு 497 இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம் என்ன?

மனிதன் தாய்வழிச் சமூகத்தில் உருவானவன். தாய்வழிச் சமூகத்தில் ஒருவருக்கு தனது தாயைத்தான் தெரியும் தந்தையைத் தெரியாது. தாய் சொன்னால்தான் தந்தை யார் என்று தெரியும். இன்றும்கூட விலங்குகளுக்கு தந்தை யார் என்று தெரியாது. தாயைத்தான் தெரியும். தாய்வழிச் சமூகத்தைத் தொடர்ந்து வந்த சமுதாயத்தில் குழுத்தலைவன் சொத்துடையவனாகிறான். அவன் சொத்துக்களுக்கு வாரிசு தேவைப்படுகிறது. அந்த வாரிசைத் தெரிவு செய்ய வேண்டுமானால் அவன் ஒரு பெண்ணை தனக்கானவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அவனின் வாரிசாக ஆகமுடியும். ஆக, சொத்தை தனது வாரிசுகளுக்கு மட்டும் அளிக்கவே திருமண முறை தோன்றியது. இந்தக் கருத்தாக்கத்தின் தொடர்ச்சியே பிரிவு 497 மற்றும் 198.

முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்த வரலாறு

பண்டைய கால மதங்களும் நாகரீகங்களும் முறை பிறழ்ந்த உறவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதின. ஹமுராபி சட்டத் தொகுப்பு முறைபிறழ்ந்த உறவு மரண தண்டனைக்குரிய குற்றம் என்கிறது. இக்குற்றத்திற்காக சம்மந்தப்பட்டவர்களை நேரடியாகக் கொலை செய்யும் உரிமையை வழங்கின பண்டைய அய்ரோப்பிய சட்டங்கள். இங்கிலாந்தில் 1970 வரை குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களிடமிருந்து நட்ட ஈடு பெறுவது சட்ட உரிமையாக இருந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை இந்திய தண்டனைச் சட்டம் வரைவுச் சட்டமாக உருவான போது பிரிவு – 497 ஐ நீதிபதி மெக்காலே சேர்க்கவில்லை. ஆனால் இச்சட்டப் பிரிவு இந்தியாவுக்குத் தேவை என சட்ட ஆணையம் வலியுறுத்தியதால் பிரிவு 497 சேர்க்கப்பட்டது.

படிக்க:
#Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !
எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க நாங்க உயிரோட வந்துட்டோம் !

யூசுப் அப்துல் அஜிஸ் எதிர் பம்பாய் மாகாணம் (1954) என்ற வழக்கில் முறைபிறழ்ந்த உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு ஏன் தண்டனை இல்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 15(3) பெண்களுக்கு சிறப்புரிமை வழங்குவதை அங்கீகரிக்கிறது. எனவே இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 சரியானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெண்களின் அந்தரங்க உரிமையும் (right to privacy) கண்ணியமும் (dignity of women) இந்த வழக்கில் விவாதிக்கப்படவில்லை.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 ஒரு சார்பாக உள்ளது. இதை இரு தரப்பாருக்கும் பொருந்தும் வகையில் கணவன் மற்றும் மனைவி இருவரையும் தண்டிக்கும் வகையில் பொதுப்பாலாக (Gender neutral – SPOUSE) மாற்றக் கோரி 1985-ல் தொடுக்கப்பட்ட விஷ்ணு எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் இது நீதிமன்றத்தின் வேலையல்ல; சட்டம் இயற்றும் மன்றங்களின் வேலை என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. வி.ரேவதி – எதிர் – இந்திய அரசு வழக்கிலும் பிரிவு 497 உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்கா, ரசியா, இங்கிலாந்து, சீனா, அய்ரோப்பிய நாடுகளில் முறை பிறழ்ந்த உறவு (Adultery) குற்றமல்ல. பாகிஸ்தான், சவுதி, இந்தோனேசியா நாடுகளில் குற்றம். தென் கொரியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்த பிரிவுகள் நீதிமன்றங்களால் நீக்கப்பட்டுள்ளன.

அரசியல் சட்ட அடிப்படை உரிமையான சமத்துவ உரிமை (Art.14), பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான உரிமை (Art.15(1)) மற்றும் தனிநபர் அந்தரங்கம் (Right to Privacy) – கண்ணிய உரிமையை (Right to Dignity) (Art.21) மீறுகிறதா? – இ.த.ச. பிரிவு 497 மற்றும் கு.வி.ந. சட்டப் பிரிவு 198?

முன்னொரு காலத்தில் குற்றம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட விசயங்கள், அடுத்து வரும் காலங்களில் முற்றிலும் பொருத்தமற்றவைகளாக உள்ளன. எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது என எந்த விசயமும் இல்லை. எல்லாமே மாறக்கூடியது. திருமண வாழ்க்கையும் இதற்குள் உள்ளடங்கியதே. மணவாழ்வில், ஆணும், பெண்ணும் சம பங்காளர்கள். மண வாழ்க்கை நீடிப்பதன் அடிப்படை சமத்துவமாக இருக்க வேண்டும். ஆண், பெண்ணை அடிமைப்படுத்தியல்ல.

ஆனால் பிரிவு 497, திருமணமான பெண்ணை, பொம்மையாக, சொத்தாக, ஆணுக்குக் கீழானவளாக – கட்டுப்பட்டவளாக, ஆணின் விருப்பத்திற்கேற்ப செயல்பட வேண்டியவளாகக் கருதுகிறது. பிரிவு 497 – மனைவியின் கற்புரிமையை அல்ல – கணவனின் சொத்துரிமையைப் பாதுகாக்கவே உள்ளது. இது பெண்களின் கண்ணியத்தை மீறும் செயல்.

இந்தியாவைப் பொருத்த வரை தனிநபர் அந்தரங்கம் (Right to Privacy) அடிப்படை உரிமையா என்கிற கேள்வி ஆதார் வழக்கிற்கு முன்பு எழுப்பப்படவில்லை. அதன் பின் புட்டசாமி வழக்கில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 ன்படி தனிநபர் அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என்பதை 9 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது.

திருமணம், பாலுறவு விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது. ஒரு பெண்ணுக்கு தன் உடல் மீது முழு உரிமை உண்டு. நீங்கள், மிகுந்த அழகானவர், எல்லா வகையிலும் உயர்ந்தவர் எனச் சமூகம் கருதும் ஒருவரை ஒரு பெண் நிராகரிக்கலாம். தனி நபர் சுதந்திர உரிமை, திருமணத்தைப் புனிதமாகக் கருதும் குடும்பம் என்ற நிறுவன அமைப்பின் உரிமையை விட மேலானது. ஒரு பெண், ஆண் யாருடன் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது அவர்களது அந்தரங்க உரிமை. திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொண்டால் அது சமூகத் தவறு மட்டுமே (Civil wrong). இதற்கு விவாகரத்து பெறலாம். ஆனால் இதை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது. எல்லாத் தனிநபர்களையும் சமூகத்தின் பாலுறவு குறித்த கோட்பாட்டிற்கு இணக்கமாக இருக்கக் கோர முடியாது.

தனக்கான பாலியல் இணை யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்தத் தனிநபருக்குத்தான் உண்டு. முறைகேடான உறவு பிரச்சனையில் ஒரு கணவன் தனது மனைவியை தனக்கான சொத்தாகக் கருதி அவளுடன் வேறு ஒரு நபர் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பாகப் புகார் கொடுக்கும்போது அதைத் தொடர்ந்து வழக்கு – விசாரணை வரும். இந்நடவடிக்கைகள் ஒரு தனிநபரின் அந்தரங்கத்தில் அரசு, நீதிமன்றம் தலையிடுவதே. இதைத் தனிநபர் வழக்காகத்தான் தொடுக்க முடியும் என்றாலும், வேறு சில பிரிவுகள் சேர்க்கப்பட்டால் காவல்துறை தலையிடலாம். இவ்வாறான காவல்துறை – நீதிமன்றத்தின் தலையிடல் இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது. இது இந்திய அரசியல் சட்ட சரத்து 21-ன் கீழான கண்ணியமாக வாழும் ஒரு குடிமகன்/குடிமகளின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது.

அரசியல் சட்டம் சமூக மாற்றத்திற்கான சட்ட வழியைச் சொல்கிறது. சமூகத்தின் ஜனநாயக நெறிமுறைகளை உயர்த்துகிறது. சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே அரசியல் சட்டத்தின் நோக்கம். அச்சமூகமும், தனிமனித கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டும். எனவே இனியும் ஆணாதிக்க முறைகள் பெண்கள் உரிமையைத் தடை செய்ய முடியாது. பெண்கள் பலவீனமானவர்கள் அவர்களுக்கு சலுகை வழங்குகிறோம் எனச் சொல்லி உரிமையை மறுக்கக் கூடாது. ஆணும், பெண்ணும் சமம் எனக் கருதி நடந்தால்தான் அரசியல் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

எனவே, அனைவருக்கும் சம உரிமை வழங்கும் பிரிவு 14, பாலினம் – மதம் – இனம் என்கிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் பிரிவு 15 (1) மற்றும் ஒவ்வொரு தனி நபரும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டும் பிரிவு 21 ஆகிய இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 மற்றும் கு.வி.ந.ச. பிரிவு 498 – இருப்பதால் இரு பிரிவுகளையும் ரத்து செய்கிறோம் என்கிறது உச்சநீதிமன்றம்.

கேள்விகள்

பிரிவு 497 ஐ நீக்குவதால் சமூக ஒழுக்கமும் திருமண ஒழுக்கமும் சீர் குலையாதா? இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதுதானே சரி? அதற்கேற்ப சட்ட திருத்தம் செய்வதுதானே முறையானதாக இருக்க முடியும்? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.

இருவரையும் தண்டிக்கலாம் என்றால் அதைப் பாராளுமன்றம்தான் செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் வேலை ஒரு சட்டப் பிரிவு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? எனப் பார்ப்பது மட்டுமே.

முறைபிறழ்வு உறவைக் குற்றமாக்குவதால் திருமண வாழ்வைக் காப்பாற்ற முடியாது. முறைபிறழ்வுப் பிரச்சனை வந்து புகார் கொடுத்தாலே நிச்சயம் குடும்பம் சிதைவுறும். முறைபிறழ்வு உறவு குற்றமாக கருதப்படாத அமெரிக்கா, ரசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சமூக ஒழுக்கம் சீர்குலைந்து விட்டது என்பதற்குப் புள்ளி விவரங்கள் இல்லை. ஒழுக்கத்திற்கு மாறாக இருப்பதால் மட்டுமே ஒரு விசயத்தில் அரசு தலையிட முடியாது. குற்றவியல் சட்டத்தைப் பொருத்தவரையில் அறநெறிக்கு / ஒழுக்கத்திற்கு (morality) இடமேதுமில்லை.

சமூகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் குற்றமாகக் கருத முடியாது. ஒரு விபத்து நடக்கும் போது விபத்துக்குள்ளானவரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்ப்பது ஒரு தவறாகத்தான் கருதப்படுமேயொழிய அதை ஒரு குற்றமாகக் கருத முடியாது. ஒரு அடிதடி, கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பார்ப்பவர்கள் தடுக்கவில்லை என்றால் இதுதான் சட்டத்தின் நிலை. குற்றங்களைத் தடுக்கவில்லை என்பது ஒரு சமூகத் தவறு தானேயொழிய அதைக் கிரிமினல் குற்றம் என வரையறுக்க முடியாது.

எனவே முறைபிறழ்ந்த உறவு என்கிற பிரச்சனை வரும் வரும் போது அத்தவறு மணவிலக்கு கோருவதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது சரியல்ல என்கிறது உச்சநீதிமன்றம்.

பெண்களை அடிமைகளாக, வேட்டையாடி நுகரப்பட வேண்டிய கவர்ச்சிப் பொருளாகக் கருதும் இன்றைய சமூகச் சூழலில் வெளிவந்திருக்கும் இத்தீர்ப்பு பெண் சமூகத்திற்கு முழுமையான விடிவைத் தராது என்ற போதிலும், மனைவி கணவனின் சொத்து அல்ல என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இத்தீர்ப்பு அவசியம் வரவேற்கப்பட வேண்டிய, எல்லோரும் படித்து விவாதிக்க வேண்டிய ஒன்று.

(குறிப்பு:இக்கட்டுரைதீர்ப்பு குறித்த எனது சொந்தப் புரிதல் மட்டுமே.தவறு இருந்தால் நண்பர்கள் சுட்டிக் காட்டவும்.)

சே.வாஞ்சிநாதன்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகர். தூத்துக்குடி வைகுண்டராஜன் தாதுமணல் கொள்ளை, மதுரை பி.ஆர்.பி. கிரானைட் கொள்ளை ஆகியவற்றை அம்பலப்படுத்துவதில் பங்கு வகித்தவர்.

5 மறுமொழிகள்

 1. “இந்திய யூசுப் அப்துல் அஜிஸ் எதிர் பம்பாய் மாகாணம் (1954) என்ற வழக்கில் முறைபிறழ்ந்த உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு ஏன் தண்டனை இல்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 15(3) பெண்களுக்கு சிறப்புரிமை வழங்குவதை அங்கீகரிக்கிறது..”

  அப்படியானால் பெண்கள் செய்யும் தவறை அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா? என்கிற கேள்வியும் இதனுடன் எழுகிறது.

  Article 15(3): Nothing in this article shall prevent the State from making any special provision for women and children

  பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து அரசு சிறப்பு ஏற்பாடு ஒன்றை உருவாக்குவதற்குத் தடை ஏதுமில்லை என்கிறது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 15(3). எனவே இதற்கான – அதாவது பெண்களையும் தண்டிப்பதா கூடாதா என்பதற்கான – ஏற்பாடுகளை அரசுதான் செய்ய வேண்டுமேயொழிய அது நீதி-மன்றத்தின் வேலை அல்ல என்பதுதான் அதன் பொருள். ஒரு வேளை அவ்வாறான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டுமானால் அதற்கானத் தேவை இருக்கிறதா இல்லையா என்பதை புறச்சூழல் மற்றும் புள்ளிவிவரங்களிலிருந்துதான் முடிவு செய்ய வேண்டும். அனுமானத்தின்படி செய்வது சரியானதாக இருக்க முடியாது.

  இப்படித்தான் பிரிவு 15(3) ஐ நான் புரிந்து கொள்கிறேன்.

  கேள்விகள் என்கிற தலைப்புக்கு முந்தைய பாராவில் கு.வி.ந.ச. பிரிவு 498 என்பதை கு.வி.ந.ச. பிரிவு 198 என திருத்தம் செயவும்.

  தீர்ப்பு குறித்த வழக்கறிஞரின் பார்வை அவருடைய தனிப்பட்ட புரிதலாக இருந்தாலும் இந்தத் தீர்ப்பை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

  மேலும் மெக்காலே வேண்டாம் என்று சொன்ன இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497 ஐ அன்றைய சட்டக் கமிஷன் ஏன் வலியுறுத்தி சேர்த்துக் கொண்டது? இதற்கான விடையை எனது அடுத்த பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்.

 2. ‘தீர்ப்பு என்ன கூறுகிறது’ என்ற வரம்பிற்கு உட்பட்டு விரிவாக எழுதி உள்ளார். மிகவும் சிறப்பாக உள்ளது. தீர்ப்பு குறித்த புரிதலை தருகிறது. நன்றி.

  மற்றபடி, இந்தப் பிரச்சனையை வேறு ஒரு தளத்தில் (பொருளில்) வைத்து பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட “யார், யாருடனும் போனாலும் தவறில்லை என கோர்ட்டே சொல்லிருச்சு” என்பது பற்றி விவாதிக்க வேண்டும். “நம்ம காலாச்சாரம், நம்ம பண்பாடு” என்ற கூச்சல்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.

  “எது ஒழுக்கம்?” என்ற தலைப்பில் விவாதிக்க வேண்டும்.

  செய்வீர்களா வினவு?

 3. இத்தீர்ப்பை சரியாக புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி வாஞ்சிநாதன்
  வினவில் மருத்துவர் பருக் அப்துல்லா எழுதுவது போன்று உங்களிடம் வரும் பிரச்சணைகளில் வினவு வாசகர்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டியது என நீங்கள் கருதும் விசயங்களை எழுதலாமே.
  மருத்துவரின் எழுத்துக்ளின் மூலம் சில மருத்துவ விசயங்களை தெரிந்துகொள்வதை போல சட்டம் நீதிமன்றங்கள் அதில் உள்ள சரி தவறுகளை தெரிந்துகொள்வோம்.

 4. மெக்காலே வேண்டாம் என்று சொன்ன இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497 ஐ அன்றைய சட்டக் கமிஷன் ஏன் வேண்டும் என்றது?

  பல்வேறு காரணங்களை அவர்கள் அடுக்கினாலும் உண்மையான காரணம் சாதிக் (வர்ணக்) கலப்பு (மனு: 8-353) ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

  பார்ப்பன இந்து மதத் தர்மத்தை வகுத்த மனு சொல்கிறான் ….

  “4-134. For in this world there is nothing so detrimental to long life as criminal conversation with another man’s wife.

  இந்த உலகத்தில் மனிதனுக்கு பிறன் மனைவியைப் புணர்தல் போல ஆயுளைக் குறைக்கும்படியான காரியம் வேறில்லை”.

  “8-352. Men who commit adultery with the wives of others, the king shall cause to be marked by punishments which cause terror, and afterwards banish.

  பிறன் மனைவியின் போகத்தில் விருப்பமுள்ளவர்களை பயத்தை உண்டு பண்ணுகிற உதட்டை அறுத்தல், மூக்கை அறுத்தல் முதலிய அடையாளங்களைச் செய்து அரசன் ஊரை விட்டோட்டுக.”

  “8-353. For by (adultery) is caused a mixture of the castes (varna) among men; thence (follows) sin, which cuts up even the roots and causes the destruction of everything.

  பிறன் மனை போகத்தினால் உலகத்தில் வருணசங்கிரம்முண்டாகிறது. அதனால் தரும காரியம் நடக்காமல் உலகமெல்லாம் மழை இல்லாமல் அழிந்து போய் விடுகிறது.”

  இப்படி 8-372 வரை நீள்கிறது கூடா ஒழுக்கம் குறித்த மனுவின் பார்ப்பன இந்து மதத் தர்மம்.

  தனது தீர்ப்பில், 4-134 மற்றும் 8-352 ஐ மட்டும் சுட்டிக்காட்டுகிறார் நீதியரசர் நாரிமன். (பாரா 4)

  மனுவின் 8-352 ன் மறுபதிப்புதான் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497. ஒரே ஒரு வேறுபாடு தண்டனை மட்டும்தான். முன்னதில். கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்ட ஆணின் ”உதட்டை அறுத்தல், மூக்கை அறுத்தல் முதலிய அடையாளங்களைச் செய்து அரசன் ஊரை விட்டோட்டுக”, பின்னதில் “shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both.” அவ்வளவுதான்

 5. தெளிவான பார்வை, துல்லியமான வெளிப்பாடு. எளிமையாகப் புரியும்படி அமைந்த அருமையான கட்டுரை. நிறைய எழுதவும்.

  ராஜா என்கிற ஆணும் … என்று தொடங்கும் பத்தியில் ஆனால், ராஜா என்கிற ஆண் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்தால் அது குற்றமல்ல. என்று இருப்பது
  ஆனால், அவர் ராஜா என்கிற ஆண் தன் மனைவியுடன் கொண்ட உறவுக்கு ஒப்புதல் தெரிவித்திருந்தால் அது குற்றமல்ல. என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

  இந்தியாவைப் பொருத்தவரை இந்திய தண்டனைச் சட்டம் வரைவுச் சட்டமாக உருவான போது பிரிவு – 497 ஐ நீதிபதி மெக்காலே சேர்க்கவில்லை. ஆனால் இச்சட்டப் பிரிவு இந்தியாவுக்குத் தேவை என சட்ட ஆணையம் வலியுறுத்தியதால் பிரிவு 497 சேர்க்கப்பட்டது.

  ஏன்? குற்றம் சாட்டும் தகுதி யாருக்கு இருக்கிறது என்று தீர்மானித்ததும், அவர்களது சம்மதமிருப்பின் அது குற்றமில்லை என்றாவதும் ஏன் என்ற கோணத்தில் இருந்து…

  காம வெறியால் உந்தப்பட்ட கிழட்டுப் போக்கிரிகள் வைதீக சடங்கு சம்பிரதாயங்களைத் தனியனாய் செய்யக்கூடாது என்று கற்பித்துக்கொண்டும் இன்ன பிறவாகக் கூறிக்கொண்டும் சின்னஞ்சிறுமிகளையும் வயசுப் பெண்களையும் எந்த கட்டுப்பாடும் இன்றி விவாகம் செய்து கொண்டு, கையாலாகாத நிலையில் சொத்துக்கு வாரிசு பெற வேண்டி, கொள்ளி வைக்க வேண்டி புத்ர பாக்கியம் வழங்கவேண்டி தசரதாதிகளாய் நடந்துகொண்டு களைக்கோட்டு மாமுனிகள் வந்து பரிகார கைங்கரியங்கள் ஹோமங்கள், யாகங்கள் இத்தியாதி செய்விக்க காலதேச வர்த்தமானத்துக்குத் தக்கபடிக்கு சட்டத்தில் இடம் வேண்டுமல்லவா, அதான் 497.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க