அனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் ? | துரை சண்முகம் | காணொளி

விவசாயத்தையும் விவசாயிகளையும் செங்கால் நாரைகளையும் பைங்கால் தாவரங்களையும் விரட்டிவிட்டு வேதாந்தாவுக்கும் அதானிக்கும் விளைநிலங்களை இரையாக்கும் தனியார் மயம் தாராள கார்ப்பரேட் மயம்தான் நம் வாழ்வைக் கருக்கும் வன்மம்.

0

ஆற்றுப்படை

று
எங்களுக்கு
எவ்வளவு பெரிய
ஆதாரம்.

ஆறு
எங்களுக்கு
எவ்வளவு பெரிய
நம்பிக்கை.

அதை இழப்பது
அனைத்தையும்
இழப்பதாகும்.

காண்பவர்
வேண்டுமெனில்
சரி!
ஒரு ஆறு போயிற்று
என ஆறுதலடையலாம்.

அந்த
ஆற்றோடு கலந்தவர்க்கு
அது
ஒரு உணர்வை
ஒரு உறவை
இழந்த சோகம்.

நம்பிக்கை இழந்த
வாசல்
வெறிச்சோடி கிடக்கிறது

இனி
எந்த நம்பிக்கையில்
வாழ்வது?
என நினைக்கையில்
ஆறு
நெஞ்சில் அடைக்கிறது.

அனைத்துமாய்
இருந்தது
ஆறு

விவசாயம்
வெறும் சோறு மட்டுமா?
சுயமரியாதை, தன்னம்பிக்கை
சுற்றம் பேணல்,
நாட்டின்
சுய சார்பு,
கைத்தொழில்
சிறுதொழிலுக்கான
உயிர் தொடர்பு,
பண்பாடு, நாகரிகம்
பல்லுயிர் மாண்பு
அனைத்தும்
அடங்கியது.

ஒரு
நதியை இழக்கும்
சோகம்
பலவாய் இருக்கிறது.

வயல்
காய்கிறது

விவசாயியின்
நெஞ்சு வெடிக்கிறது

குடிக்க நீரின்றி
மேய புல்லின்றி
பராமரிக்க முடியாமல்

மாடு ஒழிகிறது.
பச்சைத் தவளை
முகம் கறுத்து
அழிகிறது.

ஓணாண்களின்
நாவுகள் உலர்ந்து
ஏக்கம் காய்ந்து
உதிர்கிறது.

வாசல் தெளிக்கும்
ஈரம் பார்க்காமல்
காலைத் தும்பி
அதிர்கிறது.

தாய்ப்பால் போறாமல்
உழவன் வீட்டு
மழலை
வீறிட்டு அழுகிறது.

கேட்க முடியாமல்
ஒற்றைக் குருவியும்
பயந்து
உயரே எழுகிறது.

பாதி
படர்ந்த கொடி
மொக்கு விடாமலேயே
ஓலைக் குடிசையின்
உயரே கருகுகிறது.

வெறிச்சோடி
துரத்தும் வெம்மையில்
மாடம் தேடி அலையும்
மணிப்புறாவின்
வண்ணம் உருகுகிறது.

புல்லும்
பூண்டும் கூட
வாழ முடியாதபடிக்கு
நமது
ஆற்றை
அழித்தது யார்?

கையும்
காலும் கூட
தேற முடியாதபடிக்கு
நமது
கைத்தொழிலை, சிறுதொழிலை
சிறு வணிகத்தை
சில்லரை வியாபாரத்தை
கல்லறையாக்கியது யார்?

கேள்விகள் பல…
விடை ஒன்றுதான்!
அது,
ஆள அருகதையற்ற
இந்த அரசு!

விவசாயத்தையும்
விவசாயிகளையும்
செங்கால் நாரைகளையும்
பைங்கால் தாவரங்களையும்
விரட்டிவிட்டு

வேதாந்தாவுக்கும்
அதானிக்கும்
விளைநிலங்களை
இரையாக்கும்
தனியார் மயம்
தாராள கார்ப்பரேட் மயம்தான்
நம் வாழ்வைக் கருக்கும்
வன்மம்.

அடங்கவில்லை!
ஆறு
நம் உதிரத்தில்
கலந்திருக்கிறது


அநீதிக்கு எதிராக
போராடு!
நம்
நதியின் வேகம்
பலவாய் பெருகும்!

படிக்க:
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க