திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக பாய்ந்து காவிரியில் கலக்கும் அமராவதி ஆற்றின் கிளை ஆறுகள் தான் பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகியவை. அந்த தேனாற்றின் கிளை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு எந்த சட்ட திட்டத்தையும் மதிக்காமல் தன்னிச்சையாக தடுப்பணை ஒன்றை கட்டி வருகிறது.
இந்த தடுப்பணை எதற்காக யாருக்காக கட்டப்படுகிறது என்கிற உண்மையை மறைக்கும் பொருட்டு மக்களின் குடிநீர் தேவைக்காக கட்டப்படுவதாக மோசடி நோக்கத்துடன் அங்கு அருகாமையில் இருக்கும் சில கிராமங்களுக்கு மூன்று மேல்நிலை குடிநீர் தொட்டிகளையும் கட்டி வருகிறது கேரளத்தின் சி.பி.எம் அரசாங்கம்.
இரண்டு மீட்டர் உயரமும் 40 மீட்டர் நீளமும் கொண்ட அந்த சிலந்தி ஆற்றின் தடுப்பணை தேனாறுக்கு வரவேண்டிய நீர் வரத்தை கணிசமாக தடுத்து நிறுத்தி விடும் என்பதையும் தேனாற்றின் நீர் வரத்து குறைந்தால் அது அமராவதி ஆற்றின் நீர்ப்பாசனப் பகுதிகளையும் திருப்பூர் மாவட்டத்தின் பல குடிநீர் திட்டங்களையும் பெரிய அளவில் பாதிக்கும் என்பதையும் கேரள மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்கள் நன்கு அறியும்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இருக்கும் விவசாயிகளுக்கான அமைப்புகள் பலவும் அதற்கு எதிராக குரலெழுப்பி போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசோ பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது.
படிக்க: மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்
கேரள அரசு இப்படி அத்துமீறி தமிழ்நாட்டின் ஆற்று நீர் வரத்தினை தடுப்பது புதியதல்ல. ஏற்கெனவே சிறுவாணி ஆற்றில் இப்படிப்பட்ட ஒரு தடுப்பணை மூலமாக சிறுவாணி ஆற்றின் நீரை பாதியாக குறைத்து விட்டது. மேலும் இதே போன்ற இன்னொரு கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணையைக் கட்டி தண்ணீரை தன் பக்கமாய் திசை மாற்றிக் கொண்டது. அதைவிடவும் முக்கியமானதான முல்லைப் பெரியாறு அணையை எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடும் என்றும் அதற்கு பதிலாக அணையின் கீழ் பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவது என்றும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
எத்தனை வல்லுனர் குழுக்கள் சென்று சோதித்து அணை மிகவும் உறுதியானதும் பாதுகாப்பானதுமாகும் என்று சான்றளித்த போதும் அதை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளி வந்த பின்னரும் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கிறது கேரள அரசு.
கேரள மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து என்ற ஒரே பொய்யை திரும்பத் திரும்ப அழுத்தமாக சொல்லி வருகிறது.
கேரளாவில் சி.பி.எம் அரசாங்கமோ, காங்கிரஸ் அரசாங்கமோ எது வந்தாலும் தமிழ்நாட்டின் நீர் தேவையை மறுக்கின்ற இந்த போக்கில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை
ஓர் ஆற்றின் குறுக்கே கடைமடைப் பகுதியில் இருக்கும் பயனாளியின் அனுமதி பெறாமல் எந்த கட்டுமானங்களையும் ஏற்படுத்தக் கூடாது என்கிற சாதாரண பொது அறிவு கூட இல்லையென புரிந்து கொள்வதா?
அரசாங்கம் ஒரு சார்பாக நடந்து கொள்ளும் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் எதற்காக இவ்வளவு அடாவடித்தனமாகவும் மோசடித்தனமாகவும் நடந்து கொள்ளவேண்டும்? மக்களின் குடிநீர் தேவை என்பதை இரு மாநில அரசாங்கங்கள் சட்டபூர்வமாக அமர்ந்து பேச்சு வார்த்தையின் மூலமாக பேசித் தீர்த்துக் கொள்ளவே முடியாதா?
இல்லை. இதுவெல்லாம் உண்மை இல்லை. அவர்கள் தெரிந்தே தான் செய்கிறார்கள். சர்வதேசச் சட்டத்தை, இந்திய ஒன்றிய அரசின் சட்டத்தை, நீர் மேலாண்மை வாரியங்களின் வழிகாட்டுதல்களை, நீதிமன்றத் தீர்ப்புகளை எல்லாம் மீறித்தான் செய்கிறோம் என்று தெரிந்தே தான் செய்கிறார்கள்
காரணம் தான் என்ன?
கேரளத்தின் இந்தத் திட்டங்கள் எவையும் அந்த மாநில விவசாயிகளுக்கான பாசன திட்டமோ அல்லது இன்ன பிற மக்களுக்கான குடிநீர் திட்டமோ அல்ல.
மாறாக அனைத்துமே கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கங்களுக்கான திட்டங்கள். அவற்றுக்கு ஆவன செய்ய வேண்டியது அரசாங்கங்களின் கடமை என்று பார்க்கப்படுகிறது. அதனால் தான் எந்த சட்டம் குறுக்கிட்டாலும் அதை ஒதுக்கித் தள்ளி “மக்கள் உயிருக்கு ஆபத்து” என்பது போன்ற பொய்க் காரணத்தையும் அநியாயமாக சொல்லத் துணிகிறார்கள்.
சிலந்தி ஆற்றின் நீரை தடுப்பதும் கூட அதற்கு அருகில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் வர்த்தக நிறுவனம் ஒன்றின் தேவைக்காகத்தான் என்பதை பட்டும் படாமல் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை அவர்களுக்கு தேவைப்படுவது தண்ணீர் அல்ல. முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியின் நிலம். முல்லைப் பெரியாறு அணையை அகற்றினால் தான் அந்த நிலத்தை அவர்கள் கையகப்படுத்த முடியும்.
படிக்க: முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !
கேரளாவின் தேக்கடியில் மிகப்பெரும் சுற்றுலா தளத்தையும் பலவகை கேளிக்கை பூங்காக்களை, ஐந்து நட்சத்திர விடுதிகளை அமைத்து பணம் பார்க்க பல்வேறு கார்ப்பரேட்டுகள் அவரவர் திட்டங்களுடன் நெடுங்காலமாகவே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணையினால் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் பயன்பெறுபவர்கள் தமிழ்நாட்டின் ஐந்தாறு மாவட்ட விவசாயிகள்தான். இதனால் ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எவ்வித ஆதாயமும் இல்லை. விவசாயிகள் நலன் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.
ஆகவேதான் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து தகர்க்க கேரளாவின் சி.பி.எம் அரசாங்கத்தை நெட்டித் தள்ளுகிறார்கள். சி.பி.எம் கட்சியும் கூச்சநாச்சமோ மக்களுக்கு துரோகம் செய்கிறோம் என்று குற்ற உணர்வோ சிறிதும் இல்லாமல் முதலாளிகளின் பாதம் தாங்கிகளாக அவர்கள் விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்காக, எச்சில் காசுக்காக காவல் நாய்களாக விசுவாசமாக செயல்படுகிறார்கள்.
கார்ப்பரேட் முதலாளிகள்தான் எப்போதும் எல்லா தேசிய – திராவிட – மாநில அரசியல் கட்சிகளுக்கும் எஜமானர்கள். அந்த எஜமானர்களின் தயவின்றி ஒரு நாட்டில் எந்த மைய நீரோட்ட அரசியல் கட்சியும் இயங்க முடியாது என்பது அரசியலில் ஆரம்பப் பாடமாகும். அதனால்தான் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முல்லைப் பெரியாறு அணையினால் கேரள மக்களின் உயிருக்கு உடைமைக்கு ஆபத்து என்று மோசடியான முறையில் ஒப்பாரி வைக்கிறார்கள்.
இது இங்கு மட்டும் இல்லை. இந்தியா முழுவதிலும் நீங்கள் இந்த நிலைமைகளைப் பார்க்க முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்கள் தான், நீர் நில வளங்களைக் கொள்ளையடிக்கும் அவர்களின் திட்டங்கள் தான், தமிழ்நாட்டின் பல முனைகளிலும் நீர் ஆதாரம் முடக்கப்படக் காரணம். ஆந்திரத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை; கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணைக்கட்டு எல்லாமும் இதே போன்ற கார்ப்பரேட் நலன்களுக்காகத் தான் செயல்படுத்தப்படுகின்றன.
நதிநீர் மேலாண்மையில் மட்டுமல்ல, அதானிக்கு வழங்கப்படும் துறைமுகங்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்படுகின்ற பரந்தூர் விமான நிலைய திட்டமானாலும், தஞ்சை டெல்டாவை தோண்டுகின்ற ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களானாலும், சேலம் சென்னை எட்டு வழி சாலையானாலும் நியூட்ரினோ திட்டமென்றாலும் இவை அனைத்துக்கும் அரசாங்கங்கள் முனைந்து செயல்படுவதற்கு காரணம் அவை கார்ப்பரேட்டுகளின் திட்டங்கள் என்பதால் மட்டும்தான்.
மக்களின் கோரிக்கைகள் ஒருபோதும் இந்த வகை முன்னுரிமையை பெற்றதில்லை. இதிலும் எந்த கட்சியும் விதிவிலக்கில்லை.
நாட்டின் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், மக்களுக்கு வேலை வாய்ப்பு என்கிற பெயரில் தான் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களின் திட்டங்களை முன் நகர்த்துகிறார்கள்.
1990-களில் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகள் நிலைநாட்டப்பட்டன. அதன் பிறகு அவை அனைத்தும் சேர்ந்து கார்ப்பரேட்மயம் என்றாகி, கார்ப்பரேட் கும்பலுக்குள் நடக்கும் போட்டா போட்டியின் விளைவாக, கடலானாலும் மலையானாலும் காடானாலும் நிலமானாலும் நீரானாலும் எந்த இயற்கை வளங்களையும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டுகொண்டு சூறையாடுகிறார்கள்.
அரசாங்கங்களை பணத்தால் அடித்து மக்களுக்கு விரோதமாக, நாட்டின் சட்ட திட்டங்களை மாற்ற நிர்பந்திக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் எந்த கொள்கை வேறுபாடும் இல்லாமல் இந்த விஷயத்தில் வாலைக் குழைத்துக் கொண்டு கார்ப்பரேட் எஜமானர்கள் காட்டும் பாதையில் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள்.
இந்த உண்மையை, எந்த கட்சியானாலும் அவை எதிர்க்கட்சியாகவோ ஆளுங்கட்சியாகவோ எப்படி இருந்தாலும் ஒருபோதும் மக்களிடத்தில் வெளிப்படுத்துவதில்லை.
மக்களுக்கான குடிநீர் தேவை, விவசாயத்துக்கான நீர்ப்பாசனத் திட்டங்கள் என்று மாநில அரசாங்கங்கள் முனைந்து செயல்படுவதாக மக்களிடம் காட்டிக் கொள்ளுகிறார்கள். உண்மையை மொத்தமாக மறைக்கிறார்கள்.
சான்றாக, சிலந்தியாறு தடுப்பணை பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு சி.பி.எம் மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையும் கூட, கேரள மக்களின் குடிநீர்த் தேவைக்காகத்தான் தடுப்பணை கட்டப்படுவதாகவும், தமிழ்நாடு அரசுடன் பேசி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி வாங்காமல் கட்டுவது தான் பிழையெனவும் கூறுகிறது. சட்டவிரோதமாக நடந்து கொள்ளும் கேரள அரசாங்கம் மீது ஒரு வார்த்தை கூட கண்டனம் இல்லை. இதேபோல ஒரு மொன்னையான அறிக்கையை முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கும் வெளியிட்டுள்ளனர். காலங்காலமாக இது போன்ற சந்தர்ப்பவாத அறிக்கையோடு நின்று கொள்வதை மட்டுமே தமிழ்நாடு சி.பி.எம் செய்து கொண்டிருக்கிறது.
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் இந்த திட்டம் ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்திலிருந்து 16 கோடி ரூபாய் பெற்று அதைக் கொண்டுதான் கேரளத்தின் குடி நீர் வாரியம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று தன் இணையத்தில் தினமலர் கூறியிருக்கிறது.
இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இடையில் இருக்கும் இறுக்கமான உறவு இதன்மூலம் நமக்கு புரிய வருகிறது.
பெங்களூருவின் தொழில் மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கல் திட்டத்திற்காகத்தான் மேகே தாட்டு அணையின் மூலம் காவிரியின் தண்ணீரை தடுத்து பெங்களூருக்குத் திருப்புகிறார்கள்.
படிக்க: காவிரி நீருக்கான போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்!
இந்த உண்மைகளுக்குள் செல்லாமல், எப்பொழுதும் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் அந்த மாநிலத்து அரசாங்கங்கள் அந்த மாநிலத்து மக்களுக்காக நீரை மறிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி போராடுகிறார்கள்.
தண்ணீர் மறுப்புக்குப் பின்னால் இருக்கின்ற கார்ப்பரேட் நோக்கங்களைப் பின்னுக்குத் தள்ளி மறைக்கிறார்கள். தண்ணீர் தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கா அல்லது கர்நாடக விவசாயிகளின் நலனுக்கா? கேரள மக்களின் நலனுக்கா? என்று இரு வேறு தேசிய இன மக்களுக்கிடையிலான மோதலாகவே எப்போதும் கையாளுகிறார்கள்.
இதில் எப்போதும் எந்த தீர்வையும் எட்டவில்லை என்றாலும் இந்த அணுகு முறையிலிருந்து அவர்கள் மாறுவதே இல்லை.
அந்தந்த மாநிலத்தின் எந்தக் கட்சி அரசாங்கமானாலும், அதேபோன்று ஒன்றிய அரசில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இந்த நதிநீர்ப் பிரச்சினைகளில் என்றுமே தீர்வைக் கண்டடைந்ததில்லை. இறுதியில் பாதிக்கப்படுவது என்னவோ தமிழ்நாட்டு விவசாயிகளும் மக்களும்தான். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பகையாக காட்டப்படுவதோ அண்டை மாநிலங்களின் விவசாயிகளும் உழைக்கும் மக்களும்.
நமக்கு உரிமையாகச் சேர வேண்டிய நீரை அவர்கள் தான் அனுபவிக்கிறார்கள் என்ற முறையில் தேசிய இனவெறி விசிறி விடப்படுகிறது.
இந்த உள்ளார்ந்த அரசியலை அம்பலப்படுத்தினால் தான், மேலே சொல்லப்பட்ட பிரச்சனைகள் எல்லாமும் அந்தந்த தனித்தனியான மாவட்டத்து விவசாயிகளின் பிரச்சனை அல்ல என்பதும், மொத்த நாட்டையும் வளங்களையும் காக்கும் மக்களின் பிரச்சனை என்பதையும் அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
கார்ப்பரேட் முதலாளிகளின் இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராக, திட்டங்களுக்கு எதிராக மக்கள் அணி திரண்டு போராடுவதன் மூலம் தான் விவசாயிகளும் மக்களும் வெற்றியையும் நல்வாழ்வையும் பெற முடியும்.
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube