பரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐம்பது வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் வழிபட சென்றதலால் தங்களுடைய மனுதரும சாஸ்திரம் கெட்டுவிட்டதாக வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளன இந்துத்துவ அமைப்புகள்.

மூன்று மாத கால, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் புதன்கிழமை பிந்து, கனகதுர்கா ஆகிய இருபெண்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர். உண்மையான பக்தர்கள் எவரும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அரசியல் பிழைப்பு நடத்தப் பார்க்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் எதிர்ப்பு என்கிற பெயரில் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சபரிமலையில் ஆலயப் பிரவேசம் நிகழ்த்திய பிந்து, கனகதுர்கா

சாலை மறியல், கல்லெறிதல், போலீசாருடன் மோதுதல் என கேரளத்தின் பல இடங்களில் காவிக் கும்பல் வன்முறையில் இறங்கியதோடு, இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். வியாபாரிகள் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்க மாட்டோம் என தெரிவித்துவிட்ட நிலையில், வன்முறை நடத்தியே வயிறு வளர்க்கும் கும்பல் ஆங்காங்கே வெறியாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

பந்தளத்தில் நடந்த வன்முறையின் போது, கல்வீச்சில் தாக்கப்பட்ட சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த உன்னிதான் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பந்தளம் சிபிஎம் அலுவலகத்தை நோக்கி இந்த அமைப்பினர் சென்று கொண்டிருந்தபோது, அலுவலகத்தின் மீதிருந்து கற்கள் வீசப்பட்டதாகவும் அப்போது ஒரு கல் உன்னிதான் மீது விழுந்ததாகவும் சொல்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காங்கிரசும் பாஜகவும் இடது முன்னணி அரசின் செயலை ஒரே குரலில் எதிர்க்கின்றன. கேரள காங்கிரஸ் இன்று ‘கருப்பு தின’த்தை கடைப்பிடிக்கிறது. உண்மையில் காங்கிரசின் வரலாற்றின் இந்த ஆக பிற்போக்குத்தனமான எதிர்ப்பு கருப்பு பக்கமாகவே இருக்கும் என்பதை காங்கிரஸ் ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் உணரவே இல்லை.

படிக்க:
♦ சபரிமலை பெண்களை நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
♦ அறிவுத்துறையினரை ஏன் குறிவைக்கிறது ஆர்.எஸ்.எஸ் ? | சென்னை கருத்தரங்கம் | நேரலை | Live Streaming

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “கேரள அரசுதான் ஐயப்பன் நம்பிக்கையில் பெண்களை தலையிட அனுமதித்திருக்கிறது. கடவுள் நம்பிக்கையற்றவர்கள், நம்பிக்கையை குலைக்க உதவியிருக்கிறார்கள். சுத்திகரிப்பு பூஜை செய்த தந்திரி சரியான செயலையே செய்திருக்கிறார்” என்கிறார்.

வழக்கம்போல, மத பிரச்சினைகளுக்காக காத்திருக்கும் பாஜக, கோயில் பாரம்பரியத்தை மீறி விட்டதாக ஆட்டம் போடுகிறது.  கேரள பாஜக தலைவர் ஸ்ரீதர், இந்துக்களின் நம்பிக்கை மீது அடி விழுந்திருக்கிறது என்கிறார். அதாவது, பெண்களை தள்ளி வைப்பது, வழிபடும் உரிமையை மறுப்பது இந்துகளின் நம்பிக்கையாம்!

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவதை பாஜக ஒருபோதும் ஏற்காது என்கிறார் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் தமிழிசை. வரலாறு முழுவதும் மனு தர்மத்தின் அடிமைகள் இப்படித்தான் உளறித் திரிகிறார்கள்.  தமிழக பரிவாரங்கள் சென்னையில் உள்ள கேரள சுற்றுலாத் துறை கட்டிடத்தின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டன. பாஜக அடிமை எடப்பாடி அரசு குறைந்தபட்ச நடவடிக்கையைக்கூட எடுக்கவில்லை.

சபரிமலையில் இரண்டு பெண்கள் நுழைந்ததைக் கண்டித்து சங்கிகளின் ஆர்ப்பாட்டம்

அடிப்படையில் உச்சநீதிமன்றம் என்ன காரணங்களைச் சொல்லி தீர்ப்பு வழங்கியதோ, அதே காரணத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளனர் சபரிமலை பூசாரிகள். “எந்த விதத்திலாவது பரிசுத்தம் மற்றும் அசுத்தம் எனக்கூறி ஒதுக்குவது  பிரிவு 17-ன் கீழ் தீண்டாமையின் கீழ் வரும்” என தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் தரிசனம் செய்ததை வெளிப்படையாக அசுத்தம் எனக்கூறி, சுத்திகரிப்பு பூஜை செய்ய ஆணையிட்டார் தலைமை தந்திரி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமலில் உள்ள நிலையில் இப்போது தன் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டம் பாயும் என்கிற பயத்தில், “தீண்டாமையாக இதைப் பார்க்ககூடாது” என பம்முகிறார் தந்திரி.

கேரள தேவசம் போர்டின் ஆளுகைக்கு உட்பட்ட ஐயப்பன் கோயிலை மூட தந்திரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. அவர் ஒரு பணியாள் மட்டுமே என்கிறார் அந்தத்  துறைக்கான அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன். ஐயப்பன் கோயில் அரசுக்குத்தான் சொந்தமே தவிர, தந்திரிக்கோ அல்லது பந்தளம் அரச குடும்பத்துக்கோ சொந்தமானதல்ல எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

“பெண்களுக்கு பாரபட்சமான, பெண்களின் மாதவிடாயை தொடர்புபடுத்தி பேசும் அசுத்தம், அழுக்கு என்கிற நம்பிக்கைகள், ஒதுக்குதலின் குறியீடுகள். மாதவிடாயை காரணம் காட்டி பெண்களை ஒதுக்குவது, தீண்டாமையின் ஒரு வடிவம். அது அரசியலமைப்புக்கு எதிரானது” என தனது தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார்.

படிக்க :
♦ சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !
♦ சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்

“இன்னமும் மாதவிடாயை காரணம் காட்டி, ஒதுக்கி வைப்பது அரசியலமைப்பு உறுதி செய்கிற பெண்களின் மரியாதையை குலைப்பதாகும்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பதுபோல, நாட்டை ஆளும் பெரிய காவி தலைவர் மோடி, சமீபத்தில் வழங்கிய நேர்காணலில் மாதவிடாய் ஆகும் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பது இந்து பாரம்பரியம் என பேசியிருந்தார். அரசியலமைப்புக்கோ, உச்சநீதிமன்றத்துக்கோ அப்பாற்பட்டவர்களாகவே காவி கும்பல் தங்களை நினைத்துக் கொள்கிறது. அரசியலமைப்பை காலில் போட்டு மிதிப்பதையே பெருமையாக நினைக்கிறது இந்த கும்பல், என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா?


கலைமதி
செய்தி ஆதாரம்: Two women under 50 enter Sabarimala temple
purification rites violate sc verdict