பரிமலை விவகாரத்தின் மூலம் கேரளத்தின் சமூக – ஆன்மிக நிலப்பரப்பை ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. சீர்குலைப்பதாக சமூக செயல்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்த பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இப்போது யு டர்ன் எடுத்துள்ளது என விமர்சிக்கும் சுவாமி அக்னிவேஷ், தேர்தல் ஆதாயங்களுக்காக சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்து போராட்டங்களைத் தூண்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

சுவாமி அக்னிவேஷ்.

இந்த விவகாரத்தை சாதகமாக பயன்படுத்திவரும் சங் பரிவாரங்கள், சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு சவால் விட்டுக் கொண்டிருப்பதாகவும் அக்னிவேஷ் தெரிவிக்கிறார்.

“வெள்ளம் என்கிற இயற்கை பேரிடர் கேரள மக்களை ஒன்றிணைத்தது, அவர்களுக்கு ஆற்றலை வழங்கியது. இப்போது, தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. ஏற்படுத்தியிருக்கும் செயற்கை பேரிடர் கேரள மக்களின் ஆன்மாவுக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. அதன் சமூக கட்டுமானத்தை உடைப்பதாகவும் உள்ளது. இது கொடும் பாவச் செயலுக்கு இணையானது” என சபரிமலை விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் அக்னிவேஷ்.

கேரள மக்கள் சங் பரிவாரத்தின் வஞ்சகமான பிரச்சாரத்தை சிந்தித்து, புறக்கணிக்க வேண்டும் எனவும் அக்னிவேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

“வேறெந்த வழியிலும் தேர்தல் ஆதாயம் பெற முடியாத ஆர்.எஸ். எஸ் .- பா.ஜ.க., சபரிமலை விவகாரத்தில் யு டர்ன் எடுத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்யப் பார்க்கிறது. மத, சாதிய அரசியலுக்கு கேரள மண் இடம் தராது என்பதை சங் பரிவார் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் சபரிமலை விவகாரத்தை ட்ராஜன் குதிரையாக பயன்படுத்தி தங்களுடைய அஜெண்டாவை கடத்திச் செல்லப் பார்க்கிறது” என்கிற அக்னிவேஷ், டிசம்பர் முதல் வாரத்தில் சபரிமலை செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

படிக்க:
கஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் வேதாரண்யம் போலீசு !

சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட பலர் சொல்லிவருவதைப் போல, சபரிமலை விவகாரத்தை தங்களை வளர்த்துக்கொள்ளும் மிகப் பெரும் வாய்ப்பாகவே காவிக் கும்பல் கருதுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, சபரிமலையில் பெண்களை நுழையவிடாமல் போராடி கைதான காவி ‘சத்தியாகிரகி’களை நலம் விசாரிக்க  நான்கு நபர் கமிட்டியை அமைத்திருக்கிறார்.  கேரள மக்கள் காவிக் கும்பலை ஒன்றிணைந்து எதிர் கொள்வார்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க