காசுமீர், சோபியன் நகரத்தை சேர்ந்த 20 மாதமேயான குழந்தையான ஹிபா நிசார் இந்திய இராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் கடந்த 2018, நவம்பர் 28-ம் தேதி தாக்கப்பட்டாள். கண்ணீர் புகைக் குண்டுகளின் புகை மூட்டத்திலிருந்து அவளது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தப்பிச் செல்லும் போதுதான் இக்கொடூரம் நிகழ்ந்தது. சிகிச்சை நடந்து கொண்டிருந்தாலும் வலது கண்ணின் பார்வையை அவள் இழக்கக்கூடும்.

இந்திய இராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட ஹிபா நிசார்.

கடந்த 2016 கோடையில் இந்திய இராணுவத்தால் போராட்டக்காரர்களின் தளபதி புர்கான் வானி கொல்லப்பட்ட பிறகு, அதற்கு எதிர்வினையாக காசுமீர் முழுதும் பற்றிய போராட்டங்களில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட காசுமீர் மக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் முழுவதுமாகவோ அல்லது பாதி அளவிலோ கண்பார்வையை இழந்தனர். இப்படி காயமடைந்தவர்கள், உடலுறுப்புகளை இழந்தவர்கள் மற்றும் கண்பார்வையை இழந்தவர்களது புகைப்படங்களை ஊடகங்களில் அவர்கள் பகிர்ந்தனர். இதில் பெரும்பான்மையானவை ‘மரணம் ஏற்படுத்தா’ ஆயுதங்கள் என்று பெயரிடப்பட்ட பெல்லட் குண்டுகளால் ஏற்பட்டவை. ஆனால் துப்பாக்கியிலிருந்து தெறிக்கும் இக்குண்டுகள் கடுமையாக உறுப்பு சேதாரத்தையும் உடல் விகாரத்தையும் ஏன் மரணத்தையும் கூட ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

முரணாக, மக்கள் போராட்டங்களை மென்மையாக தடுக்கவே இந்திய இராணுவத்தால் மரணம் ஏற்படுத்தா ஆயுதம் பயன்படுத்தப்படுவதாக கட்டுக்கதை சொல்லப்படுகிறது. ஆயினும் இந்த பெல்லட் குண்டுகள் மக்களின் துயரை குறைக்கவில்லை மாறாக துன்பங்களை மென்மேலும் மோசமாக்கிவிட்டது.

புர்காணி கொல்லப்பட்ட சில நாட்களிலேயே பெல்லட் குண்டுகளால் தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சிகிச்சையளித்த ஸ்ரீ மஹாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் முதலுதவி மருந்துக்களும் கருவிகளும் தீர்ந்து போனது. “மரணம் ஏற்படுத்தா ஆயுதங்கள் இப்போது சுமையை சாவிலிருந்து நோயுற்ற நிலைமைக்கு  மாற்றிவிட்டது” என்று அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

kashmirs-pellet-victims
கடந்த 2016-ம் ஆண்டு பெல்லட் குண்டு தாக்குதலால் இரு கண்களிலும் பார்வையிழந்த இன்ஷா மாலிக்.

இப்படி ஆயிரக்கணக்கான காசுமீர் மக்களின் உடலை சிதைத்து நூற்றுக்கணக்கானவர்களின் பார்வையை பறித்த இந்த ஆயுதங்களை “மரணம்-விளைவிக்காதவை” என்று எப்படி நம்மால் ஏற்க முடியும்? இந்த சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களைப் பார்த்த பின் எதிர் வினையாற்ற இந்திய மக்கள் யாருக்கேனும் பொறுப்புணர்வு இருக்கிறதா?

நம்முடைய நெறிமுறை, கலாச்சாரம், அரசியல் மற்றும் வரலாற்று வழியாகவே பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படங்களை பார்த்து நாம் வினையாற்றுவதாக சமூக விஞ்ஞானிகள் வாதிடுகிறார்கள். இது பகிர்ந்துகொள்ளப்பட்ட வரலாறு, கலாச்சாரம் அல்லது மத அடையாளம் மற்றும் யாரை நாம் மனிதராக கருதுகிறோம் என்பதை பொறுத்தது. வரலாற்றுவழியாக இது இனம், பால், பாலியல் நோக்குநிலை மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றை பொறுத்து இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஒவ்வொரு சமூகமும் படிநிலை துன்பங்களை அதாவது சிலரது துன்பம் ஏனையோரை விட அவசரமானது மற்றும் சகிக்க முடியாதது என்பதை நிறுவுகிறது. இனவெறியும், தீவிர தேசியவாதமும் வன்முறையும் தறிகெட்டு நடக்கும் இக்காலத்தில் சமூக விஞ்ஞானிகளும் மனித நேயம் கொண்டவர்களுமான நாம் இவற்றை கண்டிப்பாக கேள்விக்குட்படுத்தவும் உடைக்கவும் வேண்டும்.

பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட காசுமீர் மக்களின் துயரங்களை புகைப்படங்களாக இந்தியாவின் முதன்மையான ஊடகங்களுக்கு பகிரப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் 2016 -லிருந்து நான் கவனித்து வருகிறேன். காஷ்மீர் மற்றும் இந்திய மைய நீரோட்டத்தில் இந்த புகைப்படங்கள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதில் ஒரு பாரிய இடைவெளி இருப்பதை பார்த்திருக்கிறேன்.

முதன்மையான இந்திய ஆங்கில ஊடகங்களில் சிலர் பாதிக்கப்பட்ட காசுமீர் மக்களுக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர். ஆனால் பெரும்பான்மையானோரது கேள்விகளாலும் குற்றச்சாட்டுகளாலும் பின்னூட்ட பெட்டிகள் நிறைக்கப்பட்டுவிட்டது. “தங்களது குழந்தைகளை கல்லெறிய காசுமீர் பெற்றோர் ஏன் விடுகிறார்கள்? அல்லது அது அவர்களுக்கு தேவைதான்” என்கிறார்கள்.

“மேலும் ஆக்கிரமிப்பு காசுமீரில் பாகிஸ்தான் இராணுவம் செய்து வருவதையும் காசுமீர் பள்ளத்தாக்கில் மரணம் ஏற்படுத்தா ஆயுதங்களால் ஏற்படும் துன்பங்களையம் சிலர் ஒப்பிடுகிறார்கள்.” இக்கேள்விகள் தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்றன. மேலும் இக்கொடூரமான வன்முறைக்கு சில உடல்கள் தகுதியானவைதான் என்று கூறுகின்றன.

அவர்களது துயரங்களை சந்தேகப்படுவது :

இந்த ‘வேற்று’ காசுமீர் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற விவாதமுறையும் அவப்பெயரும் எப்படி இந்துக்களின் ஆழ்மனதில் புரையோடியிருக்கின்றன என்பதை காசுமீர் மக்களுடைய துன்பங்களின் மீதான கருணையில்லாத அவர்களது மனநிலை காட்டுகிறது.

காசுமீர் மக்களின் துயரங்களும் வலியும் சந்தேகிக்கப்படுகின்றன ஏனெனில் அவர்களது அடிப்படை மனிதத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மற்றவர்கள் துயரப்படுவதை கண்டுணராத போக்கு தான் உலகம் முழுமைக்கும் இனவாத மற்றும் தேசியவாத அரசுகளின் அடையாளமாகிவிட்டன.

சமீபத்தில் அமெரிக்க எல்லையில் கண்ணீர்புகை குண்டுகளால் தாக்கப்பட்ட அகதிகளிலிருந்து “ஆபத்தானவர்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு பட்டப்பகலிலேயே இசுரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட காசா போராட்டக்காரர்கள்வரை இதே கதைதான்.

Kashmir pellet victims Insha Malik X-ray
பெல்லட் தாக்குதலுக்கு ஆளான இன்ஷா மாலிக்கின் எக்ஸ்-ரே பதிவு. காஷ்மீர் மக்கள் தங்கள் துயரத்தை பதிவு செய்துவைத்துள்ளனர். ஆனால் இந்திய மனசாட்சியை இவை தொடுவதில்லை.

இந்திய பொதுமக்களின் இரக்கமற்ற மனநிலைக்கு முரணாக துயரங்களின் புகைப்படங்கள் மூலம் காசுமீர் மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். நான் 2016 -ஆம் ஆண்டில் சந்தித்த பல காசுமீர் மக்கள் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை தங்களது செல்போன்களில் சேமித்து வைத்திருந்தார்கள். ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, துயரங்களை நினைவில் வைத்திருப்பது எங்களின் கடமை என்றார்கள்.

இந்த புகைப்படங்கள் அவற்றை பார்ப்பவர்களின் இதயங்களையும் எண்ணங்களையும் மாற்ற ஏதாவது செய்யக்கூடும் என்று காசுமீரை சேர்ந்த ஒரு மருத்துவர் நம்பினார். “ஒருவேளை பெல்லட் குண்டுகளால் என்ன செய்ய முடியும் என்பதை யாரேனும் உண்மையில் அறிந்தால், காசுமீரில் நடந்து கொண்டிருப்பதை அவர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

காசுமீர் மக்களது காயங்கள் இந்திய மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். மேலும் தங்களுக்கு பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உண்மையானது தான் என்பதை நிறுவ புகைப்படங்களை மட்டுமல்ல எக்ஸ்-ரே மற்றும் சி.டி ஸ்கேன் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் மூலம் அவர்கள் சொல்ல வருவது யாதெனில், “எங்களது துயரம் உண்மையானது. இதை எப்படி நாங்கள் போலியாக காட்ட முடியும்?” என்பது தான். ஆனால் கெடுவாய்ப்பாக இந்த புகைப்படங்கள் கூட இந்திய மக்களின் பொதுபுத்தியை பெரிதாக மாற்ற முடியவில்லை.

மாறாக, பெல்லட் குண்டுகள் மீதான விவாத்தை தான் இப்புகைப்படங்கள் தூண்டி விட்டிருக்கின்றன. இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் பெல்லட் குண்டுகளை கடுமையாக பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஆனால் அதை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்பதை பற்றியும் போராட்டங்களைப் பற்றியும் சிறிதளவே விவாதம் நடந்து வருகிறது.

Kashmir pellet attack by india
ஆயிரக்கணக்கான காசுமீர் மக்களின் உடலை சிதைத்து நூற்றுக்கணக்கானவர்களின் பார்வையை பறித்த இந்த ஆயுதங்களை “மரணம்-விளைவிக்காதது” என்று எப்படி நம்மால் ஏற்க முடியும்?

மாறாக மிளகு பொடி குண்டுகளை பயன்படுத்த இராணுவ நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆலோசனை கூறியிருக்கின்றனர். இப்படி காசுமீர் மக்களின் உடல்கள் மீது பரிசோதனை செய்ய புதிய புதிய “மரணம் விளைவிக்காத” ஆயுதங்களை பயன்படுத்த இராணுவ கற்பனைகள் பூத்து குலுங்குகின்றன. ஆனால் இங்கே பார்வையை நிரந்தரமாக குருடாக்குவது குறித்தும் பொது மக்களின் உடலுறுப்புகளை சிதைப்பது குறித்தும் எந்த கேள்வியும் எழுப்பப்படுவதிலை.

இத்துயரங்களின் புகைப்படங்கள் நம்மிடம் என்ன சொல்லுகின்றன? ஒருவேளை, காசுமீர் மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை நமக்கு பாதுகாப்பைத் தருகிறதா என்று நம்மை கேட்கச்சொல்லலாம். “ஹிபா நிசார் போன்ற குழந்தைகளின் கண்களை குருடாக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?” என்ற தர்க்கப்பூர்வக் கேள்வியைக் கேட்கச் சொல்லி நம்மை வலியுறுத்தலாம். சில துயரங்களின் புகைப்படங்கள் நம்மை ஆட்கொள்வதும் மற்றவை ஏன் அவ்வாறு நம்மை ஆட்கொள்வதில்லை என்ற கேள்வியை நாம் நமக்கே கேட்டுக் கொள்ள வேண்டும். நம்மை பற்றி அவை என்ன கூறுகின்றன மற்றும் நாம் அவற்றை எப்படி பார்க்கிறோம் என்ற கேள்வியையும் அப்புகைப்படங்கள் நம்மிடம் கேட்கலாம் .

காசுமீர் மக்களை கொல்வதற்கு மற்றும் முடமாக்குவதற்கு எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்ற விவாதமோ அல்லது சிதைந்துபோன உயிர்கள் பற்றிய இரக்க உணர்வோ கூட இந்தியாவிற்கு இப்பொழுது தேவையில்லை. இராணுவமயமாதல் குறித்தும், மனிதன் என்று நாம் யாரை கணக்கிடுகிறோம் என்பது குறித்துமான ஆழமான கேள்வியுமே நமது தற்போதைய தேவை.

இக்கட்டுரையை எழுதிய சாய்பா வர்மா அமெரிக்காவில் சான் டிகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மானுடவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.


தமிழாக்கம் : சுகுமார்.
நன்றி :
ஸ்க்ரோல்