நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி

இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் எட்டாவது பாடல் ஒலிப் பேழையான காவி இருள் பாடல் தொகுப்பிலிருந்து “நெருங்குதடா… இருள் நெருங்குதடா… நெருங்குவது காவி இருளடா’’ என்ற பாடல் இப்பதிவில் இடம்பெறுகிறது.

இப்பாடல் வெளியான 1999-ம் ஆண்டில் நிலவிய அரசியல் சூழல் குறித்து இப்பாடலுக்கான அறிமுக உரையில் ம.க.இ.க.-வின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் குறிப்பிடுபவை எல்லாம், இன்றைய காலச் சூழலுக்கும் சரியாகப் பொருந்தும். பார்ப்பனக் கும்பலின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள ‘உயர்’ சாதிகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை மோடி அரசு அறிவித்திருப்பது, இதற்கு ஒரு சான்று!

தோழர் மருதையனின் இப்பாடலுக்கான அறிமுக உரை இதோ :

”இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டை அடிமைத்தளத்தில் ஆழ்த்திய அதே இருள். சாதிக்கொடுமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, தற்குறித்தனம், காலனி அடிமைப்புத்தி ஆகிய அனைத்திற்கும் காரணமான அதே காரிருள்.

அந்தக் காவி இருள்தான், தன்னை எதிர்காலத்தின் நம்பிக்கை ஒளி என்று கூறுகிறது. பெயர் சொன்னாலே மக்கள் காரி உமிழ்ந்தார்களே, அந்தப் பார்ப்பனியம் எனும் இருள் இன்று ஆர்ப்பரித்து வருகிறது.

மத்தியில் பாரதிய ஜனதாவின் ஆட்சி, தமிழகத்திலோ கோவை கலவரம். அதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு, ரதயாத்திரையின் போதும் மசூதி இடிப்பின்போதும் ஒப்பீட்டளவில் இந்துமத வெறியர்களால் பாதிக்கப்படாத தமிழகம் கோவை கலவரத்தின் விளைவாக திசை மாறுகிறது. இல்லை, மாற்றுகிறார்கள். முசுலீம்களை குறிப்பதற்கு மட்டுமே மதவெறி என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர் பத்திரிகைகள்.

ஆள்தூக்கி தடா சட்டம் பொடா என்ற பெயரிலே புதுப்பிக்கப் படுகிறது. சாதாரண மக்களுக்கு எதிராக குண்டுவைத்தவர்கள் அணைவரும் கண்டிக்கத்தக்கவர்கள்தான். இசுலாமியத் தீவிரவாதம் கண்டிக்கத்தக்கதுதான்.

ஆனால், இந்துக்கள் என்று தம்மைக் கருதிக்கொள்பவர்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லட்டும், கடந்த இருபது ஆண்டுகளில் இந்துவெறியர்களால் கொலை செய்யப்பட்ட முசுலீம்கள் எத்தனை ஆயிரம். அந்தக் கொலைகளுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? கோவையிலும்கூட முசுலீம் மக்களின் படுகொலைக்கு எதிர்வினைதானே குண்டுவைப்புகள்.

குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கலவரத்தின் குற்றவாளிகள் அவர்களுக்குப் பதவி கிடைத்திருக்கிறது. இது என்னவகை நீதி? பாரதிய ஜனதா, முசுலீம்களுக்கு மட்டுமல்ல., அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரான கட்சி.

சாதியின் பெயரால் மனுநீதியின் பெயரால் மக்களை ஒடுக்கிய பார்ப்பனியத்தின் புதிய அவதாரம்தான் பாரதிய ஜனதா கட்சி. முன்னாள் மன்னர்களும் பண்ணைகளும் ஆதீனங்களும் பார்ப்பன பனியா தரகு முதலாளிகளும் இவர்களது பங்காளிகள். ஜனநாயகத்தை அதன் வாசனைக்கூடத் தெரியாமல் ஒழித்துவிட விரும்பும் பாசிஸ்டுகள் இவர்கள்.

சகுணம் எதையும் காட்டாமல் பாசிசம் ஆட்சிக்கு வந்துவிடுவதில்லை. அணுகுண்டுவெடிப்பு, அயோத்தியில் சட்டவிரோதமாகக் கோயில் கட்டுவது, சிறுபான்மையினருக்கு எதிரானக் கலவரங்கள், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவர்கள் யார் என்பதைக் காட்டுகிறார்கள்.

இனிமேலும், தாமதிப்பதற்கு இல்லை. இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.

இந்த ஆட்சி நிலைக்குமா நிலைக்காதா என்பதல்ல பிரச்சினை நம்முடைய உரிமைகள் நிலைக்குமா என்பதுதான் பிரச்சினை. ஆம், நம் நாட்டின் மீது கவிழ்ந்து கொண்டிருக்கிறது, ஒரு இருள். காவி இருள்.”

யூ-டியூப் காணொளி :

முகநூல் காணொளி:

பாடல் – இசை : ம.க.இ.க., கலைக்குழு
ஆக்கம்: வினவு.

பாருங்கள்! பகிருங்கள்!!

∗∗∗

பாடலின் வரிகள்:

நெருங்குதடா இருள்
நெருங்குதடா
நெருங்குவது காவி இருளடா

ஈராயிரம் ஆண்டாய்
நாம் சுமந்த இருளடா… – அந்த
இருள் கிழிக்கும் தருணமிது
கொடுவாளை ஏந்தடா

மறைக்க ஏதுமில்லை
மனுநீதி ஆண்டிடும்….
மதவெறியின் முகமணிந்து
சாதி பாய்ந்திடும்….

தீயில் வெந்த ரணங்கள் என்ன
ஆறி போனதா…?
தருணமிது விழித்துக் கொள்ளடா

காவித்துணி நெற்றியில் – இது
இந்து பாசிசம்
காலிகளின் கால்களில் – நம் உரிமை மிதிபடும்…
போராடி மாண்ட தோழர்களின்
குரல் மறந்ததா?
தருணமிது துணிந்து நில்லடா…

தேசவெறி, போர் வெறி
அணுகுண்டு சாகசம்… – இந்து
நாஜிகளின் கனவிலே…
அகண்ட பாரதம்…!
முசோலினியை, இட்லரை
மறந்து போனதா…?
தருணமிது விழித்துக் கொள்ளடா….

காவி இருள் அன்னியனின்
கவசமாவதா…?
துரோகமும் வஞ்சமும்
விவேக மாவதா?
வீரமும் தியாகமும்
துவண்டு சாய்வதா….?
தருணமிது எழுந்து நில்லடா….

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

5 மறுமொழிகள்

 1. இன்றைய சூழலில் சரியாக வினையாற்றும் வினவு முயற்சிக்கு பாராட்டுக்கள்.

 2. மோடி கும்பலின் அபார வெற்றியைப் பற்றி புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரையையும் மறுபதிப்பு செய்யவும்.

  இன்றைய மேற்கோளில் எழுத்துப்பிழை இருக்கிறது.
  கைமாற்றிக் கொடுக்கப்பட்ட … என்று இருக்கவேண்டியது
  கைமாற்றைக் கொக்கப்பட்ட … என்று இருக்கிறது.
  கவனம் தேவை.

 3. Google ல் vinavu.com மூலம் வாசிக்கப்படுகிற வினவின் காணொளிகளில் ஒலி கேட்கக் கிடைப்பதில்லை.
  வினவு ஆன்ட்ராய்டு செயலியை பயன்படுத்தலாமென்றால் அதில் “மறுமொழிகள்” காணக் கிடைப்பதில்லை.
  இரண்டிலும் மாறி மாறி ஊசலாட வேண்டியதிருக்கிறது.
  சற்று கவனிக்கவும்.

  • சிரமத்திற்கு வருந்துகிறோம். எந்த பதிவில் உள்ள காணொளியில் ஒலி கேட்கவில்லை என்பதை தெரியப்படுத்தவும். வாய்ப்பு இருந்தால் ஸ்கிரீன் ஷாட்டுடன் மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும். அது நீங்கள் குறிப்பிடும் பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ள உதவும்.

   • அது எந்த காணொளியாக இருந்தாலும் ஒலி கேட்க கிடைக்கவில்லை.
    பல நாட்களாக (மாதங்கள் என்றும் சொல்லலாம்) இப்பிரச்சினை இருக்கிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க