ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் ஆற்றிய உரை.

ண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டத்தின் ஆட்சி இங்கே நடைபெறுகிறதா? இல்லை. இங்கே நடப்பது கிரிமினல் கும்பல்களின் ஆட்சி. கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வெறும் 12,000 ரூபாய்க்கு தன் மகனை மாடு மேய்க்க கொத்தடிமையாக விற்றதை கேள்விப்பட்டு தோழர்களை விசாரிக்க அனுப்பிய போது அந்த விவசாயி என்னிடம் எதுவுமே மிஞ்சவில்லை புயலிற்கு பிறகு பல நேரங்களில் குடும்பமே பட்டினியில்தான் இருக்கிறது. அரசின் நிவாரணம் எதுவுமே கைக்கு முறையாக வரவில்லை. என்னுடைய மகன் அங்கே வேலை பார்த்தாலாவது மூன்று வேளை சோறு சாப்பிடுவான் என்கிறார்.

ஆனால், இதே வேளையில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ். இருவரும் சோடியாக சேர்ந்து அருகே திருச்சிக்கு காது குத்து நிகழ்வில் பங்கு கொள்கின்றனர். செருப்பை கழட்டி இவர்களை அடித்தாலென்ன என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. நாடு முழுவதும் பாராட்டப்பட்ட தமிழக சுகாதார துறை இன்று எய்ட்ஸ் பரப்பும் துறையாக மாறியுள்ளது. எனக்கு இதுவே மருத்துவ துறையை தனியார் மயமாக்கும் சதியோ என்று தோன்றுகிறது.

சத்துணவு திட்டத்தை ஊத்தி மூடுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை குறைவு என்பதை காரணம் காட்டி 13 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு. அதே சமயம் சாகர்மாலா, சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் என்று தமிழகத்தை கார்ப்பரேட் மண்டலமாக்க திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்த முறையிலிருந்தே இதை நீங்கள் பார்க்கலாம். இந்த வழக்கில் எதிர்தரப்பில் யாரையும் வாதாட அனுமதிக்காமல் மக்களிடமும் கிராமத்திலும் எந்த ஆய்வையும் செய்யாமல் ஒரு தரப்பாக தீர்ப்பு எழுதப்பட்டது. இதில் நிறுவனத்தின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளை விசாரிக்க விடாமல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதியாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட், பசுமை தீர்ப்பாயம் என்று சென்று ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வருவதே இந்த அரசின் கார்ப்பரேட் சார்புக்கு ஒரு சாட்சி.

இன்னொரு புறம் இது இந்த கட்டமைப்பின் தோல்வி. எல்லா அரசுத் துறைகளும் பெரு நிறுவனங்களுக்கு சார்பாக நடக்கும் அளவிற்கு வந்து விட்டது. தேர்தல் அரசியல் கட்சிகள் கூட சம்பிரதாயமாக ஒரு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரும் அளவிற்கு அதன் கட்டமைப்பிலும் மாற்றம் வந்துள்ளது. அதே சமயம் இத்தகைய திட்டங்களுக்கு எதிராக போராடும் எந்த அமைப்பையும் அவர்கள் போராட விடுவதில்லை. குறிப்பாக எங்களுடைய மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு எந்த மாவட்டங்களிலும் போராடவோ கருத்தரங்கம் நடத்தவோ அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த அரங்கத்தை அளித்தவர்களுக்கு இதற்காகவே நாம் குறிப்பாக நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

படிக்க:
அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்

நான் போலீசின் இத்தகைய அணுகுமுறையை நேரடியாக சென்னை டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு சென்றே கேட்டேன். அவர் மற்றவர்கள் எல்லாம் வேறு நீங்கள் வேறு. உங்களுக்கு அனுமதி அளிப்பது கடினம்தான். அது என்ன மக்கள் அதிகாரத்திற்கு மட்டும் சிறப்பு அணுகுமுறை? நமக்கு தெரியவில்லை. ஆனால், இந்த அரசு கட்டமைப்பில் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு இல்லை. அதை இந்த அரசே நினைத்தாலும் கொடுக்கமுடியாது.

அதனால் மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது மற்றும் அரசை நிர்பந்திக்ககூடிய, தங்களை காத்துக்கொள்ளும் வகையில் ஜல்லிக்கட்டை போல் திரளான போராட்டங்களை கட்டமைப்பை உருவாக்கி வளர்ப்பது மட்டும்தான் ஒரே தீர்வு என்று மக்கள் அதிகாரம் கூறுகிறது. அதை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ளார்கள். கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்றும், பெரு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை கட்டி எழுப்ப தேர்தலில் பங்கேற்க கூடிய எந்த அரசியல் கட்சிகளையும் அவர்கள் நம்ப தயாராக இல்லை.

எனவே அதிகாரத்தை மக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலை உருவாகியுள்ளது.

தகவல்

மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்