நீங்க அங்கன்வாடியில் வேலை செய்றீங்க என்று தெரியும். நீங்க எப்ப முதல்ல வேலையில ஜாயின் பண்ணீங்க? எவ்வளவு வருஷம் ஆகுது? எவ்வளவு சம்பளம்?

ஆமா.. நான் அங்கன்வாடியில் டீச்சரா இருக்கேன். 1992 ல இந்த வேலையில சேர்ந்தேன். நான் சேரும்போது எனக்கு 200 ரூபாய் சம்பளம். இப்ப 27 வருஷம் சர்வீஸ் ஆகிடிச்சி. இப்ப எனக்கு கைக்கு கெடைக்கிற சம்பளம் 13000.

இவ்வளவு வருஷம் சர்வீஸ் இருக்கு ஆனா உங்களுக்கு 13000 தான் சம்பளம்னு சொல்றீங்க. கவர்ன்மெண்ட் வேலையெல்லாம் இத்தனை வருஷம் சர்வீஸ் இருந்ததுனா நிறைய சம்பளம் கிடைக்குமே.. நீங்க சேரும்போதே டீச்சரா தான் சேர்ந்தீங்களா? இல்ல ப்ரொமோஷன் கிடைச்சு வந்தீர்களா?

மத்த கவர்மெண்ட் வேலை மாதிரியெல்லாம் இது கிடையாது. நான் சேரும்போதே டீச்சராதான் சேர்ந்தேன். இத்தனை வருஷம் ஆயிடுச்சு இன்னும் ஒரு பிரமோஷன் கூட கொடுக்கல. எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க.

உங்களுக்கு மட்டும்தான் ப்ரமோஷன் கெடைக்கலையா இல்ல மத்த எல்லாருக்கும் இதே நிலைதானா?

எனக்கு மட்டுமில்ல.. எல்லாத்துக்கும் இதே நிலைமைதான். போன வருஷம் வரைக்கும் எங்க புரமோஷன் பற்றி எதுவுமே பேசவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் 91வது வருஷம் சேர்ந்தவர்களுக்கு புரமோஷனுக்கு ஆர்டர் வந்தது. இப்பதான் 92 வது வருஷம் சேர்ந்தவங்களோட லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. இவங்க சொல்றபடி பார்த்தா அடுத்த வருஷம் மார்ச் மாசம் இல்லன்னா ஏப்ரல் மாசம் எங்களுக்கு புரமோஷன் கிடைக்கும். எனக்கு முன்னாடி ஒரு அக்கா இங்க வேலை செஞ்சாங்க. அவங்க புரமோஷன் வாங்கும்போது அவங்களுக்கு சர்வீஸ் 33 வருசம். அப்படின்னா பார்த்துக்கங்க எங்களை எந்த நிலைமையில் நடத்துறாங்கன்னு.

உங்க சென்டர்ல மொத்தம் எத்தனை பேர் வேலை செய்றீங்க? அவங்களுக்கெல்லாம் என்ன சம்பளம்? இப்ப புதுசா வேலைக்கு எடுக்கும் போது என்ன சம்பளம் கொடுக்குறாங்க?

எங்க சென்டர்ல மொத்தம் ரெண்டு பேரு. அதுல நான் டீச்சர் அப்புறம் ஒரு ஆயாம்மா. எனக்கு இப்போதைக்கு கைக்கு 13000 கிடைக்குது. அதுக்கு மேல பிஎஃப் 1500 பக்கம் பிடிக்கிறாங்க. அப்புறம் ஆயாவுக்கு 7000 ரூபா சம்பளம், 700 ரூபா பிஎஃப் புடிக்கிறங்க. இப்போ புதுசா சேர்ந்த டீச்சர்களுக்கு மொத்தமே 7000 தான் சம்பளம். இதில் என்ன கூத்துனா புதுசா வேலைக்கு சேர்வதற்கு 2 லட்சம் இல்லனா 3 லட்சம் வரைக்கும் கட்சிக்காரர்களுக்கு லஞ்சம் கொடுக்கணும். என்கிட்ட யாராவது வந்து இந்த வேலையில் சேரலாமா.. சேர்ந்தா நல்லதானு கேட்டா, நான் கண்டிப்பா சேரவேண்டாம்னுதான் சொல்லுவேன்.

 உங்களுக்கு சம்பளம் எல்லாம் மாச மாசம் சரியா கொடுக்கறாங்களா?

அதெல்லாம் சரியா வந்துரும். கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும் ஆபீஸ்ல போய் கையெழுத்து போட்டு வாங்கணும். இப்ப கடைசியா ஒரு நாலஞ்சு வருஷமா பேங்க் அக்கவுண்ட்ல நேரடியாக சம்பளம் ஏறிடும். ரெண்டு பிட்டா சம்பளம் போடுவாங்க ஒரு டைம் 3000 ரூபா ஏறும் இன்னொரு டைம் 8500 ரூபாய் ஏறும்.

அது ஏன் அப்படி? எதனால் இரண்டு பிட்டா போடறாங்க?

மொத்தமா பார்த்த எங்களுக்கு மூணு எடத்துல இருந்து சம்பளம் வருது. ஒன்னு மத்திய அரசு, இவங்க 3000 ரூபாய் கொடுக்குறாங்க. அது ஃபர்ஸ்ட் டைம் அக்கவுண்ட்ல ஏறிடும். இரண்டாவது வர்ற 8500 ரூபாய் மாநில அரசும் உலக வங்கியும் சேர்ந்து கொடுக்கிறதா சொல்றாங்க. இவங்க ரெண்டு பேரும் எவ்வளவு கொடுக்குறாங்கன்னு தான் தெரியல. மூணு மாசம் முன்னாடி மோடி ஒரு அறிவிப்பை கொடுத்தாங்க. மத்திய அரசு கொடுக்கிற 3000 ரூபாயோட 1500 சேர்த்துக் கொடுக்கறதா சொன்னாங்க ஆனா இதுவரைக்கும் அதை செய்யல.

மத்த மாநிலங்கள் எல்லாம் அங்கன்வாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எங்க மீட்டிங்ல சொல்லி இருக்காங்க. பாண்டிச்சேரி 26,000 ரூபாய் சம்பளம் கொடுக்கறதா சொல்றாங்க. வெவ்வேறு மாநிலத்தில் வெவ்வேறு மாதிரி சம்பளம் கொடுப்பாங்க போல.

இந்த உத்தரபிரதேசம் பீகார் ராஜஸ்தான் மாதிரி மாநிலங்கள் எல்லாம் ரொம்ப கம்மியா தான் சம்பளம் கொடுக்கிறதா சொல்றாங்க அத பத்தி ஏதாவது தெரியுமா?

ஆமா ஒரு மீட்டிங்ல எங்க மேடம் சொன்னாங்க. அந்த மாநிலங்களில் 1500 ரூபாய் 2000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களாமாம்.

அது ஏன் அந்த மாநிலங்களில் மட்டும் இவ்வளவு கம்மியா சம்பளம் கொடுக்கிறார்கள்?

இந்த அங்கன்வாடி எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி கிடையாது. இப்ப தமிழ்நாட்டுல எடுத்துட்டோம்னா காலைல எட்டரை மணில இருந்து சாயந்திரம் நாலு மணி வரைக்கும் பள்ளிகூடத்தில இருக்கணும். ஆனா அந்த உத்தர பிரதேசம் பீகார் ராஜஸ்தான் மாதிரி மாநிலங்கள் எல்லாம் காலைல 11 மணி வரைக்கும் தான் அவங்களுக்கு வேலையாம். அதே நேரத்துல இங்கு தமிழ்நாட்டில் பசங்களுக்கு சத்துணவு சமைச்சு குடுக்கணும். அங்க எப்படின்னா காலையில பால் பிஸ்கட் மட்டும் கொடுப்பாங்க போல. அப்புறம் கஞ்சி கொடுப்பாங்க போல. இதனால தான் அவங்களுக்கு சம்பளம் கம்மியா கொடுக்கிறதா எங்க மீட்டிங்ல சொல்றாங்க. எங்க மேடம் கூட அடிக்கடி திட்டுவாங்க நீங்க 7000 சம்பளம் வாங்கிட்டு ஒரு வேலையும் செய்யறதில்ல அப்படின்னு. ஆனா எங்கள காலையில எட்டரை மணியிலிருந்து சாயந்திரம் நாலு மணி வரைக்கும் நல்லா வேலை வாங்கிடுவாங்க. மத்தபடி அவங்க மாநிலங்களில் என்ன நடக்குதுன்னு தெரியல.

உங்க சென்ட்ரல் மொத்தம் எத்தனை குழந்தைகள் இருக்காங்க?

இப்போதைக்கு எங்க சென்டர்ல 26 குழந்தைங்க இருக்காங்க. இந்த நம்பர் வருஷா வருஷம் மாறிட்டே இருக்கும். ஏன்னா அந்த ஊர்ல பிறக்கிற குழந்தைங்க நம்பர் மாறிக்கிட்டே இருக்கும். ஒரு வருஷம் எல்லாம் எங்க சென்டர்ல 36 குழந்தைங்க இருந்தாங்க. இப்ப 26 பேர் இருக்காங்க.

உங்களோட வேலையை பத்தி கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்களேன்?

முதல் வேலை என்னன்னா அந்த ஊர்ல இருக்க 3 லிருந்து 5 வயசுக்குள்ள இருக்க குழந்தைகள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கணும். அந்த குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கணும். இந்த சத்துணவுக்காக அரிசி அப்புறம் சத்து மாவு இதெல்லாம் ஆபீஸ்ல இருந்து அங்கன்வாடி மையத்துக்கு அவங்களே அனுப்பிடுவாங்க. சாப்பாட்டுக்கு தேவையான காய்கறி இதெல்லாம் நாமே வாங்கிக்கணும். இது எவ்வளவு செலவாகுதோ அது ஆபிஸ்ல பில் கொடுத்து பணம் வாங்கிக்கணும். ஆபீஸில் இருந்து முட்டையும் கொடுத்துடுவாங்க.

அப்புறம் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்குற மாதிரி சின்னச்சின்ன பாட்டு அப்புறம் கேம்ஸ் இதெல்லாம் சொல்லி கொடுப்போம். இந்த வேலையெல்லாம் இல்லாம ஊர்ல இருக்கிற கர்ப்பிணி பெண்கள் எத்தனை பேர், அவங்க சரியா ஹாஸ்பிட்டல் போறாங்களா, அப்புறம் புதுசா பொறந்த குழந்தை எத்தனை, அந்த குழந்தைகள் எல்லாம் சரியா தடுப்பு ஊசி போடறாங்களா அப்டின்னு கணக்கு எழுதி வைக்கணும்.

படிக்க:
அங்கன்வாடி
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !

இந்த கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கொடுக்கணும் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போட சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதுக்கப்புறம் போலியோ சொட்டு மருந்து போடறதுக்கும் வருஷா வருஷம் நாங்க தான் போகணும். அப்புறம் அடிக்கடி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தணும். சத்துணவு குறித்து விழிப்புணர்வு, இளமகளிர் அவர்களுக்கான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இந்த மாதிரியான வேலைகளை செய்யணும்.

ஏற்கனவே சொன்ன மாதிரி கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், இளமகளிர் இவங்க குறித்த தகவல்கள் எல்லாத்தையும் சேகரித்து அதை அறிக்கையாக தயார் செஞ்சு ஆபீஸ்ல கொடுக்கணும். இந்த ரிப்போர்ட் தான் மிகப் பெரிய வேலை. வருஷம் ஃபுல்லா ரிப்போர்ட்ட எழுதிட்டே இருப்போம். அந்த ரிப்போர்ட் வச்சு அடிக்கடி மீட்டிங் நடக்கும் அந்த மீட்டிங்கில் தான் முடிவு பண்ணுவாங்க எந்த ஊர்ல என்ன மாதிரி முகாம் நடத்தலாம் அப்படிங்கறது எல்லாம். இந்த மீட்டிங் நடத்துவதற்கு எல்லாம் தனியாக காசு குடுக்க மாட்டாங்க. அந்த சாப்பாட்டு செலவு மாதிரி அதுக்கு மட்டும் காசு கொடுப்பாங்க.

இந்த மாதிரி மீட்டிங் எல்லாம் ஒரு மாதத்திற்கு எத்தனை தடவை நடக்கும்?

ஆபீஸ் மீட்டிங் வந்து பாத்தீங்கன்னா ஒரு வாரத்துக்கு இரண்டாவது நடக்கும். அப்புறம் அந்த முகாம் மாதிரி நடந்ததெல்லாம் மாசத்துக்கு ஒன்னு பண்ணிடுவோம்.

இந்த மோடி அரசாங்கம் பாத்தீங்கன்னா ஒரு திட்டம் கொண்டு வரதா சொன்னாங்க. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சத்துணவு சத்துமாவு போன்ற பொருள்களை நிறுத்திட்டு நேரடியாக அவங்க அக்கவுண்ட்ல பணம் போடற மாதிரி திட்டம் கொண்டு வரதா சொன்னாங்க. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க உங்க ஆபீஸ்ல ஏதாவது சொன்னாங்களா?

ஆமாம் இந்த மாதிரி ஒரு திட்டம் வர்றதா ஆபீஸ்ல சொன்னாங்க. எங்களை பொறுத்த வரைக்கும் இந்த திட்டம் வந்துச்சுன்னா நல்லது தான்னு சொல்லுவோம். ஏன்னா எங்களுக்கு வேலை குறையும். ஆனால் இந்தத் திட்டம் முழுசா நடைமுறைக்கு வரும் என்று தெரியல. அதுக்கப்புறம் ஆபீஸ்ல இதை பத்தி பெருசா ஏதும் சொல்லல. மத்தபடி இன்னொரு செய்தி வேணும்னா சொன்னாங்க. அதாவது இந்த கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கொடுக்கிற வேலையை எங்க கிட்ட இருந்து வாங்கி இந்த செவிலியர்களுக்கு கொடுக்கிறதா சொன்னாங்க. அதுவுமில்லாம கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை 18,000 கொடுக்கிறார்கள் அதுல 4000 ரூபாக்கு சத்துமாவு மட்டுமே அப்புறம் வேற ஏதோ பொருள்கள் எல்லாம் சேர்த்து 2000 இதெல்லாம் போக மீதி 12000 தான் அவங்க அக்கவுண்ட்ல போடுவாங்க.

செவிலியர் என்றால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கிறவங்களா?

இல்ல,அவங்க இல்ல. அதாவது ரொம்ப சின்ன குக்கிராமங்களில் செவிலியர்ன்னு சொல்லிட்டு ஒரு சின்ன கட்டடம் கட்டி அதுல ஒருத்தர் இருப்பாங்க. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போகமுடியாதவர்கள் இங்க போய் பாப்பாங்க. இவங்க கிட்ட செக்கப் எல்லாம் பண்ணிக்குவாங்க. ஏதாவது பெரிய பிரச்சனைனா ஹாஸ்பிடல் போக சொல்லி சொல்லிடுவாங்க. இப்ப பார்த்தீங்கன்னா இந்த ஊர்ல ஒரு அஞ்சு அங்கன்வாடி மையங்கள் இருக்கு அதுல ஒரு செவிலியர் மையம் இருக்கு. இப்ப எங்களுக்கு வர வேண்டிய மருந்துகள் எல்லாம் இந்த செவிலியர் மூலமாக வரும்.

இது சரியா வரும்னு உங்களுக்கு தோணுதா? 5 சென்டர்ல 5 டீச்சர் 5 ஆயாம்மா மொத்தம் 10 பேர் செஞ்சுகிட்டு இருந்த வேலையை ஒரு நர்ஸ் செய்ய முடியுமா?

அது கண்டிப்பா முடியாது தான். ஏன்னா, இங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் சத்துமாவு கொடுக்குறதுக்கு ரொம்ப கஷ்டபட வேண்டி இருக்கும். ஒரு சிலர் சென்டர்கே வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு சிலர்லாம் நாலஞ்சு தடவை சொல்லி விடனும் அப்ப தான் வருவாங்க. இல்லனா அவங்க வீட்டுல இருந்து யாராவது வந்து வாங்கிட்டு போவாங்க. ரொம்ப முடியாத டைம்ல நாங்களே வீட்டுக்கு போய் கொடுக்கணும். நம்ம தமிழ்நாட்டுல ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் பெண்களோட பேறுகால இறப்பு இதெல்லாம் குறைவாக இருக்கிறதுக்கு இந்த சத்துமாவு ரொம்ப முக்கியமான காரணம். இப்போ இதை செவிலியர் கிட்ட கொடுத்தாங்கன்னா எல்லாருக்கும் போய் சேர்வது கஷ்டம்தான்.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரிச்சது. ஆனா புதுசா ஆளுங்க எடுக்கலைன்னு சொல்லி சொல்றாங்க அது உண்மையா?

ஆமா. மூணு வருஷத்துக்கு முன்னாடி இருக்கிற மையங்களோட எண்ணிக்கையை அதிகரிச்சாங்க. அதாவது இந்த ஊர்ல இதுக்கு முன்னாடி 2 மையங்கள் இருந்தது இப்ப பார்த்தீங்கன்னா அது ஐந்தா மாறி இருக்கு. ஆனா உடனே அதற்கான ஆளுங்கள போடல. பக்கத்துல இருக்க மையங்களில் வேலை செய்யுற டீச்சர்களை இன்னொரு மையத்தையும் சேர்த்து பார்க்க சொன்னாங்க. நான் கூட இங்க பக்கத்துல இருக்கிற மையத்தை ரெண்டு வருஷம் பாத்துட்டேன். அதுக்கு தனியா சம்பளம் ஏதும் கொடுக்கல. அப்புறம் இப்போதான் புதுசா ஆள் போட்டாங்க. அப்புறம் புதுசா ஏதும் கட்டிடம் கட்டல. இப்ப நாங்க இருக்கிற மையம் கூட வாடகை கட்டிடம்தான்.

இப்போ எல்கேஜி மற்றும் யுகேஜி தொடங்க போறதா சொல்றங்க.. அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஆமா.. அது உண்மைதான். எங்க ஆபீஸ்ல அத பத்தியும் சொன்னாங்க. தொடக்க பள்ளி அருகில் உள்ள மையங்கள் மட்டும் இது வரும் போல.

பள்ளிக்கூடத்த விட்டு தள்ளி இருக்க அங்கன்வாடி மையங்கள் என்ன ஆகும்.?

அத பத்தி தெரில. ஆனா பக்கத்துல இருக்க பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் எல்லா மையங்களுக்கும் போன் பண்ணி எத்தன குழந்தைகள் இருக்கங்கன்னு விவரம் கேட்டுட்டு இருக்காங்க.

இந்த திட்டம் வந்துச்சுனா உங்களுக்கு வேலை போகாதா?

ஆமா.. அதுக்கு நெறய வாய்ப்பு இருக்கு. இங்க ஸ்கூல் பக்கத்துல இருக்க அங்கன்வாடில வேலை செய்ற அக்கா கூட போலம்பிட்டு இருந்தாங்க. அதும் இல்லாம இந்த திட்டம் வந்தா அதுல டிகிரி முடிச்சவங்கள வேலைக்கு வைக்கிறதா சொல்லிட்டு இருக்காங்க.

அப்போ.. கூடிய சீக்கிரம் உங்க மையத்தையும் மூடிடுவாங்க!!

அது தெரில..ஆனா மொத்தமா 70000 அங்கன்வாடி மையங்கள் மூட போறதா சொன்னாங்க. அது எந்தெந்த மையம்னு தெரில.

அப்போ.. அதுல வேலை செய்யறவங்களோட கதி என்ன?

இதையும் எங்க மீட்டிங்கில பேசினோம். அதுக்கு ஒன்னும் கவலை பட வேண்டாம்னு சூப்பர்வைசர்லாம் சொன்னாங்க. அங்கன்வாடி மையத்த மூடிட்ட்டாலும் அதுல வேலை செய்யற ஆளுங்களை வேற ஏதாவது வேலைக்கு மாத்திடுவாங்க.. இல்லனா சம்பளம் கொடுத்து வீட்ல உடகார வச்சிடுவங்கன்னு..

இவ்ளோ நாள் அங்கன்வாடில வேலை செய்துட்டு திடீர்னு அவங்கள வேற வேலைக்கு அனுப்பினா, அத செய்ய முடியுமா??

அது கஷ்டம் தான். ஆனா வேர வழி இல்லை. இதையே நம்பிட்டு இருக்கவங்களுக்கு எந்த வேலை கொடுத்தாலும் செஞ்சிதான் ஆகணும்.

அப்போ இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல அங்கன்வாடி அப்டின்னு ஒன்னு இல்லாமலே போய்டுமா?

அது எப்படி போகும்.

ஆமா.. உங்ககிட்ட இருந்த ஒவ்வொரு வேலையும் வேற இடத்துக்கு மாத்திட்டே போனா கடைசில உங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. அப்றம் அங்கன்வாடி எதுக்கு. இப்போ வேலை செய்துட்டு இருக்க ஆளுங்களை வேலைய விட்டு தூக்கினா கூட சம்பளம் கொடுத்து வீட்ல உடகார வைக்கலாம். ஆனா இருக்க எல்லா மையங்களையும் படிப்படியா குறைச்சி கடைசியா எல்லைத்தையும் மூடிடுவாங்க.

ஆமா.. அப்படித்தான் நடக்கும்.

– சக்திவேல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க