மும்பை, தாராவியை சேர்ந்த ஒரு குடும்பம் தமது 50 சதுர அடி வீட்டை ரேகா பாக்லே என்பவருக்கு மாதம் ரூ. 750-க்கு வாடகைக்கு விட்டுள்ளது. அக்குடும்பம் அனைத்து வார நாட்களிலும் காலை 10.30 முதல் மதியம் 3 வரை அவ்வீட்டை ரேகா பாக்லேவிடம் ஒப்படைக்கும். அந்த அடைசலான வீட்டில் தான் சிவசக்தி சாவ்ல் மழலையர் பள்ளியை ரேகா பாக்லே நடத்தி வருகிறார். மேலும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கான மைய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Child Development Scheme) கீழ் ஒதுக்கப்பட்ட பல்வேறு பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

அருகிலிருக்கும் குழந்தைகள், கருவுற்ற பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்களை அவர் கொடுக்கிறார். அவர்களது உடல்நலத்தை பற்றி பதிவு செய்கிறார். இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பற்றியும் குழந்தை பராமரிப்பு பற்றியும் அறிவுரை கூறுகிறார். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமைத்த சூடான உணவை அளிப்பதுடன் 25 முதல் 30 குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.

குழந்தைகள் சென்ற பிறகு பாக்லேயும் அவரது உதவியாளர் ஹேமா கடமும் சேர்ந்து இரண்டு மணி நேரம் செலவிட்டு அவர்களது அன்றைய வேலைகள் பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள்.

இக்கடுமையான 6 நாள் வேலைகளுக்கு மைய அரசு கொடுக்கும் 3,000 ரூபாய் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு கொடுக்கும் ஊக்கத் தொகையையும் சேர்த்து 7,000 ரூபாய் ஊதியமாக பாக்லே பெறுகிறார். அதேபோல அங்கன்வாடி உதவியாளர் கடம் 3,500 ரூபாய் மாத ஊதியமாக பெறுகிறார்.

அரசு திட்டதிற்காக அவர்கள் பணிபுரிந்தாலும் அவர்களுக்கு கொடுப்பதை சம்பளம் என்று குறிப்பிடாமல், வெகுமானம் என்றுதான் அதிகாரபூர்வமாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் அங்கன்வாடி பணியாளர்கள், துணை மருத்துவ தாதியர் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்களின் (ASHA) வெகுமானத்தை அதிகரிக்கப் போவதாக கடந்த செப்டெம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது பாக்லே-வுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

நடக்கவிருக்கும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னுறுத்தி மோடியின் இந்த அறிவிப்பின் படி அங்கன்வாடி பணியாளர்களுக்கான வெகுமானத்தை ரூ.3,000 -லிருந்து ரூ.4,500-ஆக உயர்த்தப்படுகிறது. அதே போல கிராமங்களில் சிறிய அங்கன்வாடிகளை தனியாக நடத்தி வரும் பணியாளர்களின் வெகுமானத்தை ரூ.2,200- லிருந்து ரூ.3,500-ஆகவும் உதவியாளர்களின் வெகுமானம் ரூ.1,500-லிருந்து ரூ. 2,250-ஆகவும் தற்போது உயர்த்தப்படும்.

துணை மருத்துவ தாதியர் மற்றும் கிராம அளவில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் குறிப்பிட்ட வேலையை முடிக்கும் பட்சத்தில் அவர்களது வழக்கமான ஊக்கத் தொகையை மைய அரசு இரண்டு மடங்காக்கியிருக்கிறது.

தற்போது மருத்துவமனையில் குழந்தை பிறப்பதை உறுதிப்படுத்தினால் 200 ரூபாயும், குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்தினால் 100 ரூபாயும் கிடைக்கிறது. அவர்கள் இனி இரண்டு மடங்காக பணத்தை பெறுவார்கள்.

படிக்க :
♦ அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு !
♦ சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு

இதனை ஊதிய உயர்வில் ஒரு மைல்கல் என்று மோடி அரசு அழைத்தது. ஆனால் நாடு முழுவதும் உள்ள 28 இலட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 11 இலட்சம் ஆஷா மற்றும் மருத்துவ துணை தாதியர்களுக்கு இந்த வெகுமானத் தொகை மாற்றங்கள் சிறு ஆறுதலையே கொடுத்திருக்கிறது.

இந்த பணியாளர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பெண்கள். முன்னணி சுகாதார பணியாளர்களாக இன்றியமையாத பணியாற்றுவதால் அரசு ஊழியர்களாக தங்களை அங்கீகாரம் செய்ய வேண்டுமென்று பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

செம்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடத்தப்பட்ட கிசான் மஸ்தூர் சங்கர்ஸ், பேரணியில் இலட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென்றும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

மைய அரசு, அவர்களது முதன்மையான கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல், அவர்களது வெகுமானத்தை மட்டும் அதிகரித்துள்ளது. அதன்மூலம் இந்தியாவின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து குறிக்கோள்களை வேர்மட்ட அளவில் கொண்டு செல்லும் அவர்களை ஊழியர்களாக அங்கீகாரிக்காமல் வெறும் சேவை செய்பவர்களாகவே பார்க்கிறது.

“நாங்கள் செய்யும் வேலைக்கு போதுமான அளவிற்கு எங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. மேலும் இந்த வெகுமான உயர்வு எங்களது வருமானத்தை பெரிய அளவில் அதிகரிக்காது” என்கிறார் 12 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வரும் பாக்லே.

“ஏன் எங்களை முறையான ஊழியர்களாக அங்கீகரிக்க இந்த அரசு மறுக்கிறது? ஏன் அவர்களால் எங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை?” என்று கேட்கிறார்.

அங்கன்வாடி பணியாளர்களின் அவலநிலை :

பயிற்சி மிக்க ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 அளிக்க வேண்டும் என்று இந்தியாவின் 7-வது ஊதிய ஆணைக்குழு நிர்ணயித்த போதிலும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் அற்பமான ரூ.3000-ஐ விட சிறிது கூடுதலாகப் பெறவே பல ஆண்டுகள் தொடர்ந்து போராடி கொண்டிருக்கின்றனர்.

இந்த ரூ.3,000-ல் மைய அரசின் பங்கு 60 விழுக்காடு. மீதியை மாநில அரசுகள் தருகின்றன. அங்கன்வாடி சங்கங்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் போராடி வந்ததன் பயனாக சில மாநிலங்கள் அவர்களது வெகுமானத்தை அதிகரித்து ஊக்கத்தொகையை அளித்தன.

கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் தன் மனக்குமுறலை வெளியிடும் ஊழியர் (கோப்புப் படம்).

சான்றாக, மகாராஷ்டிரா அரசு தற்போது 7,000 ரூபாய் மாத ஊதியமாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொடுக்கிறது. கேரளா 10,000 ரூபாயும், தெலங்கானா 10,500 ரூபாயும், அரியானா மாநிலம் சமீபத்தில்தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வெகுமானத்தை ரூ.11,400ஆக உயர்த்தி உள்ளது. இதுதான் நாட்டிலேயே அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் வெகுமானமாகும்.

அதிகமான பணியாளர்களுக்கு ரூ.3000 கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற போதிலும் உத்திரப்பிரதேச மாநிலம், அங்கன்வாடி பணியாளர்களுக்கு நாட்டிலேயே மிகக்குறைவாக ரூ.1000 மட்டுமே மாத ஊதியமாக கொடுத்து வருகிறது.

வாரத்தின் ஆறு நாட்களிலும் முழு நேரம் பணிப்புரிந்தாலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிடைக்கும் [சொற்பமான] ஊதியத்தில் பாதியே அவர்களது உதவியாளர்களுக்கு கிடைக்கிறது.

தற்போது அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு 50-60 விழுக்காடு ஊதிய உயர்வை அரசு அளித்திருந்தாலும் இது வெறுமனே 750-1500 ரூபாய் மட்டுமே அவர்களது மாத ஊதியத்தை அதிகரிக்கும்.

“இந்த சொற்ப ஊதிய உயர்வுக்கு பதிலாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரியானா மாநிலம் கொடுக்கும் ஊதியத்தைக் கொடுக்கச் சொல்லியாவது மாநிலங்களுக்கு மைய அரசு வழிகாட்டியிருக்கலாம்” என்று சிபிஎம் கட்சி-யின் அனைத்திந்திய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.ஆர்.சிந்து கூறினார்.

நிபந்தனையாக ஊக்கத்தொகை பெரும் ஆஷா பணியாளர்கள் :

வாரத்தின் ஏழு நாட்களும், இரவுபகல் பாராமல் பணிபுரியும் ஆஷா பணியாளர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. எந்த நேரமாக இருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்து குடும்பங்களுடனான கலந்தாய்வு மற்றும் பெண்களையும் குழந்தைகளையும் முதன்மை சுகாதார நிலையங்களுடன் இணைப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர் இந்தப் பணியாளர்கள்.

ஆயினும், உலகளாவிய தடுப்பூசி திட்டம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் உடல்நலம், துப்புரவுப்பணி மற்றும் வேறு பல திட்டங்களுக்கான குறிப்பிட்ட இலக்குகளை அடைவதைப் பொறுத்தே அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

படிக்க :
♦ மோடி அரசின் சாதனை – ருவாண்டாவை வென்ற இந்தியாவின் வேதனை
♦ குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?

பொதுவாக, பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 8 வெவ்வேறு திட்டங்களை முடிப்பதற்காக ஒரு ஆஷா பணியாளருக்கு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய் வரை மைய அரசு வழங்குகிறது. மாநில அரசுகள் வேறு வேலைகளுக்காக கூடுதலாக ஊக்கத்தொகையை அளித்தாலும் மாநிலத்திற்கு மாநிலம் அது வேறுபடுகிறது.

“தெலங்கானாவில் பிற அரசு திட்டங்களுக்காக வேலை செய்தால் மட்டுமே ஆஷா பணியாளர்கள் அதிகபட்சம் ரூ.6,000 பெற முடியும். ஆந்திரப்பிரதேசத்தில் அரசு திட்டங்களுக்காக எவ்வளவு வேலைகள் செய்யச் சொன்னாலும் அதிகபட்சம் ரூ.7,500 மட்டுமே ஆஷா பணியாளர்களுக்கு கிடைக்கும்” என்று அனைத்திந்திய ஆஷா பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நிருளா கூறுகிறார்.

“ஆஷா பணியாளர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்கள். பயிற்சி பெறாத பணியாளர்கள் கூட கேரளாவில் நாளொன்றிற்கு 600 ரூபாய் கூலியாக பெறுவதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்” என்று மேலும் அவர் கூறினார்.

”மைய அரசு அறிவித்துள்ள வெகுமான உயர்வு என்பது ஆஷா பணியாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் எட்டு அல்லது ஒன்பது முதன்மையான வேலைகளுக்கு மட்டும்தான். ஆனால் எதார்த்தத்தில் ஆஷா பணியாளர்கள் குறைந்தது 35 விதமான வேலைகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றிற்கு ஊக்கத்தொகை கிடைக்கும் ஏனைய வேலைகளுக்கு எதுவும் கிடைக்காது.” என்கிறார் நிருளா.

காலந்தாழ்ந்து கொடுக்கப்படும் ஊதியமும் உணவுப்பொருட்களும் :

சொற்பமான வெகுமானம் வழங்கப்படுவது மட்டுமே அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் பிரச்சினை இல்லை. எல்லா மாநிலங்களிலும் காலந்தாழ்ந்து ஊதியம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலைமை இரண்டு முதல் ஆறு மாதங்களுக்கு முன்னணி பணியாளர்களை தவிக்க விடுகிறது. சான்றாக, பல ஆண்டுகளாக தாராவியில் பணிபுரியும் பாக்லே இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் வெகுமானத் தொகையை பெற்று வருகிறார்.

நிலைமையை மோசமாக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை வாங்குவதற்கான நிதியை கூட பல மாநிலங்கள் காலம் தாழ்த்துகின்றன. “உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆறு மாதம்வரை கூட உணவுப்பொருட்கள் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை” என்கிறார் சிந்து. “சில அங்கன்வாடி பணியாளர்கள் அவர்களது சொந்தப்பணத்தை செலவு செய்கிறார்கள். பணம் திரும்ப கிடைக்கும் என்று அதிகாரிகள் அவர்களிடம் கூறுவதால் அவ்வாறு செலவழிக்கின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.

’பாதாம் களி தின்னும் ஏழைத்தாயின் மகன்’ அங்கன்வாடி ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்காதது ஏன்.

பீகார், ஜார்கண்டு, சட்டிஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் 70% அங்கன்வாடிகள் இதே மோசமான நிலைமைகளில்தான் இயங்குகின்றன என்று சிந்து கூறினார்.

மகாராஸ்டிராவில் இதே போன்றதொரு பிரச்சினையை சுபா ஷமிம் சந்தித்துள்ளார். “மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சத்துணவிற்கான நிதி ஓராண்டாக வழங்கப்படவில்லை. அதனால் எங்களது சொந்த பணத்தை இதற்காக செலவு செய்து வந்தோம்.” என்று சி.ஐ.டி.யூ-வின் மாநில பொது செயலாளர் ஷமிம் கூறினார். “பின்னர் கடைசியாக, எங்களுக்கு ஐந்து மாத நிதி செப்டம்பர் மாதத்தில் ஒருசேர கிடைத்தது. ஆனால் அதுவும் கூட மார்ச் மாதம் வரைதான் கிடைத்தது” என்றார்.

அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு குறைந்த அளவு நடவடிக்கைகள் கூட அரசாங்கம் எடுக்காத நிலையில் அவர்கள் மோசமான நிலைமைகளிலேயே பெரும்பாலும் வேலை செய்கின்றனர். கருவுற்ற பெண்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஆஷா பணியாளர்கள் உதவுவதால் இக்கட்டான நேரங்களில் கூட மகப்பேறு பார்க்கிறார்கள் மேலும் இந்த வழிமுறைகளை செயல்படுத்துகையில் துன்புறுத்தல்களையும் சந்திக்கிறார்கள்” என்கிறார் நிருளா.

பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக நகர சேரிப்பகுதிகளில், அங்கன்வாடி பணியாளர்கள் தூய்மையற்ற நெருக்கடியான நிலைமைகளில் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். “நாங்கள் அங்கன்வாடியை நடத்தும் வீட்டின்  நுழைவுக்கதவு பக்கத்தில் ஒரு சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது. சில நேரங்களில் குழந்தைகள் அதில் விழுந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். இந்த அரசு எங்களது அங்கன்வாடிக்கு ஒரு நல்ல இடத்தை கொடுப்பதில்லை” என்று பாக்லே கூறுகிறார்.

பாலினப் பாகுபாடு முதன்மையான காரணிகளில் ஒன்று :

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை, அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க மறுப்பதற்கு பாலின பிரச்சினையும் ஒரு காரணம். “பாலினம் இங்கே முதன்மையான பிரச்சினைகளில் ஒன்று” என்கிறார் நிருளா.

“இங்கே பெண்கள் செய்வதெல்லாம் அக்கறைக் கொள்ளுதல், ஊட்டச்சத்து மற்றும் உடல்நலம் பேணல் தொடர்பான வேலைகள்தான். எனவே இது வீட்டு வேலைகளின் தொடர்ச்சி என்றே பெண்களிடம் கூறப்படுகிறது.” என்று அவர் மேலும் கூறினார்.

ஆஷா பணியாளர்கள் மற்றும் துணைச்செவிலியர் மருத்துவ பயிற்சியாளர்கள் அனைவரும் முதன்மையான சுகாதாரப் பிரச்சினைகளை சமாளிக்க பயிற்சி பெற்றிருந்தாலும், இதுதான் நிலைமை. இவர்கள் திறன்மிகு தொழிலாளர்கள் என அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஷமிம் அதை இன்னும் அப்பட்டமாக கூறுகிறார். “பெண்களாக இருப்பதால் குறைந்த ஊதியத்திற்கும் கூடுதலாக வேலையை எங்களிடம் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்கிறார். அங்கன்வாடி தொழிலாளர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு கூடுதலாக ஸ்வாச்சத்தா அபியான் (Swachhata Abhiyan) போன்ற திட்டங்களிலும் வேலை செய்ய தள்ளப்படுகிறார்கள். எங்களில் சிலருக்கு கிராமத்தில் உள்ள நாய்களையும் பன்றிகளையும் கணக்கெடுக்க சொல்லி கூட வேலை கொடுக்கிறார்கள். ஆனால் இதற்கு கூடுதல் ஊதியம் இல்லை. சில நேரங்களில் பணியாளர்கள் மறுக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் எப்படியும் அவர்களை நிர்பந்தித்து வேலை வாங்கி விடுகிறது” என்கிறர் ஷமிம்.

இதுக்குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடமும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடமும் ஸ்க்ரோல் இணையதளம் கேட்ட போது அவர்கள் பதிலேதும் அளிக்கவில்லை.

நன்றி : scroll.in
தமிழாக்கம்:

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க