privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மோடி அரசின் சாதனை - ருவாண்டாவை வென்ற இந்தியாவின் வேதனை

மோடி அரசின் சாதனை – ருவாண்டாவை வென்ற இந்தியாவின் வேதனை

-

“சார்க் நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் விலைமதிப்பில்லா பரிசு ‘தெற்காசிய செயற்கைக்கோள்’. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற மத்திய அரசின் கோட்பாடானது இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையும் உள்ளடக்கியது. குறிப்பாக நமது அண்டை நாடுகளையும் உள்ளடக்கியது.”
– என கடந்த மே 5, 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது மான்கீ பாத் உரையில் பெருமை பேசினார்.

அண்டை நாடுகளின் வளர்ச்சி மீதான மோடியின் அக்கறை ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 41 குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றனர் என இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அறிக்கை சொல்கிறது. இது பொருளாதார ரீதியில் இந்தியாவை விட பின் தங்கியிருக்கும் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் வங்கதேசத்தைக் காட்டிலும் அதிகம்.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு முன்பருவ பள்ளிக் கல்வி (Pre-School) வழங்குவது, ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவது, நோய்த் தடுப்பு, கற்றல் திறனை வளர்ப்பது மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாக வைத்து கடந்த 1975-ம் ஆண்டு அக்டோபர்-2-ம் தேதி முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 14 லட்சம் அங்கன்வாடிகள் மூலம் 10 கோடி பேர் பயனடைந்து வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் அறிக்கை கூறுகிறது. தற்போது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 41 வருடங்கள் முடிவடைந்துள்ளன.

புள்ளிவிவரங்களின் படி 1975 –களில் 1000-க்கு 130 என இருந்த குழந்தை இறப்பு விகிதமானது தற்போது 41 –ஆக குறைந்துள்ளது. அதாவது குழந்தை இறப்பு விகிதம் சுமார் 68% குறைந்துள்ளது. அதே நேரத்தில் 1975-ன் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டால் தற்போது நாம் சுமார் 2,100% வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் நமது நாட்டில் தான் இன்னமும் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். நமது அண்டை நாடான வங்க தேசத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000-க்கு 31-ஆக உள்ளது. நேபாளத்தில் அந்த எண்ணிக்கை 29 -ஆக உள்ளது. அவ்வளவு ஏன் ?, மிகவும் வறிய ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவைக் (இறப்பு விகிதம் – 1000 -க்கு 31 குழந்தைகள்) காட்டிலும் இந்தியாவில் குழந்தைகள் இறப்புவிகிதம் அதிகமாக உள்ளது. அது மட்டுமில்லை இந்தியாவில் தான் உலகிலேயே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 4 கோடி பேர் வயதுக்கேற்ற உயரத்திற்கு வளராதோராக உள்ளனர். இது சுகாதாரத்துறையில் அரசின் கையாலாகத்தனத்தையே பளிச்சென்று காட்டுகிறது.

ஆனால் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி என ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த 2017-18 ஆண்டு மத்திய பட்ஜெட்டில் சுமார் 15,245 கோடி நி்தி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17 ஆண்டை (14,560 கோடி) ஒப்பிடும் போது 4.7% அதிகம். ஆனால் இதுவும் கூட 2015-16 (16,561 கோடி) பட்ஜெட்டைப் பார்க்கும் போது 1,316 கோடி ரூபாய் குறைவானதாகவே உள்ளது. இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியும் கூட ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டே போகிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்கு அரசு ஒதுக்கும் நிதி விவரம்

இந்தியாவிள் உள்ள குழந்தைகளில் 50% பேர் மட்டுமே அங்கன்வாடிகள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் 41% பேர் மட்டும் தான் உண்மையில் பயனடைகின்றனர் என திட்டக்கமிசனின் அறிக்கை குறிப்பிடுகிறது.

அதுமட்டுமில்லாமல் அங்கன்வாடி ஊழியர்கள் போதுமான அளவில் நியமிக்கப்படமல் அதிக பணிச்சுமையுடன் உள்ளனர். அவர்களுக்கு சரியான ஊதியமும் தரப்படுவது இல்லை. 60% அங்கன்வாடிகள் அவற்றுக்கான சொந்த கட்டிடங்கள் இல்லாமல் உள்ளன.

மேலும் 25 சதவீத அங்கன்வாடிகள் முழுமையாக கட்டப்படாத அல்லது திறந்தவெளி இடங்களில் தான் செயல்பட்டு வருகின்றன. 52% அங்கன்வாடி மையங்கள் கழிப்பறை இல்லாமல் உள்ளன அதே போல 32% மையங்களில் குடிநீர் வசதி கிடையாது. மேலும் பல மையங்களுக்கு போதிய தானியங்களோ அல்லது அவற்றிற்கான பணமோ போய்ச் சேரவில்லை. அத்தியாவசியமான கூடுதல் மருந்துகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் இவற்றுக்காக ஒதுக்கப்படும் பணம் கூட 60% மையங்களுக்கு ஒழுங்காகப் போய்ச் சேரவில்லை.

இப்படி எதை எடுத்தாலும் இல்லை, கிடையாது, பற்றாக்குறை என்று அரசின் இத்திட்டமே சவளைப் பிள்ளையாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தான் நமது வருங்காலத் தலைமுறையினர் மீது அரசு கொண்டிருக்கும் அக்கறை. இப்படி நாட்டின் வருங்காலத் தலைமுறையையே நோஞ்சான்களாக்கி விட்டு பக்கத்து நாடுகளுக்கும் சேர்த்து ராக்கெட் விடுகிறார்களாம் ‘தேஷ்பக்தர்கள்’.

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க