மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 52

மாக்சிம் கார்க்கி
திகைப்பும் சோர்வும் கவிந்து சூழ்ந்த மனத்தோடு தாய் மேலும் இரண்டு நாட்கள் வரை பளு நிறைந்த சோகத்துடன் காத்திருந்தாள். மூன்றாவது நாளன்று சாஷா வந்தாள். நிகலாயிடம் பேசினாள்.

“எல்லாம் தயார். இன்று ஒரு மணிக்கு …” ”அவ்வளவு சீக்கிரமா?” என்று அதிசயித்துக் கேட்டான் அவன்.

“ஏன் கூடாது? ரீபினுக்காகத் துணிமணிகள் தேட வேண்டியதும், அவன் போயிருக்க ஒர் இடம் தேடுவதும்தான் பாக்கி, மற்றதையெல்லாம் கோபுனே செய்து முடித்துவிடுவதாகச் சொல்லிவிட்டான். பின் ஒரே ஒரு தெருவை மட்டும்தான் கடந்து வரவேண்டும். உடனே மாறுவேடத்தில் இருக்கும் நிகலாய் வெஸோவ்ஷிகோவ் அவனைச் சந்தித்து, அவன் மீது ஒரு கோட்டைப் போட்டு மூடி தலையிலே ஒரு தொப்பியையும் வைத்து, அவனை கூட்டிக்கொண்டு போய்விடுவான். நான் சகல துணிமணிகளோடும் காத்திருப்பேன். அவன் வந்ததும் அழைத்துக்கொண்டு போவேன்.”

“பரவாயில்லை . சரி. ஆனால், கோபுன் என்பது யார்?” என்று கேட்டான் நிகலாய்.

“உங்களுக்கு அவனைத் தெரியும். அவனுடைய அறையில்தான் நீங்கள் யந்திரத் தொழிலாளிகளுக்கு வகுப்பு நடத்தினீர்கள்.”

“ஆமாம். ஞாபகமிருக்கிறது. அவன் ஒரு தினுசான ஆசாமி.”

“அவன் ஓர் ஓய்வூதியம் பெறும் சிப்பாய் ஒரு தகரத் தொழிலாளி. அவனுக்கு அறிவு வளர்ச்சி காணாது தான். என்றாலும் எந்த பலாத்காரத்தையும் அவன் முழு மூச்சோடு எதிர்ப்பவன். அவன் ஒரு தினுசான தத்துவார்த்தவாதி” என்று கூறிக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள் சாஷா . தாய் வாய் பேசாது அவள் கூறியதைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் மனத்தில் ஒரு மங்கிய எண்ணம் வளர்ந்தோங்கியது.

“கோபுன் தன் மருமகனையும் விடுவிக்க எண்ணுகிறான். எவ் சென்கோவை ஞாபகமிருக்கிறதா? உங்களுக்குக்கூட அவனைப் பிடித்திருந்ததே. எப்போதுமே அவன் ஓர் அதிசுத்தக்காரப் பகட்டான ஆசாமிதான்.

நிகலாய் தலையை அசைத்தான்.

”அவன் சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டான் என்று மேலும் தொடங்கினாள் சாஷா. ஆனால் நமது முயற்சி வெற்றியடையுமா என்பதில் எனக்குச் சந்தேகம் தோன்றி வருகிறது. எல்லாக் கைதிகளும் வெளியே காற்று வாங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தான் இது நடக்கப்போகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் அவர்கள் இந்த ஏணியைப் பார்த்துவிட்டால், பல பேர் அதை உபயோகித்துத் தப்பித்து ஓட எண்ண லாம். அதுதான் பயமாயிருக்கிறது.”

அவள் தன் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தாள். தாய் அவளருகே சென்றாள்.

”அப்படியானால் அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து காரியத்தையே கெடுத்துவிடுவார்கள்…”

மூன்று பேரும் ஜன்னலருகிலேயே நின்றார்கள். நிகலாய்க்கும் சாஷாவுக்கும் பின்னால் தாய் நின்று கொண்டிருந்தாள். அவர்கள் இருவரது விறுவிறுப்பான பேச்சு தாயின் உள்ளத்தில் பற்பல உணர்ச்சிகளை எழுப்பியது.

”நானும் போகிறேன்” என்று திடீரெனச் சொன்னாள் அவள். ”ஏன்?” என்று கேட்டாள் சாஷா.

”நீங்கள் போக வேண்டாம், அம்மா. ஏதாவது நேர்ந்துவிடக்கூடும். போகாதீர்கள்” என்று போதித்தான் நிகலாய்.

தாய் அவனைப் பார்த்தாள்.

” இல்லை. நான் போகிறேன்” என்று மெதுவாக, ஆனால் உறுதியோடு சொன்னாள் அவள்.

இருவரும் ஒருவரையொருவர் சட்டெனப் பார்த்துக் கொண்டார்கள்.

”எனக்குப் புரிகிறது” என்று சொல்லிக்கொண்டே தோளைக் குலுக்கிக் கொண்டாள் சாஷா. பிறகு அவள் தாயின் பக்கமாகத் திரும்பி, அவளது கையைப் பிடித்தெடுத்து தாயின் உள்ளத்தைத் தொடும் எளிய குரலில் பேசினாள்.

”ஆனால், நீங்கள் சிந்தித்து உணர வேண்டும். அப்படி நடக்குமென்று வீண் நம்பிக்கை கொள்வதில் அர்த்தமே இல்லை…”

”என் அன்பே!” என்று நடுநடுங்கும் கையால் அவளை இழுத்து அணைத்துக் கொண்டே கத்தினாள் தாய். ”என்னையும் கூட்டிச் செல்லுங்கள். நான் ஒன்றும் உங்கள் வழிக்கு இடைஞ்சலாயிருக்க மாட்டேன். நான் போகத்தான் வேண்டும்! தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை.”

“இவள் எங்களோடு வருகிறாள்!” என்று நிகலாயைப் பார்த்துச் சொன்னாள் அந்தப் பெண்.

”அது உங்கள் பாடு” என்று தலையைத் தொங்கவிட்டவாறே பதில் சொன்னான் நிகலாய்.

”ஆனால், நாம் இருவரும் சேர்ந்து போகக்கூடாது. நீங்கள் அந்த வெட்டவெளி மைதானத்துக்கு அப்பாலுள்ள தோட்டத்திலே போய் இருக்கவேண்டியது. அங்கிருந்தே சிறைச் சாலைச் சுவரைக் காண முடியும். ஆனால் யாராவது உங்களைப் பிடித்து ஏதாவது கேள்வி கேட்டால், அங்கு வந்ததற்கு என்ன காரணம் கூறுவீர்கள்?”

“ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய்.

”மறந்துவிடாதீர்கள். சிறைச்சாலைக் காவலாளிகளுக்கு உங்களை நன்றாகத் தெரியும்!” என்று எச்சரித்தாள் சாஷா, “அவர்கள் உங்களை அங்குக் கண்டுவிட்டால்….”

”அவர்கள் என்னைக் காணமாட்டார்கள் !

தாய் தனது உள்ளத்திலே எழுந்த ஒரு நம்பிக்கையினால் புத்துயிர் பெற்றுப் பார்த்தாள். அந்த நம்பிக்கைச் சுடர் அவளது இதயத்திலே கொஞ்சம் கொஞ்சமாகக் கனன்று விரிந்தது. இப்போது திடீரென்று ஒரு ஜுர வேகத்துடன் பிரகாசமாக விம்மியெழுந்து எரிந்தது.

“ஒரு வேளை அவனும் கூட ”

ஒரு மணி நேரம் கழித்துத் தாய் சிறைச்சாலைக்குப் பின்புறமுள்ள வெட்ட வெளியில் இருந்தாள். ஊசிக்காற்று சுள்ளென்று வீசியது. அந்தக் காற்று அவளது உடைகளைப் பிளந்து புகுந்து வீசியது. உறைந்து போன தரையில் மோதியறைந்தது. அவள் சென்றுகொண்டிருந்த தோட்டத்தைச் சுற்றியுள்ள முள்வேலியை அசைத்தாட்டியது. அதன் பின்னர் உருண்டோடிச் சென்று சிறைச்சாலைச் சுவர் மீது முழுவேகத்தோடும் முட்டி மோதியது. சிறைச்சாலைக்குள்ளே எழும் மனிதக் குரல்களை அந்தக் காற்று வாரியெடுத்து வான வெளியில், நிலவின் தொலை முகட்டை அவ்வப்போது ஒரு கணம் காட்டி காட்டிப் பறந்தோடும் மேக மண்டலத்தில் சுழற்றிவிட்டெறிந்தது.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

தாய்க்குப் பின்னால் அந்தத் தோட்டம், முன்புறத்தில் இடுகாடு. அவள் நின்ற இடத்திலிருந்து வலது புறமாக சுமார் எழுபது அடி தூரத்தில் சிறைச்சாலை. இடுகாட்டுக்கு அருகே ஒரு சிப்பாய் ஒரு குதிரையை நடத்திக் கூட்டிக்கொண்டு போனான். அவனுக்கு அருகே இன்னொரு சிப்பாய் தரையைக் காலால் மிதித்துக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும். சிரித்துக்கொண்டும் . சீட்டியடித்துக் கொண்டும் நின்றான். சிறைச்சாலையின் அருகே ஆள் நடமாட்டமே இல்லை.

அவர்களைக் கடந்து, இடுகாட்டை வளைந்து சூழ்ந்த வேலிப்புறமாக, தாய் மெதுவாக நடந்து சென்றாள். போகும்போது முன்னும் பின்னும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே சென்றாள். திடீரென அவளது கால்கள் பலமிழந்து உழன்றன. தரையோடு தரையாய் உறைந்து போன மாதிரி கனத்து விறைத்தன. ஒரு மூலையிலிருந்து விளக்கேற்றுபவர்கள் வருவது போலவே தன் தோள்மீது ஓர் ஏணியைச் சுமந்து கொண்டே அவசர அவசரமாகக் குனிந்து நடந்து வந்தான். ஒருவன், பயத்தினால் கண்கள் படபடக்க, தாய் அந்தச் சிப்பாய்களைப் பார்த்தாள். அவர்கள் ஓர் இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்; குதிரை அவர்களைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. ஏணியோடு வந்து கொண்டிருந்த அந்த மனிதனை அவள் பார்த்தாள். அவன் அதற்குள் ஏணியைச் சுவர் மீது சாய்த்து அதன்மீது நிதானமாக ஏறிக்கொண்டிருந்தான். அவன் சிறைச்சாலை முகப்பைப் பார்த்துக் கையை ஆட்டிவிட்டு, விறுவிறென்று கீழிறங்கி, சிறைச்சாலையின் மூலையைக் கடந்து சென்று மறைந்து போனான். தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது. ஒவ்வொரு விநாடியும் நிலையாய் நிற்பதுபோல் தோன்றியது. சிறைச்சாலையின் சுவர் கறை படிந்து. ஆங்காங்கே காரை விழுந்து உள்ளுக்குள் உள்ள செங்கல்லை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அதன் நிறம் மாறிப்போன கறுத்த பின்னணியில் அந்த ஏணி அவ்வளவாகக் கண்ணுக்குத் தெரியவில்லை. திடீரென்று ஒரு கரிய தலை சிறைச் சுவருக்கு மேலே தெரிந்தது. அப்புறம் அந்த உருவம் சுவரின்மீது தத்தித் தவழ்ந்து, மறுபுறம் இறங்கத் தொடங்கியது. அடுத்தாற்போல் ஒரு கோணல்மாணலான தொப்பி தலையை நீட்டியது. ஒரு கரிய கோணல் பூமியிலே உருண்டு விழுந்தது; மறு கணம் அது எழுந்து நின்று மூலையை நோக்கி ஓடி மறைந்தது. மிகயில் நிமிர்ந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான், தலையை ஆட்டிக்கொண்டான்…..”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க