ருதலைப்பட்சமாக அமைந்த தீர்ப்புகள் பல உண்டு. சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்துகொண்டு குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்த தீர்ப்புகளும் பல உண்டு. இத்தகைய இழிபுகழ் தீர்ப்புகளில் விஞ்சி நிற்பது மண்டபத்தில் எழுதப்பட்டு வாசிக்கப்படும் தீர்ப்புகள்தான் – அவை எண்ணிக்கையில் குறைவு என்றபோதும். அப்படியான தகுதியைப் பெற்றிருக்கிறது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு.

இப்போர்விமானக் கொள்முதல் நடைமுறை, விமானத்தின் விலை, இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது குறித்தெல்லாம் உச்சநீதி மன்றத்திடம் என்னென்ன விளக்கங்களை மோடி அரசு அளித்திருந்ததோ, அதனை அச்சுப் பிசகாமல் தீர்ப்பில் குறிப்பிட்டு நரேந்திர மோடியை ஊழல்-முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.

“பிழையான” தீர்ப்பை அளித்ததில் நீதிபதி குமாரசாமிதான் கில்லாடி என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இதோ நாங்களும் இருக்கிறோம் எனக் கோதாவில் குதித்திருக்கிறார்கள், ரஃபேல் தீர்ப்பை அளித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகிய மூவரும்.
இந்தத் தீர்ப்பை ஈயடிச்சான் காப்பி (cut and paste) தீர்ப்பு என விமர்சித்திருக்கிறார், பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் ஷோரி. அப்படிப்பட்ட இத்தீர்ப்பைக் கீறிப் பார்ப்பதற்கு முன், ஊழலுக்கு ஒரு புதிய தன்மையை, பரிணாமத்தை அளித்திருக்கும் இந்த வழக்கின் பின்னணியைச் சுருக்கமாக வாசகர்களுக்கு நினைவுபடுத்திவிடலாம்.

126, 36-ஆக சுருங்கிப்போனதன் பின்னணி

முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டு, அதில் 18 போர் விமானங்களைப் பறக்கும் நிலையில் பெறுவதென்றும், மீதமுள்ள 108 விமானங்களை இந்தியாவில், பெங்களூரிலுள்ள பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் தயாரிப்பதென்றும், அதற்குரிய தொழில்நுட்பங்களை டஸால்ட் நிறுவனம் இந்தியாவிற்குத் தருவதோடு, விமானங்கள் அனைத்திற்கும் சட்டப்படியான தயாரிப்பு உத்தரவாதம் (Sovereign guarantee) அளிக்க வேண்டுமென்றும் விதிகளும், நிபந்தனைகளும் உருவாக்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தம் முடிவாகும் நிலையில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கூட்டணி ஆட்சி தோற்றுப்போய், நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.

உச்சநீதி மன்ற நீதிபதி கே.எம். ஜோசப்.

எனினும், 126 ரஃபேல் போர்விமானங்களை வாங்கும் முந்தைய ஆட்சியின் முடிவு கைவிடப்படாமல், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவந்தன. மார்ச் 2015-இல் ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடிய நிலையை எட்டிவிட்டதாக நாடாளுமன்றத்திலும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 2015-இல் பிரான்சு நாட்டுக்குச் சென்ற நரேந்திர மோடி, அந்நாட்டுத் தலைநகர் பாரீசில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், டஸால்ட் நிறுவனத்திடமிருந்து பறக்கும் நிலையில் 36 போர் விமானங்களை 720 கோடி யூரோ டாலர்கள் விலையில் வாங்கும் முடிவை அறிவித்தார்.

126 போர் விமானங்களை வாங்குவது என்ற பழைய முடிவு கைவிடப்பட்டு, புதிய ஒப்பந்தம் முடிவாகியிருப்பது அப்பொழுதுதான் இந்திய இராணுவ அமைச்சருக்கே தெரிய வந்தது. அப்பொழுது இராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரை மோடி பாரீசுக்குக் கூட்டிச் செல்லவில்லை. அந்தச் சமயத்தில் மனோகர் பாரிக்கர், தனது சொந்த மாநிலமான கோவாவில் ஒரு மீன் கடையைத் திறந்துவைத்துக் கொண்டிருந்தார். எனினும், தனது முகத்தில் வழிந்த அசடையும், அதிர்ச்சியையும் வழித்துப்போட்டுவிட்டு, இது பிரதம மந்திரியின் முடிவு. நான் அதனை ஆதரிப்பேன்” என கோவாவில் மீன்கடையின் முன்நின்றபடி அறிவித்தார்.

மேலும், முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 715 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த ஒரு விமானத்தின் விலை, மோடியின் புதிய ஒப்பந்தத்தில் 1,650 கோடி ரூபாயாக அதிகரித்தது; பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் கழித்துக் கட்டப்பட்டு, அனில் அம்பானியின் நிறுவனம் பங்குதாரராக இணைத்துக் கொள்ளப்பட்ட விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கசிந்து வெளியே வந்தன.

உச்சநீதி மன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்.

இப்புதிய ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் சந்தேகத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் மோடியும் அவரது சகாக்களும் பொதுவெளியில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும்கூட நியாயமான விளக்கங்களை அளிக்க மறுத்தனர். மாறாக, தேசப் பாதுகாப்பு என்ற பூச்சாண்டியைக் காட்டியும் பொய்களை அவிழ்த்துவிட்டும் இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை மூடிமறைத்தனர். ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, கடந்த மூன்றாண்டுகளாகவே மோடி அரசும் பா.ஜ.க.வும் இந்த சித்து விளையாட்டை நடத்திவந்தனர். கடந்த காங்கிரசு ஆட்சியில் நடந்த ஊழல்களை அக்குவேறு ஆணி வேறாகத் துணிந்து அம்பலப்படுத்திய தேசியப் பத்திரிகைகள், ரஃபேல் ஊழல் குறித்து கண்டும் காணாமல் நடந்துகொண்டன.

இந்தப் பின்னணியில்தான் மோடி அரசு அறிவித்திருக்கும் ரஃபேல் போர்விமான கொள்முதல் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண் ஆகிய மூவர் இணைந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு முன்பே இக்கொள்முதல் குறித்து விசாரணை நடத்தக் கோரி மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை நடத்திய உச்சநீதி மன்றம், கொள்முதல் நடைமுறையில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை, எந்தவொரு தனிநபருக்கும் சலுகை காட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுத்து விட்டது.

சாகடிக்கப்பட்ட உண்மைகள்

நரேந்திர மோடி தன்னிச்சையாக அறிவித்த புதிய கொள்முதலில் ஒரு விமானத்தின் விலை முந்தைய ஒப்பந்த விலையைவிட இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த மர்மம்தான் இந்த வழக்கின் மையமான புள்ளி. இந்த முடிச்சை அவிழ்த்துவிட்டால், மீதமுள்ள இரண்டு முடிச்சுகளும் – இராணுவ அமைச்சருக்கே தெரியாமல் கொள்முதலை அறிவித்தது, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸைக் கழட்டிவிட்டு அனில் அம்பானியைப் பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டது – தானாகவே அவிழ்ந்துவிடும்.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்களுக்குள் நுழையமாட்டோம் எனக் கூறி, வழக்கின் அடிப்படையையே ஆட்டங்காண வைத்தனர். பின்னர், விலை உள்ளிட்ட விவரங்கள் பற்றிய அறிக்கையை மூடிமுத்திரையிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்திடம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். எனினும், மோடி அரசு நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையின் நகலோ, விவரங்களோ வழக்கைத் தொடுத்த மனுதாரர்களுக்குத் தரப்படவில்லை. தேசப் பாதுகாப்பு கருதி சில விடயங்கள் இரகசியமாக இருக்க வேண்டும்” என இந்த அநீதிக்குப் பொழிப்புரை கூறினார்கள் நீதிபதிகள். விமானக் கொள்முதல் நடைமுறை, விலை குறித்து அரசு அளித்த அறிக்கைக்குப் பதில் அளிக்க மனுதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில்தான் இத்தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில் பிரெஞ்சு அதிபருடன் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி இராணுவ அமைச்சருக்கேகூடத் தெரிவிக்காமல், தன்னிச்சையாக பாரீசில் அறிவித்த 36 போர்விமானங்கள் வாங்கும் முடிவை, சிறிய விதிமீறல்’’தான் எனச் சப்பைகட்டி நியாயப்படுத்தியிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 126 போர் விமானங்களை வாங்கும் பழைய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடிவுக்கே வராமல் முட்டுச்சந்தில் நின்றுபோனதால்தான், புதிய ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டதாக”த் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

போரின்போதுதான் உண்மைகள் கொல்லப்படும் என்பார்கள். ஆனால், ஆயுதத் தளவாடங்களை வாங்குவதில்கூட உண்மையைத் துணிந்து கொன்றுபோட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

நரேந்திர மோடி புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதற்குப் பத்து நாட்கள் முன்புதான், அதாவது மார்ச் 28, 2015 அன்றுதான் டஸால்ட் நிறுவன செயல் தலைவர் எரிக் ட்ராப்பியர், 126 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக அறிவித்தார்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.சுவர்ண ராஜூ, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டஸால்ட் நிறுவனங்களுக்கு இடையேயான வேலைப்பகிர்வு ஒப்பந்தம் (workshare agreement)கையெழுத்தாகி, அதனைப் பழைய ஒப்பந்தம் ரத்தாவதற்கு முன்பே அரசிடம் ஒப்படைத்துவிட்டதாக” செப்.2018-இல் பகிரங்கமாக வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.

இவையிரண்டும் பழைய ஒப்பந்தம் செயலுக்கு வரும் நிலையை எட்டிவிட்டதைக் காட்டுகிறதேயொழிய, நீதிபதிகள் குறிப்பிடுவதைப் போல மூன்றாண்டுகளாக முடிவுக்கு வராமல் முட்டுச்சந்தில் சிக்கியிருப்பதைக் காட்டவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கில் உண்மையைக் கூறவில்லை. மாறாக, பா.ஜ.க.வின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

டஸால்ட் நிறுவனத் தலைவர் எரிக் ட்ராப்பியர், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி மற்றும் பிரான்ஸ் நாட்டு இராணுவ அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி.

போர்ச்சூழல் போன்ற அவசர, அசாதாரணமான நிலைமைகளில் மட்டும்தான் ஆயுதத் தளவாடங்கள் வாங்கும் முடிவுகளைத் தன்னிச்சையாக பிரதம மந்திரி எடுக்க முடியுமே தவிர, அமைதிக் காலங்களில் தளவாடங்களை வாங்குவதற்கான முறையீடுகள் அந்தந்தப் படைப்பிரிவுகளிலிருந்து வந்த பிறகே, அரசாங்கத் தலைமை முடிவெடுக்க முடியும். நரேந்திர மோடி இந்த விதிமுறையை மீறியிருப்பதோடு, தனது தன்னிச்சையான முடிவுக்கு இராணுவ அமைச்சர், இராணுவ அதிகாரிகளை ரப்பர் ஸ்டாம்புகளாகப் பயன்படுத்தி ஒப்புதலும் பெற்றிருக்கிறார்.

அவர்கள் போட்டுக்கொண்ட சட்டதிட்டங்களை அவர்களே ஒருபொருட்டாக மதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டிய உச்சநீதி மன்றம், இந்த விதிமீறலின் பின்னுள்ள உள்நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டிய உச்சநீதி மன்றம், அதற்குப் பதிலாக நரேந்திர மோடியின் களவாணித்தனத்தைச் சிறிய விதிமீறல் எனச் செல்லமாகக் குட்டிச் சென்றுவிட்டது.

உச்ச நீதிமன்றம் சொன்ன வாழைப்பழக் கதை

“அம்பானியின் நிறுவனத்தைப் பங்குதாரராகத் தேர்ந்தெடுத்தது டஸால்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவு. அதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை” என பா.ஜ.க. கும்பல் கூறிவரும் பொய்யை, பிரான்சு நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்ஸுவா ஹொலாந்த் அளித்த பேட்டியில் போட்டு உடைத்தார். அனில் அம்பானி நிறுவனத்தை மோடி அரசுதான் பரிந்துரைத்தது; அந்நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர டஸால்ட் நிறுவனத்திற்கு வேறு வழியில்லை” என்பதுதான் அவர் அளித்த நேர்காணலின் சாரம். உச்சநீதிமன்றமோ முன்னாள் பிரான்சு அதிபர் கூறியதை, யாரோ தெருவில் செல்லும் நபர் கூறியதைப் போல ஒதுக்கித்தள்ளியதோடு, ஹொலந்த் கூறியதை அனைத்துத் தரப்பும் மறுத்துள்ளன என எதிர்வாதத் தையும் தனது தீர்ப்பில் முன்வைத்தது.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
நூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே

அதனை மறுத்தவர்கள் யார்? மோடி அரசு, டஸால்ட் நிறுவனம் மற்றும் அனில் அம்பானி. குற்றத்தின் நிழல் படிந்தவர்கள் மறுத்ததற்கு முக்கியத்துவம் தந்திருக்கும் உச்சநீதி மன்றம், முன்னாள் அதிபரின் கூற்றுக்கு, அதுவும் நரேந்திர மோடி புதிய ஒப்பந்தம் போட்டுக்கொள்வதற்கு யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரோ, அவரது நேர்காணலை அலட்சியப்படுத்துகிறதென்றால், நீதிபதிகளின் நடுநிலையும் நேர்மையும் நம்மை நடுங்கச் செய்கிறது! ஸ்வீடன் வானொலியில் வெளியான செய்தியொன்றை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வு செய்த பிறகுதான் போஃபர்ஸ் ஊழல், அதன் முழு பரிமாணத்தோடு அம்பலமானது. ரஃபேல் விமான பேர ஊழலிலோ புலனாய்வையே முடக்கிப் போடுகிறது உச்சநீதி மன்றம்.

“ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனம் தான் தேர்ந்தெடுக்கும் இந்தியப் பங்குதாரரின் தகுதிகளோடு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, அந்த இந்திய நிறுவனத்தின் ஆறு மாத வேலையறிக்கையை அளிக்க வேண்டும். அதனை ஆயுதக் கொள்முதல் குழுவின் மேலாளர் ஆய்வு செய்ய வேண்டும். இராணுவ அமைச்சர் தன் கைப்பட அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றவாறு ஆயுத பேரக் கொள்முதலில் பங்குதாரரை இணைத்துக் கொள்வதற்குப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

பத்திரிகையாளரும் பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சருமான அருண் ஷோரி மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.

நரேந்திர மோடி புதிய ஒப்பந்தம் குறித்து அறிவித்த பிறகுதான் இந்த விதிமுறைகளுள் பல முன்தேதியிட்டு மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை அம்பலப்படுத்தினாலும், அதனை உச்சநீதி மன்றம் கண்டுகொள்ள மறுத்துவிட்டது. எனினும், பங்குதாரராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் குறிப்பிட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது இன்றுவரை கைவிடப்படவில்லை.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களையே தயாரித்து அளித்துவரும் நிலையில், அனில் அம்பானியின் நிறுவனமோ இராணுவத்திற்காக ஒரு குண்டூசியைக்கூட இதுவரை தயாரித்து அளித்ததில்லை. அந்த நிறுவனமே புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு ஒரு சிலநாட்கள் முன்புதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட உப்புமா கம்பெனியிடம் ரஃபேல் போர்விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் முடிவு திரைமறைவு பேரங்கள் இன்றி நடந்திருக்காது.

இவை அனைத்தையும் பார்க்க மறுத்த உச்ச நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டிலேயே டஸால்ட் நிறுவனம் அம்பானி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டது என பா.ஜ.க. கூறிவரும் தகிடுதத்தத்தைத் தனது தீர்ப்பிலும் வாந்தி எடுத்திருக்கிறது. பழைய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது, மூத்தவர் முகேஷ் அம்பானியின் நிறுவனம். புதிய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இளையவர் அனில் அம்பானியின் நிறுவனம். இந்த வேறுபாடை மறைத்துவிட்டு அந்த அம்பானியும் இந்த அம்பானியும் ஒன்றுதான் என பா.ஜ.க.வோடு சேர்ந்துகொண்டு உச்சநீதி மன்றமும் சாதிக்கிறது. கவுண்டமணி – செந்தில் ஜோடியின் வாழைப்பழக் கதை தோற்றது போங்கள்!

விலையைச் சொன்னால் ஆபத்து! யாருக்கு?

ஆயுதத் தளவாடங்களின் விலையைத் தீர்மானிக்க விலை தீர்மானிக்கும் குழு, ஆயுதத் தளவாடக் கொள்முதல் குழு எனப் பல அடுக்குகள் உள்ளன. ஆனால், 36 ரஃபேல் போர்விமானங்கள் என்ன விலைக்கு வாங்குவது என்பதை இந்தக் குழுக்கள் தீர்மானிக்கவில்லை. இராணுவ அமைச்சரின் தலைமையில் செயல்பட்டுவரும் ஆயுதத் தளவாடக் கொள்முதல் குழு இப்போர் விமானங்களின் விலையைத் தீர்மானிப்பதைப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் தாரைவாரத்தது. எனது நினைவில் இருந்து சொல்வதென்றால், இதுவொரு விசித்திரமான, விநோதமான முடிவு” எனக் கொள்முதல் குழுவின் முடிவை விமர்சிக்கிறார், இராணுவ அமைச்சக முன்னாள் உயர் அதிகாரி சுதான்ஷு மோகந்தி.

சொத்துக் குவிப்பு குற்றவாளி ஜெயாவை நிரபராதி என விடுதலை செய்த கணிதப்புலி குமாரசாமி.

விலையைத் தீர்மானிக்கும் குழுவில் இருந்த மூன்று இராணுவ அதிகாரிகள் 36 போர் விமானங்களை 520 கோடி யூரோ டாலர்கள் என்ற விலையில் வாங்கலாம் எனப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவோ விலையைத் தன்னிச்சையாக 820 கோடி யூரோ டாலர்கள் என அதிகரித்துப் பின்னர் அதனை 720 கோடி யூரோ டாலர்களாகக் குறைத்திருக்கிறது. இன்னொருபுறம் 520 கோடி யூரோ டாலர்கள் என்ற விலையில் வாங்கலாம் எனப் பரிந்துரைத்த மூன்று அதிகாரிகளையும் விலையைத் தீர்மானிக்கும் குழுவில் இருந்து அதிரடியாகக் கழட்டியும்விட்டது, மோடி அரசு.

பொதுவெளியில் காணக் கிடைக்கும் இந்தத் தகவல்களை உச்சநீதி மன்றம் புலனாய்விற்கும் உட்படுத்தவில்லை; பொருட்டாக எடுத்துக் கொள்ளவுமில்லை. மாறாக, விலை விபரங்களைப் பொதுவெளியில் தெரிவிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும்” என மோடி அரசிற்குப் பின்பாட்டு பாடியது. இன்னொருபுறத்தில், விமான விலை விவரங்களை மைய தணிக்கைத் துறையிடம் அரசு அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில் தணிக்கைத் துறை அளித்த அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்குக் குழு ஆய்வு செய்திருக்கிறது. அந்த அறிக்கை சுருக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவெளியிலும் காணக் கிடைக்கிறது” எனத் தீர்ப்பில் சுத்தமான ஆங்கிலத்தில் எழுதி, ஏறத்தாழ 58,000 கோடி ரூபாய் விலையில் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு செய்திருப்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டுவிட்டதைப் போன்ற சித்திரத்தை உருவாக்கியிருக்கிறது.

மைய தணிக்கைத் துறை ரஃபேல் போர் விமான விலை குறித்து எந்தவொரு அறிக்கையையும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவிற்கு இதுநாள்வரை அளிக்கவில்லை என்பதே உண்மை. வைக்காத அறிக்கையை நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்துவிட்டதாகவும், அந்த அறிக்கை சுருக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பதோடு, பொதுவெளியிலும் காணக் கிடைப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதெல்லாம் மாபெரும் பொய், மோசடி. தீர்ப்பு வெளியானவுடனேயே இந்தப் பித்தலாட்டத்தனத்தை காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் அம்பலப்படுத்தி, மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டதாகக் குற்றஞ்சுமத்தினர்.

குட்டு அம்பலப்பட்டவுடன் யோக்கியனாக அவதாரமெடுத்த மோடி அரசு, விலை விபரங்களை தணிக்கைத் துறையிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்” என்று மட்டும்தான் அறிக்கையில் கூறியிருக்கிறோம். மற்றதெல்லாம், தணிக்கைத் துறை ஆய்வு செய்த பின் நடைபெறும் வழக்கமான நடைமுறைகளைப் பற்றி, அதாவது, சி.ஏ.ஜி. அறிக்கை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது, அந்த அறிக்கையின் சுருக்கப்பட்ட வடிவம் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுகிறது” எனப் பொதுவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறோம். உச்சநீதி மன்றம் நாங்கள் கூறிய பொதுவான நடைமுறைகளை, நடந்துவிட்டதாக, இறந்த காலத்தில்” தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. எனவே, இந்த இலக்கணப் பிழையைத் திருத்தித் தீர்ப்பை வெளியிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கிறது.

ஜெயாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி குமாரசாமிக்கு கணக்கில் கோளாறு என்றால், ரஃபேல் போர்விமான ஊழல் வழக்கில் இருந்து மோடியை விடுவித்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆங்கில இலக்கணத்தில் கோளாறு போலும்!

36 ரஃபேல் போர்விமானக் கொள்முதல் குறித்து உச்சநீதி மன்றத்திடம் அளிக்கப்பட்டிருக்கும் இரகசிய அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது இரண்டு தரப்புக்கு மட்டும்தான் தெரியும். ஒன்று மோடி அரசு, மற்றொன்று தீர்ப்பை எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

மோடி அரசு கூறுவது போல அந்த அறிக்கை இருந்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிழையான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள் என்பது நிச்சயம். பிழையான தீர்ப்பின் மூலம் ஊழல், முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து மோடியைப் பாதுகாக்க வேண்டிய காரணம், நோக்கம் ஆகியவை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மாறாக, அறிக்கையில் இருப்பதைத்தான் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனக் கொண்டால், மோடி அரசு உச்சநீதி மன்றத்தை ஏமாற்றிவிட்டது என்பது நிச்சயம். அதேசமயம், மோடி அரசு அளித்த விவரங்களை கனம் நீதிபதிகள், தமது அறிவைக் கொண்டு உண்மையா, பொய்யா என ஏன் ஆராய்ந்து பார்க்கவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். நெற்றிக் கண்ணைத் திறந்தாலும், குற்றம் குற்றம்தானே!

ஆக, ரஃபேல் போர்விமானக் கொள்முதல் வழக்கில் மோடி அரசு மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிற்கவில்லை. பிழையான தீர்ப்பின் மூலம் மோடியை விடுவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள்.

செல்வம்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க