மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 53 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
“அவர்கள் சொல்வதைக் கேள்” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான்.

“பியோதர் மாசின், பதில் சொல்லுங்கள்…” ”முடியாது. சொல்லமாட்டேன்” என்று துள்ளிக்கொண்டு கூறினான் பியோதர். அவனது முகம் சிவந்து போய்விட்டது. கண்கள் பிரகாசமடைந்தன: என்ன காரணத்தினாலோ அவன் தன் கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டிருந்தான்.

சிஸோவ் மூச்சடைத்துப் போனான். தாயின் கண்கள் வியப்பினால் அகலவிரிந்தன.

”எனக்காக வக்காலத்துப் பேச நான் வக்கீலை அமர்த்தவும் இல்லை: நான் எதுவும் சொல்லவும் மறுக்கிறேன். இந்த விசாரணையே சட்ட விரோதமானது என நான் மதிக்கிறேன். நீங்களெல்லாம் யார்? எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா? இல்லை. அவர்கள் உங்களுக்கு உரிமை தரவில்லை. உங்களது அதிகாரத்தையே நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்!”

அவன் உட்கார்ந்தான், தனது கன்றிச் சிவந்த முகத்தை அந்திரேயின் தோளுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டான்.

அந்தக் கொழுத்த நீதிபதி பிரதம நீதிபதியை நோக்கித் தலையை அசைத்து, காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். வெளுத்த முகம் கொண்ட நீதிபதி தம் கண்களைத் திறந்து, கைதிகளைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, முன்னாலுள்ள காகிதத்தில் ஏதோ குறித்துக்கொண்டார். ஜில்லா அதிகாரி தலையை அசைத்தார், தமது காலை நீட்டி தொந்தியைத் தொடைமீது சாய்த்து, அதைக் கைகளால் மூடிக்கொண்டார். தனது தலையைத் திருப்பாமலே, அந்தக் கிழ நீதிபதி தமது உடம்பு முழுவதையுமே திருப்பி, அந்த வெளுத்தமுக நீதிபதியைப் பார்த்து அவரிடம் ஏதோ ரகசியம் பேசினார். அந்த உபநீதிபதி அவர் கூறியதை வணங்கிய தலையோடு காதில் வாங்கிக் கொண்டார். பிரபு வம்சத் தலைவர் அரசாங்க வக்கீலிடம் என்னவோ சொன்னார்; அதை நகர மேயரும் தம் கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே கேட்டார். மீண்டும் அந்தப் பிரதம நீதிபதி மங்கிய குரலில் பேசத் தொடங்கினார்.

”அவன் அவர்களை வெட்டிப் பேசினான் பார்த்தாயா?” என்று தாயை நோக்கி வியப்போடு கூறினான் கிஸோவ். “அவன்தான் இவர்கள் எல்லோரிலும் கெட்டிக்காரன்’

அவன் சொன்னதைப் புரிந்துக்கொள்ளாமலேயே புன்னகை புரிந்தாள் தாய். அங்கு நடக்கும் சகல காரியங்களும், அவர்களையெல்லாம் கூண்டோடு நசுக்கித் தள்ளும் மகா பயங்கரத்துக்கான, வேண்டாத வீண் அறிகுறிகளே என்று அவள் கருதினாள். ஆனால், பாவெலும் அந்திரேயும் பேசிய பேச்சுக்கள் நீதிமன்றத்தில் பேசுவது போல் இல்லாமல், தொழிலாளர் குடியிருப்பில், தமது சிறிய வீட்டுக்குள் பேசிய பேச்சுப்போல் பயமற்றும் பலத்தோடும் ஒலித்தன. பியோதரின் உணர்ச்சிவசமான உத்வேகப் பேச்சைக் கேட்டு அவள் பரபரப்படைந்தாள். அந்த விசாரணையில் ஏதோ ஒரு துணிந்த காரிய சாதனை நடைபெறுவது போல் தோன்றியது. தனக்குப் பின்னாலுள்ள ஜனங்களைப் பார்த்தபோது, அவ்வித உணர்ச்சி தனக்கு மட்டுமே ஏற்படவில்லை. அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் கண்டுகொண்டாள் தாய்.

”உங்கள் அபிப்பிராயம் என்ன?’ என்று அந்தக் கிழ நீதிபதி கேட்டார்.

அந்த வழுக்கைத் தலை அரசாங்க வக்கீல் எழுந்து நின்றார். ஒரு கையை மேஜை மீது ஊன்றியவாறே படபடவென்று புள்ளிவிவரங்களை அடுக்கிப் பேசத் தொடங்கிவிட்டார். அவரது பேச்சில் எவ்விதப் பயங்கரமும் இல்லை .

அதே சமயத்தில் ஏதோ ஒரு வறண்ட குத்தலான பயபீதி உணர்ச்சி தாயின் உள்ளத்திலே புகுந்து உறுத்தியது. கையை உயர்த்திக் காட்டாமல், வஞ்சம் கூறிக் கத்தாமல், ஆனால் அதே சமயத்தில் கண்ணுக்குத் தெரியாமல், புலனுக்கும் வசப்படாமல், குமுறி வளர்ந்து வரும் ஒரு வெம்பகை உணர்ச்சி அந்த நீதிமன்ற சூழ்நிலையிலே தொனித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தறிந்தாள். அந்தக் கொடும் பகை நீதிபதிகளின் முன்னிலையிலேயே வட்டமிட்டு அவர்களுக்கு வெளியில் நடைபெறும் காரியங்கள் எதுவும் அவர்கள் மனத்துக்குள் புகுந்துவிடாதபடி, அவர்கள் உள்ளத்தைக் கவர்ந்து சூழ்ந்து காப்பி மூடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அவள் அந்த நீதிபதிகளைப் பார்த்தாள்; அவர்களது பார்வையிலிருந்து அவளால் எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவள் எதிர்பார்த்தது போல், அவர்கள் பாவெலின் மீதோ பியோதர் மீதோ கோபம் கொள்ளவில்லை. அவர்களை அவமானப்படுத்திப் பேசவில்லை. தாங்கள் கேட்ட கேள்விகளுக்கே அவர்கள் எந்த முக்கியத்துவமும் அளித்ததாகவும் தெரியவில்லை. அவர்களது குரல் விருப்பற்ற குரலாக ஒலித்தது. நமது கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களையும் அவர்கள் வேண்டா வெறுப்பாகத்தான் கேட்டுத் தீர்த்தார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள் போலவும் எல்லா விஷயத்தையும் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தவர்கள் போலவும் காணப்பட்டார்கள்.

இப்போது அவர்கள் முன்னால் ஒரு போலீஸ்காரன் வந்தான். ஆழ்ந்த குரலில் சொன்னான்:

“பாவெல் விலாசவ்தான் இவர்களில் பிரதம கிளர்ச்சிக்காரன் என்று சொல்லப்படுகிறது…”

“நயோத்காவைப் பற்றி என்ன?” என்று அந்த கொழுத்த நீதிபதி சோம்பலுடன் கேட்டார்.

“அவனும்…” ஒரு வக்கீல் எழுந்திருந்தார். ”நான் ஒரு வார்த்தை சொல்லலாமா?” என்று கேட்டார்.

“ஏதாவது மறுத்துக் கூறவேண்டுமா?” என்று பிரதம நீதிபதி கேட்டார்.

அத்தனை நீதிபதிகளும் ஏதோ நோய்வாய்ப்பட்டுத் துன்புறுவது போல் தாய்க்குத் தோன்றியது. அவர்களது பேச்சிலும் நடத்தையிலும் ஏதோ ஒரு சீக்கான அலுப்புணர்ச்சி பிரதிபலிப்பதுபோல் தோன்றியது. முகங்களும் அந்த அலுப்பையும் ஆயாசத்தையுமே பிரதிபலித்தன. அவர்களது உத்தியோக உடைகள், நீதிமன்றம், அரசியல் போலீஸ்காரர்கள், வக்கீல்கள், நாற்காலிகளில் உட்கார்ந்து கேள்வி கேட்பது, அதற்கு வரும் பதில்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்படியான தேவை – எல்லாவற்றையுமே அவர்கள் ஒரு நிர்ப்பந்தவசமான தொல்லையாகத்தான் கருதினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

தாய்க்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்த அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரி அவர்களுக்கு முன்னால் வந்து நின்றான்; பாவெலைப்பற்றியும் அந்திரேயைப்பற்றியும் தனக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் உரத்தக் குரலில் நீட்டி நீட்டிப் பேசினான்.

”உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.

கைதிக்கூண்டுகளுக்குப் பின்னால் இருப்பவர்களை, அவர்களைப் பற்றிய பயமும் இல்லாமல், அவர்கள் மீது அனுதாபமும் இல்லாமல் ஏறிட்டுப் பார்த்தாள் தாய். அவர்கள் மீது அவள் அனுதாபம் கொள்ள முடியாது. அவள் மனதில் அவர்கள் வியப்புணர்ச்சியைத்தான் உண்டாக்கினார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் அவளது உள்ளத்தில் ஓர் அன்புணர்ச்சி அலை பாய்ந்து சிலிர்த்துப் பரவியது. அந்த வியப்புணர்ச்சியோ அமைதியாயிருந்தது. அந்தப் பரவச ஆனந்தம் தெளிவோடிருந்தது. சுவருக்கு எதிராக அவர்கள் உறுதியோடும் இளமையோடும் உட்கார்ந்திருந்தார்கள். சாட்சிகளின் கிளிப்பிள்ளைப் பேச்சையும், நீதிபதிகளையும், சர்க்கார் வக்கீலோடு மற்ற வக்கீல்கள் பேசும் விவாதப் பேச்சுக்களையும், அவர்கள் கவனித்ததாகவே தெரியவில்லை, இடையிடையே அவர்களில் யாராவது ஒருவன் வெறுப்பாக சிரித்துக்கொண்டே, தனது தோழர்களைப் பார்த்து ஏதாவது கிண்டலாகச் சொல்வான். அந்தத் தோழர்களின் முகங்களும் அந்தக் கிண்டலைப் பிரதிபலித்துப் புன்னகை புரிந்தன. குற்றவாளிகளின் தரப்பில் பேசிக்கொண்டிருந்த வக்கீல் ஒருவரோடு, பாவெலும் அந்திரேயும் இடையிடையே ஏதேதோ மெதுவாகப் பேசினார்கள். அந்த வக்கீலை முந்தின நாள் இரவு நிகலாயின் வீட்டில் தாய் பார்த்திருந்தாள்.

மற்றவர்களை விட உணர்ச்சிக்கு ஆளாகி நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த மாசின் அவர்களது பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். சமயங்களில் சமோய்லவ் இவான் கூஸெவைப் பார்த்து ஏதாவது பேசுவான். அதற்குப் பதிலாக இவான் தன் தோழனை முழங்கையால் இடித்துக் கொண்டே பொங்கி வரும் சிரிப்பை அடக்க முயலுவான். அந்த முயற்சியில் அவனது முகம் சிவந்து கன்னங்கள் கன்றிப் போகும்; உடனே அவன் தலையைக் கவிழ்த்துக் கொள்வான்; இருமுறை அவன் வாய்விட்டே சிரித்துவிட்டான். பிறகு, அவன் தன் சிரிப்பையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்த முயன்றவாறு உட்கார்ந்திருந்தான். அந்தக் கைதிகள் ஒவ்வொருவரிடமும் இளமை பொங்கிப் பிரவாகித்தது. நுரைத்துப் பொங்கும் அந்தப் பிரவாகத்தைத் தடுக்க முயலும் சகல முயற்சிகளையும் அந்த இளமை இலாவகமாக எதிர்த்து ஒதுக்கியது.

“சிஸோவ் தாயின் முழங்கையை லேசாகத் தொட்டான். அவள் திரும்பினாள். மகிழ்ச்சியும், ஓரளவு பதைபதைப்பும் பிரதிபலிக்கும் அவனது முகத்தை அவள் கண்டாள்.

‘நமது இளவட்டங்கள் எவ்வளவு தைரியசாலிகளாகிவிட்டார்கள் என்று பார்” என்று மெதுவாகக் கூறினான் அவன். “பெரிய சீமான்கள்!”

நீதிமன்றத்தில் சாட்சிகள் உணர்ச்சியற்ற குரலில் அவசர அவசரமாகவும், நீதிபதிகளோ விருப்பமின்றியும் அக்கறையின்றியும் பேசிக்கொண்டேயிருந்தார்கள், அந்தக் கொழுத்த நீதிபதி தமது தடித்த கரத்தால் வாயை மூடிக்கொண்டு கொட்டாவி விட்டார். சிவந்த மீசை கொண்ட நீதிபதியின் முகம் மேலும் வெளுப்புற்றுப் போயிற்று. இடையிடையே அவர் தமது நெற்றிப் பொருத்துகளைக் கை விரலால் அழுத்திப் பிடித்துவிட்டவாறே, முகட்டை நோக்கி நிமிர்ந்து சிரமத்தோடு வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே எப்போதாவது அரசாங்க வக்கீல் பென்சிலை எடுத்து எதையாவது குறித்துக் கொள்வார். அதன் பிறகு, அவர் ஊமைக் குரலில் அந்த பிரபுவம்சத் தலைவரோடு தமது பேச்சைத் தொடங்குவார். அவரோ நரைத்த தாடியை நீவிக் கொடுத்தவாறு தமது அழகான பெரிய கண்களை உருட்டி விழிப்பார்; கழுத்தைக் கம்பீரமாக அசைத்துக்கொண்டே புன்னகை செய்வார். நகர மேயர் கால்மேல் கால் போட்டு, முழங்காலின் மீது கை விரல்களால் தாளம் போட்டுக்கொண்டு அந்தத் தாளத்தையே கவனித்துக்கொண்டிருந்தார். முழங்காலின் மீது தொந்தியைச் சரித்துத் தாங்கிக்கொண்டிருந்த அந்த ஜில்லா அதிகாரி அதை இருகையாலும் அன்போடு வாரித் தழுவிக்கொண்டிருந்தார். அவர் ஒருவர்தான் அந்த நச்சுப்பிடித்த சாட்சிகளின் முனகலையெல்லாம் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. அந்தக் கிழ நீதிபதியோ, காற்றடிக்காத திசையில் ஆடாது அசையாது நிற்கும் காற்றாடியைப்போல், இம்மிகூட அசையாது தமது நாற்காலிக்குள்ளேயே புதைந்து கிடந்தார். சுற்றுச்சூழ இருந்த ஜனங்கள் ஆயாசத்தால் அலுத்து மரத்துப்போகும் வரை இவையனைத்தும் நீடித்தன.

“நான் அறிவிக்கிறேன்…” என்று கூறிக்கொண்டே அந்தக் கிழவர் எழுந்து நின்றார். இந்த வார்த்தைகளுக்குப் பின் வந்த வார்த்தைகள் அவரது உதடுகளுக்குள்ளாகவே மடிந்து உள்வாங்கிப் போய்விட்டன.

நீதிமன்றம் முழுவதிலும் பெருமூச்சுக்களும், அமைதியான வியப்புக் கேள்விகளும், இருமலும், காலைத் தேய்க்கும் சப்தமுமே நிறைந்து ஒலித்தன. கைதிகளை வெளியே கொண்டுபோனார்கள். அவர்கள், தமது நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டே புன்னகை புரிந்தார்கள். இவான்கூஸெவ் யாரையோ துணிந்து வாய்விட்டுக் கூப்பிட்டுவிட்டான்:

‘இகோர், தைரியத்தை இழக்காதே!”

தாயும் சிலோவும் நீதிமன்றத்துக்கு வெளியேயுள்ள வராந்தாவுக்கு வந்தார்கள்.

”பக்கத்துக் கடையிலே போய் ஒரு கப் தேநீர் சாப்பிடலாமா?” என்று சிஸோவ் அன்போடு கேட்டான். “இன்னும் நமக்கு ஒன்றரை மணி நேர அவகாசம் இருக்கிறது.”

“எனக்கு இப்போது தேநீர் தேவையில்லை.”

‘எனக்கும்தான் தேவை இல்லை. அந்தப் பையன்களைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? இவ்வுலகத்திலேயே அவர்கள் மட்டும்தான் இருப்பது போலல்லவா, அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்? மற்றவர்களெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அந்த பியோதரைப் பார்!”

படிக்க:
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது !
பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் !

சமோய்லவின் தந்தை அவர்கள் அருகில், தொப்பியைக் கையில் பிடித்தவாறே வந்து சேர்ந்தான்.

”என் கிரிகோரியைப் பார்த்தீர்களா?” என்று கசந்த புன்னகையோடு கூறினான் அவன், “அவன் எதிர்வாதம் செய்யவும் மறுத்துவிட்டான்; அவர்களோடு பேசவே அவன் விரும்பவில்லை. முதன்முதல் அவனுக்குத்தான் இந்த யோசனை எட்டியிருக்கிறது. பெலகேயா, உன் மகனோ வக்கீல்களை வைத்து நடத்திப் பார்ப்பதற்குச் சம்மதித்திருக்கிறான். இவனோ எதற்கும் முண்டியதில்லை. அதன் பிறகு நாலுபேர் இவனைப்போலவே மறுத்துவிட்டார்கள்.”

அவனது மனைவி அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். கண்ணில் பொங்கும் கண்ணீரை அடக்க எண்ணி அவள் கண்ணை மூடி மூடி விழித்தாள், கைக்குட்டையால் நாசியைத் துடைத்துவிட்டுக் கொண்டாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க