மூன்று மாநில மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஏன் வாக்களித்தார்கள் ?

ராஜஸ்தான் மக்கட்தொகையில் 75% கிராமப்புறம் சார்ந்தது. கிராமப்புற மக்கட் தொகையில் 53% பேரிடம் நிலம் இருக்கிறது. இவர்களில் 90% பேரின் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கிடைக்கவில்லை. மொத்த கோதுமை விளைச்சலில் வெறும் 4% மட்டுமே பா.ஜ.க. அரசு கொள்முதல் செய்திருக்கிறது. ம.பி.யில் மண்டி வியாபாரிகளின் சுரண்டலிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து அவர்களுக்கு குறைந்தபட்ச விலையை உத்திரவாதம் செய்யப்போவதாக சொல்லிக் கொண்டு, சவுகான் அரசு கொண்டு வந்த திட்டம், மண்டி வியாபாரிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்கே பயன்பட்டிருக்கிறது. இம்மூன்று மாநிலங்களிலுமே விவசாய உற்பத்தி அதிகரித்திருக்கிறது. அதே விகிதத்தில் அவர்களது துயரமும் அதிகரித்திருக்கிறது.

ம.பி.-யைப் பொருத்தவரை, மக்கட்தொகையில் 70% பேர் விவசாயத்தை சார்ந்திருக்கின்றனர். இவர்களில் 46% விவசாயிகள் மீளாக் கடன் வலையில் சிக்கியிருக்கின்றனர். தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிவரங்களின் படி கடந்த 16 ஆண்டுகளில், அதாவது பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் மொத்தம் 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். சட்டிஸ்கர் மாநிலத்திலோ பா.ஜ.க. ஆட்சியின்  கீழ் 13,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

இது மட்டுமின்றி, முஸ்லீம் பால் வியாபாரிகளை காவு வாங்கிய பா.ஜ.க.வின் மாடு விற்பனைத் தடை, ஒரு விபரீதமான கோணத்தில் விவசாயிகளை காவு வாங்கத் தொடங்கியிருக்கிறது. கறவைக்கோ உழவுக்கோ பயன்படாத மாட்டை விற்க முடியாத காரணத்தால், அவற்றை விவசாயிகள் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவை விளைந்த பயிர்களை மேய்கின்றன. இந்த மாடுகளிடமிருந்து பயிர்களைப்  பாதுகாக்க மின்கம்பி வேலி அமைப்பதற்கு விவசாயிகள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அல்லது நாள் முழுதும் வயலைக் காவல் காக்க வேண்டியிருக்கிறது. பசுக்குண்டர்கள் கொலைவெறியாட்டம் நடத்திய இராஜஸ்தானின் ஆல்வார் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க.வின் தோல்வியை இந்த பின்புலத்தில் புரிந்து கொள்ளலாம்.

இவற்றை வைத்து பசுப்பாதுகாப்பு விசயத்தில் விவசாயிகளின் கண்ணோட்டம் மாறிவிட்டதாக சொல்ல முடியாது. மாட்டு மூத்திர வியாபாரம், கோசாலை போன்ற வாக்குறுதிகளில் பா.ஜ.க.வை காங்கிரசு விஞ்சுவதிலிருந்து விவசாயிகளின் இரட்டை மனோபாவம் குறித்து நாம் புரிந்து கொள்ளலாம்.

எனவே, இம்மாநிலங்களில் நடைபெற்ற தீவிரமான விவசாயிகள் போராட்டங்களை மட்டும் கணக்கில் கொண்டு பா.ஜ.க.வின் 2019 தோல்வி குறித்து கனவு காண்பது தவறு. ம.பி.யில் விவசாயிகள் போராட்டமும் துப்பாக்கிச் சூடும் நடைபெற்ற மாண்ட்சோர், நீமுச் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. அதாவது தமது உடனடி வர்க்க நலன் பாதிக்கப்பட்ட போதிலும், தமது பா.ஜ.க. ஆதரவு நிலையிலிருந்து விவசாயிகள் விலகவில்லை என்பதற்கு இது ஒரு சான்று.

இன்னொரு புறம், ஆதிக்க சாதி உணர்வு பா.ஜ.க.வுக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறது. வன்கொடுமைத் தடுப்பு சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து மோடி அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம், பா.ஜ.க.வின் ஓட்டு வங்கியான ஆதிக்க சாதியினரிடம் தோற்றுவித்த கோபம், இம்மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவாகத் திரும்பியிருக்கிறது.

காங்கிசின் மிதவாத இந்துத்துவா : முள்ளை முள்ளால் எடுக்கும் தந்திரமா?

அதாவது மாண்ட்சோரில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தொழிற்பட்டிருக்கும் ஆதிக்க சாதி உணர்வு, இன்னொரு கோணத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறது. அதேபோல, இராஜஸ்தானில் பா.ஜ.க. அரசின் மீது பல்வேறு  காரணங்களுக்காக ராஜ்புத் சாதியினர் கொண்டிருந்த கோபம் காங்கிரசுக்கு பயன்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் மேற்படி சட்ட திருத்தம் காரணமாக தலித்துகள் பா.ஜ.க.வின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து விடவில்லை என்பதும், 2014-ஐக் காட்டிலும் 3 மாநிலங்களிலும் தலித் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு குறைந்திருக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

வர்க்கம், சாதி, மதம், இனம், பிராந்தியம், விளைவிக்கும் பயிர் – என்று பல்வேறு விதமான காரணிகள் விவசாயிகளின் மீது வினையாற்றுகின்றன. அவர்களுடைய அரசியல் தெரிவு பா.ஜ.க. அல்ல என்பதை மட்டும் வைத்து நாம் நிறைவு கொள்ள முடியாது. அவர்களது அரசியல் முடிவினை மேற்சொன்னவற்றில் எந்தக் காரணி தீர்மானித்தது என்பதுதான் நம் அக்கறைக்கும் ஆய்வுக்கும் உரியது.

இம்மூன்று மாநிலங்களும் உ.பி., பீகாரைப் போல முஸ்லீம்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் அல்ல. இங்கே முஸ்லீம்களின் மக்கட்தொகை மிக குறைவு. இருந்த போதிலும் கடந்த 15 ஆண்டுகளில் பா.ஜ.க. இம்மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. சொல்லப்போனால், குஜராத்துக்கு முன்னதாக பா.ஜ.க.வின் அடித்தள மாநிலங்களாக இருந்தவை இவைதான். பாடத்திட்டங்களில் இந்துவெறி, பள்ளிகளில் கட்டாய சூரிய நமஸ்காரம் ஆகியவை அமல்படுத்தப்படும் மாநிலங்கள் இவை. ஆர்.எஸ்.எஸ்.இன் கிளைகளும் இம்மாநிலங்களில் மிக அதிகம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

படிக்க:
தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் !
பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! புதிய கலாச்சாரம் ஜனவரி மின்னிதழ் !

ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் 2014-இல் பெற்ற வாக்குகளை கணிசமான அளவில் பா.ஜ.க. இழந்திருக்கிறது என்ற போதிலும், மொத்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே பாரிய வேறுபாடு இல்லை. இராஜஸ்தானில் காங்கிரசு பெற்ற வாக்குகள் 39.3%. பா.ஜ.க. – 38.8%. ம.பியில் காங் – 40.9%, பா.ஜ.க. – 41%

இந்து மதவெறி பா.ஜ.க.விற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு.

வளர்ச்சி – மதவெறி ஆகியவற்றை தேவைக்கேற்பவும், மக்களின் மனநிலைக்கு ஏற்பவும் பார்ப்பன பாசிஸ்டுகள் மாற்றி மாற்றி பயன்படுத்துவதை 80-களில் தொடங்கி இன்று வரை நாம் பார்த்து வருகிறோம். இந்த நீண்ட நிகழ்ச்சிப் போக்கில் அதன் அரசியல் ரீதியான அடித்தளம் விரிவடைந்திருக்கிறதே அன்றி, குறையவில்லை. மதச்சார்பின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துவதே ஆபத்து என்ற நிலைக்கு காங்கிரசு தள்ளப்பட்டிருக்கிறது. அதாவது, பார்ப்பன பாசிச அரசியலும், கருத்தியலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து, மெல்ல மெல்ல அவை அங்கீகரிக்கப்படும்  நிலைக்கும், புதிய எதார்த்தம் என்ற நிலைக்கும் உயர்ந்திருக்கின்றன.

இந்த உண்மையைப் புறந்தள்ளிவிட்டு, விவசாயிகளின் கோபம், வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் கோபம், பணமதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி. போன்ற தாக்குதல்கள் சிறு தொழில் முனைவோரிடம் ஏற்படுத்தியிருக்கும் கோபம் ஆகியவற்றை மட்டும் முதன்மைப்படுத்திப் பார்ப்பதும், இந்தக் கோபமே சங்க பரிவாரத்தை வீழ்த்திவிடும் என்று நினைப்பதும், பார்ப்பன பாசிச அபாயத்தை குறைத்து மதிப்பிடுவதும், முடிந்தது மோடி மாயை என்று  குதூகலிப்பதும் அசட்டுத்தனம்.

தொரட்டி

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

1 மறுமொழி

  1. கம்யூனிசம் மாயை ஓய்ந்துவிட்டதாக இந்த கட்டுரையாளர் உண்மையாக நினைத்தால் மோடி மாயையும் ஒளிந்து விட்டதாக கொள்ளலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க