மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 54 (தொடர்ச்சி)
நீதிபதிகளின் நிலைகொள்ளாமல் தவித்துத் தத்தளித்துத் தமது ஆசனங்களில் நெளிந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பிரபு வம்சத் தலைவர், உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் நீதிபதியிடம் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அதைக் கேட்டு, அந்த நீதிபதி தலையை ஆட்டிவிட்டு, பிரதம நீதிபதியிடம் ஏதோ சொன்னார். அவருக்கு அடுத்தாற்போலிருந்த சீக்காளி நீதிபதி அவரது இன்னொரு காதில் ஏதோ ஓதினார். அந்தக் கிழ நீதிபதி வலது இடதுபுறமாக அசைந்து கொண்டே பாவெலின் பக்கமாகத் திரும்பி ஏதோ சொன்னார். ஆனால் அவரது வார்த்தைகளைப் பாவெலின் நிதானமான ஆற்றொழுக்குப் பேச்சு அமிழ்த்தி விழுங்கிவிட்டது.
”நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனி நபர் சொத்துரிமைக்கு – சொத்துரிமையின் பேரால் மக்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, மக்களை ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல் உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும் சமுதாய அமைப்புக்கு – நாங்கள் எதிரிகள். இந்தச் சொத்துரிமைச் சமுதாய அமைப்பு இந்த வெறுப்புணர்ச்சியை மூடி மறைப்பதற்காக, அல்லது அதை ஏற்றுக்கொள்வதற்காக, பொய்மைக்கும், புனைசுருட்டுக்கும் ஆளாகி, மக்கள் அனைவரையும் பொய்களுக்கும், மாய்மாலத்துக்கும், தீய கிரியைகளுக்கும் ஆளாக்கிவிடுகிறது. தான் செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக, மனிதப் பிறவியை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணும் சமுதாயத்தை நாங்கள் மனிதத் தன்மையற்றதாக, எங்களது நல உரிமைகளின் எதிரியாகக் கருதுகிறோம்.
அந்தச் சமுதாயத்தின் பொய்யான, இரண்டுபட்ட ஒழுக்க நெறியை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. தனி மனிதனிடம் அந்தச் சமுதாயம் காட்டும் குரூரத்தையும் வக்கிர புத்தியையும் நாங்கள் வெறுத்துத் தள்ளுகிறோம். அந்த மாதிரியான சமுதாய அமைப்பு தனி மனிதனின் உடலின் மீதும் உள்ளத்தின்மீதும் சுமத்தியிருக்கும் சகலவிதமான அடிமைத்தனத்தையும், சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும் சகலவிதமான சாதனங்களையும் நாங்கள் எதிர்த்துப் போராட விரும்புகிறோம், எதிர்த்துப் போராடவே செய்வோம். நாங்கள் தொழிலாளர்கள். சிறு குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளிலிருந்து பிரம்மாண்டமான யந்திர சாதனங்கள் வரை சகலவற்றையும் எங்கள் உழைப்பின் மூலமே நாங்கள் உலகத்துக்குப் படைத்துக் கொடுக்கிறோம். ஆனால், எங்களது மனித கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமையைக்கூடப் பறிகொடுத்தவர்களும் நாங்கள்தான்.
சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒவ்வொருவரும் எங்களைத் தங்கள் கைக்கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், தற்போது நாங்கள் எங்கள் கைகளிலேயே சகல அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதற்காக, இறுதியாய் அந்த அதிகாரத்தை அடையும் அளவுக்கு சுதந்திரம் பெற விரும்புகிறோம். எங்களது கோஷங்கள் மிகவும் தெளிவானவை. ‘தனிச் சொத்துரிமை ஒழிக!’ ‘உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில்!’ ‘அதிகாரம் அனைத்தும் மக்களிடம்’ ‘உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை!’ இவைதான் எங்கள் கோஷங்கள். இவற்றிலிருந்து நாங்கள் வெறும் கலகக்காரர்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம்!”
பாவெல் லேசாகச் சிரித்தான். தனது தலைமயிரை விரல்களால் மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டான். அவனது நீலக்கண்களின் ஒளி முன்னைவிட அதிகமாகப் பிரகாசித்தது.
“விஷயத்தைவிட்டுப் புறம்பாகப் பேசாதே!” என்று அந்தக் கிழட்டு நீதிபதி தெளிவாகவும் உரத்தும் எச்சரித்தார். அவர் பாவெலின் பக்கமாகத் திரும்பி அவனைப் பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் அவரது மங்கிய இடது கண்ணில் பொறாமையும் புகைச்சலும் நிறைந்த ஒரு ஒளி பளிச்சிட்டு மின்னுவதாகத் தாய்க்குத் தோன்றியது. எல்லா நீதிபதிகளும் அவளது மகனை ஏறிட்டுப் பார்த்தார்கள். எல்லோரது கண்களும் அவனது முகத்தையே பற்றிப்பிடித்து அவனது சக்தியை உறிஞ்சுவது போலவும், அவனது ரத்தத்துக்காக தாகம் கொண்டு தவிப்பது போலவும், அந்த ரத்த பானத்தால் உளுத்துக் கலகலத்துப்போன தங்கள் உடம்புகளுக்கு ஊட்டமளித்துத் தேற்றிக்கொள்ள நினைப்பது போலவும், தாய்க்குத் தோன்றியது. ஆனால், அவளது மகனோ உறுதியோடும் தைரியத்தோடும் நேராக நிமிர்ந்து நின்று தனது கையை எட்டி நீட்டிப் பேசிக்கொண்டிருந்தான்.
படிக்க:
♦ ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்
♦ ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
“நாங்கள் அனைவரும் புரட்சிக்காரர்கள். ஒரு சிலர் வேலை வாங்கவும் மற்றவர்கள் அனைவரும் வேலை செய்யவுமாக இருக்கின்ற நாள் வரையிலும், நாங்களும் புரட்சிக்காரர்களாகவே இருப்போம். யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள். அந்தச் சமுதாயத்துக்கும். உங்களுக்கும் எதிரிகள் நாங்கள். எங்களது போராட்டத்தில் நாங்கள் வெற்றி காணும் வரை நமக்குள் எந்தவிதமான சமாதானமும் ஏற்படப்போவதில்லை. தொழிலாளர்களாகிய நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்!
உங்கள் எஜமானர்களோ, அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பது போலப் பலசாலிகள் ஒன்றுமில்லை. தனிநபர் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், பெருக்கிக் காப்பதற்காகவும், பெருக்கிக் குவிப்பதற்காகவும் தங்களது அதிகாரத்தால், லட்சோப லட்ச மக்களை அடிமைப்படுத்தவும் கொன்று குவிப்பதற்காகவும் உதவிக்கொண்டிருக்கும் தனிப்பட்ட சொத்துரிமைதான் – எங்கள் மீது ஆட்சி செலுத்த அவர்களுக்குப் பலம் தரும் அந்தச் சக்திதான் – அவர்களுக்குள்ளாகவே தகராறுகளைக் கிளப்பிவிடுகிறது, அந்தச் சொத்துரிமை அவர்களை உடல்பூர்வமாகவும், உள்ளபூர்வமாகவும் சீர்குலைத்து வருகிறது. தனிச் சொத்துரிமையைக் காப்பது என்பது சாமான்யமான காரியம் அல்ல.
உண்மையைச் சொல்லப்போனால், எங்களது எஜமானர்களாயிருக்கும் நீங்கள் அனைவரும் எங்களையும்விட மோசமான அடிமைகளாயிருக்கிறீர்கள். நாங்கள் உடல் பூர்வமாய்த்தான் அடிமையானோம்; நீங்களோ உள்ளபூர்வமாகவே அடிமையாகிவிட்டீர்கள்! உங்களை உள்ளபூர்வமாகக் கொன்றுவிட்ட நுகக்காலிலிருந்து, வெறுப்பு விருப்புப் பழக்கதோஷமென்னும் நுகத்தடியின் பளுவிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்வதற்கு நீங்கள் சக்தியற்றுப் போய்விட்டீர்கள்.
ஆனால் நாங்கள் சுதந்திரமான உள்ளத்தோடிருப்பதை எந்த சக்தியுமே கட்டுப்படுத்தவில்லை. உங்களது இஷ்டத்துக்கு மாறாக, நீங்கள் எங்களது உணர்விலே பெய்து கொண்டிருக்கும் முறிவு மருந்துகளாலேயே, நீங்கள் எங்களுக்கு ஊட்டி வரும் விஷங்களெல்லாம் வலுவற்று முறிந்து போகின்றன. எங்களது சத்திய தரிசனம் எந்தவிதத் தடையுமின்றி, அசுர வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கிறது, மேலும் அந்த சத்தியம் நல்ல மனிதர்களை – உங்களது சமூகத்திலேயே மனத்தைப் பறிகொடுக்காது தப்பிப் பிழைத்த நல்லவர்களை – எல்லோரையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. உங்களது வர்க்கத்தை நேர்மையான ஒழுங்கு முறையோடு பாதுகாப்பதற்கு உங்களிடம் ஒருவரும் இல்லையென்பதை நீங்களே பாருங்கள்! சரித்திரபூர்வமான நியாயத்தின் அழுத்த சக்தியிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நீங்கள் கூறிய சகலவாதப் பிரதிவாதங்களும் வாய் சோர்ந்து வலுவிழந்து வாடி விழுந்ததை இப்போது நீங்கள் கண்டீர்கள். எந்தவிதமான புதிய சிந்தனைகளையும் உங்களால் படைக்க இயலாது. ஆத்மார்த்த விஷயத்தில் நீங்கள் ஆண்மையற்று மலடுதட்டிப் போய்விட்டீர்கள்.
ஆனால், எங்கள் கருத்துக்களோ என்றென்றும் வளர்ந்தோங்குகின்றன. என்றென்றும் அணையாத தூண்டா மணிவிளக்காய் பிரகாசமுற்றோங்குகின்றன. மக்கள் அனைவருக்கும் உணர்ச்சி ஊட்டி, சுதந்திரப் போராட்டத்துக்காக அவர்களை ஒன்றுபடுத்தி பலம் பெற்று விளங்கச் செய்கின்றன. தொழிலாளர் வர்க்கம் சாதிக்க வேண்டிய மகத்தான சாதனையின் ஞானபோதம், உலகத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றுபட உருக்கி வார்த்து அவர்களை ஒரு மகத்தான ஏக சக்தியாக உருவாக்குகிறது. அவர்களைக் கலகலத்து உயிர்ப்பிக்கும் பெரும் சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு கொடுமையையும் வெடுவெடுப்பையும் தவிர உங்களிடம் எந்தவித ஆயுதமும் கிடையவே கிடையாது. ஆனால், உங்களது வக்கிர குணமோ வெளிப்படையானது. கொடுமையோ எரிச்சல் தருவது. இன்று எங்களது கழுத்தை நெரிக்கும் கைகளே நாளைக்கு எங்களைத் தோழமையுணர்ச்சியோடு தழுவிக்கொள்வதற்காகத் தாவி வரத்தான் போகின்றன. உங்களது சக்தியே செல்வத்தைப் பெருக்க உதவும் யந்திர சக்தி. அந்த சக்தி உங்களைத் துண்டுபடுத்தி, இரு கூறாக்கி, நீங்களே உங்களில் ஒருவரையொருவர் கொத்திக் குதறிக் குலைபிடுங்கிச் சாவதற்குத்தான் வழிகோலிக் கொடுக்கும்.
ஆனால், எங்களது சக்தியோ சகல தொழிலாளர் மக்களின் ஒன்றுபட்ட ஐக்கிய பலத்தால் என்றென்றும் ஜீவ வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கும், மனச்சாட்சியினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்வது அனைத்தும் படுமோசமான பாதகச் செயல்கள். ஏனெனில் உங்கள் செயல்கள் அனைத்தும் மக்களை அடிமைப்படுத்துவதில்தான் முனைந்து நிற்கின்றன. உங்களது பொய்மையும், பேராசையும், குரோத வெறியும் உலகத்தில் எண்ணற்ற பிசாசுகளையும் பூதங்களையும்தான் படைத்திருக்கின்றன. அந்தப் பூதங்களும் பிசாசுகளும் மக்களை கோழையராக்கிவிட்டன. அந்தப் பிசாசு ஆதிக்கப் பிடிப்பிலிருந்து மக்களை விடுவித்துக் காப்பாற்றுவதே எங்கள் பணி. நீங்கள் மனிதனை வாழ்க்கையினின்றும் பிய்த்துப் பிடுங்கி, அவனை அழித்துவிட்டீர்கள். நீங்கள் அழித்துச் சுடுகாடாக்கிய இந்த உலகத்தை, சோஷலிசம் ஒரு மகோன்னதமான மாசக்தியாக வளர்ந்து உருவாகி வளம்படுத்தும். நிச்சயம் இது நிறைவேறத்தான் போகிறது!”
பாவெல் ஒருகணம் பேச்சை நிறுத்தினான். மீண்டும் அதே உறுதியோடு மெதுவாகக் கூறினான்.
”நிச்சயம் நிறைவேறத்தான் போகிறது!”
நீதிபதிகள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்; பாவெலின் மீது வைத்த பார்வையை விலக்காமலேயே முகத்தை எப்படியெல்லாமோ விகாரமாகச் சுழித்துக்கொண்டார்கள். அவனது துடிப்பையும் இளமையையும், பலத்தையும் கண்டு பொறாமை பொங்கி, தங்களது பார்வையாலேயே அவனை அவர்கள் நாசப்படுத்திவிட முயல்வதுபோல் தாய்க்குத் தோன்றியது. கைதிகள் அனைவரும் மகிழ்ச்சியினால் கண்கள் பிரகாசிக்க, முகம் வெளிற, பரிபூரண கவனத்தோடு தங்களது தோழனின் பேச்சைக் கூர்ந்து கேட்டார்கள். தாயோ தன் மகனின் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினாள். அந்த வார்த்தைகள் அனைத்தும் அவளது மனத் தகட்டில் வரிசை வரிசையாகப் பதிந்து நிலைத்தன. அந்தக் கிழ நீதிபதி எதையோ தெளிவுபடுத்திக்கொள்வதற்காக, பாவெலின் பேச்சில் எத்தனையோ முறை குறுக்கிட்டார். இடையே ஒருமுறை அவர் வருத்தத்தோடு புன்னகையும் புரிந்து கொண்டார். பாவெல், இடையிடையே பேச்சை நிறுத்தினாலும், மீண்டும் அதே அமைதி தோய்ந்த உறுதியோடு மேலும் பேசத் தொடங்குவான். மீண்டும் ஜனங்கள் அவனது பேச்சை உள்ளமிழந்து கேட்கச் செய்வான். நீதிபதிகளின் விருப்பத்தையும், அவன் தன் விருப்பத்துக்கு ஆளாக்கிவிடுவான். கடைசியாக அந்தக் கிழ நீதிபதி வாய்விட்டுக் கையை நீட்டிக் கத்தினார். பதிலுக்குப் பாவெல் கேலி பாவத்தோடு தனது பேச்சைத் தொடங்கினான்.
”இதோ நான் என் பேச்சை முடித்துவிடப் போகிறேன். உங்களில் எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. அதற்கு மாறாக, விசாரணை என்ற பெயரால் நீங்கள் நடத்தும் கேலிக்கூத்தை நான் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் மீது அனுதாப உணர்ச்சிதான் என் உள்ளத்தில் அநேகமாகப் பொங்கி வழிகிறது. என்ன இருந்தாலும் நீங்களும் மனிதப் பிறவிகள்தான். எங்களது இயக்கத்தின் எதிரிகளைக்கூட, மிருக சக்திக்கு ஊழியம் செய்வதற்காக கேவலமாக வெகு தாழ்ந்து கடை கெட்டுப்போனவர்களைக்கூட, மனித கெளரவத்தின் மான உணர்ச்சியையே முற்றிலும் இழந்துவிட்டவர்களைக் கூட, நாங்கள் மனிதப் பிறவிகளாக மதித்து அவர்களுக்காகத் துக்கப்படுகிறோம்………”
அவன் நீதிபதிகளைப் பார்க்காமலேயே தன் இடத்தில் அமர்ந்தான். தாயோ திக்குமுக்காடும் மூச்சோடு அந்த நீதிபதிகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
பாவெலின் கையைப் பிடித்து அழுத்திய அந்திரேயின் முகமும் பிரகாசமடைந்தது. சமோய்லவ், மாசின் முதலியவர்களும் அவன் பக்கமாகக் குனிந்து இருந்தார்கள். தன்னுடைய தோழர்களின் உற்சாகத்தைக் கண்டு பாவெல் புன்னகை செய்து கொண்டான். அவன் தன் தாயின் பக்கமாகத் திரும்பி, ‘உனக்குத் திருப்திதானே!’ என்று கேட்கும் பாவனையில் தலையை ஆட்டினான்.
பதிலுக்கு அவள் மகிழ்வோடு பெருமூச்செறிந்தாள். அவளது முகத்திலே அன்புணர்ச்சி அலை பரவிச் சிலிர்த்துச் சிவந்தது.
”இப்போதுதான் உண்மையான விசாரணை ஆரம்பமாயிற்று!” என்று தாயிடம் மெதுவாகக் கூறினான் சிஸோவ். “அவன் அவர்களை வீசி விளாசித் தள்ளிவிட்டான், இல்லையா?”
அவள் பதில் கூறாமல் தலையை மட்டும் ஆட்டினாள். தன் மகன் தைரியத்தோடு பேசியதைக் கேட்டு அவள் மகிழ்வுற்றாள். அவன் பேசி முடித்ததைக் கண்டு அந்த ஆனந்தம் பேரானந்தமாயிற்று. அவளது மனத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
”அவர்கள் இப்போது என்ன செய்வார்கள்?”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முந்தைய பகுதிகள்:
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்