‘யாதும்’ – ஆவணப்படம் மூலம் அறியப்பட்டவர் கோம்பை எஸ். அன்வர். வரலாற்று ஆய்வாளர், பத்திரிக்கையாளர் , புகைப்பட கலைஞர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக அளித்த நேர்காணலில் இசுலாமியர்களின் கல்வி, அவர்களின் பன்மைத்துவம்,வியாபாரத்தால் இஸ்லாம் வளர்ந்த விதம், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் போன்ற பல விஷயங்களை பேசுகிறார். சென்னையில் அவரது இல்லத்தில் நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.

***

கேள்வி : தமிழ் முஸ்லிமான நீங்கள் வளர்ந்த சூழல் பற்றி சொல்லுங்கள். உங்கள் எண்ணவோட்டத்தை எது உருவாக்கியது?

பதில் : எனக்கு தேனி மாவட்டத்திலுள்ள கோம்பைதான் சொந்த ஊர். என் அப்பா ஏலக்காய் வியாபாரி. திராவிட இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டவர். அப்பா மட்டுமல்ல உறவினர் அனைவரிடமும் தமிழர் என்பதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்தித் திணிப்பை எதிர்ப்பது என்பது எங்களுக்கு சிறு பிராயத்திலேயே இயல்பாக அமைந்த ஒன்று. ஊரில் மத வித்தியாசம் என்னவென்றே தெரியாது.

வெளியூரில் பள்ளியில் படிக்கும்போது மதம் குறித்த லேசான உராய்வுகள் வந்தன. தமிழ் முஸ்லிம்கள் பேசும் தமிழ்தான் அருமையான தமிழ் என்று என்னுடைய தமிழாசிரியராக இருந்த செல்வராஜ் வகுப்பறையில் பாராட்டுவார். அது உராய்வுகளுக்கு அருமருந்தாக அமைந்தது. அதே கால கட்டத்தில் நான் சந்தித்த பெரும்பாலான இஸ்லாமிய மதகுருமார்கள் (ஹஜ்ரத்மார்கள்) சற்று பிற்போக்காகவே எனக்கு தெரிந்தார்கள். பெண்கள் மேற்படிப்பில் ஆர்வமற்றவர்களாக, புகைப்படம் தவிர்க்கப்பட வேண்டியது என்றும், முஸ்லிம்களுக்கு சினிமா (ஹராம்) தடுக்கப்பட்டது என்றும் அவர்களில் பலர் உரக்கக் கூறிக் கொண்டிருந்த காலம். இது போல் இன்னும் பல. எனவே நான் மதத்திலிருந்து சற்று விலகியே இருந்தேன்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த சமயம் என்று நினைக்கிறேன், தாரிக் அலி (Tariq Ali) என்ற இடது சாரி சிந்தனையாளர் எழுதிய “Shadows of Pomegranate Tree” என்ற நாவலைப் படித்தேன். 15-ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் மூர்களின் (இஸ்லாமிய ஆட்சியாளர்களின்) இறுதி ஆட்சி காலத்தைப் பற்றிய கதை. அறிவைத் தேடுபவர்களாகவும், விஞ்ஞானத்தை போற்றுபவர்களாகவும், ஐரோப்பிய கிறித்துவ உலகம் வெறுத்து ஒதுக்கிய யூதர்களுக்கு பாதுகாப்பாக இஸ்லாமிய சமூகம் இருந்த வரலாற்றை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது அந்த நாவல். அந்நாவலைப் படித்த பின்னர்தான் இங்கிருக்கும் இன்றைய முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடுவது, புரிந்து கொள்வது தவறு என்று முடிவுக்கு வந்தேன். குரான் குறித்தும் இஸ்லாம் குறித்தும் எனது புரிதல் மாறுபடத் துவங்கியது.

கே : ’யாதும்’ என்ற ஆவணப்படத்தை எடுத்தீர்கள். அதை எடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

பதில் : தமிழ் எனக்குத் தாய் மொழி. கல்லூரிக்காக சென்னைக்கு வந்த புதிதில் எனது பெயரைக் கேட்டவுடன் பலரும் இந்தியில் அல்லது உருதுவில் உரையாடத் துவங்குவார்கள். அவர்கள் பலருக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட கணிசமான முஸ்லிம்கள் தமிழகத்தில் வசிக்கின்றார்கள் என்பதே தெரியாது. தமிழகத்திற்கும் அரேபியாவிற்குமான நீண்ட கால வணிகத் தொடர்புகள் மூலமாக இஸ்லாம் இங்கு 7-ம் நூற்றாண்டிலேயே வந்தடைந்தது என்ற உண்மை நமது வரலாற்று புத்தகங்களில் சொல்லப்படுவது இல்லை. தப்பும் தவறுதலுமாக நம் வரலாறு எழுதப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றை இந்து சகாப்தம் (Hindu Era) இஸ்லாமிய சகாப்தம் (Islamic Era) என்று ஆங்கிலேய காலனியம் தவறாக பிரித்துக் கையாண்டது. ஆனால் இப்படி தனித்த வரலாறாக இந்திய வரலாறு என்றுமே இருந்ததில்லை. அடிப்படையில் இஸ்லாம் பன்மைத்துவத்தை வலியுறுத்தி வருகிற மதம். இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்த ஒரு பன்மைத்துவமான சமுதாயமாகத்தான் நாம் வாழ்ந்துள்ளோம். மன்னரை வைத்து ஆட்சியை எடை போடுவது தவறு. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பொறுப்பில் இந்துக்களும், இந்து மன்னர்களின் ஆட்சியில் பெரும் பொறுப்பில் இஸ்லாமியர்களும் இருந்திருக்கின்றார்கள். இன்று பெரிதும் பழித்துச் சொல்லப்படும் அவுரங்கசீப்பின் படையில்தான் அதிகமான இந்துக்கள் இருந்திருக்கின்றார்கள். செஞ்சியை முகலாய படைகள் கைப்பற்றியவுடன், அது அவுரங்கசீப்பின் உத்தரவுப்படி சுவரன் சிங் என்ற ராஜபுத்திரனுக்கு ஆட்சி பொறுப்பு கொடுக்கப் பட்டது. சுவரன் சிங் இஸ்லாமியரா?

படிக்க:
♦ வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?
♦ வரலாறு : ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் !

அதே போல் ‘ஆரியர் வருகை’ என்று சொல்லும் நமது வரலாற்று நூல்கள் ‘முகம்மதியர் படையெடுப்பு’ என்கின்றன; அரேபியாவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த சமகால கட்டத்திலேயே கடல் வழி வணிகம் மூலமாக இஸ்லாம் தமிழகத்தில் பரவிய பாரம்பரியம் மட்டும் இதனால் மறுதலிக்கப்படவில்லை, போரோடு சம்பந்தப்பட்ட சகல கொடுஞ் செயல்களும் மதத்தோடு பின்னிப் பிணைக்கப் படுகின்றது. எனவே இது போன்ற தவறான பிரச்சாரங்கள் பத்திரிக்கைகளில் வரும் போது அதை தகுந்த ஆதாரங்களுடன் மறுத்து எழுதினால் சரியாகிவிடும் என்று வெகுளித்தனமாக அப்போது நம்பினேன்.

பார்ப்பனிய எழுத்தாளர் சுஜாதா

ஆனந்த விகடனில் சுஜாதா தன்னுடைய ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில் ஸ்ரீரங்கம் வரலாற்றைக் கூறும் “கோயில் ஒழுகு” வின் புதிய பதிப்பு குறித்து ஒருமுறை எழுதி இருந்தார். அதில் ஸ்ரீரங்கம் தேர்திருவிழாவின் போது பிராமணர்கள் நோஞ்சானாக இருந்ததால் விவசாயிகள் தேரை இழுப்பார்கள் என்றும் அப்போது அவர்கள் பாடும் நாட்டுப் புற பாடல்களை ஆய்வு செய்தால் 13000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் முகமதியர்களால் கொல்லப்பட்ட தகவல் குறித்து தகவல் தெரிய வரலாம் என்றும் எழுதி இருந்தார். அவர் குறிப்பிட்ட நூலை வாசித்தேன். நூல் ஆசிரியரே இதற்கு சான்றுகள் இல்லை என்று எழுதியிருந்தார். இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை சுஜாதா போன்றவர்கள் முன்னிலைப்படுத்துவது தவறு என்று நானும் , Dr. ராஜா முகம்மது என்ற மூத்த ஆய்வாளரும் சில சான்றுகளை முன்வைத்து கேள்வி எழுப்பினோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் “இனிமேல் இஸ்லாமியர்கள் பற்றி எழுதமாட்டேன்”; இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற ரீதியில் சுஜாதா விவாதத்தை முடித்துவிட்டார்.

சுஜாதாவுடனான இந்த விவாதங்கள் ‘காலச்சுவடு’ இதழில் வெளியானது. அதனடிப்படையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தேசிய அளவிலான ஆய்வரங்கம் ஒன்றில் பேச அழைத்தார்கள். இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்து வந்திருந்த அறிஞர்களுக்கு தமிழ் இஸ்லாமியர் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்து நான் எடுத்து வைத்த பல கருத்துக்கள் புதிதாக, ஆச்சரியமாக இருந்தன. உடனடியாக சென்னைப் பல்கலைக் கழகத்திலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் பேச அழைத்தார்கள். தொடர்ந்து மேலும் பல அழைப்புகள். பேசிய இடங்களிலெலலாம் இஸ்லாமியர் வரலாறு குறித்த தவறான கண்ணோட்டத்தை எனது உரை மாற்றியது என்று பாராட்டினர். இது மேலும் பலரை சென்றடைய வேண்டும் என்பதற்காக ‘யாதும்’ ஆவணப்படத்தை எடுத்தேன்.

கே : ‘யாதும்’ ஆவணப்படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது ?

வலங்கை சாதியினரால் தமது பெண்கள் கடத்திச் செல்லப்படுவதைத் தடுத்த முஸ்லீம்களுக்கு நன்றி கூறும் இடங்கை சாதியினர் – கோம்பை தாமிர பட்டயம்

பதில் : நான்கு ஆண்டுகள் கடும் உழைப்பின் விளைவாக 2013-ல் “யாதும்” உருவானது. கிட்டத்தட்ட 15 இலட்ச ரூபாய் செலவானது. ஒரு ஆய்வுப் பட்டத்திற்கு உரிய விவரங்கள் இதில் உள்ளன. பொது சமூகத்தில் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை அறிஞர்கள் மத்தியில், தமிழ் இஸ்லாமியர் குறித்த வரலாற்றுப் பார்வையில் ஒரு பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பேன். படத்தை தமுஎகச (தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) மற்றும் சில அமைப்புகள் பல இடங்களில் திரையிட்டன. இஸ்லாமியர்களிடமிருந்து பலதரப்பட்ட எதிர்வினைகள் ( mixed reactions) வந்தன. இஸ்லாமிய அறிஞர்கள், சில முஸ்லீம் ஜமாத்துகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, அமேரிக்கா போன்ற நாடுகளில், குறிப்பாக பல்கலைக் கழகங்களில் இது திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது, இதுவரை அவ்வளவாக பேசப்படாத வரலாற்றை பேசுவதால், வெளிநாடுகளில் இருந்து கலாச்சாரம், பண்பாடு குறித்து ஆய்வு செய்ய வரும் பல அறிஞர்கள் சென்னை வரும்போது என்னிடம் விவாதிக்க விரும்புகிறார்கள்.

கே : நீங்கள் திராவிட இயக்கத்தின்பால் பற்று கொண்டவர். கலைஞர் இஸ்லாமியர்களுக்குச் செய்த முக்கியமான சாதனை என்று எதனைச் சொல்லுவீர்கள் ?

பதில் : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய ஆட்சிகளில் இஸ்லாமியர்கள் பறிகொடுத்த பலவற்றை, உரிமைகளை மீட்டெடுக்க முடிந்தது. இஸ்லாமியர்களுக்காக கல்லூரி (காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி), அண்ணாநகரில் யுனானி படிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது விழாவிற்கு அரசு விடுமுறை. இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இடம் கிடைத்தது, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ( 3.5 %) கொடுக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின் காரணமாக அரசு இயந்திரத்தில் இஸ்லாமியர்கள் சேர்ந்து வருகின்றனர். பல்கலைக்கழக துணை வேந்தர்களாக, காவல் துறை அதிகாரிகளாக, நீதிபதிகளாக, மக்கள் பிரதிநிதிகளாக பல்வேறு தளங்களில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்திற்கு வித்திட்டவர் கலைஞர்.

இவை அனைத்தையும் மீறி கலைஞர் செய்த சாதனை தமிழக இஸ்லாமியர்களுக்கு கொடுத்த பாதுகாப்பு உணர்வுதான். சமீபத்தில் டெல்லியைச் சார்ந்த ஒரு முஸ்லீம் பத்திரிகையாளரிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.அவர் சொன்னார் “வீட்டிலிருந்து வெளியே போனால் திரும்பி பத்திரமாக வருவோமா என்ற கவலை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் இங்கு இருக்கிறது ” என்றார். அது போன்ற அவல நிலை தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் கலைஞரின் தலையாய சாதனை என்பேன்.

கே : பல இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : எண்பதுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்தபிறகு உலக அளவில் மேற்கத்திய உலகிற்கு பொது எதிரி தேவைப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிராக மீண்டும் மேற்கத்திய உலகம் செயல்பட ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்துத்துவத்திற்கும் மேற்கத்திய நவீன காலனியத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்ட இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கங்கள் பக்கம் திரும்பினர். சுதந்திர இந்தியா மத அடிப்படைவாதத்தை ஒழிக்க இன்னும் சிரத்தையுடன் செயல் பட்டிருந்தால் இன்று நாடு இந்த நிலையில் இருந்திருக்காது. அடிப்படைவாதிகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றார்கள். மத நம்பிக்கையையும், மத அடிப்படைவாதத்தையும் சரிவர வித்தியாசப் படுத்திப் பார்க்க முந்தைய அரசாங்கங்கள் தவறி விட்டன. அதன் விளைவுதான் இது.

ஆனால் இஸ்லாமியர்கள், பொதுச் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலமாகத்தான் எதிர் சக்திகளை வெற்றி கொள்ள முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. உதாரணமாக பத்தொன்பது சதவிகித முஸ்லிம்கள் வாழும் உபியில், முஸ்லிம்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அரசியல் வெற்றி காண முடியும் என்பது அண்மையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. அப்படியிருக்க ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான தமிழகத்தில் யோசிக்க வேண்டும்.

படிக்க:
♦ யாதும் – ஆர்.எஸ்.எஸ் , டிஎன்டிஜே விரும்பாத ஆவணப்படம்
♦ இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

கே : பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : இஸ்லாத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதற்கு எந்த தடையும் இல்லை. மிகப் புனிதத் தலமான மக்காவில் உள்ள கவ்பாவில் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. முன்பு இஸ்லாமிய பெண்கள் வேலைக்கு போவதில்லை. எனவே வீட்டிலேயே தொழுது வந்தார்கள். இப்போது பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். எனவே காலம் மாறி வருகிறது. சென்னையிலும் சில பள்ளிவாசல்களில் அண்மைக்காலமாக பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கே : பத்திரிகைத்துறையில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்பட்டு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : தவறு. தமிழகத்தை பொறுத்த வரை நிச்சயமாக பத்திரிகை உலகில் இஸ்லாமியர்கள் புறக்கணிப்படுவதில்லை. பெரும்பாலான ஊடகங்களில் முஸ்லிம்கள் பணிபுரிகிறார்கள். இருப்பினும் இஸ்லாமியர் குறித்து தவறான செய்திகளை சில பத்திரிக்கைகள் அவ்வப்போது உள்நோக்கத்தோடு வெளியிடுகின்றன. மறுப்பதற்கில்லை. அவர்களிடம் பத்திரிகை இருக்கிறது. எழுதுகிறார்கள். ஆனால் இஸ்லாமியர் பத்திரிகை நடத்தக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஏதும் இல்லையே. அப்படியிருக்க பொது சமூகத்தை சென்றடையக் கூடிய வகையில் இஸ்லாமியர்கள் நடத்தும் பத்திரிகைகள் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இது சமூகத்தின் தவறு.

கே : சென்னை, அதனையொட்டிய சுற்றுப் பகுதிகளில் நீங்கள் மேற்கொண்டு வரும் பாரம்பரிய பயணங்கள் குறித்து.

பதில் : நான் ஒரு வரலாற்று ஆய்வாளன். நமது பல பிரச்சனைகளுக்கான தீர்வு வரலாற்றில் இருக்கிறது என்று நம்புகிறேன். ஆனால் வரலாறு நமக்கு முறையாக சொல்லித் தரப்படுவதில்லை. உதாரணமாக தமிழர்களுக்கு மிகப் பெரிய கடல் பாரம்பரியமுண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்து சென்று பொருளீட்டிய சமூகம் இது. அவ்வாறு சங்க காலத்திலிருந்து, கடல் கடந்து ஈட்டிய பொன்னும் பொருளும் தமிழகத்தை வளப்படுத்தியது. இன்று தமிழர்களுக்கு இந்த வரலாறு பெரும்பாலும் தெரியாது. பலவற்றை மறந்து விட்டோம், சில நம்மிடமிருந்து மறைக்கப் பட்டது. இவ்வாறு மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட, பேசப்படாத வரலாற்றை பேசுவதுதான் எனது பாரம்பரிய நடை பயணத்தின் நோக்கம். எனவே இதில் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்த்து அவ்வப்போது பல இடங்களுக்கு செல்கிறோம்.

***

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.  டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களை நேர்காணல் செய்து வருகிறார் பீட்டர் துரைராஜ்.

***

நன்றி : டைம்ஸ் தமிழ்