2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 – உலகத் தாய்மொழிகள் நாளுக்காக புது தில்லியில் ஜந்தர் மந்தரில் ஒரு ஆர்பாட்டம் நடத்துவதற்காக வேலைசெய்துகொண்டிருந்த நேரம்…

ஆழி செந்தில்நாதன் அதே ஜந்தர் மந்தரில் ஒரு டென்ட் கொட்டாய் இருந்தது. அதில் பாரதிய பாஷா அண்டோலனோ என்னவோ பெயரில் கொஞ்சம் பேர் வருடக்கணக்காக உண்ணாவிரதம் (ஆள் மாற்றி ஆள் மாற்றி) இருக்கிறார்கள். இந்திய மொழிகளுக்காக குரல் கொடுக்கிறார்களாம். எங்களோடு களத்தில் இருந்த ஒரு தோழர் அவர்களைப் பார்த்து எங்களுடைய போஸ்டரைக் கொடுத்தார். நாங்களும் மொழிக்காகத்தான் போராடுகிறோம் என்று கூறினார். அந்த போஸ்டரில் உலகத் தாய்மொழிகள் நாள் குறித்து ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வாசகங்கள் இருந்தன.

அந்த டென்ட்டில் இருந்த ஒருவர் போஸ்டரைப் பார்த்துவிட்டு என்னிடம் இந்தியில் என்னவோ கேட்டார். எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்று கேட்டேன்.

பிறகு நல்ல அழகான ஆங்கிலத்தில், இந்த போஸ்டரில் இருக்கும் “International Mother Languages Day” என்று ஆங்கிலத்தில் இருந்ததை குறிப்பிட்டு, இந்த ஆங்கிலத்தை எடுத்துவிடுங்கள், வேண்டும் என்றால் தமிழிலேயே போஸ்டரை போடுங்கள், நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் என்றார்கள். தமிழ் அழகான மொழி என்றார் அவர்களில் ஒருவர்.

நான் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆரிய எதிர்ப்பு தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருந்தவன் என்பதால், அவர்களின் தமிழ்ப்பாசத்தைக் கண்டு நான் உருகவில்லை.

அந்த டென்ட் கொட்டாய் பேர்வழிகள் எந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறிய அந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது. பிறகு இரண்டு மணி அவர்களோடு அங்கே விவாதம் நடந்திருக்கும்.

ஆங்கிலத்தை ஒழித்தே கட்டவேண்டும். அதனால் இந்திய மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்றார்கள். அதற்கு நான், ஆங்கில ஆதிக்கம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் இந்தியாவிலுள்ள மொழிகள் என்ன உலகம் முழுக்கவே பல மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்பதெல்லாம் உண்மைதான் என்றும் ஒப்புக்கொண்டேன்.

ஆனால் இந்தியாவில் ஒரு கூட்டுச் செயல்பாடு செய்வதென்றால், பல மொழியினர் ஓரிடத்தில் ஒன்று கூடும்போது, நீங்களும் நானும் எந்த மொழியில் உரையாடுவது என்று கேட்டேன். ஆங்கிலம் வேண்டாம் என்றால், இந்தியில் உரையாடுங்கள் என்று கூறவருகிறீர்களா என்று கேட்டேன்.

“அது வந்து, அது வந்து… ”

என்னோடு இருந்த பிற மொழிக்காரர்களையும் சுட்டிக்காட்டி, “நான் தில்லிக்கு வந்தால் உங்களோடு இந்தியிலும் இதோ இவர் இருக்கிறாரே இவர் பெங்களூர், பெங்களூருக்கு போனால் இவரோடு கன்னடத்திலும், கொல்கத்தா போனால் இவரோடு பெங்காலியிலும் பேசவேண்டுமா? அல்லது இவர்கள் எல்லாம் சென்னைக்கு வந்தால் என்னோடு தமிழில் பேசுவார்களா?” என்று கேட்டேன்.

படிக்க:
♦ விக்கிபீடியா விஞ்ஞானிகளை எப்படி கையாளப் போகிறோம் ?
♦ இந்தி தெரியாதா ? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ ! மோடி தர்பாரின் இந்தி வெறி !

“ஆங்கிலம் அந்நிய மொழி!” என்று அதற்கு பதில் வந்தது. இந்தி மீதான துவேஷம் என்று கோபத்தோடு கத்தினார் டென்ட்வாசி ஒருவர்.

“இந்தியும் எங்களுக்கு அந்நிய மொழிதான். அப்புறம் இதோ நீங்க எங்கிட்ட ஆங்கிலத்தில பேசறீங்க.. உங்க வசதிக்காகத்தானே கத்துக்கிட்டீங்க! அப்படித்தான் நாங்க எங்க வசதிக்காகத்தான் கத்துக்கிட்டோம்!”

இப்படி தொடர்ந்தது விவாதம்.

ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள், ஆங்கில கல்வி தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது என்பது வேறு, இந்த டென்ட் கொட்டாய்காரர்களோ இந்தியாவில் ஆங்கிலத்தை ஒழிப்பது என்று பேசுவது இந்திக்கு எந்தப் போட்டியும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். இதனால் நமது அரசியல் தலைவர்கள் இந்திக்கு எதிராக ஆங்கிலத்தையும் உறுதியாக பயன்படுத்தினார்கள்.

ரங்கராஜ் பாண்டே அந்த டென்ட் கொட்டாக்காரங்களுக்குச் சொந்தக்காரர்தான். அவங்களோட அதே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைத்தான் இங்கே வந்து கொட்டுகிறார் பாண்டே. தமிழை ஆதரித்து ஆங்கிலத்தை எதிர்ப்பது போல பாசாங்கு செய்கிறார் அவர்.

நம்மூர் முட்டாள்கள், “பாண்டே சொல்றது கரெக்ட்தான் இல்லே!”ன்னு கெக்கே பிக்கேன்னு சிரிப்பார்கள். ஆங்கிலம் வெளிநாட்டு மொழி, இந்தி நம்ம நாட்டு மொழி என்று குதர்க்கவாதம் புரிவார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்.

முகநூலில்: ஆழி செந்தில்நாதன்

4 மறுமொழிகள்

 1. மிகவும் சரியான கருத்து கொண்ட கட்டுரை. இந்தியால் ஆங்கிலத்தை வெற்றி கொள்ள முடியாது. ஆனால் மற்ற இந்திய மொழிகளை காலப்போக்கில் ஒழித்துக் கட்ட முடியும். அதனால்தான் ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்பதில் இந்த ஆர்எஸ்எஸ் காரர்கள் உறுதியாக உள்ளார்கள். தென்னிந்தியா வடக்கின் ஆதிக்கத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் ஆங்கிலம் நிச்சயம் தேவை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் மொழியை காப்பாற்றிக் கொள்வதற்கு கூட ஆங்கிலம் கண்டிப்பாக தேவை. இது தெரியாமல் சில தனித்தமிழ், எல்லாம் தமிழ் கூமுட்டைகள் ஆங்கிலத்தை அகற்று, எல்லாவற்றையும் தமிழில் நடத்து என கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

 2. தேசீய இன ஒடுக்குமுறை இருக்கும் வரை நாம் இரு மொழிக்கொள்கையை மட்டுமே உயர்த்திப்பிடிக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி வலுவந்தமாகத் திணிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு வழங்கப்பட்ட உரிமைக்கு மாறாக இந்தித் தேர்வு இல்லை என்றிருந்த நிலையை மாற்றி முதலில் சும்மா உக்கார்ந்துவிட்டு வாருங்கள் என்றார்கள்; இன்று தேருவது கட்டாயம் என்கிறார்கள். 99.99% பேர் இந்தி பேசும் வட மாநிலங்களில் இருந்து தான் தேர்வாகி வேலைக்கு வருகிறார்கள். இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையில் 90% பேர் வடமாநிலத்தவர். இன்னிலை தொடர்ந்தால், இன்னும் 5 ஆண்டுகளில் 99.99% பேர் இந்திக்காரர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமற்ற உண்மை.
  மேலும் ஒரு செய்தி: கடை நிலை ஊழியரைக்கூட நீங்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து எடுக்க முடியாது. அவர்களையும் பெயரளவில் குரூப் ‘சி’ ஆக்கிவிட்டார்கள். மத்திய அரசின் ஊழியர் தேர்வாணையம் மூலமாகத்தான் வரவேண்டும் என்று சொல்லி முடக்கியிருக்கிறார்கள். ஆண்டுக்கணக்கில் எல்லா இடங்களும் காலியிடங்களாகவே உள்ளன.
  மேலும் இன்னொரு செய்தி: இவ்வாறு வடமாநிலங்களில் இருந்து சாமானிய வேலைகளுக்கு வருவோர் அரும்பாடுபட்டேனும் தமிழில் பேசத்தொடங்கி விரைவில் நன்றாகப் பேசப் பழகுகிறார்கள்.
  ஆனால், அரசு அலுவலகங்களில் பணியாற்ற வருவோர் தமிழ் கற்பதில்லை; கற்க வேண்டிய அவசியமும் இல்லை. இங்கிருப்பவர்கள் – அதான் தமிழர் என்று சொல்லப்படுவோர், அவர்களைப் பணிந்தேத்தும் அடிமை மனோபாவம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

 3. //ஆர்.எஸ்.எஸ்-காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்.//

  நூற்றுக்கு நூறு உண்மை.

 4. சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ரெங்கராஜ் பாண்டே எலைட் மாணவர்கள் மட்டும்தான் ஆங்கிலம் கற்கவேண்டும், தமிழகத்தில் இருமொழி திட்டத்தால் அனைவரும்ஆங்கிலம் கற்றதனால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தளர்ந்துவிட்டது, மீண்டும் பார்ப்பனர்களின்ஆதிக்கம் வலுப்பெற அனைவருக்கும் ஆங்கிலம் என்ற முறையை மாற்ற வேண்டும் என்று பதிவிட்டதாகவும், பதிவிட்ட சிறிதுநேரத்திலேயே அதை எடுத்துவிட்டதாகவும் சொலலப்படுகிறது, உண்மையா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க