“இந்தி தெரியாதா? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ!” என்கிற இந்தி வெறி பேச்சை அரசியல்வாதிகள்தான் பேசுவார்கள் என்றில்லை, இந்து வெறியேற்றப்பட்ட அதிகாரிகளும் பேசுவார்கள். உதாரணம் இந்த மும்பை விமான நிலைய குடியேற்ற அதிகாரி.

ஆபிரஹாம் சாமுவேல்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஆபிரஹாம் சாமுவேல்,  மும்பை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஃபிரான்ஸ் செல்ல இருந்தார். குடியேற்ற அதிகாரிகளின் அனுமதிக்காக வரிசையில் நின்றிருந்த அவரிடம் விமான நிலைய அதிகாரி இந்தியில் பேசியுள்ளார். தனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டிருக்கிறார் ஆபிரஹாம். அதற்கு அந்த அதிகாரி, வேறு கவுண்டரில் போய் நில்லுங்கள், இந்தியாவில் இருந்துகொண்டு இந்தி தெரியவில்லை என கடிந்து கொண்டதோடு, “இந்தி தெரியாதா? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ!” எனவும் மொழி வெறி பேச்சை கக்கியிருக்கிறார்.

“எனக்கு முன்னால் வரிசையில் நின்றுகொண்டிருந்த வெளிநாட்டு பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேசி அனுமதி அளித்த அந்த அதிகாரி, என்னைக் கண்டதும் இந்தியில் பேசினார். ‘மன்னிக்கவும் எனக்கு இந்தி தெரியாது’ என சொன்னதும் தந்திரமாக வேறொரு கவுண்டரில் போய் நிற்கச் சொன்னார்” என்கிறார் ஆபிரஹாம்.

மேலும், “அவர் தொடர்ச்சியாக என்னை தமிழ்நாட்டுக்கு போ என சொல்லிக்கொண்டே இருந்தார்.   இதுகுறித்து குடியேற்றத் துறை அலுவலகத்தில் புகார் செய்தேன். அப்போதும் அதிகாரிகளின் முன்னிலையில், தனது நடத்தையை மாற்றிக்கொள்ளாமல் இந்தியாவில் இருந்தால் இந்திதான் பேச வேண்டும் என்றார். அடுத்த கவுண்டருக்குப் போய் நான் அனுமதி பெற்று விமானம் ஏறினேன். முறைப்படி புகார் அளிக்க நேரமில்லை. சிசிடிவியில் பதிவாகியிருக்கும் காட்சிகளைப் பார்த்தால் உண்மை தெரியும்” என்றார்.

இந்த நிலையில், விமானம் ஏறிய ஆபிரஹாம், ட்விட்டரில் தனக்கு நேர்ந்த ஒடுக்குமுறையை காட்டமாக பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கை இணைத்துள்ளார்.

படிக்க:
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

“மும்பை விமான நிலையத்தில் உள்ள 33-வது கவுண்டரில் இருந்த குடியேற்ற அதிகாரியால் நான் அனுமதி மறுக்கப்பட்டேன். எனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். இந்தி தெரியாது என்பதால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது என்ன வகையான கொடுமை! அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறேன். தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என ஒரு ட்விட்டிலும்,

“இந்த ஒரு முக்கியமான காரணத்தால்தான் தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. குடியேற்ற அதிகாரி என்னிடம் ஆங்கிலத்தில் பேசவில்லை. ஆனால், தமிழ் பேசும் அதிகாரியை கண்டுபிடிக்க சொல்கிறார்”

“நான் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். அதைக் காட்டிலும் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன். அதுதான் உங்களுக்கு பிரச்சினை எனில், நீங்கள் உங்களை இந்தியர் என அழைத்துக்கொள்வதற்கு தகுதியற்றவர்கள். நான் இந்தியன், இந்தி பேச மாட்டேன். முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள். அவரவர் தாய் மொழியைப் பேசும் இந்தியர்களை கேவலமாக நடத்தாதீர்கள்” என கடுமையாக தனது ட்விட்டரில் சாடியிருக்கிறார்.

ஆபிரஹாமின் பதிவுகள் ட்விட்டரில் விவாதத்தை கிளப்பியுள்ளன. பலர் இந்துத்துவ ட்ரோல்கள் மோடிக்கு எதிரான அஜெண்டாவை கிளப்புவதாக வழக்கமான வெறியை உமிழ்ந்திருக்கின்றன. பலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

“பலர் என் மீது சந்தேகம் கொள்கிறார்கள். உண்மையில் என்னுடைய மொழிக்காக உலகம் முழுவதும் என்னை மதிக்கிறார்கள். ஆனால் என்னுடைய சொந்த நாட்டில் என்னுடைய அடிப்படை உரிமை மிதிக்கப்படுகிறது. நான் ஒரு எளிய இந்தியர், என்னுடைய பிரச்சினைகளுக்காக நான் குரலை உயர்த்துவேன்” என விளக்கம் அளித்திருக்கும் ஆபிரஹாம், வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (Foreigner Regional Registration Office) புகார் அளித்திருப்பதாக சொல்கிறார்.

சொந்த நாட்டிலேயே மொழியின் காரணமாக ஒருவர் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் சம்பவம் விவாதம் ஆன பின், அதுகுறித்து விசாரிப்பதாக மும்பை சிறப்பு போலீசு பிரிவு ஆணையர் தெரிவித்துள்ளார்.

பல மொழி பேசும் மக்களைக் கொண்ட பிராந்தியங்களின் கூட்டுதான் இந்தியா என்பதை மறைத்து இந்துத்துவ தேசியவாதிகள் செய்த அறுபதாண்டு சதியும் தற்போது ஆட்சியில் இருக்கும் இந்துத்துவ ஆட்சியும் இந்தியர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது.

ஏற்கனவே தேசிய வெறியில் மூழ்கித்திளைக்கும் அதிகாரவர்க்கம், இன்று மோடியின் ஆட்சியில் முழு சுதந்திரத்தோடு பிற தேசிய இனங்களையும், பிராந்திய மொழிகளையும் ஒடுக்குகிறது.

இந்தித் திணிப்பை ஓட்டு அரசியல் தேசிய கட்சிகள் தொடர்ந்து செய்தபோதும் தென்னகம் அதைக் கடுமையாகவே எதிர்க்கிறது. ஆபிரஹாம் தனது ட்விட்டில் சொன்னதுபோல ‘இந்தி’யர்கள் ஒருபோதும் இங்கே கால்பதிக்க முடியாது!

கலைமதி
கலைமதி
நன்றி: மும்பை மிரர்

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

3 மறுமொழிகள்

  1. இன்னும் அதிகமாக இது பாேன்றவர்கள் உருவாகத்தான் பத்து சதவீதம் பாெருளாதார ரீதியில் பின் தங்கியிருப்பவர்கள் என்று சட்டம் காெண்டுவரானுங்களா … அப்ப அதிகப்படியான வெறி ஏறிக்கும் …?

  2. ஆபிரஹாம் தனது ட்விட்டில் சொன்னதுபோல ‘இந்தி’யர்கள் ஒருபோதும் இங்கே கால்பதிக்க முடியாது!

    அவர்கள் தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு குடியா முழுகிப் போய்விடும்? ஒட்டுமொத்த இந்தியாவே அவர்களின் அதிகாரத்துக்குள் இருக்கிறது. அது போதாதா? இதற்கெல்லாம் முடிவு கட்டுவதற்கு வட இந்திய ஆதிக்க எதிர்ப்பை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட கும்பல்கள் sound pollution மட்டுமே செய்கிறார்கள். மத்தியில் ஏற்படும் கூட்டணி ஆட்சியில் பங்கு கிடைத்தால் செய்யவேண்டியதை செய்யாமல் செய்யக்கூடாததை செய்து தமிழ்நாட்டின் மானத்தை கப்பல் ஏற்றுகிறார்கள். இந்த திராவிட கட்சிகளை வைத்துக்கொண்டு வட இந்திய ஆதிக்கத்தை எதிர்ப்பது பற்றி கனவு மட்டுமே காணமுடியும். நம்முடைய மாநிலத்தின் கல்வி முறையும் தரமில்லாததாக இருப்பது இன்னும் பெரிய கேலிக்கூத்து.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க