புகழ்பெற்ற இந்திய ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தனின் “ஃபாதர், சன் அண்ட் ஹோலி வார்” (Father, Son and Holy War) எனும் திரைப்படம் 1995-இல் வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் மதம் மற்றும் அரசியலின் பெயரால் நடக்கும் வன்முறைகளை பேசுகிறது. முக்கியமாக, வன்முறையைத் தூண்டுவதற்காக இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் பேசும் பெண் வெறுப்புப் பேச்சுகளையும், “ஆண்மை” என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளையும் அம்பலப்படுத்துகிறது. இப்புகழ்பெற்ற திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூன் 8 அன்று “வன்முறை உள்ளடக்கம்” என்று கூறி யூ-டியூப் தளம் இத்திரைப்படத்தை நீக்கியுள்ளது. இப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு.ஏ. (UA) சான்றிதழ் வழங்கியிருக்கும் நிலையில், யூ-டியூப் தனிப்பட்ட தணிக்கை வாரியம் போல செயல்பட்டுள்ளது. மதவெறிக்கு எதிராகவும் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தை யூ-டியூப் நீக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இது, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் (அரசியலமைப்பு பிரிவு 19(1)(a)) மீதான பாசிச தாக்குதலாகும்.
இதுகுறித்து இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், “இந்த ஆவணப்படம், மதவெறியர்கள் மற்றும் அதிகாரத்திற்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகளால் ஏற்படும் வன்முறைகளைப் பதிவு செய்கிறது. இது வன்முறைக்கு எதிரான ஒரு வெளிப்பாடுதானே தவிர, வன்முறையை ஆதரிப்பது அல்ல. யூ-டியூப் நிறுவனமே, வெட்கக்கேடு! நல்ல திரைப்படங்ககளை நீக்குவதற்குப் பதிலாக தணிக்கையாளர்களை நீக்குங்கள்.” என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“பொது நலன் சார்ந்த விசயங்கள் உட்பட கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை சார்ந்த சூழலைக் கொண்ட உள்ளடக்கங்களுக்கு வன்முறை கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளிப்போம் என்று யூடியூப் தன்னுடைய விதிகளில் கூறியுள்ளது. ஆனால், என்னுடைய ஆவணப்படத்திற்கு மட்டும் இந்த விதியைப் பயன்படுத்தவில்லை. என்னுடைய படங்கள் பார்வையாளர்களை பாலியல் அல்லது வன்முறையால் கவர்ந்திழுப்பதற்காக எடுக்கப்படும் புனைகதைத் திரைப்படங்கள் அல்ல. மாறாக, நிஜ வாழ்க்கையில் நடப்பதை கேமராவுக்கு முன்னால் அப்படியே உண்மையாகப் பதிவு செய்யும் ஆவணப்படங்கள். இந்தத் திரைப்படங்களில் வன்முறைகள் காட்டப்பட்டிருந்தால், அது வன்முறையில் ஈடுபடுவர்களையும், வெறுப்புப் பேச்சுகள் மூலம் மக்களைத் தூண்டிவிடும் அரசியல் தலைவர்களையும் விமர்சிப்பதற்காகவே ஆகும். விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் வன்முறையற்ற எதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் நீதியை நிலைநாட்டுவது மட்டுமே இத்திரைப்படங்களின் நோக்கம்” என்றும் பட்வர்தன் “தி வயர்” ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
தணிக்கை என்ற பெயரில் பட்வர்தனின் திரைப்படங்களின் மீது யூ-டியூப் தளம் தாக்குதல் தொடுப்பது புதிதல்ல. 1992-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட “ராம் கே நாம்” (Ram Ke nam) எனும் ஆவணப்படம், பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோவில் கட்டுவதற்கான விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட காவி கும்பலின் மதவெறி பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியது.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு “யு” சான்றிதழ் கொடுத்திருந்தது. இச்சான்றிதழ் கொடுக்கப்பட்ட படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றிப் பார்க்கலாம். ஆனால், யூடியூப் நிறுவனம் 2019-ஆம் ஆண்டில் “18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும்தான் பார்க்க வேண்டும்” என இப்படத்திற்கு வயதுக் கட்டுப்பாடு விதித்தது. இதன் மூலம் படத்தை தடை செய்யவும் யூ-டியூப் முயன்றது.
படிக்க: கேரள சர்வதேச திரைப்பட விழா: 19 திரைப்படங்களுக்குத் தடை | ம.க.இ.க கண்டனம்
ஆனால், “அப்போது யூ-டியூப்பிற்குள் ஒரு உள்-மன்றம் (Internal forum) இருந்தது. அங்கு நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை வாதிட்டு, உங்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும். நான் அதைச் செய்து அந்த முடிவை மாற்றியமைத்தேன். ஆனால், இன்று, நான் வாதிடுவதற்கு அனுமதிக்கும் எந்தவொரு தளம் அல்லது மன்றமும் அங்கு இல்லை” என்று பட்வர்தன் தி வயரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், “அடிக்கடி பயன்படுத்தப்படும் “பதிப்புரிமை மீறல்” (Copyright strike) புகார் ஆகும். முழுமையாக என்னால் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்ட எனது பல திரைப்படங்கள், யாரோ ஒருவர் பதிப்புரிமை கோரியதைத் தொடர்ந்து யூ-டியூப்பிலிருந்து நீக்கப்பட்டன. இந்த உரிமைகோரல் உண்மையானதா அல்லது விசமத்தனமானதா என்று திறம்படச் சோதிக்க அங்கு எந்த அமைப்பும் இல்லை” என்று பட்வர்தன் தெரிவித்துள்ளார்.
யூ-டியூப்பால் தணிக்கை செய்யப்பட்ட அவரது பெரும்பாலான படைப்புகள் ஏற்கெனவே தணிக்கை வாரியத்திடம் (CBFC) “யு” சான்றிதழ்களைப் பெற்றவை என்பதை சுட்டிக்காட்டிய பட்வர்தன், “யூ-டியூப் ஒரு “சூப்பர் சென்சார்”. அரசாங்கம் சாராத மற்றும் எந்தவொரு கொள்கை சார்பும் இல்லாதவை என்று கூறப்படும் தளங்களில் கூட, இந்த அளவுக்கு ஒரு ஆபத்தான தணிக்கை முறை பின்பற்றப்படுவது அதிர்ச்சியளிக்கிறது” என்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
முக்கியமாக, இத்திரைப்படம் நீக்கப்பட்டதற்கு யூ-டியூபின் சமூக வழிகாட்டுதல்களை மீறியதே காரணம் என்று கூறப்பட்டாலும், பாசிச மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்ற ஆவணப்படங்கள், திரைப்படங்களின் ஆன்லைன் உள்ளடக்கங்கள் தன்னிச்சையாக முடக்கப்படும் போக்கின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
பாசிச மோடி ஆட்சிக்கு வந்தது முதல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள், திரைப்படங்கள் மீதான தணிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகளை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பாசிச நடவடிக்கையின் மூலம் கருத்து சுதந்திரத்தின் குரல்வலையை நெறித்து வருகிறது, மோடி அரசு. 2024-இல் “சந்தோஷ்” எனும் திரைப்படம் தணிக்கை வாரியத்தால் முடக்கப்பட்டது, 2025-இல் காசா குழந்தையை ஈவிரக்கமின்றி இஸ்ரேல் படுகொலை செய்ததை காட்சிப்படுத்திய “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரிஜாப்” திரைப்படமும் தணிக்கை வாரியத்தால் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது இதற்கான சான்றுகளாகும்.
முன்னதாக, 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) சந்தோஷ், ரசிய புரட்சி பற்றிய படமான போர்க்கப்பல் பொதம்கின் உள்ளிட்ட 19 திரைப்படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது முக்கியமானது.
எனவே, ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படம் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்ட பாசிச நடவடிக்கையை ஆவணப்பட இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், ஜனநாயகச் சக்திகள், மக்கள் அனைவரும் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











