ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசின் வருவாயில் 40%க்கும் மேல் இவர்களுக்கே செலவிட வேண்டியிருக்கிறது; இவர்கள் இதற்குமேலும் சம்பள உயர்வு கேட்டுப் போராடுகிறார்கள் என்று அரசே பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தொடங்கி.. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வது; கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னணியாளர்களை மிரட்டுவது; தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது; பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு உடனடியாக பணியிட மாற்றம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை காட்டி தூண்டில் போடுவது வரையில் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு விதமான தந்திரங்களைக் கையாண்டு வருகிறது எடப்பாடி அரசு.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் போராட்டம் வெறுமனே சம்பள உயர்வுக்கானது அல்ல. “5000 அரசுப்பள்ளிகள் மூடுவதை உடனடியாக கைவிட்டு, சமூக நீதியினை பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; 3500 சத்துணவு மையங்கள் மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும்; சிறப்புக் காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்; எல்.கே.ஜி. / யு.கே.ஜி. வகுப்புகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்; 2003, 2004-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.’’ என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியே போராடி வருகின்றனர். ஒன்பது அம்சக் கோரிக்கைகளுள் ஒன்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை. இது, உரிமைக்கான போராட்டம்!

பன்னாட்டு நிறுவனங்களிலும் தனியார் ஆலைகளிலும் பெயருக்கு பத்து நிரந்தரப் பணியாளர்களை நியமித்துவிட்டு ஆகப்பெரும்பான்மையினரை ஒப்பந்தக்கூலிகளாகவும், அப்ரண்டீஸ் மாணவர்களாகவும் வைத்துக்கொண்டு உற்பத்தியை நடத்தி இலாபத்தை ஈட்டுவதைப்போலத்தான் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களையும் அத்துக்கூலிகளைப் போல அற்ப சம்பளத்தில் நியமித்து வருகிறது. பழைய பென்சன் முறையை ஒழித்துக்கட்டியுள்ளது.

இந்தப் பின்புலத்திலிருந்து ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டுமென்று மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

கடந்த ஜன-29 அன்று கரூர் அரசு கலைக்கல்லூரி எதிரில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஈரோடு – சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள் ஜன-29 அன்று தங்கள் கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை அச்சுறுத்தும் விதத்தில் கல்லூரி முதல்வரும், போலீசும் புகைப்படங்களை எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் முழக்கங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்; அவர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

தொகுப்பு: