சாலைகளின் பெயர்களில் சொல்வதற்கு ஏதேனும் ஒரு கதை இருக்கும். கல்கத்தாவின் நெடிய தொடர்ச்சியான வரலாற்றில் அது இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. வடகிழக்கு கல்கத்தாவின் பாக்பாஸர் (Baghbazar) பகுதியில் மர்ஹாட்டா அகழி சந்து (Marhatta Ditch Lane) பெயரிடப்பட்ட பின்னணியில் அது போன்ற சுவாரசியமான கதை ஒன்று உள்ளது.

கல்கத்தாவின் வடகோடியில் 1740-களில் அந்த அகழி எதற்காக கட்டப்பட்டது? அந்த காலகட்டத்தில் வங்காளியர்களை படுகொலை செய்து கொண்டிருந்த மராட்டியத்தின் குதிரைப்படையை தடுக்கவே அது கட்டப்பட்டது.

இரகோஜி போஸ்லே.

1741-ம் ஆண்டுவாக்கில், பாஸ்கர் பண்டிட்டின் தலைமையில் அன்றைய நாக்பூர் மராட்டிய மன்னரான இரகோஜி போஸ்லேவின் (Raghoji Bhosle) குதிரைப்படை மேற்கு வங்கத்தை கொள்ளையிடத் தொடங்கியது. இந்த மராட்டியர்களை வங்காளிகள் பார்கிகள் என்றழைத்தனர். இது பர்கிர் (மூலச்சொல்-பாரசீகம்) என்ற மராட்டி சொல்லின் திரிபு. அகமத்நகரின் புகழ்பெற்ற முதன்மை அமைச்சரான மாலிக் அம்பர் (Malik Ambar) பீடபூமிக்கே உரித்தான கொரில்லா போர்முறையை நேர்த்தியாக்கியிருந்தார். அது அன்று பார்கிர் – கிரி (bargir-giri) என்றழைக்கப்பட்டது. அதிரடியாக தாக்கி மறையும் இந்த போர்த் தந்திரம் பீடபூமி வரித்துக்கொண்ட போர்முறையின் தவிர்க்கவியலாத ஒரு அங்கமானது. இதை பயன்படுத்திதான் சிவாஜி மிகப்பெரிய வெற்றி பெற்றார். கெடுவாய்ப்பாக, அதே போர்தந்திரம்தான் வங்கத்து மக்கள் மீது பின்னர் மராட்டியர்களால் தொடுக்கப்பட்டது.

பார்கிர் – கிரி:

1740-களில், வங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த நவாப் அலிவர்டி கானின் (Nawab Alivardi Khan) படைகளை போஸ்லேவின் பார்கிரி-கிர் கொரில்லாப்படை திக்குமுக்காட செய்து கொண்டிருந்தன. சில நேரங்களில் நேருக்கு நேரான மோதல்களில் மராட்டிய படைகளை வங்க படைகள் தோற்கடித்தாலும், கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்த மராட்டிய கொரில்லா படைகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த கானின் வங்கத்துப்படைகளை எளிமையாக பிளந்து சென்றன.

இப்படி பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வங்கத்தை தாக்கி கொள்ளையடித்த மராட்டிய படையினால் வங்க மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளாக அளப்பரிய உயிர்பலி உள்ளிட்ட மனித துன்பங்கள் முதல் பொருளாதார நெருக்கடி வரை ஏற்பட்டன. சமகாலத்து டச்சு தகவல்களின் படி, மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற வணிகர்கள் உட்பட 4 இலட்சம் வங்க மக்களை மராட்டியர்கள் படுகொலை செய்தனர் என்று வரலாற்றாய்வாளர் பி.ஜெ மார்ஷல் எழுதுகிறார். இத்தகைய இழப்புகள் வங்கத்தை நிரந்தரமாக முடக்கியதாக அவர் மேலும் கூறுகிறார்.

படிக்க:
கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
கேள்வி பதில் : வணிக ஊடகத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு பணியாற்ற முடியாதா ?

கொரில்லா படைகளால் ஏற்பட்ட சேதங்களை மகாராட்டிர புராணத்தில் தான் எழுதிய வங்கப் பாடலொன்றில் பின்வருமாறு கூறுகிறார் கங்காராம்,

இச்சமயத்தில் ஒருவரும் தப்பவில்லை,
பார்ப்பனர், வைணவர்கள், துறவிகள் மற்றும் குடும்பத்தினர்,
அனைவருக்கும் விதி ஒன்றுதான், பசுக்களுடன் மனிதர்களும் கொல்லப்பட்டனர்.

இப்படி பார்கிகளின் பயங்கரவாதம் அளப்பரியதாக இருந்தது. இது வங்கத்து தாலாட்டுப் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கத்து தாய்மார்கள் மராட்டிய படைகளின் தாக்குதலுக்கு பயந்து தங்கள் குழந்தைகளை தூங்கச் செய்வதற்கு கூட பயப்படுவார்கள் என்று வருகிறது. வங்காளிகளிடையே இன்றும் இக்கவிதைகள் பிரபலமாக இருக்கின்றன. அதில் ஒன்றின் சுமாரான மொழியாக்கம்,

குழந்தைகள் தூங்கும் போது, எங்கும் நிசப்தம் சூழ்ந்த சமயத்தில், பார்கிரிகள் நம்முடைய நாட்டிற்குள் வருவார்கள்
பறவைகள் விதைகளை தின்று விட்டன, என்னால் எங்கனம் திரை செலுத்த முடியும் (பார்கிக்கு)?
நம்முடைய உணவும் குடிநீரும் தீர்ந்து விட்டன, என்னால் எங்கனம் திரை செலுத்த முடியும்?
சிலநாட்கள் காத்திருங்கள், நான் பூண்டு விதைத்திருக்கிறேன்.

கல்கத்தாவின் அகழிகள்:

கிராமப்புறங்களை மட்டுமல்ல வங்கத்தின் தலைநகரான முர்ஷிதாபாத்தையும் மராட்டிய பார்கிகள் விட்டு வைக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவரான மார்வாரி வங்கியாளர் ஜகத் சேத்தின் (Jagat Seth) மாளிகையையும் அவர்கள் கொள்ளையடித்தனர்.

ஆயினும், ஆங்கிலேயர்களின் தகவல்கள் படி கல்கத்தாவை மராட்டியர்கள் ஒருபோதும் தாக்கவில்லை. மேலும் அகழியின் தெற்கு பகுதியில் “உண்மையான” கல்கத்தாவில் வாழ்ந்த மக்களுக்கு அகழி தோண்டுபவர்கள் (ditchers) என்று பெயர் வந்தது. இன்று இந்த அகழி மூடப்பட்டு மேல் வட்ட சாலையாக போடப்பட்டுள்ளது.

பத்தாண்டுகள் தொடர் கொள்ளைத் தாக்குதலுக்குப் பின்னர் தோல்வியை நவாப் ஒப்புக்கொண்டதாலும் ஒரிசாவையும் ரகோஜி போஸ்லேவிடம் ஒப்படைத்ததாலும் மாராத்தாக்கள் தாக்குதலை நிறுத்திக் கொண்டனர்.

வரலாற்றை இந்துத்துவ கண்ணாடியால் ஊடுருவுதல்:

ஆகார் படேல் (Aakar Patel) தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுவது போல, மாராத்தாக்களின் இந்த வரலாறு உண்மையாக ஒருபோதும் நினைவுக் கூறப்படுவதில்லை. மாராத்தாக்கள் எப்பொழுதுமே தேசப்பற்றாளர்களாகவும் இந்தியா அல்லது இந்து தேசியத்திற்கு உறுதுணை புரிந்தவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இது ஒரு பொதுவான போக்கு. மேலும் கட்டுக்கதைகளின் மூலமாகவே நவீன நாடுகள் வரலாற்றை உருவாக்குகின்றன. இசுலாமிய தேசியம் என்பது குதுப்-உத்-தீன் ஐபக்கின் (Qutb-ud-din Aibak) காலந்தொட்டே இருப்பதாக பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர். அதே போலவே விநாயக் சாவர்க்கரின் சொற்களில் சொல்வதெனில், “ஹிந்து பாத் பாத்ஷாஹி” (Hindu Pad Padshahi) யை உருவாக்கும் நோக்கிலேயே மாராத்தாக்களால் இந்து தேசியம் வளர்க்கப்பட்டதாக பெரும்பாலான இந்துக்கள் கருதுகின்றனர்.

குதுப்-உத்-தீன் ஐபக்.

பீடபூமியின் இசுலாமிய சுல்தான்கள் மற்றும் முகலாயர்களிடமிருந்து எப்படி எந்த சிக்கலுமில்லாமல் பாரசீக மொழியிலான “ஹிந்து பாட் பாஷ்சஹி” என்ற சொற்றொடர் மாராத்தாக்களால் முற்றிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது இங்கே முரண்படுகிறது. இப்படி வரலாற்றை எளிமையாக புரிந்து கொள்வது, “இந்து பெரும்பான்மை” வாழ்ந்த மேற்கு வங்கத்தை தாக்கி கொள்ளையிட்ட மராட்டியர்கள் பாத்திரத்தையும், அவர்களை துரத்துவதற்கு ஒரு “முஸ்லீம் நவாப்” போராடியதையும் எளிமையாக கடந்து செல்வதற்கே வழி வகுக்கிறது. இன்றைய இந்தியா “இந்து” மற்றும் “முஸ்லிம்” என்ற இருமைகளாக பார்க்கப்படுகிறது. அது கடந்த காலத்தையும் அதே பார்வையிலேயே பார்க்க முயல்கிறது. ஆனால், கடந்த காலத்தில் இருந்தது முற்றிலும் வேறான ஒரு நாடு.

வினவு செய்திப் பிரிவு
கட்டுரையாளர்: Shoaib Daniyal
தமிழாக்கம்: சுகுமார்
நன்றி: scroll

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க