சினிமா என்பது சமீப கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது.

அந்த வகையில் சமீபகால தமிழ் சினிமாக்களில் தொற்றா நோய்களை காமெடியாகவோ அல்லது செண்ட்டிமெண்ட்க்காகவோ சேர்க்கும் தன்மையை காண முடிகிறது.

சமீபத்தில் பார்த்த ரஜினி காந்த் நடித்திருக்கும் “பேட்ட” படத்தில் கூட வில்லனான சிங்கார் சிங் கதாபாத்திரத்திற்கு சிறுநீரகம் முழுவதும் செயலிழந்து தனது வீட்டின் மாடியிலேயே, வீட்டிலேயே ஹீமோ டயாலிசிஸ் (Hemodialysis) செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாக இயக்குநர் காண்பித்திருப்பார்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினி அவரைப் பழிவாங்க வரும்போது தப்பித்து சென்று விடாமல் இருப்பதற்காக அவருக்கு டயாலிசிஸ் செய்யுமாறு காண்பிக்கப்பட்டாலும் தற்போதைய நமது தமிழக நடப்பு நிலவரத்தை பிரதிபலிப்பதாகவே அந்த காட்சி அமைந்துள்ளது.

தமிழகத்தில் நீரிழிவு (Diabetes ) மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற வாழ்வியல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதிகமாகி வருகின்றனர்.

இவர்களில் கிட்னி ஃபெயிலியர் நிலையில் மாற்று கிட்னி வேண்டி காத்திருப்போர் பட்டியலில் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. தெருவுக்கு ஒரு கிட்னி நோயாளியாவது இருக்கும் நிலை தற்போது இருக்கிறது. இது நாளை குடும்பத்தில் ஒருவர் கிட்னி நோயாளியாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது

காரணம் 1980-களில் தெருவில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தது இப்போது குடும்பத்தில் ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறது.

மாதிரிப்படம்

நாளுக்கு நாள் டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகள் அதிகமாகி வருவதும், டயாலிசிஸ் மிகவும் தேவையான சிகிச்சையாக மாறியிருப்பதும் உணர்த்துவது
நாம் இனிவரும் பத்து வருடங்களில் அதிகமான கிட்னி நோயாளிகளைக் காண இருக்கிறோம் என்பதைத்தான்.

இந்த கட்டுரை வழியே கிட்னி நோயாளிகள் ஏன் தோன்றுகிறார்கள் என்று காண்போம்.

நீங்கள் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் சரியே.

அருகில் இருக்கும் மருத்துவமனையில் டயாலிசிஸ் யூனிட் இருந்தால் அங்கு சென்று டயாலிசிஸ் செய்து விட்டு வெளியே வரும் மக்களிடம், ஏன் டயாலிசிஸ் செய்யும் நிலை உங்களுக்கு வந்தது? என்று கேளுங்கள்;

99 சதவிகிதம் பேர் கண்டிப்பாக தங்களுக்கு நீரிழிவு அல்லது ரத்தக்கொதிப்பு இருந்ததாகவும் அதை சரியாக கட்டுக்குள் வைக்கவில்லை எனவும் கூறுவதைக் கேட்கலாம்.

நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டு நோய்களும் தங்களது முதல் எதிரியாக நினைப்பது “சிறுநீரகங்களைத்தான்” எக்காரணம் கொண்டும் நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பை அதன் அளவுகளுக்குள் நீங்கள் வைக்காவிட்டால் உங்கள் கிட்னிகள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டையும் சரி செய்ய அறிவியல் பூர்வமான சிறந்த வழி அதற்குரிய நவீன அறிவியல் பயின்ற மருத்துவரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சை எடுக்க வேணடும். கூடவே உணவு முறை மாற்றம் செய்ய வேணடும்.

அதிக மாவுச்சத்து உணவு முறை என்பது நீரிழிவையும் ரத்த கொதிப்பையும் அதிகப்படுத்தும். ஆகவே மாவுச் சத்தை குறைத்து உண்பது அறிவியல்பூர்வமாக நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பை குறைக்க உதவும்.

இது கூட தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி அல்லது தங்களது அலுவலகப் பணிகளுக்கிடையே 10,000 நடைகள் நடந்திருக்க வேணடும். மன அழுத்தத்தை முடிந்த அளவு திறனுடன் கையாண்டு மன அழுத்தம் நமது உடலை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் ஏழு மணிநேரமாவது உறக்கம் வேண்டும்.

நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு குறித்த மூடநம்பிக்கைகளை நம்பாமல் அறிவார்ந்து சிந்தித்து அறிவியல் கூறிய முறைப்படி அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். “நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்றவை நோய்களே அல்ல என்று பொய்களை நம்பிக்கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் பின்னாளில் சிறுநீரகம் முழுதாக செயலிழந்து விட்ட பிறகு அதை சரிசெய்ய முடியாது.

படிக்க:
♦ சிசேரியன் எனும் உயிர்காக்கும் சிகிச்சை !
♦  கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தம் ஏற்றம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

மேலும் முழுதும் செயலிழந்து விட்ட கிட்னியை வைத்து பல மூடநம்பிக்கைகள் மற்றும் போலி மருத்துவ சிகிச்சைகள் வளர்ந்து மக்களை சுரண்டுகின்றன. முழுவதும் செயலிழந்த கிட்னியை முற்றிலும் சரிசெய்கிறேன் என்று யாராவது கிளம்பினால் அது முற்றிலும் பொய் புரட்டு வேலை.

காரணம் முழுவதும் செயலிழந்த கிட்னியில் நூறு சதவிகிதம் அதில் உள்ள நெஃப்ரான்கள் எனும் நுண்ணிய செல்கள் அழிந்திருக்கும். நெஃப்ரான்கள் முழுவதும் அழிந்துவிட்ட நிலையில் அதை சரிசெய்து செப்பனிடுவது முடியாத காரியம்.

இதற்காகவே கண்டறியப்பட்ட முக்கிய உயிர்காக்கும் சிகிச்சைதான்
டயாலிசிஸ் என்பதாகும். இந்த டயாலிசிஸ் என்பது இயந்திரத்தின் உதவியுடன் சிறுநீரகம் செய்யும் வேலையை செய்வதாகும்.

சிறுநீரகங்கள் இரண்டும் இயற்கையாக செய்யும் வேலை என்ன?

நமது ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை அனுதினமும் சுத்தம் செய்வது கிட்னிகளில் உள்ள நெஃப்ரான்களாகும்.

கிட்னிகள் சரியாக வேலை செய்கின்றன என்பதை எளிதாக நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும் ?

ஒரு வீட்டில் நாம் தூய்மை செய்ய ஒரு பணியாளரை நியமிக்கிறோம். அவர் தினமும் சரியாக வேலை செய்வதை எப்படி நாம் கண்காணிக்க முடியும் ?

வீட்டில் சேரும் குப்பைகளின் அளவை வைத்து அவர் செய்யும் பணியை அளவிட முடியும். வீட்டில் குப்பையே இல்லையெனில் பணியாளர் தன் பொறுப்பை சிறப்பாக செய்கிறார் என்று அர்த்தம். குப்பை அதிகமாக சேர்ந்தால் அவர் பொறுப்பை சரியாக செய்யவில்லை என்று அர்த்தம்.

இது போலத்தான் நமது ரத்தத்தில் கழிவுப்பொருட்களான யூரியா மற்றும் க்ரியாடினின் ஆகிய இரண்டும் சரியாக இருந்தால்.. துப்புறவுப்பணியாளரான கிட்னி சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

இந்த இரண்டும் தன் அளவுக்கு மேல் இருந்தால் கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்று அறிய முடியும்.

மேலும் ஆரம்பகட்ட கிட்னி செயலிழப்பை கிட்னி வழியாக ஆல்புமின் எனும் புரதம் கசிவதைக்கொண்டு அறிய முடியும். நுண்ணிய அளவில் இந்த புரதம் சிறுநீரில் வெளியேறுவது (microalbuminuria) என்பது கிட்னி செயலிழப்பின் ஆரம்பக்கட்ட நிலையை குறிக்கும்.

இது நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகளுக்கு நிகழும் விசயமாகும்.
இதை உடனே அறிந்து சரியான சிகிச்சை எடுத்தால் கிட்னியை சீர் செய்ய இயலும்.

முழுவதும் கிட்னி செயலிழந்து விட்டது. இப்போது இதற்குரிய சரியான சிகிச்சை எது?

முழுவதும் செயலிழந்து விட்ட கிட்னிக்கு சரியான சிகிச்சை என்பது மாற்று கிட்னியை பொறுத்துவதே ஆகும். இதை கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என்கிறோம். (Kidney Transplantation)

அரசாங்கத்தால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கென தனி குழு அமைக்கப்பட்டு அந்த குழு கிட்னி வேண்டி காத்திருப்போர் பட்டியல் அடங்கிய ரிஜிஸ்டரை பராமரிக்கிறது.

மாதம் ஒரு முறை இந்தக் குழு கூடி கிட்னி தேவைப்படுவோருக்கு அதைக் கொடுக்க சம்மதிக்கும் நபரிடம் இருந்து பெற்று தருகிறது. இறந்த நபர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பெயர் (cadaver transplant ). நெருங்கிய ரத்த உறவு முறைகளிடம் இருந்து வாங்கப்படும் கிட்னிகளையும் பொறுத்த முடியும்.

இந்த கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையை பொறுத்து பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை செலவாகும். மேலும் மாற்று அறுவை சிகிச்சை செய்தபின் மாத மாதம் உண்ண வேண்டிய எதிர்ப்பு சக்தி குறைப்பு மருந்துகளுக்கு ₹20,000 வரை செலவாகும்.

இந்த அறுவை சிகிச்சையையும் மாத்திரைகளையும் அரசாங்க மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலசவசமாகவும் பெற முடியும்.

சரி, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யும் காலம் வரை எப்படி உயிரைக் காப்பது?

கிட்னி வேலை செய்ய மறுத்துவிட்ட நிலையில் அந்த வேலையை செய்ய நமக்கு இருக்கும் ஒரே உயிர்காக்கும் சிகிச்சை “டயாலிசிஸ்” எனும் உயிர்காக்கும் சிகிச்சை ஆகும்.

வாரம் இரண்டு முறை செய்யப்படும் இந்த சிகிச்சை மூலம் ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை செயற்கையாக நாம் சுத்திகரிக்கிறோம். ஆபத்தான பல கழிவுகள் உடலில் சேர்ந்தால் மரணம் நேரும். இதில் இருந்து டயாலிசிஸ் நம்மைக் காக்கிறது.

டயாலிசிஸ் குறித்து பரப்பப்படும் தேவையற்ற அச்சத்தால், முழுதும் பழுதடைந்த கிட்னிகளை கொண்ட நபர்களும் டயாலிசிஸ் செய்து கொள்ளாமல் போலி மருத்துவர்களை நாடி அதனால் இறக்கின்றனர்.

ஒரு டயாலிசிஸ்க்கு தற்போது ₹1,200 முதல் 2,000 வரை செலவாகிறது. தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் பல தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் டயாலிசிஸ் இலவசமாக செய்யப்படுகிறது. இதை அனைத்து மக்களும் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே வயிற்றின் மூலம் செய்து கொள்ளும் Peritoneal Dialysis என்ற சிகிச்சையும் உண்டு. ஆனால் பின்னதை விட Hemo Dialysis சிறந்தது.

இககட்டுரை வழி நான் கூறவருவது…

நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகள் தங்களது சர்க்கரை மற்றும் ப்ரஷரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தங்களது சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறதா ? என்று அவ்வப்போது கவனிக்க வேண்டும்.

சிறுநீரகம் செயலிழந்தவர்கள் கண்டிப்பாக சிறுநீரக சிறப்பு நிபுணரை அணுகி அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.

டயாலிசிஸ் என்பது உயிர்காக்கும் சிகிச்சையாகும். அதைப்பற்றிய வதந்திகள் தேவையற்றது. யாருக்கேனும் கிட்னி முழுவதுமாக பழுதடைந்தால் கட்டாயம் டயாலிசிஸ் அவரது உயிரைக்காக்கும்.

*****

வில்லனுக்கு கிட்னி பிரச்சினை இருந்து, அதனால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதை காட்சியாக வைத்து இந்த கட்டுரையை எழுத உந்திய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க