கலையரசன்
“என் முதல் ஆசிரியர்”- மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த “கம்யூனிசக் கொடுங்கோன்மை(?)” பற்றி கூறும் குறுநாவல். கிர்கிஸ்தான் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது. பெண்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை கொண்டோர் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆப்கான் பெண்களின் கல்வி உரிமை பற்றி உலகம் முழுவதும் விவாதித்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல முடியாத அந்நாட்டு பெண்களின் அவலங்களை எண்ணிப் பரிதாபப்பட்டார்கள். ஆனால், இன்று ஆப்கான் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கபடவேடதாரிகள், அன்று ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல், கூடவே பெண்களின் கல்வி உரிமையையும் எதிர்த்தார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதே இனத்தவரையும், மத, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அயல்நாடுகளில் ஏறத்தாழ அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்தக் குடியரசுகள் முன்னர் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த காரணத்தால் தான் இது சாத்தியமானது என்ற உண்மையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பெரும்பாலும் பின்தங்கிய நாடோடி சமூக மக்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளில், கம்யூனிசப் புரட்சிக்கு முன்னர் பள்ளிக்கூடங்களே இருக்கவில்லை. புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே பிரதானமாக கருதிய அந்த மக்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் இருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையும் பருவமடைந்ததும் பெற்றோரால் மணம் முடித்து வைக்கப்பட்டாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் என்றால், வசதி படைத்த வயதான ஆணுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப்பட வேண்டி இருக்கும். இந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது தான் “என் முதல் ஆசிரியர்” எனும் குறுநாவல்.

இந்தக் கதை முழுவதும் ரஷ்யப் புரட்சிக்கு பின்னரான காலத்தில் நடக்கிறது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த கிர்கீசிய மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், நாடோடி மக்கள் சமூகங்களை கொண்ட கிர்கிஸ்தான் பிற்காலத்தில் தனியான குடியரசு ஆகியது. அயலில் உள்ள பிற மத்திய ஆசியக் குடியரசுகளுடன் ஒப்பிட்டால் கூட, கிர்கிஸ்தான் பிராந்தியம் நாகரிகத்தில் பல நூறாண்டுகள் பின்தங்கி இருந்தது.

இந்த நாவலில் வரும் தூய்ஷன் எனும் ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், தான் வாழும் குர்கிரி கிராமத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிக்கிறார். அங்குள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதில் அவர் பட்ட கஷ்டங்களை இந்த நாவல் விவரிக்கிறது.

அந்தப் பாடசாலையில் படிக்கும் கெட்டிக்கார மாணவியான அல்டினாய் என்ற பதினைந்து வயது சிறுமி, அவளது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினரால் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறாள். அதைத் தடுத்த ஆசிரியர் தூய்ஷன் அடித்து நொறுக்கப்படுகிறார்.

துள்ளித் திரிந்த பள்ளிச் சிறுமியான அல்டினாய், ஒரு வயதான ஆணுக்கு மனைவியாக வீட்டு அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறாள். ஆசிரியர் தூய்ஷன் செம்படை வீரர்களை கூட்டிக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்கு வந்து காப்பாற்றுகிறார். பின்னர் அவளை தொலைதூர நகரத்திற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்கிறார்.

படிக்க:
இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !
பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்? – ஜெயந்தி

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் வந்த சோவியத் அரசு, பிற நாட்டு அரசுகளைப் போன்று “உள்ளூர் மக்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து” ஒதுங்கி இருக்கவில்லை. அப்படி ஒதுங்கி இருந்தால், கிர்கிஸ்தான் இன்று இன்னொரு ஆப்கானிஸ்தானாக காட்சி அளித்திருக்கும். உண்மையில், சோவியத் அரசு தனி மனித உரிமைகளுக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதை இந்த நாவலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த நாவலில் வரும் பாடசாலை சுவரில் லெனின் படம் மாட்டப்பட்டிருந்தது. லெனின் மரணமடைந்த நேரம் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இது போன்ற பகுதிகளை காட்டி, “பார்த்தீர்களா? கம்யூனிசப் பிரச்சாரம்!” என்று சில விஷமிகள் குறை கூறலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கி இருந்த, எழுத்தறிவற்ற மக்கள் கல்வி கற்க வாய்ப்பளித்த, சோவியத் அரசையும், அதன் ஸ்தாபகரான லெனினையும் அந்த மக்கள் போற்றுவதில் என்ன பிழை இருக்கிறது?

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க