பத்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு இந்துத்துவ தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  சாதி ஒடுக்குமுறை, பெண்களுடைய உரிமைகள், குறிப்பாக வலது சாரி இந்துத்துவ தீவிரவாதத்தை கடுமையாக எழுதிவந்தார் கௌரி லங்கேஷ். சனாதன் சஸ்தா என்ற காவி தீவிரவாத அமைப்பால் திட்டமிட்டு சுட்டுகொல்லப்பட்ட கௌரியின் பிறந்த தினமான ஜனவரி 29 அன்று, அவருடைய சகோதரியின் மகள் இஷா லங்கேஷ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே…

லி…நான் அதிகமாக சிந்தித்த உணர்வுகளில் ஒன்று. அது உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக உண்டான வலி அல்ல; ஒருவரை இழக்கும்போது உண்டாகும் ஒருவித வலி அது. என் அன்புக்குரிய ஒருவரை ஒருநாள் இழக்க வேண்டியிருக்குமே என அதிகமாக என்னுடைய சிறுவயதில் சிந்தித்ததுண்டு, பயம் கொண்டதுண்டு. ஆனால், ஒருபோதும் அதை உண்மையாக உணர்ந்ததில்லை; அது உண்மையாக நடக்கும்வரை.

ஒரு மாலைப் பொழுது, என்னுடைய பெரியம்மா விழுந்துவிட்டதாக பாட்டியும் நானும் அறிந்தோம். நாங்கள் அப்போது தனியாக இருந்தோம். என் பெரியம்மாவின் வீட்டுக்கு பாட்டி என்னை அழைத்துச் சென்றார். வழி முழுவதும் பயத்துடன் அழுதபடியே வந்தார் அவர்.  என்ன நடந்திருக்கும் என்பது பற்றி அவர் பயந்தார்.  நாங்கள் பெரியம்மாவின் வீட்டுக்குச் சென்றபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியானோம்.

என் அம்மா எங்களுக்கு முன்பே அங்கு இருந்தார், மனமுடைந்து அழுதுகொண்டிருந்தார். நானும் மனமுடைந்துபோனேன்.  நான் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அழுதேன், அந்த வலி நான் உணர்ந்திராதது, அல்லது கற்பனை செய்திராதது.  மேலும், என்ன நடந்தது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியது, அது நம்ப முடியாததாக இருந்தது. இந்த நாள் வரை, நான் இப்போதும் அவரை இங்கே இருப்பதாக உணர்கிறேன். அவர் இங்கிருந்து என்றென்றுமாக விட்டுச் செல்லவில்லை.

காலம் வலிகளை ஆற்றும் என்பார்கள். ஓராண்டு ஓடிவிட்டது ஆனால், வலி நேற்றையது போலவே உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அழுததைப் போல இப்போது அழாமல் இருக்கலாம். ஆனால், உள்ளே இருக்கும் வெற்றிடத்தில், அந்த நாளில் உணர்ந்ததைப் போல ஆழமாக உணர்கிறேன்.

தொடக்கத்தில், கொலைகாரர்கள் மீது கடும்கோபத்தில் இருந்தேன்.  அவரை தாக்கியதைப் போலவே, அவர்களும் தாக்கப்பட வேண்டும் என விரும்பினேன். நாங்கள் அனுபவித்த வலியை அவர்களும் உணர வேண்டும். இப்போதும் அதை நினைக்கிறேன். கசக்கும் உண்மை என்னவென்றால், அவர்கள் பாதிக்கப்பட்டாலும்கூட என்னுடைய பெரியம்மா திரும்பிவரப் போவதில்லை.  ‘கண்ணுக்கு கண் என்பது, மொத்த உலகத்தையும் குருடாக்கிவிடும்’ என்பதை உணர்ந்தேன்.  நாம் அனைவராலும் செய்ய முடிந்தது, வலி குறையும் வரை காத்திருப்பதுதான். சட்டரீதியாக கொலைகாரர்கள் தண்டனை பெறும்வரை, நீதி கிடைக்கும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

நான் அவரை நினைக்காத நாளே இல்லை. என் மீதான அவருடைய அன்பை நினைக்கும்போதெல்லாம், நான் அவரை  இழந்திருப்பதை தீவிரமாக உணர்கிறேன். என்னுடைய பெரியம்மாவுக்கு குழந்தைகள் இல்லை, அதனால் அவர் என்னை மகள் என அழைத்தார். நான் அவரை ‘அவ்வா’ (கன்னடத்தில் அம்மாவை அவ்வா என்பார்கள்) என்று அழைப்பேன். அவர் எனக்கு இரண்டாவது அம்மாவைப் போன்றவர். ஒருவரை இழக்கும்வரை அவருடைய உண்மையான மதிப்பை நாம் உணர மாட்டோம் என சொல்வார்கள். நான் அவரை எவ்வளவு நேசித்தேன் என்பதை அவரை இழக்கும்வரை உணரவில்லை. அவர் இல்லாத உலகை நான் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்ததில்லை.

நான் சிறுமியாக இருந்தபோது, வார இறுதிகளில் அவருடைய வீட்டுக்குச் செல்வேன். தூங்கும் முன் சிண்ட்ரெல்லா கதைகளை தன்னுடைய பாணியில் அவர் சொல்வார். அவருடைய சிண்ட்ரெல்லா கதைகளில், சிண்ட்ரெல்லா உறுதியான, சுதந்திரமான பெண். சிண்ட்ரெல்லா பணி செய்யும் பெண்ணாக இருப்பார். ஒவ்வொரு முறையும் சிண்ட்ரெல்லாவின் பணியை பெரியம்மா மாற்றிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் சிண்ட்ரெல்லா சமையல் கலைஞராக இருப்பார், இன்னொரு நேரத்தில் எழுத்தாளராக இருப்பார்.  ஆனால், அனைத்து சிண்ட்ரெல்லாக்களும் இளவரசருக்காக காத்திருக்கும் சாதுவான பெண்கள் அல்லர்.

ஒவ்வொரு முறையும் இந்தக் கதை கொஞ்சமாவது வேறுபட்டிருக்கும். அவர் சந்தித்த சவால்களும் அதில் இருக்கும். நான் இந்தக் கதைகளைக் கேட்க விரும்பினேன். நான் வயது முதிர்ச்சியடைந்தபோது, ஜிம் கார்பெட், கென்னித் ஆண்டர்சன், பூர்ணசந்திர தேஜஸ்வி போன்றோரின் நூல்களை படிக்கக்கொடுப்பார். அவர் தீவிரவான வாசிப்பாளராக இருந்தார். உண்மையில், என் பெரியம்மா சிறுமியாக இருந்தபோது,  அவருடன் பிறந்தவர்கள் விளையாடப்போவார்களாம். ஆனால்,  பெரியம்மா நூல்களின் உலகத்தில் மகிழ்வுடன் இணைத்துக்கொள்வாராம்.

கவுரி லங்கேஷ் இறுதி ஊர்வலத்தில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள்.

என் பெரியம்மா என்னை கொண்டாடி மகிழ்வார். அவருடைய நண்பர்களிடம் என்னை அவருடைய தங்கையின் மகள் என ஒருபோதும் சொன்னதில்லை. தன் மகள் என்றே சொல்வார். அவர் பணியில் எவ்வளவு மும்முரமாக இருந்தாலும், என்னைப் பற்றி நண்பர்களிடம் சொல்வதை மட்டும் நிறுத்தியதில்லை.  அவர் எப்போதும் என்னிடம் ”உனக்காக நீதான் பேச வேண்டும்” என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருப்பார்.  தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றி எனக்கு சொல்வார், உரைகளை கேட்க என்னை அழைத்துச் செல்வார்.  கன்னையா குமார் அல்லது ஷீலா ரஷீத் போன்ற இளம் மாணவ செயல்பாட்டாளர்களின் பேச்சுக்களை கேட்கச் சொல்வார். இளைஞர்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் சொல்வார். அவர்களால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் எனவும் சொல்லிக்கொண்டிருப்பார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய பிறந்த நாளில் தாத்தாவின் நாளிதழ் இலட்சிணையான மயில் இறகையும் அதன் கீழே என் பெயரையும் டாட்டூவாக குத்திக்கொண்டார். ஒவ்வொரு வார இறுதியிலும் வீட்டுக்கு வந்து, அம்மாவுடனும் என்னுடனும் நேரத்தை செலவழிப்பார். என்னுடைய பெரியம்மாவுக்கு இறைச்சி உணவுகள் பிடிக்கும். ஆனால், அவர் சமைத்ததில்லை. எப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வருவாரோ, அப்போது என் அம்மா எங்கள் இருவருக்கும் கோழி இறைச்சியை சமைத்து தருவார். அவர்கள் இருவரும் தங்களுடைய கடந்த காலத்தில் நடந்த கேளிக்கையான நிகழ்வுகளை பகிர்ந்துகொள்வார்கள். நாங்கள் அந்த மதியத்தை சிரித்து கழிப்போம்.

சார்பில்லாமலும் சமமாகவும் இருப்பதற்கு என்னுடைய பெரியம்மா முக்கியத்துவம் கொடுத்தார். அது எங்களுக்குள் ஆழமாக பதிந்தது. எங்களுடைய குடும்பம் என்னுடைய மாமா வீட்டில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும். கிறித்துமஸை எங்கள் வீட்டில் கொண்டாடுவோம். ரம்ஜானை எங்களுடைய பெரியம்மாவின் வீட்டில் கொண்டாடுவோம். எனக்கும் என்னுடைய மாமாவின் பிள்ளைகளுக்கும் இந்த விழாக்களில் உள்ள ஒற்றுமையை சொல்வார்.  அவரைப் பொறுத்தவரை அனைத்து மதங்களையும் சாதியினரையும்  புரிந்துகொள்வது உணர்ந்துகொள்வது முக்கியமானது. அவர் பெண்களுக்காகவும் தலித்துகள், முசுலீம்கள், மாற்று பாலினத்தார் மற்றும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்காகவும் போராடினார் என்பதை சொல்லத்தேவையில்லை.  அவர் உறுதியான, அறத்துடன் செயல்பட்ட பத்திரிகையாளர். அடித்தட்டு மக்களுக்காகவும் அவர்களுடைய பிரச்சினைக்காகவும் போராடிய தீவிரமான செயல்பாட்டாளர் அவர். அவர் நக்ஸலைட்டுகளிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி வலியுறுத்தியவர்.

அவர் இரவு பகல் பாராமல், கடினமாக உழைத்தார். எப்போதும் ஓய்வெடுத்ததில்லை. அவருடைய இறப்புக்குப் பிறகு அவர் யார் என்பதையும், அவர் மக்களுக்காக என்ன செய்தார் என்பதையும் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர் என்னை நேசித்த அவ்வா. ஆனால், ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர் அக்கா, அம்மா, நண்பர், உடன் பணியாற்றியவர். மேலும் பல இளைஞர்களுக்கு அவர் வழிகாட்டியும்கூட.

அவர் என்ன செய்தார் என எனக்குத் தெரியும், அவர் எதை நேசித்தார் என்பது தெரியும். மேலும் அவர் எதை வெறுத்தார் என்பதையும் நான் அறிவேன். ஆனால், அவர் எத்தனை பேருடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தினார், வயதானவர்கள், இளைஞர்கள், வலிமையிழந்தவர்கள், ஒன்றுமேயில்லாதவர்கள் என்பது குறித்து நான் ஏதும் அறியேன். அவருடைய இறுதி நாளில், சில பேர் வருவார்கள் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், ஆயிரக்கணக்கானவர்கள் வந்ததைக் கண்டு ஆச்சரியமுற்றோம்.

கர்நாடகத்தின் மூலை முடுக்கில் மட்டுமல்ல, இந்தியா, உலகம் முழுமைக்கும் போராட்டங்கள் நடந்தன. இந்தியா கேட் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் போராடினார்கள். அனைத்து நகரங்களிலும் பத்திரிகையாளர்கள் போராடினார்கள். ஓராண்டு கழிந்த பிறகும்கூட, நீதியை வேண்டியும் அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசுகிற பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காகவும் பிரான்ஸ், நியூயார்க், ஜெர்மனி, மால்டா ஆகிய இடங்களில் போராடினார்கள். ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ அமைப்பினர் ஃபிரெஞ்சு நகரமான Bayeuxல் அவ்வாவின் நினைவாக தூண் ஒன்றை எழுப்பினார்கள்.

அவரைப் பற்றி பெருமை கொள்ளும்போது, என்னுடைய வலி அனைத்தும் குறைவதை உணர்கிறேன். மேலும், அவரைக் கொன்றவர்கள் அவருடைய குரலை நிறுத்தவில்லை. ஆனால், அவருடைய குரல் இன்னும் வலிமையடைந்திருக்கிறது. அவருக்காக எங்களை நிற்க வைத்திருக்கிறது. அவர் எதற்காக நின்றாரோ அதற்காக எங்களையும் நிற்க வைத்திருக்கிறது.

அவரை இழக்கும்  முன், ஒருவரை இழப்பது எப்படிப்பட்ட உணர்வைத் தரும் என எனக்குத் தெரியாது. நான் ஆழமாக நேசிக்கும் ஒருவரை இழப்பேன் என்கிற பயமும் எனக்கு இருந்தது. அது அனைத்துக்குமான முடிவாக இருக்கும் என நினைத்ததில்லை. பிறகு எல்லாம் இயல்பாகிவிடும் என நினைத்தேன். எதிர்பாராதவிதமாக இது இரண்டுமாக உள்ளது. சில விசயங்கள் திடீர் முடிவுக்கு வந்துள்ளன. சில விசயங்கள் ஒன்றுமே நடக்காததுபோல கடந்து போயிருக்கின்றன.

படிக்க:
மணிப்பூர் : ’பத்ம ஸ்ரீ’ யை தூக்கியெறிந்த சியாம் சர்மா | குடிமக்கள் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !
பல்லாயிரம் போராளிகளை விதைத்துச் சென்ற கௌரி லங்கேஷ் !

திரும்பிப் பார்க்கும்போது, நான் அவருடன் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்க வேண்டுமோ என விரும்புகிறேன். நான் அவரை எவ்வளவு உண்மையாக நேசித்தேன் என்பதை அவருக்கு சொல்லியிருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் எதற்காக நின்றாரோ அதை இன்னும் சிறப்பாக  புரிந்துகொண்டேன் என சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பெரியம்மாவாக மட்டுமல்ல, அதையும் கடந்து அவரை அறிந்திருந்தேன்  என்பதை சொல்ல விரும்புகிறேன்.  நான் அவரை மிகவும் மதிக்கிறேன் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

இதையெல்லாம் அவரிடம் வெளிப்படுத்தினேனா என்பதை பொருட்படுத்தவில்லை. ஆனால், நான் அவரை எவ்வளவு நேசித்தேன் என்பதை அவர் அறிவார். அவர் என்னை எவ்வளவு நேசித்தார் என்பதை நான் அறிவேன். இப்போது அவரிடம் ஏதாவது சொல்ல விரும்பினால், 13 ஆண்டுகளாக எனக்கு வழிகாட்டியாய் இருந்ததற்காக நன்றி என்று மட்டும் சொல்வேன். ஏராளமான விசயங்களை பகிர்ந்துகொள்ள அவர் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால், அவருடைய மனம் எப்போதும் என்னுடனே இருக்கும்.  குறுகிய காலமே வாழ்ந்த அவருடைய வாழ்க்கையில் அவர் நிறைய செய்தார்.  அவர் என்னுடைய இதயத்திலும் மற்றவர்களிடத்திலும் நீண்ட காலங்கள் வாழ்வார். மிக நீண்ட காலங்கள் வாழ்வார்.


கட்டுரையாளர்: இஷா லங்கேஷ்
தமிழாக்கம்: அனிதா
நன்றி: த வயர்

2 மறுமொழிகள்

Leave a Reply to S.S.கார்த்திகேயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க