Newspaper Carriers (Work disgraces) by Georg Scholz. 1921. Courtesy Wikipedia

னிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? நல்லவர்களா, கெட்டவர்களா? இந்தக் கேள்விக்கு கருப்பு வெள்ளையாக பதில் சொல்ல முடியாதல்லவா? எனினும், இதற்கான பதிலைத் தேடி வரலாறு நெடுகிலும் தத்துவஞானிகளும், மெய்ஞானிகளும் கடும் முயற்சிகளைச் செய்துள்ளனர். மார்க்சியத்தை பொறுத்த வரை சமூகச் சூழலும், வர்க்க பின்னணியும் ஒரு நபரின் ஆளுமையை தீர்மானிக்கிறது. நவீன மருத்துவத் துறை சார்ந்த உளவியல் நிபுணர்களும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மனிதர்களின் நடத்தை குறித்த முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் உளவியல் துறையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி கீழ்கண்ட பத்து முடிவுகள் கிட்டியுள்ளன.

இந்த ஆய்வுகள் உடல்ரீதியாகவும், சமூக நடைமுறை ரீதியாகவும் இருக்கின்றன. சில ஆய்வுகள் சர்வே அடிப்படையிலும், சில ஆய்வுகள் பாவனை, பிரதிபலிப்பு, வினை மாற்றம் இன்ன பிற முறைகளிலும் இருக்கின்றன. எனினும் இந்த ஆய்வு முடிவுகளின் உண்மைகைள நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்பது முக்கியமானது. அதை உளவியல் மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள் மட்டும் முடிவு செய்வது சாத்தியமில்லை. மருத்துவம் மனித குலத்தின் உடலியல் வரலாற்றை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து கூறுகிறது. சமூகவியல் வரலாற்றை அறியும் போதுதான் ஒரு தனிநபர் ஏன் இப்படி நடக்கிறார் என்பதை கண்டறிய முடியும்.

மனிதர்களின் நடத்தைகள் கூட வர்க்க ரீதியாக வேறு வேறு காரணங்களால் பிரிந்திருக்கிறது. அன்பு, பாசம், தாய்மை, நட்பு ஆகிய உணர்ச்சிகள் கூட ஒரே  மாதிரியாக அனைவரிடமும் இருப்பதில்லை. தனது மனைவியின் கால் புண்ணாகியது என்று வருந்தும் ஒரு அமெரிக்க அதிபர், ஆப்கானில் கொல்லப்படும் அப்பாவி மக்கள் குறித்து மூடு அவுட் ஆக மாட்டார். ஆய்வு முடிவுகளின் கீழ் எமது கருத்துக்கள் தனியே பச்சை வண்ணத்தில் தரப்பட்டுள்ளன.

  1. மனிதர்கள் சிறுபான்மையினரையும், பாதிப்புக்கு உள்ளானவர்களையும் மனிதத் தன்மையோடு அணுகுவதில்லை. மாணவர் குழு ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களின் மூளை நரம்பு மண்டலத்தை ஸ்கேன் செய்து பார்த்தனர். ஆய்வின் போது வீடற்றவர்கள், போதை அடிமைகள் போன்றோரின் புகைப்படங்களைக் காட்டிய போது சக மனிதர்களைக் குறித்து சிந்திக்கும் மூளையின் பகுதி செயலற்று இருந்துள்ளது. அதே போல் இளைஞர்கள் முதியவர்களையும், அரபு மக்களின் குடியேற்றங்களை எதிர்ப்பவர்கள் இசுலாமியர்களையும் மனித தன்மையோடு கருதவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், வேறு பிரதேசங்களையும் எதிர் பாலினங்களைச் சேர்ந்தவர்களையும் சக மனிதர்களாக கருதாத போக்கு இளம் வயதிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது.

சிறு வயதில் இருந்து யாரெல்லாம் கெட்டவர்கள் என்ற படிமம் நமது சூழலால் நம்மிடம் பதியப்படுகிறது. அந்தக் கால ஆனந்த விகடன் உருவாக்கிய பட்டி டிராயர், கைலி, பட்டை பெல்ட், மீசை, கிருதா வைத்த தோற்றம் உள்ளவர்களை ரவுடிகள் என்று நேற்றைய தலைமுறை நினைத்து வந்தது. இன்று கோட்டு சூட்டு போட்ட கிரிமினல்களே அதிகம் இருந்தாலும் மேற்கண்ட வகையிலான தோற்றம் கொண்டவர்களை ரவுடிகள், வன்முறை கொண்டவர்கள் என்று நம்புவது ஆழ்மனதில் இருக்கத்தான் செய்கிறது. முசுலீம்கள், தலித் மக்கள், வேறு தேசிய இனத்தவர், பெண்கள் குறித்த பல்வேறு ஸ்டீரியோ டைப் பொதுப்புத்திகளின் தோற்றுவாய் இப்படித்தான் உண்மை என்று நம்பப்படுகிறது.

  1. மற்றவர்களின் துன்பத்தில் இன்பமடையும் போக்கு (Schadenfreude) நான்கு வயதிலேயே துவங்கி விடுவதாக கூறுகிறது, 2013 -ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. குறிப்பிட்ட ஒரு மனிதர் துன்பத்துக்கு ஆளாக வேண்டியவர் தான் என்கிற மதிப்பீட்டுக்கு வரும் குழந்தை அவருக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டு இரசிக்கின்றது. மேலும், சமீபத்தில் நடந்த இன்னொரு ஆய்வின் படி ஆறு வயதுக் குழந்தைகள் ”கெட்டவர்கள்” தாக்கப்பட வேண்டும் என்பதையே விரும்புவது தெரிய வந்துள்ளது.

இன்றைய நகர வாழ்க்கையின் முதன்மை அம்சமே போட்டிகள் நிறைந்த உலகில் மற்றவரை முந்தி ஓட வேண்டும் என்பதே. இந்தப் போட்டிகளோடு பார்ப்பனிய சமூகத்தின் பிற்போக்கும், சாதி-மத-பாலியல் வெறுப்புக் கருத்துக்களும் இணையும் போது ஒரு நபர் தனது எதிர்த்தரப்பினரான குழுவைச் சேர்ந்தவர் துன்பமடைய வேண்டும் என்று விரும்புகிறார். இது நேர்மறையான முற்போக்கு கருத்து உள்ளவர்களுக்கும் வேறு மாதிரி இருக்கும். சான்றாக மோடிக்கோ, பாண்டேவுக்கோ ஏதாவது கெட்டது நடந்தா நல்லா இருக்குமே என்று நமக்குத் தோன்றாதா என்ன?

  1. மனிதர்கள் தலைவிதியை நம்புகின்றனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு துயரத்திலிருக்கும் தனது சக மனிதனின் நிலை அவனது தலைவிதி என்று மக்கள் நம்புவதை 1966 -ல் அமெரிக்க உளவியல் நிபுணர்கள் மெல்வின் லெர்னர் மற்றும் கரோலின் சிம்மன்ஸ் நடத்திய ஆய்வு நிரூபித்தது. அவர் நடத்திய ஆய்வின் போது பார்வையாளர்களுக்கு எதிரே ஒரு பெண்ணை அமர வைத்து சில கேள்விகள் கேட்டனர். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒருமுறை மின்னதிர்ச்சி (குறைந்த அளவில்) வழங்கப்பட்டது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் அந்தப் பெண் துன்புறுத்தப்படுவதை மீண்டும் பார்க்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினர். சமீபத்தில் நடந்த வேறு சில ஆராய்ச்சிகளில், பல்வேறு நோய்களுக்கும் வறுமைக்கும் ஆளானவர்களின் தலைவிதியே அவர்களின் நிலைமைக்கு காரணம் என்று நம்புவது தங்களுடைய நல்ல நிலைமைக்கான (பொருளாதார ரீதியில்) நியாயப்படுத்தலாக மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

நெடுங்காலமாக மக்கள் வறுமை, நோய், இயற்கை அழிவு ஆகியவற்றை அந்தந்த மக்களின் தலைவிதி என்றே நம்பி வந்துள்ளனர். நவீன சமூகத்தில் இந்த தலைவிதி வேறு விதமான வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. அந்தக் காலத்தில் சாதி, மதம், பாலியல் போன்றவைகளே வறுமை, தொழிலுக்கான தலைவிதி என்று நம்பியவர் இன்றும் கூட அந்த நம்பிக்கைகளை வைத்துள்ளார். கூடுதலாக நவீன முதலாளித்துவ உலகில் ஏழ்மை என்பது ஒருவர் நன்றாக படிக்கவில்லை, கடினமாக உழைக்கவில்லை, கலாச்சாரம் – நாகரீகம் இல்லை போன்ற காரணங்களால் இருப்பதாக நடுத்தர வர்க்கம் நம்புகிறது. அப்படி அந்த வர்க்கத்தின் நம்பிக்கையை  பல்வேறு சமூக நிறுவனங்கள் உருவாக்குகின்றன.

பணக்காரர்களைப் பொறுத்த வரை தாம் சேர்த்த பணம் என்பது சாதாரண மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மாறாக தனது ‘உழைப்பினால்’ கிடைத்த பலன் என்றும், அப்படி உழைக்க இயலாத சோம்பேறிகளே ஏழை – பணக்காரன் என்று இருமை பேசுவதாக கூறுவார்கள்.

  1. மனிதர்களுக்கு கடிவாளமிட்ட பார்வையும் இறுமாப்பும் உள்ளது. ஒருவரின் கருத்து நமக்கு உவப்பானதில்லை என்றால் அதை தரவு ரீதியாக மறுத்துப் பேச வேண்டும் என்று மனிதர்கள் நினைப்பதில்லை.
    1979 -ல் நடந்த ஒரு ஆய்வின் போது தங்களுக்கு எதிரான கருத்தை ஒருவர் கொண்டிருப்பது தனது சொந்த அடையாளத்துக்கே ஆபத்தானது என்று மனிதர்கள் கருதுவது தெரிய வந்தது. மேலும், நாம் கொண்டிருக்கும் கருத்து மட்டுமே சரியானது என்கிற அதீத நம்பிக்கையும் மனிதர்களிடையே உள்ளது. எனவே பிறருடைய கருத்தைக் கேட்பதற்கும் தமது சொந்த அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கும் மனிதர்கள் முன்வருவதில்லை என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

கடிவாளமிட்ட பார்வை – இறுமாப்பிற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒடுக்குமுறை செய்பவர்கள் ஒடுக்கப்படுபவர்களின் கருத்தை எந்தக் காலத்திலும் கேட்பதில்லை. கூடவே ஒடுக்கப்படும் மக்கள் பேசுவதையோ, போராடுவதையோ அடக்கித்தான் அவர்கள் தமது அதிகாரத்தை அமல்படுத்துகிறார்கள். இந்த வகையிலான நபர்களுக்கு கருத்து ரீதியான உரையாடல் என்பது என்னவென்றே தெரியாது.

ஒடுக்கப்படும் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் யதார்த்தத்தில் ஒடுக்குபவரின் அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கூட கேட்க முடியாத நிலையில் மனதளவிலாவது ஒடுக்கபவர்கள் ஒழிய வேண்டும் என்று விரும்புவார்கள். ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே தமது கருத்து சரி என நிரூபிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். அதனால் இவர்களும் ஒடுக்கும் கருத்துடையோரின் கருத்துக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இப்படி கடிவாளத்திற்கே இரு துருவக் காரணங்கள் இருக்கின்றன.

  1. 2014 -ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஆய்வு ஒன்றின் போது, அதில் பங்கேற்றவர்களில் 67 சதவீத ஆண்களும், 25 சதவீத பெண்களும் அமைதியான உரையால் சிந்தனையில் நேரம் செலவழிப்பதை காட்டிலும் மின்னதிர்ச்சிக்கு தங்களை உட்படுத்திக் கொள்வதே மேல் என கருதுவது தெரியவந்தது.

இந்த ஆய்வின் பின்னணி தெரியவில்லை. பொதுவில் சிலநேரம் நமக்கு நம்மை சுயவதை செய்து கொள்வதாக கற்பனை செய்வதில் விருப்பம் வரலாம். வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பும் தற்கொலை ஒரு தீவிர மன அழுத்தத்தாலோ அல்லது திடீரென ஒரு முடிவாகவோ கூட வரலாம். சுயவதை என்பது புறநிலை வாழ்வோடு போராட முடியாத கோபத்தை இப்படி தன்வதையால் ஆற்றுப்படுத்தும் உடலின் ஒரு செயற்பாடு. போதை பொருள் மூலம் வரும் மயக்கம் ஒரு இன்பமாக, எந்தக் கவலை இல்லாமலும் இருப்பதான நிலையாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு இலட்சிய சமூகத்தில் அப்படி எந்தக் கவலையும் இல்லாத வகையில் ஒரு சமூக அமைப்பு  இருக்கும் போது நாம் இயல்பாகவே மகிழ்ச்சியாக நமது கடமைகளில் கவனம் செலுத்தலாம் அல்லவா!

  1. மனிதர்கள் தகுதியற்றவர்களாகவும் அதீத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவேளை மனிதர்களின் பிற்போக்கு சிந்தனைகளும், இறுமாப்பும் கொஞ்சம் மனிதத் தன்மையோடும், சுய மதீப்பீட்டுடனும் வெளிப்படும் போது கூட மோசமாக இருக்காது. ஆனால், தமது தகுதி மற்றும் யோக்கியதைகளைக் குறித்து அதீதமான மதிப்பீடுகளை மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள். இதில் இருப்பதிலேயே திறமைக் குறைவோடு இருக்கும் மனிதர்களே தங்களைக் குறித்து அதீத மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றனர். ஆக கீழ்மையான குணம் கொண்டிருப்பவர்களே தங்களை அதி உயர்வான நியாயவான் எனக் கருதிக் கொள்கின்றனர். குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் மிக கொடிய கிரிமினல்கள் கூட தங்களை சாதாரண மக்களைக் காட்டிலும் கருணை மிக்கவர்களாகவும், நேர்மையானவர்களாக கருதிக் கொள்கின்றனர்.

எதிர்மறையான கருத்துக்களா தோற்றமளிக்கும் இந்த ஆய்வின் முடிவுகளை உற்று நோக்கினால் அது அப்படி இல்லை என அறியலாம். வர்க்க ரீதியாகவே மக்கள் பிரிந்திருக்கிறார்கள். அம்பானியின் மகனோ, அமித்ஷாவின் மகனோ தமது சொந்த திறமை – தகுதி காரணமாக பெரும் நிறுவனங்களில் சிஇஓ-களாக பணியாற்றவில்லை. அது பில்லியனர் மற்றும் கட்சி தலைவரின் மகன் என்ற வாய்ப்பினால் வருவது. இத்தகைய நபர்கள் தமது தகுதி யோக்கியதை குறித்து அதீதமான மதிப்பீடு இருப்பதில் ஆச்சரியமில்லை. இதை துக்ளக் சோ, குருமூர்த்தி, எஸ்.வி.சேகர் போன்றோரிடமும் காணலாம். எடப்பாடி, ஓபிஎஸ், உதயநிதி ஸ்டாலின், விஷால் போன்ற தமிழக சான்றுகளிடமும் காணலாம்.

மறு புறம் ஆளும் வர்க்கத்தின் வடிவமைப்பில் வாழும் நடுத்தர வர்க்கமும் இத்தகைய அதீத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் முதலாளி போல வசதியான வாழ்வை கனவில் கொண்டிருக்கும் இந்த வர்க்கம் அதற்கேற்றாற் போல இன்றைய பிரச்சினைகளை தவறாக புரிந்து கொண்டு அதுவே தமது அறிவின் மேதமை என்று நினைக்கிறது. சாதி மத பாலியல் ஏற்றத்தாழ்வுகளை முதலீடாக்கி இந்தியாவின் மக்களை வடிவமைத்திருக்கும் பார்ப்பனியத்தின் செல்வாக்கினால் இங்கே வறுமையில் இருப்போரும் குறிப்பிட்ட பிரச்சினைகளில் மேற்கண்ட அதீத நம்பிக்கைளையும், ரவுடிகளாக இருப்போர் தமக்கும் அறவிழுமியங்கள் இருப்பதாக கருதுகின்றனர்.

அதிகமாக நீடிக்கும் தாழ்வு மனப்பான்மை இத்தகைய ஸ்டீரியோ டைப்பான உள்ளீடற்ற அகந்தையை வளர்த்துக் கொள்கிறது. மோடிக்கு கூட நிறைய தாழ்வு மனப்பான்மை இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அல்பத்தனமாக அவர் செல்ஃபி எடுப்பதும், தப்பும் தவறுமாக வரலாறு, இதர விவரங்களை கூறுவதும், மானிட்டரை  பார்த்து படித்து விட்டு இன்ஸ்டெண்ட்டாக பேசுவதான பாவனையாகட்டும் அத்தனையும் ஒரு பாசிஸ்டுக்கே உரிய தாழ்வு மனப்பான்மைதான்.

சாதாரண மக்கள் கூட தமது இருப்பை மறந்து தமது பிரச்சினைகளை தவறாக புரிந்து கொண்டு சாதி, மத அடிப்படையில் சில கற்பனை விழுமியங்களை வைத்துக் கொள்கின்றனர். ஏழை வன்னியர், ஏழை பறையரை தாழ்வாக நினைக்கிறார். வன்முறை செய்யும் கூலிப்படைகளிடமும் கூட இந்த எண்ணம் இருக்கிறது. “அண்ணன் மது, மாது தொட மாட்டாரு, ரேப் பண்ணினாலும் கொலை செய்ய மாட்டாரு, கை காலை முறிப்பாரே ஒழிய கொலை செய்ய மாட்டாரு, பெண்கள் – குழந்தைகள் தவிர மற்றவர்களை கொலை செய்வாரு” என்று ஏகப்பட்ட மேதமைக் கருத்துக்கள் ரவுடி உலகில் வலம் வருகின்றன. தமிழ் சினிமாவிலும் இதை நிறையக் காணலாம். நிருபயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டோரும் கூட இப்படித்தான் தம்மைக் கருதுகின்றனர்.

  1. மனிதர்கள் போலித்தனமான விழுமியங்களைக் (moral hypocrites) கொண்டவர்கள். பிறருடைய தவறுகளைக் குறித்து அதீதமாக கூச்சலிடுபவர்கள் தங்களுடைய சொந்த தவறுகள் என்று வரும் போது அடக்கியே வாசிக்கின்றனர். தனக்குப் பழக்கமானவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் கெட்ட பண்புகளே காரணம் என்று சொல்லும் ஒருவர், அதே போன்ற ஒரு சூழலில் அதே போன்ற ஒரு தவறைத் தானும் செய்யும் போது அதற்கு தனது கெட்ட பண்புகளே காரணம் என்று சொல்லிக் கொள்வதில்லை (actor-observer asymmetry). தன்னோடு பழகும் ஒருவரின் நடத்தைகளில் எவற்றையெல்லாம் சுயநலமானது என்று ஒருவர் வகைப்படுத்துகிறாரோ அதே போன்ற காரியங்களை இவர் மற்றவரிடம் பழகும் போது வெளிப்படுத்துகிறார்; எனினும், தனது நடத்தையை சுயநலம் என்று வகைப்படுத்துவதில்லை. ஒரு காரியத்தை தனக்குப் பழக்கமில்லாதவர்கள் செய்யும் போது அதில் உள்ள தவறுகளை சரியாக அடையாளம் காட்டுவது – அதே காரியத்தை தானோ தனக்குச் சார்ந்தவர்களோ செய்யும் போது கண்டும் காணாமலும் விடுவது என்கிற இந்த இரட்டை நிலைப்பாட்டின் காரணமாகவே ”சமூகம் கெட்டு விட்டது” என்று பழியை சமூகத்தின் மேல் சாட்டுகின்றனர்.

கம்யூனிஸ்டு கட்சிகளில் இருப்போர் விமர்சனம் சுயவிமர்சனம் செய்வது குறித்து ஆசான் மாவோ கூறிய கருத்துக்கள் இந்த ஆய்வு முடிவை புரிந்து கொள்ள உதவும். கூடுதலாக ஒரு நபர் தனது வாழ்க்கை தனது சொந்த திறமையினால் கிடைத்தது என்று வர்க்க சமூகம் எண்ண வைக்கிறது. சோசலிச சமூகத்தில் ஒரு நபர் தனது வாழ்க்கையை இந்த சமூகம் கொடுத்தது என நினைக்கிறார். இந்த இரண்டு சமூகப் பிரிவில் வரும் மனிதர்களின் ஈகோவும் ஒன்று அல்ல. எந்த பதவி அல்லது உறவில் இருந்தாலும் தனது உரிமைகள் – கடமைகள் – விதிகள் அனைத்தும் மக்களின் கண்காணிப்புக்கு உட்பட்ட ஜனநாயக முறைகளில் இருக்கும் போது எந்த நபரும் தனது தவறு குறித்து சுயவிமர்சனம் செய்வது பிரச்சினை இல்லை.

மாறாக இன்றைய சமூகத்தில் அப்படியான ஜனநாயக முறைகளும், நிறுவனங்களும் இல்லை. இருப்பதெல்லாம் மக்களுக்கு உரிமையற்ற போலி ஜனநாயக நிறுவனங்களே. அதனால்தான் ஒரு குடும்பத்தில் அப்பா எனும் நபர் பார்ப்பனியத்தின் தந்தை வழி ஆணாதிக்க அதிகாரத்தைக் கொண்டு வாரிசுகளை அடக்கி ஒடுக்குகிறார். அதன் தவறுகளை மற்றொரு தந்தை கூறினால் கூட காது கொடுத்து கேட்க மாட்டார். இதை போலீசு, நீதிபதி, கலெக்டர், ஹெச்.ராஜா, மோடி என விரித்துப் பார்த்தால் இவர்களது திமிருக்கும் மற்றவரின் கருத்துக்களைத் தட்டிக் கழிக்கும் அலட்சியத்திற்கும், தவறுகளை ஒப்புக் கொள்ளாமலும், தவறே செய்யாத மக்களை குற்றவாளிகள் எனக் கூறுவதற்குமான காரணங்களை, இணைப்பை அறியலாம்.

  1. மனிதர்கள் இயல்பாகவே இணைய பொறுக்கித்தனத்திற்கு (Internet Troll) ஏதுவானவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஒரு பாதுகாப்பான முகமூடியை வழங்குவதால் மெய் உலகில் சாதுவானவர்களாக அறியப்படுகின்றவர்களும் கூட மெய் நிகர் உலகினுள் நுழையும் போது தங்களது குரூரங்களை இயல்பாக அரங்கேற்றுகின்றனர்.

தவறு செய்யும் நபர்களை தட்டிக் கேட்கும் முறை வெளிப்படையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கும் போது ஒருவர் கிசு கிசு முறைகளில் விமரிசிப்பதோ, தனது கீழமை எண்ணங்களை இரகசியமாக செய்வதற்கோ தேவையோ வாய்ப்போ இல்லை. போயஸ் தோட்டத்தின் அதிகாரத்தை யாரும் தட்டிக் கேட்க முடியாது எனும் போது அங்கே ஜெயலலிதா யாரையெல்லாம் அடித்தார், உதைத்தார் என்று அறிய முடியாது. அறிந்தாலும் அதை பொது வெளியில் பேசி தண்டிக்க முடியாது.

எனவே இன்றைய ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பின் சாதகங்களை அனுபவிப்போர் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை தண்டிக்க முடியாது எனும் போது அவர்கள் இணைய பொறுக்கித்த்தனத்தில் ஈடுபவது வியப்பல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ட்ரோல்கள் முன்னணியாக செயல்படுவதை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளலாம். மறுபுறம் பார்ப்பனியம் தோற்றுவித்த சாதி, மத, பாலியல் ஆதிக்க எண்ணங்களும் இணையத்தில் அரங்கேறுவதை புரிந்து கொள்ளலாம். சேலம் வினுப்பிரியாவின்  படங்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக மாற்றிய நபரின் செய்கை அதற்கோர் சான்று.

  1. சைக்கோத்தனமான குணங்களைக் கொண்டுள்ள திறமையற்ற தலைவர்களையே மனிதர்கள் விரும்புகின்றனர். டான் மெக் ஆடம்ஸ் என்கிற உளவியல் நிபுணர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து நடத்திய ஆய்வின் இறுதியில் இந்த தீர்மானத்திற்கு வருகிறார்.
    அந்த் ஆய்வின் முடிவுகளை நியூ யார்க்கில் உள்ள நிதி நிறுவனங்களுடைய தலைமைச் செயல் அலுவலர்கள் மீது பொருத்திப் பார்த்த போது, பெரும்பாலும் நிறுவனங்களின் தலைமைப் பதவியை அடைகின்றவர்களுக்கு முடிவெடுக்கும் அறிவுத்திறனை விட சைக்கோத்தனமான சிந்தனைப் போக்குகளே மிகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

சைக்கோ என்பதை விட வில்லனாக பேசுபவர்களை மக்கள் ஏன் ரசிக்கிறார்கள் என்று பார்க்கலாம். அதிபர் ட்ரம்ப் முதலாளித்துவத்தின் தீவிரமான ஆதரவாளர் என்பதை தனியே விளக்கத் தேவையில்லை. ஆனால் வெள்ளையின தொழிலாளிகளிடம் வேலை இழப்பு பற்றி பேசும் போது அதற்கு காரணமான சீனாவை ஒழிப்பேன் என்று கூறுகிறார். கூடவே அமெரிக்காவின் அமைதியான – அதாவது ஜாலியான – வாழ்வில் திகில் காட்சிகளை கொண்டு வரும் முஸ்லீம் பயங்கரவாதிகளை ஒழிப்பேன், விசாக்கள் கொடுக்க மாட்டேன் என்று கூறும் போதும் மக்கள் ரசிக்கிறார்கள்.

சரி, ட்ரம்ப் உண்மையிலேயே அமெரிக்க முதலாளிகளை பகைத்துக் கொண்டு வெளிநாட்டு உற்பத்திகளை ஒழிக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அதே போன்று சவுதி அரச குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் ஆதரிப்பவரும் இவர்தான். பத்திரிகையாளர் ஒருவரைக் கொன்ற சவுதி அரச குடும்பத்தைக் காப்பாற்றுவதும் அமெரிக்க அரசுதான். இந்தியாவில் பால் தாக்கரே கூட அவரது மராட்டிய மாநிலத்தில் இத்தகைய வில்லன் பேச்சுக்களை பேசியவர்தான். ஆனால் அதை மராட்டிய இளைஞர்களின் வேலை வாய்ப்பு பிரச்சினை என்ற முகாந்திரத்தில் பேசினார். முசுலீம்கள், தமிழர்கள் மீதான வன்மம் அப்படித்தான் அவரால் பற்ற வைக்கப்பட்டது.

பொருளதாரப் பிரச்சினைகளின் போது இத்தகைய இன – மத – நிறவெறிப் பேச்சுக்கள் மக்களை திசை திருப்பும் வண்ணம் கிளப்புகின்றன. இதில் யார் அதிகம் பேசுகிறார்களோ அவர்களை மக்கள் ரசிக்கிறார்கள். ஆனால் இறுதியில் இந்த வில்லத்தனத்தை மக்கள் புரிந்து கொள்ளும் போது பழைய வில்லன்கள் காலாவதியாகிறார்கள். புதிய வில்லன்கள் வருகிறார்கள். இன்று மோடி முதல் உலகம் முழுவதும் புற்றீசல் போல உருவாகியுள்ள நாஜிக் கட்சிகளும் அப்படித்தான்.

  1. இறுதியாக, எதிர்மறையான ஆளுமைகளைக் கொண்டவர்களின் மீது ஒரு இயல்பான ஈர்ப்பு ஏற்படுவதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது.

எதிர்மறையான ஆளுமைகள் மீதான ஈர்ப்பு மீது ஒருவிதமான பரபரப்பு மட்டுமே. அமைதியான வாழ்வில் அமைதியாக சென்று கொண்டிருக்கும் மக்கள் ஏதோ ஒரு அளவில் இத்தகைய எதிர்மறைகளை கண்டு வியக்கிறார்கள். வியத்தலின் காரணமாக வரும் ஈர்ப்பு பற்றாக ஆக வேண்டுமென்பதில்லை.

இலக்கியவாதிகள் சிலர் நாடறிந்த அரசியல் கட்சிகள், தலைவர்களை கண்ணியமாக பேசுவார்கள். ஆனால் சாதாரண மக்கள், தொழிலாளிகளை எழுத்தில் இல்லாத கெட்டாத வார்த்தைகளில் பேசுவார்கள். அல்லது ஆபாச வார்த்தைகளை, கட்டுப்படே இல்லாமல் பாலியல் விசயங்களை எல்லாரும் பேசுவார்கள். கேட்பவர்களும் இவர் பெரிய கலகக்காரர் என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் தொடை நடுங்கிகள் என்பதுதான் உண்மை. எனவே எதிர்மறை ஆளுமை ஈர்ப்பு என்பது நேரடி பொருளில் புரிந்து கொள்ளத் தேவையில்லை.

*****

மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்டவை. இவற்றின் முடிவுகள் மக்களிடையே இருக்கும் பிற்போக்கான கருத்துக்கள், முடிவெடுக்கும் தன்மை, தலைவர்களின் மீதான நம்பிக்கை போன்றவற்றுக்கான காரணங்கள் சிலவற்றை முன்வைக்கின்றன. குறிப்பிட்ட சமூகச்சூழலில் உருவாகும் மக்களின் பண்புகள், கருத்துக்கள், நம்பிக்கை அனைத்தும் அதே சூழலின் பாதிப்போடுதான் இருக்கும் என்பது ஒரு உண்மை. மேற்கண்ட முடிவுகளை வெறுமனே முடிவுகள், திட்டவட்டமான போக்குகள், மக்கள் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று முடிவு செய்து கொள்வது தவறு. மாறாக அந்த முடிவுகளுக்கான சமூகக் காரணங்களைத் தேடினால் நாம் இன்னும் தெளிவாக இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ உலகின் நிச்சயமின்மை மனிதர்களின் அற விழுமியங்களை மிகப் பாரிய அளவில் பதித்துள்ளது. வேலையிழப்பு, வேலையின்மை, பிழைப்புக்காக அதீத உழைப்பு, வேலையைத் தக்க வைத்துக் கொள்ள கழுத்தறுப்புப் போட்டி, சமூக பாதுகாப்பின்மை, இவற்றின் விளைவாய் ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் மற்றும் உடல் ரீதியான நோய்கள் என ஒரு தனிமனிதனைச் சுற்றிலும் அபாயகரமான சூழல் வளர்ந்து வருகிறது. முதலாளித்துவ சமூகம் தோற்றுவித்துள்ள பிழைப்புக்கான போராட்டம் தனி மனிதர்களிடமிருந்து சக மனிதர்களை நேசிக்கும் பண்பினை மறக்கச் செய்து வருகிறது.

இவற்றைக் கொண்டு மொத்தமாக மனித சமூகமே சீரழிந்து விட்டதாக முடிவு செய்து விட முடியுமா?

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்களை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த நாட்களில் பகலென்றும் இரவென்றும் பாராமல் மக்கள் கூட்டம் கூட்டமாக மெரீனா கடற்கரையில் குவிந்தனர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக குவிந்த அந்தப் போராட்டத்தின் போது ஒரு பாலியல் அத்துமீறல் இல்லை, திருட்டு இல்லை.காரணம் ஒரு பொதுநோக்கத்திற்கான இந்தப் போராட்ட ஒன்று கூடல் மக்களிடையே இருக்கும் நல்லெண்ணங்களை, விழுமியங்களை குறிப்பிட்ட சூழலில் உயர்ந்த அளவில் வெளியே கொண்டு வருகிறது. இந்த போராட்டச் சூழல் முடிந்து மக்கள் வழமையான வாழ்விற்கு திரும்பும் போது அவர்களிடையே இருக்கும் பிற்போக்கான கருத்துக்கள் வெளியே வரலாம். கூடவே புதிய முற்போக்கு கருத்துக்களை அவர்கள் எண்ணிப் பார்க்கும் வழக்கத்தினையும் துவங்கியிருக்கலாம்.

மெரினாவில் கூடியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றியோ, தமிழர் பாரம்பரியம், பெருமைகள் உள்ளிட்ட இன்னபிற பிரச்சினைகள் குறித்து முழுவதும் தெரிந்திருக்காது. தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரான பார்ப்பனிய இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து வீழ்த்துவது என்கிற அரசியலும் மக்களை அங்கே இணைத்திருக்கிறது. மோடி அரசின் தொடர் தாக்குதலுக்கான எதிர்விளைவாகவும் இதை நாம் கொள்ளலாம். ஜல்லிக்கட்டு என்கிற வடிவத்தை எடுத்த போராட்டத்தில் மக்கள் ஒரு புதிய நடைமுறையை மேற்கொண்டு தமது நிலையை கொஞ்சம் மாற்றுகிறார்கள்.

யார் நல்லவர், கெட்டவர் என்பதை முடிவு செய்வதை பொதுமைப்படுத்துவதை விட குறிப்பான சூழலில் பரிசீலிக்கலாம். பொதுவாக பரிசீலிக்கும் போது கூட இத்தகைய தனித்தனி அம்சங்களிலிருந்து முழுமையை நோக்கி ஆய்வு செய்யலாம்.

கட்டுரையின் துவக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஆய்வு முடிவுகள் அச்சுறுத்தக் கூடியவையே என்றாலும் அது முதலாளித்துவ சமூக அமைப்பு ஒரு தனி மனிதனிடம் உண்டாக்கியிருக்கும் சீரழிவுகள் தாம். இந்த குறிப்பிட்ட சமூக அமைப்பு மாறும் போதோ அல்லது மாற்றுவதற்கான போராட்டத் தருணங்களிலோ ஒரு நபர் தன்னை வேறு விதமாக ஒரு சமூக மனிதராக, சமூகம் குறித்து அக்கறைப்படுபவராக வெளிப்படுத்திக் கொள்கிறார், உணர்கிறார்.

அப்போது தனிப்பட்ட உணர்ச்சிகளை சமூக உணர்வு செல்வாக்கு செலுத்துகிறது. அந்த சமூக உணர்வில் ஒருவன்/ள் தொடர்ந்து தோய்ந்து நிற்கும் போது மெல்ல மெல்ல தனிப்பட்ட உணர்ச்சிகளும் ஆற்றுப்படுத்தப்பட்டு அவன்/அவள் பக்குவமடைகிறார்கள். அதன் பின் அவனது தனிப்பட்ட சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் “நல்லவைகளாக” ஆகின்றன. ஏனெனில் அவை தனித்துவமாக இருந்தாலும் அவற்றின் தோற்றுவாய் ஒரு சமூகம் என்பதால்!


சாக்கியன்
கட்டுரை ஆதாரம்: The bad news on human nature, in 10 findings from psychology