“இன்னாம்மா இப்படி ரோதன பண்ணினுக்குற ஏறும்மா சீக்கரம்.” கடுகடுப்பில் கத்தினார் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்.
“நீங்க போங்க நான் வேற வண்டியில போய்க்கிறேன்.” நானும் கோபத்துல சட்டுன்னு பேசிட்டேன்.
ஓட்டுநருக்கும் எனக்குமான பிரச்சனை முடிவுக்கு வருவதற்குள் கதவு படக்கென திறந்தது. “சண்ட போட்ற நேரமா இது. வா வா உள்ள வா. எங்க சிரிச்சிகினே ஏறு பாக்கலாம்” என்றார் உள்ளே இருந்த திருநங்கை ஒருவர்.
அவர் முகம் நிறைய மஞ்சள். குளிச்சு நெத்தியல வைச்சிருந்த பெரிய வட்டப் பொட்டு, இறந்து போன என் பெரியம்மா கண் முன்னாடி வந்து போனாங்க. அவர் வண்டியில ஏறச் சொன்ன விதம் கன நேரத்துல கோபத்த குறைச்சுடுச்சு. உடனே ஆட்டோவுல ஏறிட்டேன்.
“ஏம்மா போலீசு ட்ராஃபிக் சரிபன்னினுக்கிறான். அந்த எடத்தாண்ட கைய நீட்டினு நிக்கிறே. போலீசு பாத்தான்னா வண்டிய ஓரங்கட்டுவான். 100 தண்டம் அழுவனும், இல்லாங்காட்டி மரியாத இல்லாம திட்டுவான். சம்பாரிக்கிற 100 – 200யும் இவனுங்க புடிங்கினு போனா வீட்டுக்கு இன்னாத்த எடுத்துனு போறது. அதான் சத்தம் போட்டுட்டேன் தப்பா எடுத்துக்காதம்மா.” என்றார் ஓட்டுநர்.
“சரி விடுங்க, நானும் போலீசு நின்னத பாக்கல. ஏதோ கவனத்துல இருந்துட்டேன். தப்புதாங்க.”
“கவனத்த வேற எங்கேயோ வச்சுட்டு ரோட்டுல நிக்கிறியே நியாயமா?” என்றார் எதிரிலிருந்த திருநங்கை.
“என்னக்கா பண்ண சொல்றீங்க மனுசனுக்கு ஆயிரத்தெட்டு கவலை. அதுல ஒன்னு ஏங்கவலை” என்றேன்.
“அக்கான்னா கூப்ட்ட!” அழுத்தமாக ஒரு தடவை சொல்லி விட்டு சிரித்தபடி கையால் என் முகத்தை வருடி முத்தமிட்டார். இந்த வெள்ளேந்தியான அன்பு திருநங்கைங்க கிட்ட மட்டும்தான் பாக்க முடியும்.
“இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தினர் ஒரு திருநங்கை. அவங்க மனசு புண்படும் படியும் வித்தியாசமாகவும் நடந்துக்க கூடாது. அவங்களும் நம்மளாட்டம் மனிதர்கள்தான்” – எங்க வீட்டுக்கு ஒரு திருநங்கை வரும்போது ஒரு தோழர் இப்படி வகுப்பெடுக்கும் நெலமையிலதான் என் பார்வை எட்டு வருசத்துக்கு முன்னாடி இருந்தது அவருக்கு தெரியாது.
“பொழுது விடிஞ்சு பொழுது போனா கவலைக்கா பஞ்சம். அதையெல்லாம் யோசன பண்ணினா வேலைக்காகுமா? அதுவா நாமளான்னு ஒரு கை பாத்துறனும். வீட்ட விட்டு கெளம்ப சொல்லோ கட்டிருந்த துணியோட சேத்து கவலையையும் அவுத்து போட்டுட்டு வந்துறனும். வெளிய வந்து நாலு பேர பாத்து முகம் மலர்ச்சியா இருக்கனும்.
காலையில தூங்கி எழுந்தா பால்காரன் வருவான். டிவிக்காரன் வருவான் அதுக்காக இதெல்லாம் ஒதுக்கிப்புட்டு வாழ முடியுமா சொல்லு. வரட்டும் வந்து பாத்துட்டு போகட்டும். இன்னைக்கி இல்லன்னா நாளைக்கி தரப் போறோம்.
யாருக்கு கவலையில்ல சொல்லு. இந்த இவளுக்கு (அருகிலிருந்த இளம் திருநங்கை) இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் வச்சுருக்கு. இன்னும் மூணு பவுனு வாங்கனும் என்ன செய்றதுன்னு தெரியல. இவ கண்ண கசக்கியே உயிர விட்டுடுவா போலருக்கு.”
அந்த அக்கா பக்கத்துல இருந்த அந்த இளம் திருநங்கை எந்த நேரத்துலயும் அழுகுற நிலையில இருந்தாங்க. இவங்க பேசினத கேட்டதும் அவங்க கலங்கிய கண்ணுல இருந்து கண்ணீரே வந்துடுச்சு.
அவங்க திருநங்கைங்கனு தெரிஞ்சுதான் பேசினேன். இருந்தாலும் திருமணம், நகைன்னு அந்த அக்கா சொன்னதும் ஒரு தடுமாற்றம் எனக்குள்ள.
“அக்கா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க திருநங்கை தானே? இல்ல கல்யாணம் நகநட்டுன்னு பேசிக்கிறீங்களே எப்படி என்னன்னு…….” அவங்க மனசு புண்படாமெ கேக்குறோமான்னு ஒரு பயத்துல அப்புடியே நிறுத்திட்டேன்.
“ஆமாப்பா நாங்க திருநங்கையேதான். நாங்களும் ஒங்களப்போல ஆம்பளை ஆளுகள கல்யாணம் கட்டிக்கலான்னு சட்டமே வந்திருக்கு தெரியும்ல”
“தெரியும்கா. அப்புடின்னா அது காதல் கல்யாணமா தானே இருக்க முடியும். நீங்க நகைய பத்தியெல்லாம் பேசுறீங்களே!”
“காதல்தான். அது இவளுக்கு மட்டும் தான் வந்துருக்கு. ஆட்டோ ஓட்டுற பையனோட ஒரு தபா ஆட்டோவுல போயிருக்கா. பயல புடிச்சுப் போச்சு கட்டுனா அவனத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறா. அவனும் போனா போவுதுன்னு ஆறு பவுன் நகை வேணுங்கற கண்டிசனோட கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்.”
படிக்க:
♦ பொட்டை!
♦ வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!
“எல்லாம் சரிதான் அதுக்காக நகைய முக்கியமா நெனைக்கிற ஆள கல்யாணம் பண்ணிக்கனுமா?.”
“அட பார்டா! எந்த உலகத்துல இருக்க நீ. எந்த கல்யாணம் நகை இல்லாம நடக்குது. நகை கேக்குற மாப்பிள்ள வேண்டான்னு கர்ப்பப் பையோட இருக்குற நீங்களே, புள்ள பெத்துக்க முடிஞ்ச நீங்களே, சொல்ல மாட்டிங்க. எங்களப் போல திருநங்கைங்க எப்படி சொல்ல முடியும்?
நாங்களும் ஒங்களாட்டம் பொம்பளைதான். கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டியா வாழனுமுன்னுதான் ஆசைதான், நடக்குமா சொல்லு. அப்பா ஆத்தான்னு குடும்பத்தோட இருக்குற பொண்ணுங்களே அத்தன செரமப்பட வேண்டிருக்கு. எங்க கதை நல்லதங்காளை விட சோகமானது.
உருவத்துல ஆணாவும் உள்ளத்துல பொண்ணாவும் ரெண்டுங் கெட்டான் வாழ்கை எங்களுக்கு. வீட்டுலயும் ஏத்துக்க மாட்டாங்க. வீட்டுக்கு வெளியேவும் ஏத்துக்க மாட்டாங்க. ஒன்னு பிச்சயெடுக்கனும் இல்ல அப்புடி இப்புடி பொழப்பு பொழைக்கனும். இவ ஒரு வாழ்க்கைய ஆசப்பட்டு அது அமையுது அப்ப கேட்டத குடுத்துதானே அவனும் வருவான்.”
“பையன் வீட்டு குடும்பத்துல ஏத்துக்கிட்டாங்களா”
“எப்புடி ஏத்துப்பாங்க. பிள்ள பெத்து தரமுடியாதவள எந்த குடும்பத்துல ஏத்துப்பாங்க. சொத்து கித்து இல்லேனாலும் ஏத்துக்குறவங்க பிள்ள வேணான்னு சொல்லுவாங்களா, சொல்லு பாப்போம். கொஞ்ச காலம் கழிச்சு வம்ச விருத்திக்கி அந்த பையனுக்கு வேற கல்யாணம் பன்னிப்போம்னு சொல்லிட்டுதான் நாளே குறிச்சாங்க.”
“அதுக்கு பிறகு எப்டிக்கா?”
“அதுக்கு பிறகு விட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம். அப்பப்ப வந்து போவான். அசிங்கப்பட்ட வாழ்க்க இல்லாமெ ஒரு குடும்பம் புருச பொஞ்சாதிங்கற அந்தஸ்தோட இருப்பா. எங்க யாருக்கும் கிடைக்காத கவுரவம் அவளுக்கு வரப்போவுதுன்னு எங்களுக்கு சந்தோசம்” என்றவர் கல்யாணப் பொண்ணு கையை நம்பிக்கையோட அழுத்தி ஆறுதலா தலையை வருடி குடுத்தார்.
“கவலை படாதீங்க. சிவனும் பார்வதியும் சேந்துருக்கும் ஒடம்பு உங்களுக்கு. அதனால உங்களப் போல உள்ளவங்க எல்லாம் கடவுள் மாதிரி. நான் சொல்றேன் கல்யாணம் நல்லபடியா நடக்கும்.” என்றார் அருகில் அமர்ந்து இருந்த தெலுங்குக்கார அம்மா.
“நீ சொல்றத கேக்குறதுக்கு சந்தோசமா இருக்கும்மா. அதுக்காக வீட்டாண்ட உக்காந்திருந்தா காசு பணம் வந்துருமா. எங்களுக்கு தெரிஞ்ச எங்க ஆளுங்க கிட்ட கேட்ருக்கோம். விசயத்த கேள்விப் பட்டதும் சந்தோசமா தர்றதா சொல்லிருக்காங்க. அவங்க மட்டும் என்ன பேங்குல இருந்தா எடுத்து தரப் போறாங்க. எல்லாம் பிச்சதான்.”
“நீங்க எனக்கு சொன்னத நான் உங்களுக்கு சொல்றேன் கவலை படாதீங்கக்கா”
“அவளாவது நல்லா இருக்கட்டும்னு ஆசைதான் எங்க எல்லாருக்கும். நானும் இன்னைக்கி திருஷ்டி சுத்தி போடத்தான் போறேன். செவ்வாய் கிழமை வழக்கத்த விட பத்து ரூவா கூட கிடைக்கும்னு நம்பிதான் போறேன். கூட வாடின்னு கூட்டிட்டு அழுமூச்சியாட்டம் வர்ரா. அடுத்ததா கூட வந்து ஆட்டோவுல ஏறுன நீயும் கோபத்தோட வர்ற. இன்னைக்கி வசூல் மட்டும் கைய கடிச்சுது நீங்க ரெண்டு பேருந்தான் காரணம்.”
“கண்டிப்பா நல்லது நடக்கும். கல்யாணப் பொண்ணுக்கு முன்கூட்டியே வாழ்த்த சொல்லிக்கிறேன்”
“எதுக்கு அவசர அவசரமா வாழ்த்து சொல்லிட்ட, எறங்கப்போறீயா?”
“ஆமாக்கா” என்றபடி பலசரக்கு பையை நகத்தினேன். பையை கையில் வாங்கியவர் என்னை இறங்கச் சொல்லி கையில் கொடுத்து “பாத்துப் போடிம்மா என் செல்லம்” என்றார்.
இறங்குறதுக்கு முன்னாடி “நீங்க எம்பெரியம்மா மாதிரி இருக்கீங்கன்னு” சொல்லணும்னு நினைச்சேன், மறந்துட்டேன்.
சரசம்மா
பயணங்கள் பல அனுபவங்களை நமக்கு தரும். அதை படைப்பாக்க சிலரால் மட்டுமே முடியும். அதன் யாதர்த்தத்துடன் பயணிக்க வைக்கிறது சரசம்மாவின் கட்டுரைகள்.
”அதுக்கு பிறகு விட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம். அப்பப்ப வந்து போவான். அசிங்கப்பட்ட வாழ்க்க இல்லாமெ ஒரு குடும்பம் புருச பொஞ்சாதிங்கற அந்தஸ்தோட இருப்பா. எங்க யாருக்கும் கிடைக்காத கவுரவம் அவளுக்கு வரப்போவுதுன்னு எங்களுக்கு சந்தோசம்”
திருநங்கைகள் உலகம், சுவாரஷ்யமும், சோகமும் கலந்தது என்பதை காட்டியது கட்டுரை.