அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 12

முன்னோடிகள்

அ.அனிக்கின்
புதிதாக ஒன்றைச் செய்வதோ சொல்வதோ கடினமானதே. பதினேழாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களின் சாதனைகளை மதிப்பிடும் பொழுது அவர்களை எதிர்நோக்கிய மாபெரும் கஷ்டங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆங்கிலப் பொருள் முதல் வாதத்தின் மாபெரும் தத்துவ ஞானிகளான பிரேன்சிஸ் பேக்கன், தாமஸ் ஹாப்ஸ் ஆகியோர் இயற்கை மற்றும் சமூகத்தைப் பற்றிய ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்; அதன்படி இயற்கை மற்றும் சமூகத்தின் புறவய விதிகளை விளக்கிக் கூறுவது விஞ்ஞானத்தின் முக்கியமான கடமையாக ஆயிற்று.

பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கும் மத அறவியல் கோட்பாடுகளைப் பொருளாதாரச் சிந்தனையில் மீறிப் போவது அவசியமாயிற்று. முன்பு புனிதமான மத நூல்களின் எழுத்துக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற வகையில் பொருளாதார வாழ்க்கை எவ்விதம் இருக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இருந்தது. இப்பொழுது உண்மையில் என்ன இருக்கிறது, இந்த நட வடிக்கையின் மூலமாக ”சமூகத்தின் செல்வ வளத்தின்” நலன்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமாயிற்று.

பூகோளத் துறையில் ஏற்பட்ட மாபெரும் கண்டு பிடிப்புகளும் வர்த்தகத்தின் வளர்ச்சியும் மக்களுடைய அறிவின் எல்லையை விரிவுபடுத்தியிருந்த போதிலும் அவர்கள் உலகத்தைப் பற்றி அறிந்தது குறைவாகவே இருந்தது. இங்கிலாந்தைப் பற்றி பூகோளத்திலும் பொருளாதாரத்திலும் செய்யப்பட்டிருந்த வர்ணனைகளே தப்பாகவும் பொருளற்ற வகையிலும் இருந்ததென்றால், வெளிநாடுகளைப் பற்றி என்ன எழுதியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகளுக்கு மிகக் குறைவான விவரங்களே கிடைத்தன; புள்ளி விவரங்களோ அநேகமாக ஒன்றுமில்லை.

பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கும் மத அறவியல் கோட்பாடுகளைப் பொருளாதாரச் சிந்தனையில் மீறிப் போவது அவசியமாயிற்று.

ஆனால் வாழ்க்கை மனிதனுடைய விவகாரங்களைப் பற்றி ஒரு புதிய சிந்தனை வேண்டுமென்று வற்புறுத்தியது; புதிய துறைகளில் சிந்தித்தவர்களை ஊக்குவித்தது. மான், ஸ்மித் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நூற்றாண்டுக் காலத்தில் வெளிவந்த பொருளாதார நூல்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1764 -ம் வருடத்தில் ஜி. மாஸ்ஸி இப்புத்தகங்களின் விவரப் பட்டியலை முதன் முறையாகத் தொகுத்தார்; அதில் 2,300 -க்கும் அதிகமான எண்ணிக்கையுள்ள புத்தகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவை பெரும்பாலும் வாணிப ஊக்கக் கொள்கைக்கு ஆதரவான புத்தகங்களே; எனினும் பெட்டி, லாக், நோர்த், இன்னும் வேறு சிலர் எழுதிய புத்தகங்களில் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் அக்காலத்திலேயே இடம் பெற்றிருந்தன.

வாணிப ஊக்கக் கொள்கை என்பது இங்கிலாந்தில் மட்டுமே ஏற்பட்ட பிரத்யேகமான நிகழ்வு அல்ல. பணத்தைத் திரட்டுதல், காப்பு வரிக் கொள்கை, பொருளாதாரத்தை அரசு ஒழுங்குபடுத்துதல் என்பவற்றைக் கொண்ட கொள்கை பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை போர்த்துகல் நாட்டிலிருந்து மஸ்கோவியா வரை ஐரோப்பா முழுவதிலுமே பின்பற்றப்பட்டது. பிரான்சில் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பாதியில் எல்லா அதிகாரங்களையும் கொண்டிருந்த கொல்பேர் என்ற அமைச்சரின் கீழ் வாணிப ஊக்கக் கொள்கை நடைமுறை வளர்ச்சியடைந்த வடிவங்களைப் பெற்றது. அதன் தத்துவத்தை இத்தாலியப் பொருளாதார நிபுணர்கள் வெற்றிகரமாக விளக்கி எழுதினார்கள்.

படிக்க:
♦ பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !
♦ இந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்

இங்கிலாந்தில் வாணிப ஊக்கக் கொள்கை சம்பந்தப்பட்ட எந்தப் பிரசுரத்தின் தலைப்பிலும் ‘வர்த்தகம்’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதைப் போல, இத்தாலியில் ”பணம்” என்ற சொல் இடம் பெற்றிருந்தது; சின்னஞ்சிறு பகுதிகளாகச் சிதறிக் கிடந்த இத்தாலியில் பணம் மற்றும் சிறு அரசுகளுக்கிடையே அதன் பரிவர்த்தனை பற்றிய பிரச்சினை மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஜெர்மனியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலும் வாணிப ஊக்கக் கொள்கை ”காமரா லி ஸ்டிக்” என்று சொல்லப்படும் வடிவத்தில் அதிகாரபூர்வமான பொருளாதாரக் கொள்கையாக இருந்தது.

ஆனால் வாணிப ஊக்கக் கொள்கையின் கருத்துக்களை முறைப்படுத்துவதில் முதன்மையான பாத்திரத்தை வகித்தவர்கள் ஆங்கிலப் பொருளாதார நிபுணர்களே. இதற்கு இங்கிலாந்தின் வேகமான பொருளாதார வளர்ச்சியும் ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தின் முதிர்ச்சியும் காரணங்களாகும். மார்க்ஸ் வாணிப ஊக்கக் கொள்கை பற்றிய தமது புலமை சான்ற ஆராய்ச்சியை எழுதும்பொழுதும் ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்களை முக்கிய அடிப்படையாகக் கொண்டு எழுதினார்.

முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்

ஆடம் ஸ்மித் வாணிப ஊக்கக் கொள்கையை அறிமுகப்படுத்திய பொழுது அது ஒரு வகையான தப்பெண்ணம் என்பது போலக் காட்டினார். மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள் மத்தியில் இந்தக் கருத்து வேரூன்றியது. மார்க்ஸ் இதை எதிர்த்தார். ”… பிற்காலத்தில் வந்த கொச்சையான சுதந்திர வர்த்தகக் காரர்களால் சித்தரிக்கப்பட்ட அளவுக்கு வாணிப ஊக்கக் கொள்கையினர் முட்டாள்களாக இருந்ததாக நினைக்கக் கூடாது.”(1) வளர்ச்சியடைந்த வாணிப ஊக்கக் கொள்கை அதன் காலத்தில் ஒரு கணிசமான விஞ்ஞானச் சாதனையாக இருந்தது. இந்தப் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகளில் அதிகமான திறமைசாலிகள் பதினேழாவது நூற்றாண்டில் தத்துவஞானத்திலும், கணிதத்திலும் இயற்கை விஞ்ஞானங்களிலும் மிகச் சிறந்த சிந்தனையாளர்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படக் கூடிய தகுதி உடையவர்கள்,

வாணிப ஊக்கக் கொள்கை ஒரு தத்துவ அமைப்பு மற்றும் கொள்கை என்ற வகைகளில் தேசியத் தன்மையைக் கொண்டிருந்ததற்குச் சில காரணங்கள் உண்டு. ஒரு தேசியச் சுற்றுவட்டத்துக்குள்ளாக மட்டுமே முதலாளித்துவம் மிக வேகமாக வளர்ச்சி அடைய முடியும்; மேலும் அது மூலதனத் திரட்டலுக்கும் அதன் மூலமாகப் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப் பெரிய அளவுக்கு அரசாங்கத்தை நம்பியிருந்தது. வாணிப ஊக்கக் கொள்கையினர் தங்களுடைய கருத்துக்களில் பொருளாதார வளர்ச்சியின் உண்மையான விதிகளையும் தேவைகளையும் வெளியிட்டனர்.

”செல்வம்”, அதாவது படைக்கப்பட்ட, உபயோகப்படுத்தப்பட்ட, திரட்டப்பட்ட பொருள்களின் மொத்தம் பயன் மதிப்புக்களின் மொத்தம்-ஒரு நாட்டைக் காட்டிலும் இன்னொரு நாட்டில் அதிகத் தீவிரமாக வளர்ச்சியடைவது ஏன்? செல்வம் அதிவேகமாக வளர்ச்சியடைவதற்கு உற்பத்தி மட்டத்தில், குறிப்பாக அரசாங்க மட்டத்தில் அவசியமாகச் செய்ய வேண்டியது என்ன? இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கொடுப்பதன் மூலம் தான் அரசியல் பொருளாதாரம் ஒரு விஞ்ஞானம் என்று கருதப்பட முடியும்.

வாணிப ஊக்கக் கொள்கையினர் தங்கள் காலத்திய பொருளாதார நிலைமைகளில் இதற்குப் பதில்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றார்கள். பொருளாதார விஞ்ஞானத்தின் மிக முக்கியமான பிரச்சினை ”பகுத்தறிவுள்ள” பொருளாதாரத்தை ஏற்படுத்துவதே என்று முதலில் சொன்னது அவர்களே என்று கூடச் சொல்லலாம். அனுபவத்தின் மூலம் அவர்கள் செய்த பல முடிவுகளும் சிபாரிசுகளும் யதார்த்த ரீதியில் நியாயமானவை; எனவே இந்த அர்த்தத்தில் அவை விஞ்ஞானத் தன்மை கொண்டவை.

அதே சமயத்தில் அவர்கள் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் விதிகளையும் உள்ளமைப்பையும் புரிந்து கொள்ளும் திசையில் முதல் காலடிகளை எடுத்து வைத்தார்கள். அவர்களுடைய அறிவு அதிகமான அளவுக்கு மேலெழுந்தவாரியாகவும் ஒரு தரப்பாகவும் இருந்ததென்று கூறலாம். ஏனென்றால் அவர்கள் பொருளாதார அமைப்பின் இரகசியங்களைச் செலாவணியின் பரப்புக்குள் தேடினார்கள். ஒரு விமர்சகர் சுட்டிக்காட்டியது போல., அவர்கள் உற்பத்தியைத் “தேவையான தீமை” என்று மட்டுமே கருதினார்கள்; நாட்டுக்குள் அல்லது முதலாளிகளின் கைகளுக்குள் என்று கூடச் சொல்லலாம்-பணம் வந்து சேருவதை உறுதி செய்கின்ற ஒரு வழியாக மட்டுமே கருதினார்கள்.

படிக்க:
♦ பீட்சா வர்க்கம் நாசமாக்கும் உணவுச் செல்வம் !
♦ போர் என்பது பணம் | கேலிச்சித்திரங்கள்

ஆனால் உண்மையில் எந்த சமூகத்திலும் பொருளாயத செல்வத்தின் உற்பத்தியே அதற்கு அடிப்படையாகும்; இதற்கு இரண்டாவது நிலையிலே தான் செலாவணி இருக்கும். அந்தக் காலத்தில் வர்த்தக மூலதனமே பொதுவான மூலதனத்தின் வடிவமாக இருந்தது வாணிப ஊக்கக் கொள்கையினர் இவ்வாறு கருதியதற்குக் காரணம். உற்பத்தி என்பது பெருமளவுக்கு முதலாளித்துவத்துக்கு முந்திய முறைகளின்படியே இன்னும் நடைபெற்று வந்தது; ஆனால் செலாவணி வட்டம், குறிப்பாக வெ ளி நாட்டு வர்த்தகம் அந்தக் கால நிலைமைகளுக்குப் பெரிய மூலதனத்தினால் முன்பே எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது.

17-ம் நூற்றாண்டு – முழுவதிலும் 18-ம் நூற்றாண்டின் முதற்பாதியிலும் இங்கிலாந்தில் நடைபெற்ற பொருளாதார விவாதங்களின் மையமாகக் கிழக்கிந்திய, ஆப்பிரிக்க மற்றும் இதர கம்பெனிகளின் நடவடிக்கைகள் இருந்தது தற்செயலானதல்ல.

வாணிப ஊக்கக் கொள்கையினர் ”நாடுகளின் செல்வவளம்” என்பதை அடிப்படையில் வர்த்தக மூலதனத்தின் நலன்கள் என்ற பலகணி வழியாகவே பார்த்தனர். எனவே பரிவர்த்தனை மதிப்பு போன்ற ஒரு முக்கியமான பொருளாதார இனத்தைப் பற்றி அவர்கள் அக்கறை காட்டியது இயற்கையே. அவர்கள் தத்துவாசிரியர்கள் என்ற வகையில் இதைப் பற்றித்தான் ஆர்வங்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் பரிவர்த்தனை மதிப்புக்குப் பணம் மற்றும் தங்கத்தைக் காட்டிலும் வேறு சிறப்பான கருத்துருவம் ஏது?

எனினும் பரிவர்த்தனை செய்யப்படுகின்ற எல்லா வகையான செல்வம், உழைப்பு ஆகியவை சமமானவையே என்ற அரிஸ்டாட்டிலின் ஆரம்ப காலக் கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு மாறாக, பரிவர்த்தனை என்பது சமமானது அல்ல, அது இயல்பாகவே சமத் தன்மையற்றது என்று அவர்கள் நம்பினார்கள். (அவர்கள் வெளிநாட்டுப் பரிவர்த்தனை வர்த்தகத்தையே முதன்மையாக நினைத்தார்கள்; குறிப்பாகப் பின் தங்கிய, ”காட்டுமிராண்டி” மக்களிடம் செய்த வர்த்தகத்தில் அது மிக மோசமான அளவுக்குச் சமத்தன்மை அற்றதாகவே பெரும்பாலும் இருந்தது என்பதைக் கொண்டு அவர்களுடைய கருத்தை வரலாற்று ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.)

உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் மூலக்கருக்கூறுகள் அரிஸ்டாட்டிலிடமும், சில மத்திய கால எழுத்தாளர்களிடமும் காணப்பட்ட போதிலும், வாணிப ஊக்கக் கொள்கையினர் வழக்கமாகவே அதை வளர்க்கவில்லை.

உபரி மதிப்பு என்பது உண்மையில் கூலித் தொழிலாளர்களின் கூலி கொடுக்கப்படாத உழைப்பு, அதை முதலாளிகள் தங்களுக்கு ஒதுக்கிக் கொள்கின்றனர். வாணிப ஊக்கக் கொள்கையினரிடம் அது வர்த்தக லாபம் என்ற வடிவத்தில் தோன்றுகிறது. மூலதனத்தின் வளர்ச்சியையும் திரட்டலையும் உழைப்புச் சுரண்டலின் விளைவு என்று அவர்கள் பார்க்கவில்லை; அது பரிவர்த்தனையின், குறிப்பாக அந்நிய வர்த்தகத்தின் பலன் என்றே அவர்கள் கருதினர்.

அவர்களிடம் இப்படிப் பல மயக்கங்களும் தவறுகளும் இருந்த போதிலும், அவர்கள் பல பிரச்சினைகளை அவற்றின் உண்மையான தோற்றத்தில் பார்த்தனர். உதாரணமாக, மக்கள் தொகையில் இயன்ற அளவுக்கு அதிகப் பெரும்பான்மையான பகுதியினர் முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் அதிகமான அக்கறை காட்டினர். இதோடு மிகக் குறைவான உண்மையான ஊதியத்தையும் சேர்த்தால், இதன் மூலம் லாபம் அதிகரிக்கும்; மூலதனத் திரட்டல் வேகமாக நடைபெறும்.

பொருளாதார வளர்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான பணவியல் முறைக்கு இவர்கள் மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்தனர். பொருளாதாரத்தில் பணவியல் காரணிகளின் பாத்திரத்தைப் பற்றி அவர்கள் கொடுத்த பொருள் விளக்கம் – சில அம்சங்களில் ஆடம் ஸ்மித்தைக் காட்டிலும் அதிக ஆழமானதாக இருந்தது. அவர்களுடைய பொருளாதாரத் திட்டங்களில் ஒரு பலமான அரசின் ஆட்சியதிகாரத்தை அவர்கள் அனுமானம் செய்து கொண்டனர்; பிற்காலத்திய வாணிப ஊக்கக் கொள்கையினர் அரசு பொருளாதாரத்தில் அதிகத் தீவிரமாகவும் அற்பமான முறையிலும் தலையிடுவதை ஆட்சேபித்தனர்.

இங்கிலாந்தின் வாணிப ஊக்கக் கொள்கையினரைப் பொறுத்தவரையிலும் இது குறிப்பிடத்தக்க வகையில் உண்மையாகும். ஒரு பலமான, சுதந்திரமான, அனுபவமிகுந்த முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை அவர்கள் வெளியிட்டனர்; அந்த நலன்களைப் பொதுவான முறையில் பாதுகாப்பதற்கு மட்டுமே அரசு அதற்குத் தேவையாக இருந்தது.

விலையுயர்ந்த உலோகங்களின் ஏற்றுமதியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்குபடுத்துவதை எதிர்த்து தாமஸ் மான் விடாப்பிடியாகப் போராடினார். விவசாயி நிலத்தில் விதையை ஊன்றினால்தான் பிறகு அறுவடை செய்ய முடியும்; அதைப் போல வர்த்தகர் பணத்தை ஏற்றுமதி செய்து அந்நியப் பொருள்களை வாங்கினால்தான் தன்னுடைய சொந்தப் பொருள்களை அதிகமாக விற்பனை செய்ய முடியும், அதன் மூலம் கூடுதலான பணத்தின் வடிவத்தில் நாட்டுக்கு லாபத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் எழுதினார்.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1)
K. Marx, Theories of Surplus-Value, Part 1, Moscow, 1969, p. 179,

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க