காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சுத்த பார்ப்பனர்தானா என டி.என்.ஏ. பரிசோதனை செய்யச் சொல்லி வெகுகாலமாக பாஜக – காவி கூட்டம் கேட்டுவருகிறது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் காவி கும்பல், தங்களை எதிர்ப்பவர்களை டி.என்.ஏ.  பரிசோதனை செய்ய வேகமாகக் கிளம்பியுள்ளது.

சமீபத்தில் புல்வாமா தாக்குதலையொட்டி இந்திய விமான படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, ராகுல் காந்தியின் வம்சாவழி மீது கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே.

மோடி அரசின் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஹெக்டே, உத்தர கன்னடாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியபோது ராகுல் காந்தியை ‘பரதேசி’ என விளித்திருக்கிறார்.

“அவர்கள் (காங்கிரசார்) கவலைக்குரிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். மொத்த உலகமும் நம்முடைய வீரர்களின் தைரியத்தையும் வீரத்தையும் புகழும்போது, இந்த மனிதர் (ராகுல் காந்தி) பாலகோட் தாக்குதலின்போது ஏற்பட்ட சேதத்துக்கு ஆதாரம் கேட்கிறார். ஒரு முசுலீமின் மகன், காந்தி என பெயருள்ளவர் எப்படி பார்ப்பனராக இருக்க முடியும்? ஒரு முசுலீமுக்கும் கிறித்துவருக்கும் பிறந்தவர், அவர் எப்படி பார்ப்பனராக முடியும்? அவரால் டி.என்.ஏ. ஆதாரத்தை பெற முடியுமா?” என பேசியுள்ளார் ஹெக்டே.

கடந்த நவம்பர் மாதம் கோயில் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்திதான் தத்தாத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னதாக செய்தி கிளம்பியது. இது காஷ்மீரி பார்ப்பனர்களின் கோத்திரம் என சொல்லப்படுகிறது. அந்த செய்தி வெளியானதிலிருந்து, பாஜக கும்பல் ராகுல் காந்தி எப்படி பார்ப்பனராக முடியும் என குதிக்கிறது.

ஜனவரி மாதம் பார்ப்பன டி.என்.ஏ. கண்டுபிடிப்பு புகழ் ஹெக்டே, முசுலீம் அப்பாவுக்கும் கிறித்துவ அம்மாவுக்கும் பிறந்த ‘கலப்பின மாதிரி’ என ராகுல் காந்தியை விளித்தார்.

படிக்க:
#Gobackmodi டிரெண்ட் செய்தது பாகிஸ்தானியர்களா ?
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !

ராகுல் காந்தி, ராஜீவ் காந்தியின் மகன். இந்திரா காந்தியின் பேரன். காஷ்மீரி பார்ப்பனரான இந்திரா காந்திக்கும் குஜராத் பார்சியான ஃபெரோஸ் காந்திக்கும் பிறந்தவர் ராஜீவ் காந்தி.  ஆனால், தொடர்ந்து இந்துத்துவ கும்பல் ராகுல் காந்தியை முசுலீமாக மாற்றிக் காட்டுவதில் அதிக அக்கறை செலுத்துகிறது.

இந்திரா காந்தியின் இறுதி சடங்கில் ராஜீவ் காந்தியும் ராகுல் காந்தியும் இசுலாமிய இறைவணக்கத்தை செய்ததாகக்கூட காவிக்கூட்டம் பொய்ச்செய்தியை பரப்பி அம்பலமானது.

ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், அதுவும் இந்த நாட்டின் அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர்,  ஒரு பொது இடத்தில் ‘பார்ப்பன டி.என்.ஏ.’ இருப்பதாகக் கதை கட்டுகிறார். எதிர்க்கட்சித் தலைவரின் பிறப்பில் இசுலாமிய பின்னணி இருப்பதாகக் காட்டி ஓட்டு கேட்கிறார். எனில், நமது சந்தேகம் எல்லாம், பாஜக-வினருக்கும் சங்க பரிவாரத்தினருக்கும் உடலில் மனித டி.என்.ஏ-தான் இருக்கிறதா என்பதுதான்?


அனிதா
நன்றி: ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க