டந்த பிப்ரவரி 22, 2019 அன்று கரூரில் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்துநில் மாநாட்டை ஒட்டி பஸ் பிரச்சாரம் செய்து நோட்டீஸ் கொடுத்ததற்காக சுரேந்தர் வினோத் ஆகிய இரு தோழர்களையும் கைது செய்தது, கரூர் போலீசு.

முதல் தகவலறிக்கை பதிவு செய்து ரிமாண்டும் செய்தது. அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்களின் தொடர் போராட்டங்களால் தோழர்கள் இருவரும் மார்ச் 1, 2019 அன்று நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தனர்.

தோழர் வினோத்

இந்நிலையில் கடந்த மார்ச் 5-ம் தேதி அன்று போலீசு நிலையத்தில் கையெழுத்திட எதிர்த்து நில் டீ-சர்ட் அணிந்து சென்ற தோழர்களை அங்கு கையெழுத்துப் போட வந்த இந்து முன்னணி காலிகள் கண்டு பொறுமியுள்ளனர்.

கடந்த மார்ச் 12 அன்று வழக்கம் போல தோழர் வினோத் கையெழுத்து போட்டு விட்டு போலீசு நிலையத்திலிருந்து வெளியில் வந்தார்.

இந்து முண்ணனி நிர்வாகிகள், தோழரை அழைத்து, “காவல் நிலையத்தில் டிசர்ட் போட யார் உனக்கு அனுமதி கொடுத்தது, என்ன டிசர்ட் இது? நீ மே பதினேழா?” என்றனர். “இல்லை, நான் மக்கள் அதிகாரம் ” என்றார் தோழர் வினோத். அதனைத் தொடர்ந்து காவி பாசிசம் என்றால் என்ன என்று கேட்டு தகராறு செய்திருக்கிறது இந்து முன்னணி கும்பல்.

“மாநாடு நடத்தியுள்ளோம் இணையத்தில் பாருங்கள். ஆசிபா போன்ற குழந்தைகளை காவிகள் சீரழிப்பதை தான் நாங்கள் பாசிசம் என்கிறோம். பேச்சுரிமை கருத்துரிமை நசுக்கபடுவது தான் பாசிசம்” என்று கூறியிருக்கிறார் தோழர் வினோத்.

“காவிகளின் நாட்டில் இருந்து கொண்டு, காவிகளையே எதிர்க்கிறாயா? அப்போ நீ பாகிஸ்தானுக்கு போ. உனக்கு என்ன தைரியம்? இந்து மதத்தை புண்படுத்தும் நீங்கள் மக்கள் அதிகாரம் எல்லாம் நக்சலைட்” என்று கூச்சலிட்டனர் இந்து முன்னணியினர்.

“இல்லை. நாங்கள் மக்களுக்காக போராடுபவர்கள். இந்துக்கள் என்று சொல்லும் நீங்கள் ஏன் அரியலூர் நந்தினி, அனிதா பிரச்சினைகளுக்கு எட்டிக் கூட பார்க்கவில்லை” என்ற தோழரின் கேள்விக்கு காவிகளிடம் பதில் இல்லை.

காவல் நிலையத்திற்குள் தோழரை இழுத்துச்சென்று, “இவன் மோடி ஒழிக; காவி பாசிசம் ஒழிக! என்று காவல் நிலையம் முன்பு கோசம் போட்டான். இவன் மீது நான் கேஸ் கொடுக்கிறேன். நீங்கள் நடவடிக்கை எடுங்கள்.” என்றது காவிக் கூட்டம்.

பிற தோழர்களுக்கு தகவல் கொடுக்க தோழர் வினோத் போனை எடுத்த போது செல்போனை புடுங்கி, “போலீஸ் ஸ்டேசனிலேயே போன் பேசுறியே அவ்வளவு திமிரா?” என்றார் ஒரு போலீசு. இவர்கள் எல்லாம் காக்கியை வெளியில் மாட்டிக் கொண்டு காவிக்குச் சேவகம் செய்வதற்காகத்தான் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் போலும்.

இந்து முன்னணி பிரமுகர்

பாஜக மாவட்ட செயலாளர், இந்து முண்ணனி மாவட்ட செயலாளர் என காவி கும்பல் போலீசு ஸ்டேசனுக்குள் நுழைந்தது. “பாஜக நபர் ஒருவர் காவிகளையே எதிர்க்கிறாயா? என்ன துணிச்சல் வெளியே வா…” என்றதற்கு, “பார்க்கலாம் அண்ணா” என்றார் தோழர்.

“தம்பி வெளியே என்ன நடந்தது?” என்றார் காவல் ஆய்வாளர் உதயகுமார். அதற்கு தோழர் நடந்த விவரங்களை கூற “உனக்கு எதுக்கு வம்பு? டிசர்டை மாநாடு முடிந்தும் போடலாமா? காவி ஒழிக என்று கோசம் போட்டியா?” என கேள்விகளை அடுக்கினார்.

“காவி பாசிசம் இன்றோடு முடியக் கூடிய பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக தொடரும் விசயம் அதனால் டீசர்ட்டை போடுவது தவிர்க்கமுடியாது. நான் கோசம் போடவில்லை. நீங்கள் வலுவாக கேஸ் போட வேண்டும் என்பதற்காக அவர்கள் பொய் சொன்னார்கள். பாஜக-விற்கு பொய் சொல்லவா கத்துக்கொடுக்கணும்?” என்று பதிலுரைத்தார் தோழர் வினோத்.

“விசாரனை நடத்தி வெளியில் விடுகிறேன். காத்திருங்கள்.” என்றார் ஆய்வாளர் உதயகுமார்.

அடுத்து வந்த கரூர் மாவட்ட டிஎஸ்பி கும்மராஜா, “ஏன்டா நாயே, உங்க மக்கள் அதிகாரத்திற்கு போலீசுக்கு தொந்தரவு கொடுப்பதுதான் வேலையா?” என்றார்.

அதற்கு தோழர் வினோத், “மரியாதையாக பேசுங்கள்” என்று கூறியதற்கு

“தெருவில் போற நாய்ங்க மாதிரி எப்ப பாத்தாலும் பிரச்சனை பண்ணுறீங்க.. உனக்கு என்னடா மரியாதை. டி சர்ட் போட்டுட்டு காவல் நிலையத்திற்கு உள்ளே வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது.” என்றார்.

படிக்க:
♦ விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !
♦ கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் | திருச்சி மாநாடு | live streaming | நேரலை

“நான் டிசர்ட் போடுவதுதான் உங்க பிரச்சனையா?” என்று தோழர் வினோத் பதில் கேள்வி கேட்க,

“ஸ்டேசனுக்குள்ள டிசர்ட் போடுன்னு உங்க மக்கள் அதிகாரம்  சொல்லி அனுப்புதா? சொல்லுடா நாயே !” என்றார் டி.எஸ்.பி. காவிகளுக்கு அந்த டீசர்ட்டைப் பார்த்தால் கோபம் பொங்குவது நியாயம். டி.எஸ்.பிக்கும் கோபம் பொங்குவது ஏனோவென்று தெரியவில்லை.  எஜமானனைச் சொன்னால் ஏவலாளிக்கு கோபம் வருவதுதான் நியாயம். டி.எஸ்.பி-க்குமா ?

சுற்றி இருந்த உளவு போலீசு, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி என்று எதற்கும் அச்சப்படாமல், “ஆமாம், என்ன பிரச்சனை?” என்றார் தோழர் வினோத்.

அவர் அப்படி சொன்னதும், அவரை நோக்கி டி.எஸ்.பி, “மரியாதை கொடுக்கமாட்டியா?” என்றதற்கு “என் யூனிபார்ம்க்கு நீங்கள் மரியாதை கொடுக்கல.. நானும் கொடுக்க மாட்டேன்” என்றார்.

உடனே டி.எஸ்.பி கும்மராஜா, “இவனுக்கு எவ்வளவு திமிரு கொண்டு போய் ரிமாண்டு பண்ணுங்க. அப்பதான் புத்தி வரும்” என்றார். பதிலுக்கு தோழர்,  “சந்தோசம்” என்று சொல்லி விட்டு வெளியே வந்தார்.

உளவுத்துறை போலீசு தோழரிடம் வந்து, “உயர் அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்கணும்பா” என்றார்.

காவல் நிலையத்திற்கு வெளியில் தோழர்களுடன் வினோத்

அதற்கு தோழர் அவரிடமும், “என் யூனிபார்முக்கு மரியாதை இல்லை. நானும் கொடுக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். வெறுப்படைந்த உளவுத்துறை போலீசு, “உன்னிடமெல்லாம் பேச முடியாது” என்று போய்விட்டார்.

இச்சமயத்தில் மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, சாமானிய மக்கள் கட்சி, மே 17 இயக்கத் தோழர்களும் வழக்றிஞர்கள் தோழர் ஜெகதீஸ், தமிழ் இராசேந்திரன் மற்றும் அவர்களது ஜீனியர் வழக்கறிஞர்கள் போலீசு நிலையத்திற்கு வந்துவிட்டனர்.

தோழர்கள் டிஎஸ்பி-யிடம், “என்ன சார் பிரச்சனை, ஏன் தோழரை பிடிச்சீங்க” என்றதற்கு மேற்கண்ட விவரங்களை கூறி, “என்னங்க, அந்த பையன்… ஒரு டிஎஸ்பி-ங்குற மரியாதை கூட இல்லாம இவ்வளவு திமிரா பேசுறார். கொஞ்சம் மரியாதை கொடுக்கச் சொல்லுங்க.. நான் ஒன்னும் செய்யலங்க.. விட்டுவிடுகிறேன்..” என்றார் தோழர்களிடம்.

இறுதியில், தோழரை ரிமாண்ட் செய்ய காவிகள் போட்ட திட்டம் மண்ணைக் கவ்வியது. மக்கள் அதிகாரம் அமைப்பின் டீசர்ட், காவிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறது. காவிகள் கதறுகின்றனர். காவிகளை தொடர்ந்து கதற விடுவோம்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க