பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 5

வ்வோர் அடி எடுத்து வைக்கையிலும் கொடியவலி உண்டாயிற்று. அதை உணராதிருக்கும் பொருட்டு, தனது பாதையைப் பற்றி சிந்திப்பதும் கணக்கிடுவதுமாகக் கவனத்தை வேறுபுறம் திருப்பத் தொடங்கினான். ஒரு நாளுக்குப் பத்து, பன்னிரண்டு கிலோ மீட்டர் நடந்தால் மூன்று அல்லது அதிகமாய் போனால் நான்கு நாட்களில் தன்னவர்களிடம் சேர்ந்துவிடலாம் என்று எண்ணமிட்டான்.

அப்படியானால், நல்லது! இப்பொழுது பத்து, பன்னிரெண்டு கிலோ மீட்டர் நடப்பது என்றால் என்ன அர்த்தம்? ஆகவே, பத்து கிலோ மீட்டர் என்பது இரண்டாயிரம் காலடிகள். ஒவ்வொரு ஐநூறு, அறுநூறு அடிகளுக்கும் பின்புறம் நின்று இளைப்பாற வேண்டியிருக்கும் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இது பெரிய தொலைவுதான்…

முந்தைய நாள், பாதையின் தூரத்தைக் குறைப்பதற்காக அலெக்ஸேய் ஒரு யுக்தி செய்தான்: பைன் மரம், அடிக்கட்டை, வழியிலிருந்த செடி என்று எதையேனும் புலப்படும் பொருளை இலக்காக வைத்துக்கொண்டு, இளைப்பாறும் இடத்திற்குச் செல்வதுபோல அதை நோக்கி முன்னேறினான். இப்போதோ அவன் இவற்றை எல்லாம் எண்களில் மொழி பெயர்த்தான். காலடிகளின் எண்ணிக்கையாக மாற்றினான். இளைப்பாறும் இடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை ஆயிரம் அடிகளாக, அதாவது அரைக் கிலோமீட்டராக வைத்துக் கொள்ள நிச்சயித்தான். இளைப்பாறுவதையும் நேரக் கணக்கில், ஐந்து நிமிடங்களுக்கு மேற்படாமல் வைத்துக் கொள்வது என்று முடிவு செய்தான். பொழுது புலர்வதிலிருந்து பொழுது சாய்வதற்குள், சிரமத்துடன்தான் என்றாலும் அவன் பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து விடுவான் என்று இந்தக் கணக்குக் காட்டியது.

ஆனால் முதல் ஆயிரம் அடிகள் நடப்பதற்கு அவன் என்ன பாடுபட்டுவிட்டான்! வலியை உணராதிருக்கும் பொருட்டு அடிகளை எண்ணுவதில் தன் கவனத்தை திருப்ப முயன்றான். ஆனால் ஐநூறு அடிகள் நடந்த பின் எண்ணிக்கையை குழப்பவும் பொய்யாக எண்ணவும் தொடங்கினான். எரியும், குத்திக் குடையும் வலியைத் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்கவே அவனால் முடியவில்லை. ஆயினும் இந்த ஆயிரம் அடிகளை அவன் நடந்து தீர்த்தான். உட்காருவதற்குத் திராணி இல்லாமையினால் வெண்பனியில் முகங்குப்புற விழுந்து பனிப் புறணியை ஆர்வத்துடன் நக்கலானான். நெற்றியையும் இரத்த ஓட்டத்தால் விண்விண்ணென்று தெறித்த கன்னப் பொருத்துக்களையும் வெண்பனியில் அழுத்தினான். அதன் சில்லென்ற ஸ்பரிசத்தால் வருணனைக்கெட்டாத இன்பத்தை அனுபவித்தான்.

உறைந்துபோய்ச் சப்பென்றிருந்த கொழுப்புத் துண்டை வாயில் போட்டுக் கொண்டான். அதைச் சுவைக்காமலேயே விழுங்க விரும்பினான். ஆனால் கொழுப்பு இளகி விட்டது. அதன் ருசியை வாயில் உணர்ந்தான். உடனே அவனுக்கு அகாத பசி எடுத்தது. டப்பாவிலிருந்து மேலும் இறைச்சியை எடுக்க உண்டான ஆசையைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு, எதையாவது விழுங்க வேண்டும் என்பதற்காக வெண்பனியைத் தின்னத் தொடங்கினான்.

அப்புறம் திடுக்கிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தான். வினாடி முள் ஐந்தாவது நிமிடத்தின் கடைசிக் கண்களைக் கடந்து கொண்டிருந்தது. அது தன் வட்டத்தைச் சுற்றி முடித்ததும் ஏதோ பயங்கரம் நிகழ்ந்து தீரும் என்பது போலப் பேரச்சத்துடன் அதை நோக்கினான். “அறுபது” என்ற எண்ணை அது தொட்டதுமே துள்ளி எழுந்து வலியால் முனகிவிட்டு மேலே நடந்தான்.

நடுப்பகலுக்குள் இம்மாதிரி நான்கு தொலைவுகளை அவன் கடந்து விட்டான். அப்படியே வழி நடுவே வெண்பனியில் உட்கார்ந்தான். அநேகமாகக் கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்தது பெரிய பிர்ச் அடிமரம். அதுவரை போகக்கூட அவனிடம் வலுவில்லை. தோட்களை கூனியவாறு, எதைப் பற்றியும் நினைக்காமல், எதையும் பார்க்கவோ கேட்கவோ செய்யாமல், பசியைக் கூட உணராமல் நெடுநேரம் உட்கார்ந்திருந்தான்.

படிக்க:
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

பின்பு பெருமூச்சு விட்டு, சில வெண்பனி உருண்டைகளை வாயில் போட்டுக் கொண்டான். உடலைப் பிணித்த மரமரப்பை உதறிப் போக்கிக் கொண்டு, பையிலிருந்து துருவேறிய டப்பியை எடுத்தான், அதைக் கட்டாரியால் திறந்தான். உறைந்துபோய்ச் சப்பென்றிருந்த கொழுப்புத் துண்டை வாயில் போட்டுக் கொண்டான். அதைச் சுவைக்காமலேயே விழுங்க விரும்பினான். ஆனால் கொழுப்பு இளகி விட்டது. அதன் ருசியை வாயில் உணர்ந்தான். உடனே அவனுக்கு அகாத பசி எடுத்தது. டப்பாவிலிருந்து மேலும் இறைச்சியை எடுக்க உண்டான ஆசையைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு, எதையாவது விழுங்க வேண்டும் என்பதற்காக வெண்பனியைத் தின்னத் தொடங்கினான்.

மறுபடி பயணம் தொடங்குமுன் அலெக்ஸேய், ஜூனிப்பர் புதரிலிருந்து இரண்டு கொம்புகளை வெட்டி எடுத்துக் கொண்டான். அவற்றைத் தாங்கலாக ஊன்றிக்கொண்டு நடந்தான். ஆனால் நடப்பது மணிக்கு மணி அதிகக் கடினமாகிக் கொண்டு போயிற்று.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்