(செப்டம்பர் 5, 2018 அன்று வெளியான இந்தக் கட்டுரையை தவறுதலாக இன்று (மார்ச் 26, 2019) மீண்டும் வெளியிட்டு விட்டோம். சிரமத்திற்கு வருந்துகிறோம். இனி இத்தகைய தவறுகள் நிகழாதவாறு கவனமாக இருக்கிறோம் – வினவு)

‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டார், ஆய்வு மாணவர் சோபியா. அவர் எழுப்பிய முழக்கத்தை இப்போது முழு இந்தியாவும் சமூக ஊடகங்களில் எழுப்பிக் கொண்டிருக்கிறது.  சமீபத்தில் ‘மோடியை கொல்ல சதி’ என்கிற பெயரில் கைதான செயல்பாட்டாளர்கள் குறித்த ஆங்கில ஊடக செய்தி ஒன்றில், பெரும்பாலான பின்னூட்டங்கள் மோடி தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைக்கத்தான் இந்த ‘கொலைப்பழி’ நாடகத்தை போடுகிறார் என்பதை சுட்டுவதாக இருந்தன. மோடிக்கு எதிராக உருவாகிவரும் மனநிலை காரணமாக ‘பாசிச பாஜக வரும் தேர்தலில் ஒழிந்துபோகும்’என்கிறார் ஜேம்ஸ் மேனர் என்கிற லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் .

…………………………………………..

ஓர் ஆண்டுக்கு முன் பாஜக, வரப்போகிற தேர்தலில் தன் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும் என நம்பியது.  ஆனால், சமீபத்திய கருத்து கணிப்புகள், பாஜக தேய்ந்து வருவதை சொல்கின்றன. மக்களவையில் தனி பெரும்பான்மையுள்ள கட்சி, இப்போது தள்ளாட்டத்தை சந்திக்கிறது.  பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தாலும் அவர்கள் பிரதமரை மாற்றச் சொல்லி கோரிக்கை வைக்கக்கூடும்.

உச்சபட்ச வேலைவாய்ப்பின்மை

லோக்நீதி என்ற அமைப்பு மே மாதம் வெளியிட்ட கருத்து கணிப்பில் 22% தலித்துகள் பாஜகவை ஆதரித்திருந்தனர். கடந்த ஜனவரி வெளியான முடிவைக் காட்டிலும் இது 8% குறைந்திருந்தது. இதுபோல பழங்குடியினரின் ஆதரவும் குறைந்திருந்தது. விவசாயிகளின் ஆதரவு ஒரே வருடத்தில் 49% சதவீதத்திலிருந்து 29% சதவீதமாக குறைந்திருப்பது தெரிந்தது.

மேலும் சில சரிவுகள்…

♣ 61 %  பேர் இந்த அரசு விலைவாசியை நிர்வகிப்பதில் கோட்டைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
♣ 55% பேர் ஊழலை ஒழிக்க இந்த அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்கிறார்கள்.
♣ 61% பேர் இந்த அரசே ஊழல் அரசுதான் என்கிறார்கள்.
♣ 64% பேர் பாஜக ஆட்சியில் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளதாக சொல்கிறார்கள்.
♣ 57% பேர் 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்ன வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்ற வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டதாக கருதுகிறார்கள்.
♣ 47% பேர் இந்த அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்கிறார்கள். முந்தைய கணிப்பில் 27% பேர் மட்டுமே இப்படி சொல்லியிருந்தார்கள்.
♣ 38% பேர், 2014-ல் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்தவர்கள், வரப்போகிற தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

மாநிலத்துக்கு மாநிலம் பாஜகவின் வளர்ச்சியை கணக்கில் எடுத்தால், இதே போன்ற முடிவுக்கு வரமுடியும். பாஜகவுக்கு சாதகமான மாநிலங்களிலிருந்து இதைத் தொடங்கலாம். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வென்றது. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்-ஐ குறைத்து மதிப்பிட முடியாது, ஆனாலும், பாஜக 10-லிருந்து 15 இடங்களை வெல்ல வாய்ப்புண்டு.

படிக்க:
♦ நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்!
♦ சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா விடுதலை !

வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. அசாமில் 14 இடங்களில் 7 இடங்களை வென்றது. இது மேலும் அதிகரிக்கலாம் என்றாலும் கருத்து கணிப்பு பின்னடைவு உள்ளதைக் காட்டுகிறது. சிறு மாநிலங்களில் 10-க்கு 1 இடத்தில் வென்றது பாஜக. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்ற பாஜக, வரவிருக்கிற தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம்.

இவற்றை ஒட்டுமொத்தமாக சேர்த்தால் வெறும் 87 எம்.பி.க்கள் மட்டுமே கிடைப்பார்கள். 326 இடங்களை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவு. பாஜக சில அல்லது பல இடங்களை இழக்கலாம்.

டெல்லியில் ஏழுக்கு ஏழு இடங்களை பெற்றது, அதில் இழப்பு ஏற்படலாம். ஹரியானா (10 இடங்களில் முந்தைய தேர்தலில் பெற்றது 7), சத்தீஸ்கர் (11-10), குஜராத் (26-26), ஹிமாச்சல் பிரதேசம் (4-4). மொத்தமுள்ள 63 இடங்களில் பல இடங்களை பாஜக இழக்கும்.

ரஃபேல் புகழ் மோடி

பீகாரில் கடந்த தேர்தலில் 40 இடங்களில் 22-ல் வென்றது. அதில் 9 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்குப் போனது. ஜார்க்கண்ட் (14-12), கர்நாடகா (28-17). இந்த மாநிலங்களிலும் பாஜகவுக்கு இழப்பு ஏற்படலாம். குறிப்பாக, பீகாரில் இழப்பு அதிகமாகவே இருக்கும். காங்கிரசுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்குமான கூட்டணி குறைந்தபட்சம் தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்தக் கூட்டணி கணிசமான இடங்களைப் பெற வாய்ப்புண்டு. மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், 47 இடங்களில் 23 இடங்களைப் பெற்ற கணக்கு வெகுவாக குறையக்கூடும். அப்படியே கூட்டணி அமைந்துவிட்டாலும், இவர்களை எதிர்த்து போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களைப் பொறுத்தே இவர்களது வெற்றி பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த மாநிலங்களில் மொத்தம் 129 இடங்கள் உள்ளன.

சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டால், உத்திரபிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும். இதில் காங்கிரசும் ராஷ்ட்ரிய லோக் தளமும் இணைந்தால், கடந்த தேர்தலில் பாஜக வென்ற 71 தொகுதிகளில் பல தொகுதிகளை இழக்கும்.

இறுதியாக, பாஜகவுக்கு மிக மிக சாதகமான இரண்டு மாநிலங்களில் அது கடுமையான பின்னடைவை சந்திக்கும் என கருத்து கணிப்பு அறிவிக்கிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த முறை 29 இடங்களில் 27 தொகுதிகளை வென்றது. அங்கே தற்போது காங்கிரசுக்கு சாதகமான அலை வீசிக்கொண்டிருக்கிறது.  ராஜஸ்தானில் கடந்த முறை மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் வென்றது.  ராஜஸ்தானில் பாஜக முதல்வராக முதல்முறை வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்பட்டபோது என்னென்ன குளறுபடி செய்து ஆட்சியை இழந்தாரோ அதுபோன்ற சூழல் இப்போதும் நிலவுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் மாநில ஆட்சியை கைப்பற்றுவதோடு, கணிசமான மக்களவை தொகுதிகளையும் பெறும். பாஜக பெற்ற 52 இடங்களில் கணிசமானதை இழக்கும்.

படிக்க:
♦ பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி : முன்னாள் பாஜக தலைவர் ரேஷ்மா !
♦ பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 102 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக நான்கு இடங்களை மட்டுமே வென்றது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த பாஜக 2 இடங்களில் வென்றது. 2019-ல் இந்த எண்ணிக்கை சற்று கூடும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், 87 இடங்கள் புதிதாக கிடைத்தாலும், முன்பு கிடைத்த 326 தொகுதிகளின் எண்ணிகையில் பெரும் சரிவு இருக்கும்.

ஆட்சியமைக்கப் போதுமான 272 தொகுதிகளை பாஜக பெறுவதுகூட முடியாத நிலைமைதான் என தெளிவாகத் தெரிகிறது. ஆனால், கூட்டணி ஆட்சியமைக்க போதுமான இடங்கள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் மோடியின் மீது ஆழ்ந்த விரக்தியில் இருக்கும் கூட்டணி கட்சியினரிடம் கடுமையான பேரத்தை பாஜக நடத்த வேண்டியிருக்கும். 200-க்கு மேற்பட்ட இடங்களை பாஜக பெற்றால், கூட்டணி கட்சியினர் மோடியை மாற்றச் சொல்வார்கள். ஆர்.எஸ்.எஸ். அதற்கு தயாராகவே இருக்கும். 200-க்கும் கீழே எண்ணிக்கை குறைந்தால் கூட்டணி ஆட்சியமைவதும் கடினம்தான்.

இது மாறக்கூடிய நிலைமைதான். அமித் ஷாவின் தந்திரங்கள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடியதுதான். குஜராத், உத்திரபிரதேசத்துக்கு வெளியே ஏராளமான வகுப்புவாதத்தைத் தூண்டும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்பாராத நிகழ்வுகள் பாஜகவுக்கும் உதவலாம். ஊடகங்களை வலைத்துப்போடுவதன் மூலம் ‘மோடி பிம்பம்’ இன்னமும் வசீகரிப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பாஜகவின் முழக்கமான எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதுதான் உண்மையான ஆபத்தில் உள்ளது.

கலைமதி
கட்டுரையாளர் : ஜேம்ஸ் மேனர்
நன்றி : தி வயர்
தமிழாக்கம்: கலைமதி

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க