எலக்சன் பாதுகாப்புக்காக ஆந்திராவில் ஒரு காலேஜில் தங்கியிருக்கிறோம் …

சம்பவம் 1

ஹோலி அன்று Gate ல் நின்றிருந்தேன்.. மூன்று கல்லூரி மாணவிகள் வந்தனர் ஹேப்பி ஹோலி என கை நீட்டினர். நம்ம பொண்ணுங்க கலாச்சாரத்தில் திளைத்ததாச்சே என நான் ஆச்சர்யத்தோடு கை குலுக்கிக்கொண்டேன்.பக்கத்தில் இருந்த வண்ணப்பொடிகளை நெற்றியில் வைக்கவோ கன்னத்தில் தடவவோ கூச்சப்பட்டு கைகளில் கொடுத்தேன். அவர்கள் அனாயசமாக என்னோட கன்னத்தில் தடவிவிட்டு மீண்டும் ஹேப்பி ஹோலி என மிக மகிழ்ச்சியாக விளையாடி சென்றனர்.

சம்பவம் 2

காலேஜோடு சிறிய ஸ்கூலும் உண்டு… சின்னப்பசங்க அவனவன் நோட்டை எடுத்துட்டு ஓடி வந்து நீட்டறாங்க.. என்னடானு பார்த்தா ஆட்டோக்ராப் வேணுமாம்… எனக்கு முன்னாடியே பல ஆட்டோக்ராப்கள்.. வெறும் கையெழுத்து மட்டும் இட்டிருந்தனர். Fight for rights என கையெழுத்திட்டேன். அடுத்தடுத்த யாரெல்லாம் யூனிபார்ம்களில் தெரிகிறார்களோ அவர்களிடத்தில் சார் சார் (கவனிக்கவும் … அங்கிள் என அழைக்கல) என ஆட்டோக்ராப் வேட்டை தொடர்ந்தது.

சம்பவம் 3

இரண்டு டீச்சர்கள் என்னோடு பேசினார்கள். அவர்களுக்கு தமிழ் லேது.. நமக்கு தெலுங்கு தெரியாது. இருந்தாலும் பேசினோம். ஒரு நாள் ஒருவர் ரசமும்… இன்னொருவர் சாம்பாரும் வீட்டிலிருந்து எடுத்து வந்து சிறப்பித்தனர். ரியல் ஹீரோஸ் என்றனர்.

சம்பவம் 4

வெளியில் மார்க்கெட் செல்லும்போது துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்போடுதான் போகிறோம் இங்கு. ( உபயம் நக்சல் ஆபத்து) அப்படியான நிலையில் ரூ500 மதிப்புள்ள டி ஷர்ட்டை பட்டாளம் என்பதால் ரூ 300-க்கு தந்த கடைக்காரர் விரும்பியது எங்களுடன் ஒரு செல்பி மட்டுமே.

இப்படி பல சம்பவங்களை அடுக்கலாம். பட்டாளத்தை காணாத மக்கள் அனைவரும் இப்படித்தான் வரவேற்கிறார்கள். இயல்பாக ராணுவம் மேலிருக்கும் ஊட்டப்பட்டிருக்கும் பொதுப்புத்தியில் இவ்வாறு நடந்து கொள்ளும் மக்கள் என்றேனும் ஏன் காஷ்மீரில் மணிப்பூரில் கல்லெறிகிறார்கள் என சிந்திப்பார்களா ? அங்கேயெல்லாம் துப்பாக்கி எடுக்கும் பட்டாளம் இங்கு ஏன் அமைதியாக இருக்கிறது என சிந்திக்கலாமே என புத்திசாலிகள் கேட்கலாம். இங்கே ஒரு ஸ்டெர்லைட்டோ, கூடங்குளமோ அல்லது மக்களுக்கு எதிராக ஒன்றை வைத்து மக்கள் அதனை அறவழியில் எதிர்க்கும்போதே பாருங்களேன் பட்டாளத்து நிலைமையை…

ஆட்டோகிராப் கேட்ட குழந்தைகளுக்கு பெல்லட்கள் பரிசளிக்கப்பட்டிருக்கும். செல்பி கேட்டவர் காணாமல் போனவராகியிருப்பார்… பெண்கள் அருகில் கூட வந்திருக்க வாய்ப்பில்லை. நிலைமை தலைகீழாகியிருக்கும். இதுதான் காஷ்மீரில் நிகழ்கிறது. இதுதான் வடகிழக்கில் நிகழ்கிறது. இதுதான் சட்டீஸ்கரில் நிகழ்கிறது. தலைகீழாக்குவது யார் என்ற புரிதல் பட்டாளாத்தானுக்கு புரிந்தால் பணி செய்வதே பாவமாகிவிடும். மக்களுக்கு புரிந்தால் அரசுக்கு தலைவலியாகும்.

ஈழத்தில் இந்திய அமைதிப்படை இறங்கிய போது கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது? பொதுமக்கள் அவர்களை கல்லடித்து வரவேற்கவில்லையே? மாலையிட்டு வரவேற்கப்பட்டவர்கள் வரவேற்றவர்களை பாலியல் வன்கொடுமை செய்தும் கொல்லப்பட்டும் கொடூரமாக முடிவுரை நிகழ்ந்ததும் எங்கனம் ?

ஆக இருபக்கமும் சூழல் அன்பையும் அடிதடியையும் தந்து கொண்டிருக்கிறது.. சூழலை அரசு உருவாக்குகிறது. அரசினை கார்ப்பரேட்கள் நடத்துகின்றனர். இந்த சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கும் பட்டாளத்தானுக்கும் அரசியல் புரிந்து விட்டால் போதும். ஊடகங்கள் அதனை ஊக்குவிப்பதில்லை. எட்டு மணி நேர பொழுதுபோக்குக்கு உழைத்த தலைவர்கள் இன்றிருந்தால் அதில் நான்கு மணி நேரம் அரசியலுக்கு என கேட்டிருப்பர்.

படிக்க:
பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

மனதில் தோன்றியவற்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது கூட பக்கத்து கிராமத்தில் நடந்து வந்தோம். ஊரில் உள்ள குழந்தைகள் ஓடி ஓடி வந்து கை குலுக்கின்றனர். அவர்கள் மீது பெல்லட்கள் பாயும் சூழல் எதுவும் வரும் முன்பே இந்த ஊரை விட்டு கிளம்பிட அல்லாடிக்கொண்டிருக்கிறது மனது. இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?

#sathishchelladurai #kashmir

முகநூலில் : Sathish Chelladurai 


இதையும் பாருங்க …
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா

பாரடா உனது மானிடப்பரப்பை…

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க