தேர்தலை ஒட்டி பிரதமர் மோடியின் மான் கி பாத் வானொலி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஒரு தீபாவளி ராக்கெட்டை விட்டுவிட்டு மக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும் என பாஜக நிரூபித்திருக்கிறது. இன்று (27-03-2019) திடீரென முக்கிய செய்தி ஒன்று குறித்து பேசுவதாக மோடி அறிவித்தார். அந்த முக்கிய செய்தி என்ன?
விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. அது என்ன சாதனை? விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கும், தொழில்நுட்பத்தை இந்தியா அடைந்துள்ளதுதான் அது. ஒரு டம்மி செயற்கைக்கோளை விண்வெளியில் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்களாம். இந்த சோதனைக்கு ‘மிஷன் சக்தி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
படிக்க:
♦ மேற்கு வங்கத்தில் வைரலாகும் பாஜக-வுக்கான வேட்பாளர் ஆலோசனை !
♦ பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?
இத்தகைய சாதனை விண்வெளித் துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் செய்திருக்கிறதாம். எனினும் “செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் இந்த “மிஷன் சக்தி” சோதனை, இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சி தானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல” என்று மோடி சொல்லியிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் தேர்தல் கமிஷன், நீதிமன்றங்கள், போலீஸ், இராணுவம் அனைத்தையும் பாஜக தனது நோக்கத்திற்கு பயன்படுத்தி வருகிறது. அதில் தற்போது விண்வெளி துறையான ஐ.எஸ்.ஆர்.ஓ (ISRO) மற்றும் டி.ஆர்.டி.ஓ (DRDO) எனப்படும் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக் கழகத்தையும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி பயன்படுத்தியிருக்கிறார்.
தீபாவளிக்கு வான வேடிக்கைகளை விட்டு மகிழ்ச்சி அடையும் நடுத்தரவர்க்கம், இந்த வான வேடிக்கையை பார்த்து, “இந்தியா வளர்ந்து விட்டது; வல்லரசாகி விட்டது; அதுவும் விண்வெளி வல்லரசு” என குதூகலமாக வாக்கு எந்திரத்தில் தாமரை பட்டனை அழுத்தும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது முற்றிலும் நடக்காத ஒன்று என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தியாவின் வளர்ச்சி குறித்த சித்திரத்தை போட்டோஷாப் மூலம் கொடுத்தாலே போதும் என எண்ணி வரும் பாஜகவிற்கு நமது மக்கள் எளிதில் பலியாகி வருகிறார்கள்.
இந்த விண்வெளி வல்லரசு என்ற சவடால் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் நாளிதழை திறந்து பார்த்தால் இந்த விண்வெளி வல்லரசின் சாதனைகள் பல பக்கங்களில் துணுக்கு செய்திகளாக அழுது வடிந்து கொண்டிருக்கின்றன.
சிவகாசியில் நேற்று (26-03-2019) பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டு நான்கு பேர் பலியாகியிருக்கின்றனர். ஒரு சாதாரண பட்டாசு தயாரிக்கும் தொழிலைக் கூட இங்கே பாதுகாப்பாக செய்ய முடியவில்லை. வருடந்தோறும் சிவகாசியில் இத்தகைய விபத்துக்கள் ஏற்பட்டு பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் அல்ட்ராடெக் நவீனமாக சேட்டிலைட்டை வீழ்த்திவிடும் அந்த விண்வெளி ராக்கெட் மூலம் நாம் எதை அடையப் போகிறோம்?
வானத்தில் பறந்து கொண்டிருந்த விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் மக்கள் பணத்தை வாரிச் சுருட்டி விட்டு ஒழிந்து போனது என்றால் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்றோ நாளையோ என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு முதலாளிகள் ஏமாற்றுவதும், பொருளாதாரம் சரிந்து போவதும் சேர்ந்தே நடந்து கொண்டிருக்கிறது.
படிக்க:
♦ இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?
♦ பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா
இதில் நாட்டு மக்களின் சேமிப்புப் பணம் பொதுத்துறை வங்கிகளின் வழியாக இவர்களுக்கு சென்று சேர்கிறது. செயற்கைக் கோளை சுற்றி வருவது இருக்கட்டும்.. பயணிகளை சுமந்து செல்லும் விமான நிறுவனங்கள் கூட இங்கே வெற்றிகரமாக நடத்த முடியவில்லை எனும் போது இந்த வல்லரசு சவடால் எதற்கு?
லண்டன், பாரீஸ், அமெரிக்க நகரங்களில் ஓடுகின்ற நதிகள் மிகவும் ரம்யமாக சுத்தமாக இருக்கின்றன நமது சென்னையில் ஒரு காலத்தில் அழகாக இருந்த கூவம் நதி இன்று மொத்தமா நகரத்திற்கு கழிப்பறையாக மாறிவிட்டது. ஒரு நதியை கூட நம்மால் சுத்தமாக பராமரிக்க முடியவில்லை எனும்போது நீலவானில் ஆளரவமின்றி சுற்றும் செயற்கைக் கோளை சுட்டுவீழ்த்தி என்ன பயன்?
ஓரிரு நாட்களுக்கு முன்னர் சென்னை திருப்பெரும்புதூரில் ஒரு வீட்டின் உரிமையாளரும் அவரது மகன்களும் அருகாமை வீட்டு இளைஞர்களும் மரித்துப் போய் இருக்கிறார்கள். கழிவுநீர் தொட்டியை சோதனையிடச் செல்லும்போது முதலில் வீட்டின் உரிமையாளர் மயங்கி இறந்து போகிறார். அவரை காப்பாற்ற போய் ஐந்து இளைஞர்களும், அநியாயமாக இறந்து போயிருக்கிறார்கள். உலகில் எங்காவது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் முயற்சியில் மக்களோ துப்புரவு தொழிலாளிகளோ இறந்து போவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் மட்டும்தான் வருடம்தோறும் நூற்றுக்கணக்கான துப்புரவுத் தொழிலாளிகள் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் கொல்லப்படுகிறார்கள். இத்தகைய கொலையை செய்துவிட்டு இந்தியா விண்வெளி வல்லரசு எனில் அந்த வல்லரசு நல்ல அரசா ? கொடிய அரசா ?
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டு மக்களை பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் சித்திரவதை செய்தது நாம் அனைவரும் அறிந்த விசயம்தான். போலீசு மற்றும் இராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், துப்பாக்கிகள் போன்றவைகளை வாங்கிப் போட்டுவிட்டு இதுதான் வளர்ச்சி, வல்லரசு என பம்மாத்து காட்டுகிறது பாஜக அரசு. ரபேல் விமானம் போல தற்போது சாட்டிலைட்டை வீழ்த்தும் ராக்கெட் என வெட்கமே இல்லாமல் தேர்தலுக்காக இந்த வான வேடிக்கையை நடத்துகிறது பாஜக அரசு.
மதன்