க்களவைத் தேர்தல் நெருங்க இருக்கிற நிலையில், ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

அரசு நிறுவனங்களுக்கு மூடுவிழா, 45 ஆண்டுகளில் இல்லாத வேலை வாய்ப்பின்மை, சிறுதொழில் நசிவு, பலவீனமடைந்த பொருளாதாரம், தீர்க்கப்படாமல் தொடரும் விவசாயிகளின் பிரச்சினைகள், சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்பாக்கப்பட்ட வன்முறைகள்,  ஆட்சியை விமர்சிக்கும் அறிவுஜீவிகள் – செயல்பாட்டாளர்களைக் கொலை செய்தல் மற்றும் கைது செய்து ஆண்டுக்கணக்கில் சிறையில் தள்ளுதல், இந்துத்துவத்தின் பெயரால், பசுவின் பெயரால் நடக்கும் கும்பல் வன்முறைகள் என மோடி அரசுக்கு எதிராக மக்கள் ஆயிரம் காரணங்களுடன் கொந்தளித்து எழுந்து கொண்டிருக்கும் வேளையில், மோடியே மீண்டும் ஆட்சி அமைக்கும் அவலம் நடக்குமா? மோடியின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறதா குறைந்திருக்கிறதா?

மேற்கு வங்க நிலவரம் அதற்கு பதில் சொல்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே பாஜகவை வளர்த்துவிடும் தீவிரத்தோடு அமித் ஷா திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு சில திரிணாமூல் கட்சி நிர்வாகிகளையும்கூட அவர் விலைக்கு வாங்கினார். ஆனாலும்கூட மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் நிறுத்த வேட்பாளர்கள் இல்லாமல் தவிக்கிறது பாஜக.

முன்னதாக தனித்து போட்டியிடும் பாஜக 29 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கிடைக்காமல் அக்கட்சி திண்டாடுவதாக சொல்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.

படிக்க:
பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : மார்ச் 30 சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் !

இந்த நிலையில் பாஜகவின் நிலைமையை எண்ணி வருந்திய ஏதோ ஒரு நல்ல மனதுக்காரர், சுவர் ஓவியம் மூலமாக பாஜக மேலிடத்துக்கு தனது யோசனையை சொல்லியிருக்கிறார்.  அந்த சுவர் ஓவியம் சொல்வது இதுதான்: பிரதமர் மோடி, தனக்கு மிகவும் பிடித்த கோமாதாவை கையில் பிடித்திருக்கிறார். “மக்களவைத் தேர்தலில் உன்னையே வேட்பாளர் ஆக்கிவிடுகிறேன்”  என்கிறார் மோடி. மேற்கு வங்கத்தில் இந்த தேர்தலின் போது அதிகமாக பகிரப்பட்ட வாட்சப் படம் என்ற ‘பெருமை’யைப் பெற்றுள்ளது இது.

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பசுவின் பெயரால் முசுலீம்களும் தலித்துகளும் அடித்துக் கொல்லப்படுவது வழக்கமான செய்தியாகிவிட்டது. இந்துத்துவக் கும்பல் மோடி ஆட்சி காலத்தில் 86 பேரை அடித்தே கொன்றுள்ளது. வயதான மாட்டை வெட்டிய குற்றத்துக்காக  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போடும் நடைமுறையும் மோடி ஆட்சி காலத்தில்தான் அமலுக்கு வந்தது. வயதான மாடுகளை பராமரிக்க காப்பகங்கள், அதற்கென்று உலகின் முதன்முறையாக அமைக்கப்பட்ட பசு பாதுகாப்பு அமைச்சகம் என ‘கோமாதா’வுக்கு மோடி ஆட்சி பல ‘சிறப்பு’களைச் செய்துள்ளது.

எனவே, மனிதர்களைக் காட்டிலும் மாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியின் வேட்பாளர்கள் மாடுகளாக இருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?


கலைமதி
நன்றி : இந்தியா டுடே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க