‘எதிரி’களின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக இந்தியா செய்துள்ளதாக கடந்த வாரம் மோடி நேரலையில் தோன்றி  பெருமிதமாக அறிவித்தார்.  இப்படி செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை முயற்சி காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே தொடங்கி விட்டது என்றபோதும், தன்னுடைய அரசு வான்வெளி பாதுகாப்பிலும் ‘சிறந்து’ விளங்குவதாக மோடி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டார். பாலகோட் தாக்குதல் கைக்கொடுக்காத நிலையில் விண்வெளி பரிசோதனையும் பெரும் சோதனையாகவே முடிந்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் கால வித்தையாக ஏவப்பட்ட ‘மிஷன் சக்தி’ ஏவுகணையால் விண்வெளி சுற்றுவட்டப்பாதையில் ஏராளமான குப்பைகள் சேர்ந்துள்ளதாகவும் இந்த குப்பைகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு ஆபத்து நேரலாம் எனவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கவலை தெரிவித்துள்ளது.

மிஷன் சக்தி சோதனையில் குறைந்த சுற்று வட்டப்பாதையில் சென்று கொண்டிருந்த குறு செயற்கைகோள் ஒன்று அழிக்கப்பட்டதாக நாசாவைச் சேர்ந்த நிர்வாகி தெரிவித்தார். மேலும், பேசிய அவர் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி ஆய்வாளர்களுக்கு இதனால் 44% கூடுதல் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

“இந்தியா சுட்டு வீழ்த்திய செயற்கைக்கோள் ஏற்படுத்திய குப்பை 400 துண்டுகளாக சுற்றுவட்டப்பாதையில் சிதறி உள்ளது. அத்தனை துண்டுகளையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இப்போதைக்கு 60 துண்டுகளை மட்டும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் துண்டுகள் 10 செ.மீ.-ஐவிட பெரியவை.  இந்த 60 – இல் 24 துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேலே சுற்றிவருகின்றன” என நாஸாவின் நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறினார்.

விண்வெளி சுற்று வட்டப்பாதையில் சிதறிய துண்டுகளால், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வுப் பணி செய்யும் விண்வெளி ஆய்வாளர்கள் விபத்தை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டினார் ஜிம். “இந்தியாவின் பரிசோதனையால் சேர்ந்த குப்பைகள் காரணமாக இந்த ஆபத்து 44% அதிகரித்துள்ளது. இப்போதைக்கு விண்வெளி ஆய்வு மையமும் ஆய்வாளர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்றார் அவர்.

படிக்க:
குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

செயல்படாத செயற்கைக்கோள்கள் இதுபோன்ற எதிர் நாட்டின் செயற்கைகோளை சுட்டு வீழ்த்துவதன் மூலம் ஏற்பட்ட குப்பைகள் என பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான துண்டுகள் சுற்றிவருகின்றன. இவை விண்வெளி ஆய்வு மையம் அல்லது விண்கலத்தின் மோதினால் விபத்து நேரிடும்.

இத்தகைய பரிசோதனை நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் மனிதனின் விண்வெளி பயணத்துக்கு இணக்கமானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். ஏனினும் சுற்றி வரும் குப்பைத் துண்டுகளில் பெரும்பான்மையானவை அமெரிக்காவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. நாசா தெரிவித்துள்ள கவலையில் இது இடம்பெறவில்லை. என்ன இருந்தாலும் நாசா என்பது அமெரிக்காவிற்கு சொந்தமான ஒன்றல்லவா!

அமெரிக்கா தவறிழைத்திருப்பதால் இந்தியாவும் அப்படி செய்யலாம் என்று எவரும் கூற முடியாது. இது போக இந்த விசயத்தில் பெருமை பாராட்டும் மோடி அரசை பலரும் கண்டித்திருக்கின்றனர். அறிவுள்ள எந்த அரசும் தனது இரகசியங்களை இப்படி பட்டவர்த்தனமாக சொல்லாது என மோடியின் நேரலை அறிவிப்பு குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், இத்தகைய பரிசோதனைகள் எதிர்கால ஆய்வுப் பணிகளை பாதிக்கும் என்பதை அறியாமல்தான் வெட்டி பெருமை பேசிக்கொண்டிருக்கிறது பாஜக கும்பல்.

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க