நிலவில் மனிதன் முதன்முதலாக கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் சந்திராயன்-2 இறங்கு கலம் ஜூலை 22 அன்று விண்ணில் ஏவப்பட்டது. ஒட்டுமொத்த அண்டவெளியில் நமது பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்பொருள் நிலா தான். ஆனால் நிலவைப் பற்றி நாம் அறிந்துள்ளவை மிகக் குறைவே. வேண்டுமானால், உங்கள் சுற்றத்தில் இந்த உரையாடலை நிகழ்த்திப் பாருங்கள்:

தரை தளத்திலிருந்து மொட்டை மாடியை எப்படிப் பார்ப்பீர்கள்?”

அன்னாந்து பார்ப்போம்

மொட்டை மாடியிலிருந்து தரைத் தளத்தை பார்க்கும் போது?”

குனிந்து பார்ப்போம்

இங்கிருந்து நிலவை எப்படிப் பார்ப்பீர்கள்?”

அன்னாந்து பார்ப்போம்

எனில் நிலவிலிருந்து பூமியை எப்படிப் பார்ப்பீர்கள்?”

Web-Earth-From-Moonஇந்தக் கேள்விக்கு “குனிந்து” என்று நம்மில் பெரும்பாலானோர் தவறாக பதிலளிப்போம். நிலா கோள வடிவிலானது என்று அறிந்திருந்தும் கூட நமது பார்வைக் கோணத்தில் வட்ட வடிவிலான தட்டாக மூளையில் பதிவுபெற்றிருப்பதே இதற்கு காரணம்.

நமது நிலா, ஒரு கால்பந்தைப் போல ஒரு முழுநிறைவான கோள வடிவிலில்லை. நிலவின் துருவங்களுக்கிடையேயான விட்டம் நிலநடுக்கோட்டு விட்டத்தை விட சிறிது குறைவு. நிலநடுக்கோட்டு விட்டம் 3,476 கிலோமீட்டர். துருவ விட்டம் 3,472 கிலோமீட்டர்.

நமது சூரியக் குடும்பத்தில் மொத்தம் 185 நிலாக்கள் (துணைக்கோள்களின்) உள்ளன. கோள்கள் சூரியனையும், துணைக் கோள்கள் கோள்களையும் சுற்றுகின்றன என்றறிவோம். செவ்வாய் கோளை 2 துணைக்கோள்களும் (நிலாக்கள்), வியாழன் கோளை 79 துணைக்கோள்களும், சனிக் கோளை 62 துணைக்கோள்களும்,  யுரேனஸ் கோளை 27 துணைக்கோள்களும், நெப்டியூன் கோளை 14 துணைக்கோள்களும் சுற்றி வருகின்றன. இந்து வேதங்கள், பைபிள், குரான் அல்லது சோதிடம், நவகிரக அமைப்புகள் இவை எதிலுமே நமது சந்திரனைத் தவிர மற்ற எவையும் குறிப்பிடப்படவில்லை.

படிக்க:
♦ பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் !
♦ தொலைதூர நட்சத்திரத்தின் நிறையை அளவிடுதல் – வானியலாளர்கள் வெற்றி

இவற்றில் நான்கு துணைக்கோள்கள் நமது நிலவை விடப் பெரியவை. சூரியக் குடும்பத்தில் இருப்பவற்றிலேயே மிகப் பெரிய நிலா (துணைக் கோள்) வியாழனின் நிலாக்களில் ஒன்றான கனிமீடு (Ganymede). இதன் விட்டம் 5268 கிலோ மீட்டர். இரண்டாவது இடத்திலுள்ள சனிக் கோளின் நிலாக்களில் ஒன்றான டைட்டனின்(Titan) விட்டம் 5150 கி.மீ. மூன்றாமிடத்தில் இருக்கும் வியாழனின் நிலா காலிஸ்டோ(Callisto) 4820 கி.மீ விட்டமுடையது. நான்காமிடத்தில் 3660 கி.மீ விட்டமுள்ள உள்ளது வியாழனின் நிலா ஐஓ(IO). ஐந்தாமிடத்தில் நமது நிலாவும், ஆறாமிடத்தில் 3122 கி.மீ விட்டம் கொண்ட வியாழனின் நிலாக்களில் ஒன்றான யுரோப்பாவும்(Europa) உள்ளன. இவற்றில் கனிமீடும் டைட்டனும் சூரியக் குடும்பத்தின் முதல் கோளான புதனை(Mercury) விடப் பெரியவை.

மனிதக் குரங்கிலிருந்து தோன்றிய ஆதி மனிதனிலிருந்து இன்று வரை நாம் அனைவருமே நிலாவின் ஒரு அரைக்கோளத்தை மட்டுமே பார்க்கிறோம். ஏனெனில் நிலா பூமியைச் சுற்றுவதும், தன்னைத் தானே சுற்றுவதும் ஒரு ஒத்திசைவான விகிதத்தில் இருக்கிறது. அதனால் எப்போதும் நிலவின் ஒரு முகத்தை மட்டுமே எப்போதும் பார்க்கிறோம்.

நிலவானது பூமியை வட்டப்பாதையில் சுற்றவில்லை; நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது. ஒருமுறை நமக்கு அருகிலும் மற்றொரு முறை தொலைவிலுமாக பூமியிலிருந்து அதன் தொலைவு மாறிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே சில முழுநிலவு நாட்களில் நிலா பெரிதாகவும் சில நாட்களில் சிறிதாகவும் தெரிகிறது.

காஷ்மீர்-கார்கிலிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரு நேர்கோடு வரைந்தால் அதன் நீளம் 2945 கிலோமீட்டர் இருக்கும். இந்தியாவை எடுத்து நிலவில் வைத்தால், அதன் துருவ விட்டம் இந்தியாவின் நீளத்தை விட சுமார் 500 கிலோமீட்டர் அதிகமிருக்கும்.

ஆனால் இது ஒருவகையான ஒப்பீடு மட்டுமே. மேற்பரப்பளவை ஒப்பீட்டால், நிலவு மிக மிக பெரியது. இந்தியாவின் பரப்பளவு சுமார் 33 இலட்சம் சதுர கிலோமீட்டர். நிலவின் மேற்பரப்பளவு சுமார் 3 கோடியே 80 இலட்சம் சதுர கிலோமீட்டராகும். (பூமியின் மொத்த மேற்பரப்பளவு சுமார் 51 கோடி சதுர கிலோமீட்டரில் சுமார் 14 கோடியே 90 இலட்சம் கோடி சதுர கிலோமீட்டர் மட்டுமே நிலப்பகுதி)

நிலா பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது அதன் தொலைவு 3 இலட்சத்து 56 ஆயிரம் கிலோமீட்டராகவும் தொலைவிலிருக்கும் போது 4 இலட்சத்து 6 ஆயிரம் கிலோமீட்டராகவும், சராசரியாக 3 இலட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டராகவும் உள்ளது. இத்தொலைவுக்கு நாம் பயணம் சென்றால்?

படிக்க:
♦ “இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்
♦ “ போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !

கன்னியாகுமரிலிருந்து காஷ்மீர்-கார்கிலுக்கு கழுகு பறப்பதைப் போல் நேர்கோட்டுப் பாதையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் சுமார் 30 மணிநேரம் பிடிக்கும். இதே100 கிலோமீட்டர் வேகத்தில் நிலவிற்கு சென்றால் 3840 மணிநேரம் அதாவது 160 நாட்கள் பிடிக்கும். அதாவது கன்னியாகுமரிலிருந்து காஷ்மீர் கார்கிலுக்கு 64 முறை போய் வரும் நேரம். ஆனால் அப்பல்லோ-11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்ட்ரினும் 3 நாட்கள் 4 மணிநேரத்தில் சென்றடைந்தனர். இதுவரை 12 மனிதர்கள் மட்டுமே நிலவில் கால் பதித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே நிலவில் ஆய்வுக்கலத்தை இறக்கியுள்ளன. இந்தியாவின் சந்திராயன்-2, செப்டம்பர் 6 அன்று நிலவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலா எப்படி தோன்றியது என்பது பற்றி பல்வேறு கருதுகோள்கள் நிலவுகின்றன. பூமியைப் போலவே சந்திரன் சூரியனிலிருந்து தோன்றியிருக்கலாம், பூமியிலிருந்து பிரிந்து சென்றும் சந்திரன் உருவாகியிருக்கலாம், எங்கிருந்தோ வந்து பூமியின் ஈர்ப்புப் புலத்தில் சிக்கிக் கொண்ட சிறு கோள் போன்ற கோட்பாடுகள் தவறு என்று நிருபணமாகி விட்டன. “ஆரம்பகால குழந்தைப் பருவ பூமியின் மீது ஒரு கிரகம் மோதி அதன் விளைவாக ஏற்பட்ட சிதறல்கள் ஒன்றுதிரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும்” என்பதே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். ஆதி பூமியின் மீது மெதுவாக வந்து மோதியதாகக் கருதப்படும் (தோராயமாக செவ்வாய் கோள் அளவிலான) கோளுக்கு விஞ்ஞானிகள் தைய்யா (Theia) என்று பெயரிட்டுள்ளனர்.

நிலா ஒரு முறை பூமியை சுற்றி வருவதற்குள் பூமி தோராயமாக 28 முறை தன்னைத் தானே சுழன்றிருக்கும். அதாவது, 28 நாட்கள். நிலா சூரியனின் திசையில் இருக்கும் போது அது இரவில் தெரிவதில்லை. சூரியனுக்கு எதிர்த்திசையில் இருக்கும்போது இரவில் தெரிகிறது. இந்த சுழற்சியின் நிகழ்வுகளே புதுநிலவு (அமாவாசை), முழுநிலவு (பௌர்ணமி). கதிரவன், பூமி, நிலா இம்மூன்றும் ஒரே துல்லியமான நேர் கோட்டில் அமையும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. நிலா கதிரவனை மறைக்கும் போது சூரிய கிரகணமும், பூமியின் நிழல் சந்திரனில் படும் போது சந்திர கிரகணமும் ஏற்படுகின்றன. அதாவது அமாவாசையன்று சூரிய கிரகணமும், பௌணர்மியன்று சந்திர கிரகணமும் நடக்கும்.

solar-and-lunar-eclipses

ஆனால் இன்றும் கதிரவ மறைப்பு, சந்திர மறைப்பு (கிரகணங்கள்) இராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதால் ஏற்படுகின்றன என்ற அறிவியலுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகள் கோலோச்சுகின்றன.

பிரபஞ்சத்திலேயே உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழல் பூமியில் மட்டும் இருப்பதை நாம் அறிவோம். அதே போல வியத்தகு முறையிலானதோர் விகிதம் நமது பூமிக்கும் துணைக் கோளான நிலவிற்கும் உள்ளது.

கதிரவனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 14.96 கோடி கிலோ மீட்டர். பூமிக்கும் நிலவிற்கும் இடையிலான தூரம் 3.84 இலட்சம் கி.மீட்டரை விட தோராயமாக 400 மடங்கு. சூரியனின் விட்டம் 14 இலட்சம் கி.மீட்டர். நிலவின் விட்டம் 3476 கி.மீட்டரை விட தோராயமாக 400 மடங்கு. இவ்விகித ஒற்றுமையால்தான் முழு நிறைவான சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்ட்ரினும் நிலவில் காலடித் தடத்தை மட்டும் விட்டுவிட்டு வரவில்லை. எதிரொளிப்பான் ஒன்றையும் நிலவில் விட்டுவிட்டு வந்துள்ளனர். அந்த பிரதிபலிப்பானை குறிவைத்து ஒரு லேசர் ஒளிக்கற்றை அனுப்பப்படுகிறது. ஒளி கற்றை பிரதிபலிப்பானில் பட்டு திரும்பிவர எடுக்கும்  நேரத்தைக் கொண்டு பூமி-நிலவிற்கிடையிலான தொலைவு அளக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நிலா, பூமியை விட்டு 4மில்லி மீட்டர் – அதாவது நம் நகக்கண் அளவு விலகிச் செல்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு 4 மீட்டர். பத்து லட்சம் ஆண்டுகளுக்கு 4 கிலோ மீட்டர் நகரும்.

இதற்கு காரணம் நியூட்டனின் மூன்றாம் விதி. நிலவின் ஈர்ப்பு விசை பூமியிலுள்ள கடல் மற்றும் நீர்பரப்புகளில் அலைகள் ஏற்பட காரணமாக உள்ளது. இவ்வலைகள் நிலவின் மீது எதிர்விசையை – விலக்கு விசையை உண்டாக்குகின்றன.

இந்த விகிதத்தில் நிலா விலகிச் சென்றால் அது முழு நிறைவாக கதிரவனை மறைத்து – முழு நிறைவான சூரிய கிரகணம் ஏற்படாது; நமது கடல்கள் அலைகளின்றியும் போகலாம்; இது பூமியின் பல்லுயிர் சூழலை பாதிக்கும். ஆனால் இது ஏற்படுவதற்கு சுமார் 50 கோடி ஆண்டுகள் பிடிக்கும். அன்று நிலா சுமார் இரண்டாயிரம் கி.மீட்டர்கள் நகர்ந்திருக்கக் கூடும். அன்று நமது புதுநிலவு – முழுநிலவு (அமாவாசை-பௌணர்மி) இடையினான நாட்கள் அதிகரித்திருக்கவும் கூடும்.

Rahu Ketuகற்றல் என்பது ‘புதிதாக’ கருத்துக்களை அறிந்து கொள்வது என்பது மட்டுமோ அல்லது கற்றல் என்பது சரியான கருத்துக்களை தெரிந்து கொள்வதும், தவறானவற்றை நிராகரிப்பதும் மட்டுமோ அல்ல. புலனுணர்வின் மூலம் பெறப்பட்ட பல கருத்துக்களை ஒருங்கினைத்துப் புரிந்து கொள்வதுடன், ஏற்கனவே புலனுணர்வினாலும், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் மூலமும் பெற்றுள்ள தவறான கருத்துக்களை நமது மூளையிலிருந்து துடைத்தெறிவதன் மூலமே கற்றல் முழுமையடைகிறது.

தவறான கருத்துக்கள் அல்லது அரைக்காணி (1/160) அளவிலான உண்மைகளோடு கட்டமைக்கப்படும் கட்டுக்கதைகள் மத மூடநம்பிக்கைகளுடன் கலக்கும் போது அவை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது. அதனால் தான் இன்றும் கூட பூமி தட்டை, சோதிடம், கிரகப் பெயர்ச்சி போன்ற மூடநம்பிக்கைகளை நம்புவோரும் ‘நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தது பொய்’ என்பது போன்ற சதிகோட்பாடுகளை நம்பிப் பரப்புவோரும் இருக்கிறார்கள்.

அதனால் அறிவுக்கு ஒவ்வாத கட்டுக் கதைகளையும், கற்பிதங்களையும் நமது மூளையிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு இயற்கையின் வியத்தகு நிகழ்வுகளை இரசிப்போம், நமது கற்றலை விரிவு செய்வோம்.

– மார்ட்டின்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க