”இந்த கிராமத்தில் கருப்பையோடு இருக்கும் பெண்களை நீங்கள் காண்பது அரிது.. இது கருப்பை இல்லாப் பெண்களின் கிராமங்கள்” என்கிறார் மந்தா உகாலே என்கிற பெண். இவர் மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா பகுதி, பீத் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இக்கிராமத்திற்கு அருகில் உள்ள வஞ்சாரவதி என்கிற மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பெண்களில் 50 சதவீதமானோருக்கு கருப்பைகள் இல்லை.

இவர்கள் இயற்கையாகவே கருப்பை இன்றி பிறந்த பெண்கள் அல்ல. இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைப் பெற்ற பின் அறுவை சிகிச்சை மூலம் கருப்பையை அகற்றி விடுகின்றனர். கடும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட மராத்வாடா பகுதியைச் சேர்ந்த இப்பெண்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் கரும்பு அறுவடை சீசன் துவங்கியதும் கூலித் தொழிலாளிகளாக கரும்பு வயல்கள் நிறைந்த மேற்கு மகாராஷ்டிராவுக்கு குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.

படிக்க :
♦ பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு
♦ கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !

கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளிகளுக்கு நிலையான கூலி கிடையாது. “ஒரு டன் கரும்பை வெட்டிக் கொடுக்கும் தம்பதினருக்கு 250 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளில் நானும் எனது மனைவியுமாக சேர்ந்து 3-லிருந்து 4 டன் கரும்பை வெட்டுவோம். 4 – 5 மாத காலகட்டத்திற்குள் 300 டன் வரை வெட்டுவோம். இப்படி ஒரு சீசனில் நாங்கள் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டுதான் அடுத்த ஒரு ஆண்டை சமாளிக்க வேண்டும். கரும்பு வெட்டுவதைத் தவிர மற்ற சீசனில் வேறு வேலைகள் ஏதும் கிடைப்பதில்லை” என்கிறார் பந்து உகாலே என்பவர். இவர் சத்யபாமா என்பவரின் கணவர். சத்யபாமாவின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

”கரும்பு வெட்டும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாதவிடாயை பிரச்சினை என்பதாகக் கருதுகின்றனர். எனவே அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி விடுகின்றனர். இதனால் அவர்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. ஹார்மோன்கள் குறைபாடு, மனநல பிரச்சினைகள், எடைகூடுவது என உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. நாங்கள் 25 வயதான இளம் பெண்கள் கூட இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருப்பதை பார்க்கிறோம்” என்கிறார் அச்யூட் போர்கோன்கர். இவர் டதாபி என்கிற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர். இப்பகுதியில் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளரிடையே இவ்வமைப்பு பணியாற்றி வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இப்பகுதிக்கு பலரும் வேலைக்காக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

”எங்களுக்கும் குறைந்த கால அளவில் பெரிய இலக்கை அடைய வேண்டி இருக்கிறது. எனவே மாதவிடாயில் உட்காரும் பெண்களை நாங்கள் வேலைக்கு எடுத்துக் கொள்வதில்லை” எனக் குறிப்பிடும் தாதா பட்டீல் என்கிற காண்டிராக்டர், தாங்கள் பெண்களை இவ்வாறான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வற்புறுத்துவதில்லை என்கிறார். ஆனால், பல பெண்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காண்டிராக்டர்கள்  முன்பணம் கொடுப்பதாகவும், அந்த முன்பணத்தை கூலியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழித்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

பதினைந்து அல்லது பதினாறு வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், அடுத்த சில ஆண்டுகளில் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுக்கு தாயாகின்றனர். அதன் பின் 25 வயதுக்குள் கருப்பையை நீக்கி விடுகின்றனர். இவ்வாறான அறுவை சிகிச்சை மேற்கொள்வது சட்டப்படி குற்றம் என்றாலும், காண்டிராக்டர்களோடு கைகோர்த்துக் கொள்ளும் மருத்துவர்கள் எந்த குற்றவுணர்வும் இன்றி சட்டத்தை மீறுகின்றனர்.

படிக்க:
♦ உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
♦ பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

இந்தப் பகுதியில் நிலவும் கொடூரமான பஞ்சத்தையும் வறுமையையும் பயன்படுத்திக் கொள்ளும் காண்டிராக்டர்கள் தெள்ளத் தெளிவாக பெண்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கே இது போன்ற முறைகளை கண்டுபிடித்திருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் லட்சக்கணக்கான தொழிலாளிகள் கரும்பு வெட்டும் கூலிகளாக இடம் பெயர்ந்து செல்கின்றனர். ஒரு பெண் தொழிலாளி வேலை நேரத்தின் போது ஒரே ஒரு மூறை ஓய்வெடுத்தாலும் அவருக்கும் அவரது கணவருக்குமாக சேர்த்து 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர் காண்டிராக்டர்கள். ஒவ்வொரு ஓய்வு நேரத்திற்கும் 500 ரூபாய் அபராதம்.

மாதவிடாய் கூட தங்கள் பிழைப்புக்கு இடையூறாய் வந்து விடக்கூடாதே என்று சிந்திக்கும் அளவுக்கான வறுமை நிலையை காண்டிராக்டர்களின் லாபவெறி பயன்படுத்திக் கொள்கின்றது. இந்து பிசினஸ் லைனில் இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிர தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீட்டை அடுத்து மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? ஒருசில காண்டிராக்டர்கள் தண்டிக்கப்படலாம்; ஓரிரு மருத்துவர்கள் தண்டிக்கப்படலாம். ஆனால், இவையனைத்துக்கும் அடிப்படையாக இருக்கும் லாபவெறியையும் முதலாளித்துவ சுரண்டலையும் யார் தண்டிப்பது?

சாக்கியன்
சாக்கியன்
செய்தி ஆதாரம் : Business line , Business line

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க