சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 8

சி.என்.அண்ணாதுரை
காட்சி : 12

இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, தளபதிகள்.

சிவாஜி : மராட்டிய மாவீரர்களே இந்த மண்டலத்தைக் காக்கும் தளபதிகளே நீங்கள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை. வீரம் விழலுக்கிறைத்த நீராகவில்லை.  நமது மனக்கண் முன் தோன்றித் தோன்றி நம்மை ஆவேசமுறச் செய்து மகாராஷ்டிரம் உதயமாகிவிட்டது. சாம்ராஜ்யம் உருவாகிறது. வீரர்காள்! உங்கள் சிருஷ்டி அந்த ராஜ்யம் மங்கிக் கிடந்த மண்டலம் சிங்கங்களாகிய உங்களால் மணிக்கொடியை இனி பறக்கவிடும். மலைக்கு மலை தாவிய நாம், கோட்டைக்குக் கோட்டை குத்து வெட்டு நடத்திவந்த நாம், பரத கண்டத்திலே ஒரு பரந்த ராஜ்யத்தை ஸ்தாபித்து விட்டோம். சாத்பூரா மலைச் சாரல் சச்சரவுக்கு உறைவிடம் என்பது மாறி, செளந்தர்யமான ஒரு சாம்ராஜ்யமாகிவிட்டது.

(வீரர்கள்)

மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே!
மாவீரர் சிவாஜி மகாராஜாவுக்கு ஜே!
சாத்பூரா சாம்ராஜ்யாதிபதிக்கு ஜே!

சிவாஜி : ஆருயிர் தோழர்களே என் ஜெயம் உங்கள் உடைவாளின் விளைவு. என் கீர்த்தி உங்கள் தேகத்திலே உண்டான புண்களிலே பூத்தது . உங்கள் ரத்தமே, மகாராஷ்டிர பூமியைப் புனித பூமியாக்குகிறது. நீங்கள் வாழ அன்னை அருள் புரிவாள். பவானியின் பரிபூரண கடாக்ஷம் உமக்குக் கிடைக்கட்டும்.

தளபதி – 1 : மகராஜ்…

சிவாஜி : அன்பால் அர்சிக்கிறீர்கள், அந்த வார்த்தையை. ஆனால், அந்தப் பட்டத்தை நான் இன்னும் பெறவில்லை.

தளபதி – 1 : பட்டாபிஷேக காரியத்துக்குத் தங்கள் அனுமதியைத்தான் எதிர்ப்பார்க்கிறோம்.

தளபதி – 2 : நம் நாட்டுப் பொற்கொல்லர் சித்திர வேலைப்பாடுள்ள சொர்ண சிங்காதனம் தயாரித்துவிட்டார்.

தளபதி – 3 : அரண்மனைக்கு அலங்கார வேலைகள் இரவு பகலாக நடந்தேறி வருகிறது.

தளபதி – 4 : ஆரணங்குகள் வாழ்த்துக் கீதங்களைப் பாடியப்படி உள்ளனர் மகராஜ்.

தளபதி – 1 : கவிவாணர்கள் புதுப்புது கவிதைகளை இயற்றியப்படி உள்ளனர் காவலா.

தளபதி – 2 : சத்திரபதி சிவாஜிக்குப் பொன்னாடையும் நெய்தாகிவிட்டது.

தளபதி – 3 : பொற்குடங்களிலே புனித நீர் நிரப்பி யானைமீது கொண்டு வர ஏற்பாடாகி இருக்கிறது.

தளபதி – 4 : நகரெங்கும் விழாக் கொண்டாட மக்கள் துடிக்கிறார்கள்.

தளபதி – 1 : புகழ்மிக்க நமது படைகள் பூரிப்புடன் பவனிவர தயாராகியுள்ளது.

தளபதி – 2 : பட்டாபிஷேகம் நடைபெறுவது டில்லி பாதுஷாவுக்கும் தெரியும்.

தளபதி – 3 : பரதகண்டம் முழுவதுமே பெருமையடைகிறது. பாழடைந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டது கேட்டு, அணைந்து போக இருந்த சுதந்திர விளக்கு சுடர்விட்டெரிய தியாக நெய் ஊற்றி இருப்பது கேட்டு மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே .

சிவாஜி : உன்மைத் தோழர்களே! ஊராரின் உள்ளத்தை நான் அறிவேன். உங்கள் உவகையும் தெரிந்ததே. உங்கள் ஆதரவை அரணாகக் கொண்டுதானே அரசபீடம் ஏறத் துணிந்திருக்கிறேன். போரிலே நான் உங்களில் பலரைக் கடிந்து உரைத்திருப்பேன். மனதில் குறையிருப்பின் பொறுத்திடுக.

தளபதி – 4: மன்னா ! இது என்ன பேச்சு? உமது ஏவலர் நாங்கள். உமது மொழியே எமது வாழ்க்கைக்கு வழி.

சிவாஜி : இந்த சாம்ராஜ்யத்தைக் காண மராட்டியர் காட்டி இருக்கும் வீரம், தியாகம், சேவை, அபாரம். சரித்திரத்திலே பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை. உங்கள் சேவைக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

தளபதி – 1: மராட்டிய மன்னர் மன்னனாகி, முடி தரித்து, எம் கண்முன் நின்று, எங்கள் மனதை குளிரச் செய்யுங்கள், மகராஜ். அதுவே கைம்மாறு, வாழ்க்கையில் நாங்கள் எதிர் பார்க்கும் பேறு.

(தளபதிகள் போகிறார்கள் சிட்னீஸ் சோர்ந்த முகத்துடன் வருகிறான்).

சிவாஜி : சிட்னீஸ்! என்ன முகவாட்டம்?

சிட்னீஸ் : ஒன்றுமில்லை. வேலைத் தொந்தரவுதான்.

சிவாஜி : இல்லை, இல்லை விசாரம் இருக்கிறது உனக்கு.

சிட்னீஸ் : பிரமாதமான விசாரமில்லை; சுலபத்திலே போய்விடக் கூடியதுதான்.

சிவாஜி : ஒளியாமல் பேசு. பட்டாபிஷேகம் சம்மந்தமாக ஏதேனும்…

சிட்னீஸ் : ஆமாம்; சிற்சில இடங்களிலே எதிர்ப்பு.

சிவாஜி : யாருடைய எதிர்ப்பு? முன்புதான் நாம் கீறின கோட்டைத் தாண்டாதிருக்க சர்தார்கள் சங்கநாதம் செய்தனர். இப்போது எதிர்ப்பவர் யார்?

சிட்னீஸ் : வாழ்த்திய பூசுரரெல்லாம் வாதாடுகிறார்கள். ஏடுகளைப் புரட்டி வைத்துக் கொண்டு பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்காதாம். க்ஷத்திரிய குலமே இப்போது கிடையாதாம்.

சிவாஜி : அதனால் ..

சிட்னீஸ் : ஏதேதோ வகையான பேச்சு எல்லாம் அடிபடுகிறது!

சிவாஜி : யார் இந்த எதிர்ப்புக்கு முக்கியமாக முன்நின்று வேலை செய்பவர்?

சிட்னீஸ் : பல பேர் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. ஆனால் …

சிவாஜி : எதையோ மறைக்கிறாய். வேண்டாம் சிட்னீஸ்! உண்மையைக் கூறு. என் உள்ளம் நோகுமோ என்று பயந்து படுகுழியை மறைக்காதே. யார் இந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்குவது?

சிட்னீஸ் : நமது முதலமைச்சர் மோரோபந்த்.

சிவாஜி : மோரோபந்த்…! மோரோ அவரா எதிர்க்கிறார்? என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவர்.

சிட்னீஸ் : உம்மிடம் அவருக்கு இப்போதும் வெறுப்பில்லை. சாஸ்திரம் கெடுகிறதாம். வீணான பயம் அவருக்குக் கூட. ஆனால், எல்லாவற்றிற்கும் புதிய ஏற்பாடு செய்திருக்கிறேன். எதிர்ப்பு, சந்தேகம், கோபம். எல்லாம் ஒழிந்துவிடும். எல்லா எதிர்ப்புகளும் அடங்கிவிடும். அவருடைய அனுமதி கிடைத்தால், இவர்கள் காட்டும் சாஸ்திரங்களை, சந்தேகங்களை, வாதங்களை அவர் தவிடு பொடியாக்கிவிடுவார். அவ்வளவு திறமைசாலி

சிவாஜி : யார் அந்தத் திறமைசாலி?

சிட்னீஸ் : காகப்பட்டர், காசிவாசி, வேத வேதாந்தத்தின் உபன்யாசகர். வியாக்யானத்திலே அவரை மிஞ்சுபவர் கிடையாது. இன்று இங்கு எதிர்ப்பு செய்பவர்கள் எல்லாம் அவர் வந்து விளக்கம் கூறினதும் வாயை மூடிக் கொள்வர். சந்தேகங்களை சம்ஹரிப்பார். எதிர்ப்புகளைத் துவம்ஸம் செய்வார். அப்படிப்பட்ட காகப்பட்டரையே இந்தப் பட்டாபிஷேகத்தை நடத்திக் கொடுக்க இங்கு வரும்படி தூது அனுப்பத் திட்டம் போட்டுள்ளேன்.

சிவாஜி : அவர் இருக்குமிடம்?

சிட்னீஸ் : காசி

சிவாஜி : காசி க்ஷேத்திரம். கங்கைக் கரை மராட்டிய மண்டலத்திலே இருக்கிறது. அவர் அங்கு இருக்கிறார்.

சிட்னீஸ் : இன்றே புறப்படுகிறார்கள்.

சிவாஜி : தூதுவர்களை, மூன்று பூசுரர்களை அனுப்புகிறேன். அவர்கள் இங்கு எதிர்ப்பு செய்தவர்கள்.

சிவாஜி : சம்மதித்தார்களோ போக?

சிட்னீஸ் : அவர்கள் காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து விட்டால் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறுகிறார்கள்.

சிவாஜி : செய்! அனுப்பிப்பார்
(போகிறார்கள்)

(தொடரும்)
நன்றி: Project Madurai
முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க