நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாங்கூர் கிராமத்தில் கடந்த 13.04.2019 அன்று ஓ.என்.ஜி.சி நிறுவனம், வேதாந்தா கம்பெனிக்காக பெட்ரோலிய பொருட்கள் எடுத்து செல்வதற்காக விவசாய நிலங்களை அழித்து குழாய் போட முயன்றது.

நாங்கூரில் குழாய்களைப் போடும்போதே விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், என 500-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வேலையைத் தடுத்து நிறுத்தினர். குழாய்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள், கடுமையாக முழக்கமிட்டு போராடினார்கள். உடனே டி.எஸ்.பி தலைமையில் ஆறு ஸ்டேசன் போலீசும் வந்து மக்களை மிரட்டிப் பார்த்தது.

ஆனால், மக்கள் மிரட்டல்களுக்கு அஞ்சவில்லை. ”இந்த பகுதியில் உள்ள குழாய்களை அப்புறப்படுத்தினால்தான் நாங்கள் கலைந்து செல்வோம்.” என உறுதியாக போராடியதால் போலீசும் வட்டாட்சியரும் இந்த நிலங்களில் உள்ள குழாய்களை மக்கள் முன்னே அப்புறப்படுத்தினார்கள். ”தேர்தல் முடிந்தபின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே வேலையை தொடர்வோம்” என்று எழுதி கொடுத்ததையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

விவசாயிகள் போராட்ட களத்திற்கு தண்ணீர் கொடுப்பது, சாமியானா பந்தல் அமைப்பது, உணவு ஏற்பாடு செய்வது ஆகியவற்றை தாங்களாகவே மக்கள் செய்தனர். ஒரு திருவிழாபோல் போராட்டம் நடந்து முடிந்தது.

“தேர்தல் முடிந்ததும் மீண்டும் குழாய் போடுவார்கள்; அதை விடக்கூடாது மக்களை திரட்டி மீண்டும் போராடுவோம்!” என்று அறிவித்ததோடு, நாங்கூர் கிராமத்தையடுத்த நாராயணபுரத்தில் ஓ.என்.ஜி.சி.க்காக நடைபெற்றுக் கொண்டிருந்த வேலைகளையும் தன்னெழுச்சியாக தடுத்து நிறுத்தினார்கள், சுற்றுவட்டார கிராம மக்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதைத் தொடர்ந்து நாராயணபுரத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்கும் பணியைத் தடுத்து நிறுத்தியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ரவி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் 12 நபர்களின் பெயரைக் குறிப்பிட்டும் மற்றும் பெயர் குறிப்பிடாமல் இன்னும் பலர் என்ற வார்த்தையை சேர்த்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது, திருவெண்காடு போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

டெல்டாவை அழிக்கும் நாசகார திட்டங்களை ஒழிப்பதற்கு தேர்தல் முடியும்வரை காத்திருக்கத் தேவையில்லை என்பதை இப்போராட்டம் நிரூபித்துக் காட்டியுள்ளது!

மக்கள் அதிகாரம்
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க