அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பகுதி-01

எதிர்கால மனிதன்

“செப்டெம்பர் 1-ம் தேதி பள்ளிக்கு வந்து குழந்தைகளைச் சந்திக்கும் போது நான் சாகா வரம் பெற்றவள் என்று தோன்றுகிறது” என என் தோழியும் சக ஊழியருமான தினாதீன் மிஹைலவ்னா கிலாஷ்வீலி கூறினார். உண்மையில், ஆசிரியரால் தன் மாணவர்களின் மனதில் அன்பை ஊட்டி மனித நலன்களின்பால் இவர்களது இதயம் அக்கறை காட்டும்படி செய்ய முடிந்தால், சாகாவரம் பெறும் உரிமை இவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று நான் அப்போது நினைத்தேன். உண்மையான ஆசிரியர்கள் இறப்பதில்லை, இவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகளில் கரைந்து அவர்களை உயர்ந்த லட்சியங்களை உடைய நபர்களாக மாற்றுகின்றனர்.

இன்று செப்டெம்பர் 1-ம் தேதி, நான் பெருமிதம் அடைகிறேன். 20-ம் நூற்றாண்டின் 80-ம் ஆண்டுகளின் சோவியத் ஆசிரியர் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; நாளைய தினத்தைப் பற்றிய கற்பனையை குழந்தைகளின் மனதில் மூட்டி விட்டு, நாளைய வாழ்க்கையின் தெளிந்த, ஒளிமயமான, மகிழ்ச்சிகரமான ஓடையை இன்றைய தினத்தின் மகிழ்ச்சியிலும் முயற்சிகளிலும் திறந்து விடுவதற்காக இவர் வந்துள்ளார் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

படிக்க :
♦ ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
♦ ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு !

அதிகாலையில் நான் பள்ளிக்குக் கிளம்புகிறேன். பள்ளி என் வீட்டிற்கு அருகாமையில் உள்ளது. இன்று கால் நடையாகச் செல்வதே நல்லது. முதலில், இன்னமும் நேரமுள்ளது, இரண்டாவதாக, சிறிது சிந்திக்க வேண்டியுள்ளது.

நான் குழந்தைகளைப் பார்த்ததும் முதன் முதலாக உச்சரிக்க வேண்டிய சொற்கள் எவை? ”குழந்தைகளே, வணக்கம்!” என்று சொல்ல வேண்டுமென்பது நான் நீண்ட காலத்திற்கு முன்னரே கண்டுபிடித்த விஷயம். 170 பாட நாட்கள் என் வகுப்பில் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையில் வகுப்பறையில் நுழையும் போது ”குழந்தைகளே, வணக்கம்!” என்று சொல்வேன்.

”வணக்கம்” எனும் சொல்லை இரக்கமாக அல்லது அன்பை வெளிப்படுத்தும் முறையில் ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள், வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்ட ஒரே சொல் மனிதர்களின் உறவை எப்படி மாற்றுகிறது என்று நீங்கள் உணருவீர்கள்.

வெறும் வார்த்தைகள் ஒருபுறமிருக்க, நான் எப்படி இவற்றைச் சொல்லுகிறேன், என் முகபாவம் எப்படியுள்ளது என்பது முக்கியமானது. என் குரல் அன்பானதாக, கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். என் முகபாவம் குரலுக்கேற்றபடி இருக்க வேண்டும். எல்லாம் புரியும்படி இருந்தாலும் நடைமுறையில் எல்லாமே இது போல் நடக்கிறதென்று நான் நம்பவில்லை. சில சமயங்களில் மிகக் கறாராக, காரியரீதியில் என் குரல் ஒலிக்கும், சில சமயம் மிதமிஞ்சிய உற்சாகத்துடன் ஒலிக்கும், சில நேரங்களிலோ ஏனோ தானோவென்று இருக்கும் (இதை ஒப்புக்கொள்ளக்கூட வெட்கப்படுகிறேன்). இந்த சமயங்களில் எனக்குத் திருப்தி இருக்காது.

முகமன் கூறும் சாதாரண வார்த்தைகளை உச்சரிப்பது சம்பந்தமாக வெறுமனே மண்டையை போட்டுக் குழப்பிக் கொள்வது ஒருவேளை அவசியமில்லையோ? ஒருவேளை இதில் ஆசிரியரின் பிரச்சினை எதுவுமே இல்லையோ? ”குழந்தைகளே, வணக்கம்!” என்று நான் அன்றாடம் எப்படிக் கூறுகிறேன் என்பது அவர்களுக்கு முக்கியமில்லையோ! ஒருமுறை இப்படிப்பட்டதொரு சம்பவம் நிகழ்ந்தது. நான் நடத்திய ஒரு வகுப்பிற்கு 15 ஆசிரியர்கள் வந்திருந்தனர்.

மேற்கூறியவாறு முகமன் கூறி நான் பாடத்தை துவக்கினேன், நான் விரும்பிய விசேசமான வகையில் இவ்வார்த்தைகளை உச்சரித்ததை உணர மகிழ்ச்சியாக இருந்தது. பாடம் முடிந்ததும் நான் ஒவ்வொருவரையும் அணுகி “குழந்தைகளே, வணக்கம்! என்பதை நான் எப்படிக் கூறினேன் கவனித்தீர்களா? இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டேன். அவர்களால் ஒன்றுமே கூற இயலவில்லை, நான் என்ன சொன்னேன் என்பதைக் கூட சரிவர நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. ”சாதாரண முகமன், இதிலென்ன விசேசம்?…” என்று அவர்கள் புரியாமல் கேட்டார்கள். முகமன் கூறுவதில் உள்ள விசேசமான – கவர்ச்சிகரமான, அன்பான, மன உற்சாகத்தை அதிகப்படுத்தக் கூடிய, மகிழ்ச்சிகரமான தொனியை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் முறையாகப் பயிற்றுவிக்க முடியாதா என்ன? என்று நான் ஆச்சரியப்பட்டேன். ”வணக்கம்” எனும் சொல்லை இரக்கமாக அல்லது அன்பை வெளிப்படுத்தும் முறையில் ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள், வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்ட ஒரே சொல் மனிதர்களின் உறவை எப்படி மாற்றுகிறது என்று நீங்கள் உணருவீர்கள்.

“குழந்தைகளே, வணக்கம்!” என்று எப்படி முகமன் கூறுவது எனும் பிரச்சினை ஒரு தீவிரமான ஆசிரியர் பிரச்சினையாகும். என்னைப் பொறுத்தமட்டில் எப்போது இதை எப்படி, எந்த முக பாவத்தோடு சொல்லுவது என்பது முக்கியமாகும். ஏனெனில் எனக்கு இப்படிப்பட்டதொரு உறுதி மொழி உண்டு:

குழந்தைகளின் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்த நான் விரும்பினால் நான் இதை மிகச் சிறந்த வடிவங்களில் செய்ய வேண்டும்.

தெருவில் போகும்போது நான் இதைப் பயிற்சி செய்ய முயலுகிறேன். ”குழந்தைகளே, வணக்கம்!” என்று முறுமுறுத்தபடியே இந்த முறுமுறுப்பைக் கேட்கிறேன். என் முன் குழந்தைகள், யாருமில்லாததால்தான் இது சரியாக வரவில்லை போலும். இவர்களைக் கற்பனை செய்து கொள்ள வேண்டும்: இதோ என் வகுப்பு, நான் இதில் நுழைகிறேன், குழந்தைகள் என்னை ஆர்வத்துடன் பார்க்கின்றனர், நான் அனைவரையும் பார்த்துப் புன்முறுவல் பூத்தபடியே ”குழந்தைகளே, வணக்கம்!” என்கிறேன். அது சரி, இந்த வழிப்போக்கர் ஏன் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்?…

முதல் பாடவேளையின் போது நான் என்ன செய்யப் போகிறேன்? ஒருவேளை இதுவும் பிரச்சினை அல்லவோ?

முதல் பாடவேளையின் போதும், பிந்தைய பாடங்களின் போதும் படிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் மக்களின் வாழ்க்கையில் ஞானத்தின் அவசியம் பற்றியும் நான் குழந்தைகளுக்கு ஒன்றும் சொல்லப் போவதில்லை. பள்ளியிலும் வகுப்பிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை அவர்களுக்குச் சொல்லித் தரப் போவதில்லை. இப்போதுதான் பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளுக்குப் படிப்பின் முக்கியத்துவம், ஞானத்தின் அவசியம் பற்றிச் சொல்வது தேவையில்லை. இதைப் பற்றிப் பொதுவில் சொல்வதே அவசியமா? சமுதாய வாழ்வில் ஞானம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் தெட்டத் தெளிவாக இருக்கையில் இதை-அதுவும் ஆறு வயதுக் குழந்தைகளின் மத்தியில்-சந்தேகத்திற்கு உள்ளாக்க வேண்டுமா என்ன? கல்வி கற்க வரும்படி அவர்களுக்கு அறைகூவல் விடவேண்டாம், தம் இயல்பினாலேயே அவர்கள் கல்வியின் பால் ஈர்க்கப்படுகின்றனர். அவர்கள் மீது கல்வியைத் திணித்து, அதே சமயம் ”இது அவசியம்” என்று வற்புறுத்தும்போது இந்த ஈர்ப்புச் சக்தி பாதிக்கப்படும்.

கல்வி கற்க வரும்படி அவர்களுக்கு அறைகூவல் விடவேண்டாம், தம் இயல்பினாலேயே அவர்கள் கல்வியின் பால் ஈர்க்கப்படுகின்றனர். அவர்கள் மீது கல்வியைத் திணித்து, அதே சமயம் ”இது அவசியம்” என்று வற்புறுத்தும்போது இந்த ஈர்ப்புச் சக்தி பாதிக்கப்படும்.

பள்ளியிலும் வகுப்பிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பொறுத்தமட்டிலும் இப்பேச்சு எதைச் செய்யக் கூடாது, கடமைகள் என்ன என்ற பட்டியலுடன் முடியும்; மறுநாள் குழந்தை பள்ளிக்கு வராமலிருக்கத் தயங்கமாட்டான். எனது மாணவன் ஒவ்வொருவனும் தன் வயதையொத்த மாணவர்களின் மத்தியில் பழகும்போது எப்படிப் பழகுவது என்பதையும், சமுதாயத்தில் தன் நடத்தை முறைகளையும் தானே முடிவு செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். தானே என்று நான் சொல்லும்போது நான் கடைப்பிடிக்கும் போதனா முறையை நான் குறிப்பிடுகிறேன்; இது சுயமான தார்மிக, அழகியல் முடிவுகளுக்கு குழந்தையை இட்டுச் செல்லும்.

சரி, அப்படியெனில், முதல் பாடவேளையின் போது நான் எதைப் பற்றிப் பேசுவேன்? என் பெயரைக் கூறுவேன், அவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலோடு காத்திருந்ததாகச் சொல்லுவேன். பின்னர், அவர்களும் பாடம் படிக்கத் துடிப்பதால், ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காது உடனடியாக விசயத்திற்கு வருவோம். பாடத்தின் இறுதியில் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொள்ளுமாறு முன்மொழிவேன். கடைசி பாடவேளையின் போது பின்வரும் கேள்விகளைக் கேட்பேன்: “உங்களில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்று என்ன முக்கிய சம்பவம் நடந்தது? பள்ளியில் உங்களை என்ன விசயங்கள் எதிர்நோக்கியுள்ளன?” இக்கடைசிக் கேள்வியை நான் கேட்டதும், பல்லாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் என் நெஞ்சில் நிழலாடும்; அப்போது ஒரு ஆறு வயதுச் சிறுவன் தன்னிடத்திலிருந்து துள்ளி எழுந்து உற்சாகமாக, கருத்தாழத்தோடு “பெரிய, மிகப் பெரிய விசயங்கள் எதிர்நோக்கியுள்ளன!..” என்று பதில் சொன்னான்.

படிக்க:
மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு!

என் சிந்தனைகள் அறுபடுகின்றன. திபிலிசி நகரில் உள்ள 1-வது எண் பள்ளியின் மூன்றாவது மாடிக்கு நான் ஏறிச் செல்கிறேன். அங்குதான் என் அறை உள்ளது. எனது ஆறு வயதுக் குழந்தைகள் அருகேயுள்ள வகுப்பறையில் உட்கார்ந்து படிப்பார்கள், மகிழ்வார்கள், கும்மாளம் அடிப்பார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க